திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்

14

படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும்

உடையான் அரசருள் ஏறு

(திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்:இறைமாட்சி, குறள் எண்:381)

திருவள்ளுவர் திருக்குறளில் அளித்துள்ள பொருட்பால் முழுமையுமே அரசறிவியலைச் சார்ந்ததுதான். அரசியல் அறிவியல் என்பதைச் சுருக்கி அரசறிவியல் என்பதே சிறப்பாகும். பொருள்நீதி என்றும் ஆட்சியியல் என்றும் சொல்லப்படுவனவும் இதுவே ஆகும்.  சாக்கிரட்டீசு, பிளேட்டோ முதலான கிரேக்க அறிஞர்களின் கருத்துகளுடன் ஒத்தும் மாறுபட்டும் சிறந்த அரசறத்தைத் திருவள்ளுவர் இதன் மூலம் நமக்கு வலியுறுத்துகிறார். திருவள்ளுவரின் அரசறிவியலை உணர வள்ளுவரும் அரசியலும் (முனைவர் பா.நடராசன்), வள்ளுவர் வகுத்த அரசியல் (பேரா.முனைவர் சி.இலக்குவனார்), திருவள்ளுவரின் அரசியல் பொருளாதாரம் (தா.பாண்டியன்) முதலான பல நூல்கள் உள்ளன. ஆய்வாளர்கள் பலரும் கட்டுரைகளும் எழுதி உள்ளனர். நாமும் இத்தொடரில் திருவள்ளுவரின் அரசறிவியலைப் பார்ப்போம்.

பிளாட்டோ, ஆட்சி முறையை, 1. அரச ஆட்சி (Aristocracy, 2. செல்வர் ஆட்சி (Timocracy), 3. சிலவர் ஆட்சி (Oligarchic), 4. மக்களாட்சி(Democratic), 5. கொடுங்கோலாட்சி (Tyrannic) என ஐந்து வகையாகப் பாகுபடுத்துகிறார்(இலட்சியக் குடியரசு). திருவள்ளுவர் காலத் தமிழ்நாட்டில் குடிதழுவிய கோனாட்சி நடைபெற்றது. எனினும் உலகறிவு மிக்க திருவள்ளுவர் பிற நாட்டு ஆட்சி முறைகளையும் அறிந்திருந்தார். எனவே, “அரசியல் அமைப்பு எதுவாயிருப்பினும், ஆளும் நிலையில் இருப்போர், மக்களுக்குத் தொண்டாற்றும் நல்லியல்பு உடையோராய் இருப்பின் நன்மை பயக்கும்”(சி.இலக்குவனார்) என்பதால் இறைமாட்சி என்னும் அதிகாரத்தைப் பொருட்பாலில் முதலில் படைத்துள்ளார்.

இறை என்பது வணங்கும் இறைவனைக் குறிக்கவில்லை. அதிகாரம் தங்கியுள்ள ஆட்சித்தலைவரைக் குறிக்கிறது. மாட்சிமைப் பண்புகளுடன் ஆட்சித்தலைமை திகழவேண்டும் என்பதற்காகத்தான் இந்த அதிகாரத்தைத் திருவள்ளுவர் தந்துள்ளார். எனினும் இதன் முதன் குறளாகத் தனிப்பட்ட பண்பு நலன்களைக் குறிக்காமல் ஆளுமைப்பண்பிற்குத் தேவையானவற்றைக் கூறுகிறார்.

படை, குடிமக்கள், உணவு முதலிய பொருள்கள்(கூழ்), நல்லமைச்சு, நன்னட்பு, நல்ல பாதுகாப்பு ஆகியனவற்றை உடையவனே அரசர்களுள் சிறந்தவன் என்கிறார்.

ஏறு என்பதற்கு மணக்குடவர், பரிப்பெருமாள், பரிமேலழகர் ஏறு என்றே குறித்துள்ளனர். பரிதி எருது(இடபம்/ரிசபம்) என்கிறார். குன்றக்குடி அடிகளார் ஆண் அரிமா என்கிறார். பிறரும் காளை என்றும் எருது என்றும் அரிமா என்றும் உரைக்கின்றனர். பேரா.சி.இலக்குவனார் சிறந்தவன் என்கிறார். ஏறு என்றால் உயர்நிலையையும் குறிக்கும். எனவே உயர்ந்த நிலையில் உள்ள சிறந்தவனாகக் குறிப்பதே பொருத்தமாக உள்ளது.

இந்த ஆறும் உடையதாக நம் நாட்டுத் தலைமை சிறந்து விளங்கட்டும்!

இலக்குவனார் திருவள்ளுவன்

தினச்செய்தி, 06.08.2019