திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்

 

20

இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்

தான்கண்டு அனைத்துஇவ் வுலகு.

(திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்இறைமாட்சி, குறள் எண்: 387)

இன்சொல் கூறி ஈதலைச் செய்யும் வல்லமையாளர் சொற்படி உலகம் நடக்கும் என்கிறார் திருவள்ளுவர்.

உதவுவதை விட முதன்மையானது அதனை இன்முகத்துடன் செய்ய வேண்டும் என்பதுதான். வேண்டா விருப்பாகக் கோடி கொடுப்பதைவிட, இன்சொல்லுடன் ஒன்று கொடுத்தாலே வாங்குவோர் மகிழ்வர். எனவேதான், இன்சொல் கூறுவதை முதலில் திருவள்ளுவர் கூறியுள்ளார்.

பரிமேலழகர் ஈத்தளித்தல் என்பதை ஈதல், அளித்தல் என இரண்டாகப் பிரிக்கிறார். அவர், “ஈதல்: வேண்டுவார்க்கு வேண்டுவன கொடுத்தல். அளித்தல்: தன் பரிவாரத்தானும் பகைவரானும் நலிவுபடாமல் காத்தல்” என விளக்குகிறார்.

ஈதல் என்பது வேண்டியவர்க்கு அவரது தேவை நிறைவேற வேண்டியபொழுதில், வேண்டியதைக் கொடுப்பதாகும். ஈதல் என்றால் பொருளுதவி என்றே அனைவரும் கூறுகின்றனர். பொருள் உதவி மட்டுமல்ல. வேலைவாய்ப்பு, தொழில் வாய்ப்பு, மேடைவாய்ப்பு என வாழ்விற்குத் தேவையான உதவிகளை ஈதலும் ஈதலே!

இதற்கு ஏன் வல்லமை தேவை? திருவள்ளுவர் ‘வல்லார்க்கு’ என்கிறாரே என எண்ணலாம். இன்முகத்துடன் தொடங்கினாலும் மக்களின் குறைகளைக் கேட்கும் பொழுது சிலர் வெறுப்புடன் சொல்வர், சிலர் கசப்புடன் சொல்வர், சிலர் கடுமையாகச் சொல்வர். எத்தகைய சூழலிலும் அமைதி இழக்காமல் இன்சொல் மாறாமல் இருக்க வல்லமை தேவை.

எல்லார்க்கும் ஒத்த நிலையில் வழங்காமலும் தேவைக்கு மிகையாகவோ குறைவாகவோ கொடுக்காமலும் வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடு இன்றி அளிக்கவும் உதவிக்குரிய தக்கார், தகவிலர் என அறியவும் வல்லமை தேவை.

தம் வேண்டுதலை ஏற்காதவர் என்ன கூறினாலும் மக்கள் செவி கொடுத்துக் கேட்க மாட்டார்கள். ஒருவேளை சொல்லுவோர் அதிகாரத்தில் இருந்தாலும் வேண்டா வேறுப்பாகத்தான் செய்வர். அதே நேரம், தமக்கு உதவுநர் ஏதும் சொன்னால் மகுடிக்குக் கட்டுப்பட்ட நாகம் போன்று இருந்து அவர் ஏவல்படி நடப்பர்.

“தன்சொலால் தான்கண்டு அனைத்துஇவ் வுலகு” என்பதன் மூலம், அவன் சொல்லியவாறு உலக மக்கள் நடந்துகொள்வர் என்கிறார். உலகம் இத்தகையோர் வயப்படும், அவன் நாட்டு வளர்ச்சியில் கண்ட கனவை நனவாக்க உலக மக்களே முன்வருவர், அவன் விரும்பியதை உலகம் நிறைவேற்றும்.

எனவே, நல்லாட்சி தர எண்ணுவோர், மக்கள் உள்ளங்களைத் தன் கீழ்க் கொண்டுவர வேண்டும். அதற்கு மக்கள் விரும்பி அணுகும் வகையில் இனியன பேசி வேண்டியன செய்துதர வேண்டும். வேண்டியன செய்து தருதல் என்றால் இன்றைய கையூட்டு உலகில் ஊழலை எண்ணக்கூடாது. அதிகாரப் பொறுப்பில் உள்ளவர் பிறர் குறைகளைக் களைதல் என்பது கடமையாகும்.

உலகம் நம் சொற்படி நடக்க நாமும் இன்முகத்துடன் ஈவோம்!

இலக்குவனார் திருவள்ளுவன்