சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 671- 676
( தமிழ்ச்சொல்லாக்கம் 663- 670 தொடர்ச்சி)
தமிழ்ச்சொல்லாக்கம் 671 – 676
(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)
671. பூவராகம் (பிள்ளை) – நிலப்பன்றி (1930)
1929-ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உருப்பெற்றது. அக்கழகத்தின் புலவர் பயிற்சிக் கல்லூரியும் புகுமுக வகுப்பும் தில்லையில் இருந்தன. 1930ஆம் ஆண்டில் பூவராகனார், இக்கல்லூரிகளின் ஆசிரியராக அமர்ந்து திறமையாகப் போதனை புரிந்தார். பிறகு 1938ஆம் ஆண்டில் புலவர் வகுப்புகட்கு ஆசிரியரானார்.
பூவராகனார் சிறந்த அறிவாளியாக விளங்கினாலும் பெருமிதத்தை மேற்கொண்டவரல்லர். அடக்கத்தையும் அமைதியையும் அணிகலனாகக் கொண்டிருந்தார். எப்பொழுதும் நூல்களைப் படிப்பதே இவருக்கு இனிமையான பொழுதுபோக்கு. மாணவர்கள் பலவகையாக இருப்பர். சிலர் ஆசிரியர்களைக் கேலி செய்பவர்களாகி விளங்குதலும் உண்டு. பூவரானாருடைய மாணவர்கள் அவருடைய பெயரைத் தமிழில் மொழி பெயர்த்து நிலப்பன்றி என்று கூறுதலும் உண்டு.
நூல் : தமிழ்ப் புலவர் வரிசை (1955)
(பன்னிரண்டாம் புத்தகம்) பக்கங்கள் : 92, 93
நூலாசிரியர் : சு. அ. இராமசாமிப் புலவர்
★
672. Protein – முதலுணா
673. Fat – கொழுப்புணா
674. Carbo Hydrates – இனிப்புணா
675. Salts – உப்புணா
676. Water – நீருணா
விளக்கத்தில் முதலுணா (Protien), கொழுப்புணா (Fats), இனிப்புணா (Carbo hydrates), உப்புணா (Salts), நீருணா (Water) எனக் குறிக்கப்பட்டுள்ளன. உணவைக்குறிக்கும் உரை என்ற சொல் எங்கும் பயன்படுத்தப்படவில்ல. எனவே இவை அச்சுப்பிழைகளே.
இவற்றில் தொடர்ந்து முதலுலைப் பொருள், கொழுப்புரை, இனிப்புரை, நீருணாரவோ என அச்சுப்பிழைகளும் உள்ளன. இவை திருத்தப்பட்டு இங்கே குறிக்கப்பட்டுள்ளன.
மக்கள் ஊனுண்ணுதற்குரிய உணவுப் பொருட் கூறுகள் ஐந்து வகைப்படும். அவை முதலுணா (Protien), கொழுப்புணா (Fats), இனிப்புணா (Carbo hydrates), உப்புணா (Salts), நீருணா (Water) என்பன.
இவற்றில் முதலுணாப் பொருள் நரம்பையும் தசை நாரையும் மூளையையும் நன்கு வலுவேற்றி வளர்க்கும்.
கொழுப்புணா உடம்பின் கொழுப்பு, கொழுப்பின் றொடர் என்பவற்றை வளர்ப்பது மன்றி உடம்பிற்குச் சூட்டினையும் தரும்.
இனிப்புணா யென்பது கொழுப்புணாவை யொப்ப உடம்பின் கொழுப்பை நன்கு வளர்க்குமாயினும், அதனினும் அஃது உடம்புக்கு வேண்டுஞ் சூட்டினைப் போதுமான வளவு தருவதில் மிகவும் பயன்படா நிற்கின்றது.
உடம்பு நிலை பெறுவதற்கு முதன்மையான கருவிகளாயுள்ள செந்நீரையும் எலும்புகளையும் நன்கு வளர்த்து வலுவேற்றுவது உப்புனாவின் இயல்பு; மேலும் அவ்வுணா உடம்பின் வளர்ச்சிக்கு ஏதுவான சுண்ணம், காந்தமண், உவர்க்காரம், சாம்பருப்பு முதலான மட்பொருட் கூறுகளையும் விளைத்திடுகின்றது.
இனி நீருணாவோவெனின் உடம்பின் செந்நீர்க்கு மிகவும் பயன்பட்டு ஏனை எல்லாப் பண்டங்களிலும் பொருந்தி அவை உடம்பின் கண் செல்லுதற்குப் பெரிதுந் துணை புரிவதாகும்.
நூல் : ஏன் புலால் மறுத்தல் வேண்டும்? (1930)
நூலாசிரியர் : பண்டிதர் பாலசுந்தரம் பிள்ளை பக்கங்கள் : 16, 17
(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்
Leave a Reply