திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்.

11

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை

மேற்சென்று செய்யப் படும்.( (திருவள்ளுவர், திருக்குறள் 335)

   “நாவை அடக்கி விக்கல் எழுந்து இறப்பு நெருங்கும் முன்னே நல்வினைகள் செய்ய வேண்டும்” என்கிறார் திருவள்ளுவர்.

   சுருங்கி விரிந்து சீராக இயங்கும் மறுகம்(உதரவிதானம்), சுருக்கதிர்ச்சியால் கீழிறங்கித் தொண்டை வழியாகக் காற்றை உள்ளிழுக்கிறது. அப்பொழுது காற்று குரல்வளையினை இடிக்கிறது. அப்பொழுது ‘விக்’ என ஒலி வருவதால் விக்கல் எனப் பெயர். விக்கல் நேரும்பொழுது நொடிப்பொழுதினும் குறைந்த காலத்தில் மூச்சு நிற்கும். இதே விக்கல் போன்று மரணம் நெருங்கும் பொழுது நாக்கு அடங்கும் செயல் ஏற்படுகிறது. அவ்வாறு நாவை அடக்கி விக்கல் மேல்எழுந்து மரணம் வருவதற்கு முன்னர் நற்செயல்களைச் செய்ய வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

   நவராசு செல்லையா என்பவர், “நாச்செற்று – வார்த்தை தடித்து, வி – நிச்சயம்; குள் = கொடுமை” எனத் தவறான பொருள் விளக்கம் அளித்துப் புத்துரை என்ற பெயரில் பொருந்தா உரையை வழங்கியுள்ளார்.

   பிறர், நாவடங்கி உயிர் அடங்கும் முன்னரே நற்செயல்கள் புரிய வேண்டும் என விளக்குகின்றனர். இதனையே திருவள்ளுவர் முன்னரும் வலியுறுத்தி உள்ளார்.

அன்றறிவாம் என்னாது அறம்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை (திருக்குறள் 36)

முதுமை வரும் அன்றைக்குப்பார்த்துக் கொள்வோம், பிற்காலத்தில் நற்செயல் செய்வோம் என்று எண்ணாமல் உடனே அறச்செயல் புரிக! அதுவே அழிவுக்காலத்தில் அழியாத் துணையாக வரும் என்கிறார். 

  இந்த உண்மையுடன் மற்றோர் உண்மையையும் நாம் புரிந்து கொள்ளலாம். செயல் விரைவைக் குறிப்பதற்காகத் திருவள்ளுவர் விக்கல் என்னும் அறிவியல் செயல்பாட்டை நமக்குக் கூறி விரைவாக நல்வினைகள் ஆற்றுமாறு வலியுறுத்துகிறார்.

  இறப்பிற்குப் பின்னர் செயல்பட இறந்தவர் இருக்க மாட்டாரே! இறப்பிற்கு முன்னர்தானே வினை ஆற்ற முடியும். எனவே, இறப்பிற்கு முன்னர் என எண்ணாமல், இருக்கும் பொழுது விக்கல் செயல்பாட்டினும் விரைவாக நற்செயல் செய்ய வேண்டும்.

மொழி, இனம் காக்க ஒவ்வொருவரும் நல்வினை புரிந்தால், உலகம் சிறந்தோங்கும் அல்லவா?

இலக்குவனார் திருவள்ளுவன்

தினச்செய்தி,  01.08.2019