(சட்டச்சொற்கள் விளக்கம் 91 – 95 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)

சட்டச்சொற்கள் விளக்கம் 96-100

96. Abeyance  செயலற்ற தன்மை
இடைநிறுத்தம்  
செயல்நிறுத்தம்
நிறுத்தி வைத்தல்  
உரியரிலாநிலை  

காலவரையறையற்ற அல்லது இடைக்கால செயலற்றநிலையைக் குறிப்பது.  

இடைநீக்கம் என்கின்றனர். அவ்வாறு சொன்னால் suspension எனத் தவறான பொருள் கொள்ள நேரலாம். ஆங்கிலத்தில் பொருள் சரிதான். ஆனால், தமிழ் வழக்கில் இடையில் விலக்கி வைப்பது வேறு. முடிவு காண வழியில்லாமல் செயல்பாடின்றி ஒத்தி வைப்பது வேறு. ஒரு கோப்பு நடவடிக்கையை அல்லது வழக்கு நடவடிக்கையை மேற்கொண்டு உடன்தொடராச் சூழல் இருக்கையில் அத்தகைய சூழல் வரும் வரை இடைக்காலமாக நிறுத்தி வைத்தல். பல நேரங்களில் இடை நிறுத்தப்படுவதே மேல் நடவடிக்கையின்றி முற்றாக்கப்படுவதும் உண்டு உண்மையான சொத்து அல்லது தகைமை அல்லது பதவியின் உரிமை யாருக்கும் வழங்கப்படாத நிலையில் அதன் இருப்புநிலை எனவும் பொருள் உண்டு.  

Abeër என்னும் பழம் பிரெஞ்சுச்சொல்லின் பொருள் இடைவெளி. இதிலிருந்து விருப்பம் என்னும் பொருளில் abeance என்னும் சொல் உருவானது. இதிலிருந்து ( ஆங்கில நார்மன் சொல்லான சட்ட எதிர்பார்ப்பு என்னும் பொருளிலான abeiance) abeyance வந்திருந்தாலும் இதன் பொருள் இடை வெளி விடுதல். அஃதாவது செயல்பாட்டில் இடைவெளி விடுதல். எனவே, தற்காலிகமாக நிறுத்தி வை (hold in abeyance) என்கின்றனர்.

தற்காலிகம் என்பது தவறான சொல்லாட்சியாக இடம் பெற்றுவிட்டது. தள்ளிப்போடு எனலாம். நிறுத்தி வை / இருத்தி வை (keep in abeyance), நிலுவையில் வை (put in abeyance) எனச் சொல்லப்படுகின்றன.

உரியரிலாநிலை என்றால் உரிமை கோருநர் இல்லாத சொத்தின் நிலை எனப் பொருள்.
97. Abeyance, keep inநிறுத்திவைத்தல்
செயலற்ற தன்மையில் வைத்தல்
உடந்தை  

கிடப்பில் போடுவது என்றும் சொல்வார்கள்   ஏதேனும் செயல்பாட்டை  இடைக்காலமாக நிறுத்தி வைப்பது. இதுவே முழுமையான நிறுத்தமாகவும் மாறலாம்.   கோப்பின் மீதான நடவடிக்கை, திட்டத்தைச் செயல்படுத்தல், தீர்மானத்தை நிறைவேற்றல் போன்ற எதுவாக இருந்தாலும் தொடக்க நடவடிக்கை அல்லது தொடர் நடவடிக்கை எடுக்காமல் ஆறப்போடுதல்(விட்டுவிடுதல்)  
98. abhorவெறு,
ஒதுக்கு
அருவரு  

இச்சொல்லின் மூலச்சொல்லான abhorrere என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் திகிலில் பின் வாங்குதல். இதனால் வெறுப்பு அல்லது அருவருப்பை வெளிப்படுத்தல்.
99. abhorrenceபெருவெறுப்பு
அருவருப்பு  

எதையாவது அல்லது யாரையாவது வெறுக்கும் அல்லது இகழும் செயல்.  
100. Abide  கடைப்பிடித்தல்  
பின்பற்றுதல்
மதித்து நடத்தல்‌
பணிந்தொழுகு,
இணங்கியொழுகு

  சட்டம் ஏற்காத எதையும் செய்யாதிருத்தல்.   இந்நாட்டின் சட்டத்தை மதிக்கும் மக்கள் சரியான நீதியை நாடுகின்றனர்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்