திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

18

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்லது அரசு

(திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்இறைமாட்சி, குறள் எண்: 385)

செல்வம் திரட்டுதவற்கான வழிவகைகளை உருவாக்கியும் தொகுத்தும் காத்தும் பகுத்து வழங்கலும் வல்லது அரசு என்கிறார் திருவள்ளுவர்.

இன்றைய நிதியியல் கூறும் கருத்தினை அன்றே திருவள்ளுவர் சொல்லி உள்ளார்.

இயற்றலும் ஈட்டலும் என்பதற்குப் பேரா.சி.இலக்குவனார், “ஒரு நாடு எல்லாவற்றிலும் தன்னிறைவு உடையதாக இருக்க முடியாது.ஆதலின் என்னென்ன நம் நாட்டில் இல்லை? உண்டுபண்ண முடியாது என்பதை நன்கு ஆராய்ந்து அறிந்து, இல்லாதவற்றை எந்தெந்த நாடுகளிலிருந்து கொண்டுவரலாமோ அங்கிருந்து கொண்டுவரக்கூடிய ஏற்பாடுகளைச் செய்தல் வேண்டும். பிறர் கவரவும் தாமே கெடவும் விட்டுவிடுதல் கூடாது”  என விளக்குகிறார்.

நாட்டின் வரவு செலவு திட்டத்தை – நிதி நிலை அறிக்கையை – உருவாக்கும் அரசுகள், நாட்டுப்பொருள் வளத்தைப் பெருக்குவதற்குரிய வழிவகைகளை ஆராய்ந்து ஈடுபட வேண்டும். மக்களைத் துன்புறுத்தாமல் நேர்மையான முறையில் நிதி ஆதாரத்தைப் பெருக்க வேண்டும். ஈட்டப்படும் பொருள் வீணாகாதவாறு திட்டமிட்டு அனைவருக்கும் எப்பொழுதும் பயன்படும் வகையில் காத்தல் வேண்டும். அப்பொருளின் பயன் அனைவருக்கும் உரிய காலத்தில் உரிய நன் முறையில் சென்று பயன் அளிக்கப் பகுத்துத் தர வேண்டும்.

இன்றைய நிதி ஆதாரத்தில் கடன் மூலம் பொருள் திரட்டலும் அடங்கியுள்ளது. அரசின் நிதிநிலையறிக்கையில் ஆண்டுதோறும் கடன்தொகை கூடிக்கொண்டே போகிறது. இன்றியமையாத் தேவைக்குக் கடன் தேவைப்பட்டாலும் விரைவில் அதனைத் தீர்க்கவும் வருவாய் வரும் வழிகள் குறித்துத் திட்டமிட்டுப் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அரசிற்குச் சொல்லும் அறிவுரை மக்களுக்கும் பொருந்தும்.

குடும்பத்தலைவனும் தலைவியும், இவைபோல் திட்டமிட்டு வருவாய் திரட்டி நல்வழியிலான சேமிப்பு, முதலீடு போன்றவற்றின் மூலம் பாதுகாத்துக் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பயனுறும் வகையில் உணவுச் செலவு, இருப்பிடச் செலவு, கல்விச் செலவு, மருத்துவச் செலவு போன்ற வழிகளில் தேவைக்கேற்ப செலவழிக்க வேண்டும். செலவில் சமன்மை இல்லாமல் கூடுதலும் குறைவுமாகச் செலவழிப்பது இன்றியமையாத் தேவைக்குப் பணமின்றி இடர்ப்படவே வைக்கும்.  எனவே, நாட்டைப்போல் வீட்டிலும் திட்டமிடல் தேவை.

திருவள்ளுவர் அரசை முதன்மைப்படுத்திக் கூறியிருந்தாலும் தனி மனிதரும் பின்பற்ற வேண்டிய பொருள் நெறி இது. திட்டமிடுவோம்! பயனுறுவோம்!

இலக்குவனார் திருவள்ளுவன்

தினச்செய்தி, 12.08.2019