(தமிழ்ச்சொல்லாக்கம்  101-105 தொடர்ச்சி)

(சொல்மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றை) தேடித்தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளது. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

106. Photo – புகைப்படம்

வெகு நேர்த்தியான அமைப்பு! அற்புதமான வேலை!

பார்க்கப் பார்க்க பரமானந்தத்தைத் தரும்!

தங்க வண்ணமான சாயையுள்ளது!!

சிதம்பரம் நடராசர் கோயிலின் புகைப்படம்.

சிற்சபை, கனகசபை, நிருத்தசபை, முக்குறுணிப் பிள்ளையார் கோயில், தில்லை கோவிந்தராசர் ந்நிதி முதலியனவும் இரண்டு கோபுரங்களுமடங்கியது.

இதழ் பிரம்மவித்தியா (1-12-1891)

107. பாரசூட் – பெருங்குடை

இந்தியாவெங்கும் பிரசித்தி பெற்ற சுபென்சர் நமது சென்னைபுரிக்கு வந்து, மும்முறை ஆகாய யாத்திரை செய்தார். இவர் ஆகாயத்தில்  ஏறும்போது புகைக்கூட்டின் துணையினாலேறி வரும்போது அதைவிட்டு அதனோடு சேர்ந்தாற்போல் மாட்டியிருந்த பாரசூட் என்னும் பெருங்குடையைப் பிடித்து தன் கீழே தொங்கிக்கொண்டு தமக்குச் சிறிதாயினும் அபாயமில்லாதபடி சேமமாக வந்திறங்கினார். ‘

இதழ் : சநாநந்தினி (1891) மார்ச்சு புத்த 1 இல. 3. பக்கம் : 53.

ஆசிரியர் : அன்பில் எசு. வெங்கடாசாரியார்

108.மரணப்ரயாணம் – கடை வழி

கடை வழி – முடிவாகிய பிரயாணம். (மரணப்ரயாணம்), உலகத்தாரே பொருள் முதலிய யாவும் நீங்களிறக்கும்போது கூட வராதன ஆதலால், குமரவேளை வாழ்த்தி, எளியோர்க்கு உதவி செய்யுங்கள் என்பது கருத்து.

நூல் : கந்தரலங்காரம் மூலமும் உரையும் (1892) பக்கம் – 10.

பதவுரை : வித்யாவிநோதிநி பத்ராதிபர்

109. (இ)ராவுத்தன் – குதிரை வீரன்

(இ)ராவுத்தன் – திசைச்சொல், பொருள் – குதிரை வீரன் என்பது.

நூல் : கந்தரலங்காரம் மூலமும் உரையும் (1892); பக். – 22

பதவுரை : வித்யா விநோதிநி பத்ராதியர்

110. மோட்சம் – தனிவீடு

மேற்படி நூல் : (1892) பாடல் 45. பக்கம் -28.

(இச்சொல்லாக்கம் அடிக்குறிப்பில் தரப்பட்டுள்ளது)

(தொடரும்)

வமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்