திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்.

 10

நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்

வாளது உணர்வார்ப் பெறின். (திருவள்ளுவர், திருக்குறள் 334)

“நாள் என்பது காலங்காட்டிபோல் தோன்றினாலும் உயிரைப் பறிக்கும்(ஈரும்) வாளே அது. வாழ்நாள்இயலை உணர்ந்தவர்கள் இதனை அறிவர்” என்கிறார் திருவள்ளுவர்.

இத்திருக்குறள் மூலமாகத்தான் நாட்காட்டி என்ற சொல் உருவானது என்பர்.

நாள் என்பதைத் திருவள்ளுவர் 20 குறட்பாக்களில் குறிப்பிடுகிறார். வாள் என்பதை 6 குறட்பாக்களில் குறிப்பிடுகிறார்.

இரவுப்பொழுதும் பகற்பொழுதும் இணைந்த கால அளவே நாள் என்பது. இந்த நாளே வாரமாகத், திங்களாக, ஆண்டாக அளப்பதற்கு அடிப்படையாகிறது. எனவே, நாள் என்பதைக் காலத்தை அளக்கும் அளவுகோல் என்று சொல்லலாம். இந்தச் சிறு அளவுகோலே வாழ்நாளைச் சிறுகச் சிறுக அறுத்துக் குறைக்கிறது எனத் திருவள்ளுவர் விளக்குகிறார்.

நாள் என்பதை இரவு எனச் சிலர் தவறாகக் கருதுகின்றனர். செ.சொ.பி.பேரகரமுதலியில் ‘நடுநாள் யாமம்’ முதலான சொற்கள் அடிப்படையில் நடுநாள் இரவு என்று விளக்கம் உள்ளது. இவர்கள் மாலை 6.00 முதல் மறுநாள் காலை 6.00 வரை நாள் எனத் தவறாகக் கணக்கிடுகின்றனர். நாவலர் சோமசுந்தரபாரதியார் விளக்கியுள்ளதுபோல், முன்னைத்  தமிழர்கள் நண்பகல் 12.00 தொடங்கி மறுநாள் நண்பகல் 12.00 வரையில் ஒருநாள் என்று கணக்கிட்டுள்ளனர். இதில் பாதிப்பொழுதாகிய இரவை அரைநாள் எனக் குறித்துள்ளதை – முழுநாளில் பாதி எனச் – சரியாகப் புரிந்து கொள்ளாமல்  அரை நாள் என்றால் இரவில் பாதி, நாள் என்றால் இரவு என்று தவறாகச் சொல்லி விட்டனர்.

மேற்குறித்த குறள்போல் நாள் கணக்கைக் குறிப்பிடும் மற்றொரு குறளும் உள்ளது.

வாள் அற்று புற்கென்ற கண்ணும் அவர் சென்ற

நாள் ஒற்றி தேய்ந்த விரல் (திருக்குறள் 1261)

“அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து கண்களும் ஒளி இழந்து அழகு கெட்டன; அவர் சென்ற நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டு விரல்களும் தேய்ந்தன” எனக் கணவன் வருகைக்காகக் காத்திருக்கும் மனைவி கவலைப்படுவதாகத் திருவள்ளுவர் கூறுகிறார். இக்குறளில் வாள் என்பது ஒளி என்னும் பொருளில் வந்துள்ளது.

பால்கணக்கை எழுதுவற்குச் சுவரில் கரிக்கோடு கிழித்து எண்ணும் பழக்கம் இன்று கூடச் சிற்றூர்களில் உள்ளது. தாள்கள் அல்லது மாதச்சீட்டு உள்ள நாட்காட்டிகளில் ஏதேனும் கணக்கைக் குறிக்கக் கோடு போட்டுக் கணக்கு பார்க்கும் பழக்கம் நகரிலும் உள்ளது.  கால அறிவியலின் கூறாகிய நாளைக் கணக்கிடுவது பற்றித் திருவள்ளுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காலஅறிவியலைப் பயன்படுத்தித் திருவள்ளுவர் நமக்கு நிலையாமையை உணர்த்தியுள்ளார்.

இலக்குவனார் திருவள்ளுவன்

தினச்செய்தி, 31.07.2019