திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 25 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்
(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)
25
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
(திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்வி, குறள் எண்:391)
கற்கத் தகுந்த நூல்களைத் தவறின்றிக் கற்க வேண்டும். கற்றபின் அதன்படிக் கற்றவழியில் செல்ல வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.
அரசியல் நெறியைக் கற்று அதன்படி ஆட்சியை நடத்த வேண்டும் என்கின்றனர் அரசறிவியலாளர்கள். திருவள்ளுவர் யாராக இருந்தாலும் கற்று, அதன்படி நடக்க வேண்டும் என்கிறார். இதில் ஆட்சியாளர்களுக்கும் அமைச்சர்களுக்குமான கல்வியும் அடங்குகிறது.
கசடு என்றால் குற்றம், மாசு, அழுக்கு, அடிமண்டி, தழும்பு, வடு, குறைவு எனப் பல பொருள்கள். இங்கே குற்றம், (மன)மாசு, (மன)அழுக்கு என்னும் பொருள்களில் வருகிறது. எனவே, ‘கற்க கசடுஅற’என்றால், நம்மிடம் உள்ள குற்றம் போகவும் மன மாசு அகலவும் பழுது நீங்கவும் ஐயம் திரிவின்றித் தெளிவுறவும் கற்க வேண்டும் என்கிறார்.
குற்றமற்ற நூல்களை நம்மிடம் உள்ள குற்றங்கள் நீங்கக் கற்க வேண்டும் எனலாம்.
மணக்குடவரும் பரிப்பெருமாளும் ‘கற்கப்படுவனவற்றை’ என்று கற்கப்படும் அனைத்தையும் கூறுகின்றனர்.பரிப்பெருமாள் கல்வி பல வகைத்து. அவை எல்லாவற்றுள்ளும் கற்கப்படுவனவற்றைக் கற்று. என விளக்கம் தருகிறார்.
காலிங்கர் ‘எண்ணும் எழுத்துமாகிய இவை இரண்டையும் என்கிறார். பரிமேலழகர் கற்கப்படு நூல்களாக ‘அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப்பொருள் உணர்த்தும்’ நூல்கள் என்கிறார். ஆனால், வீடு பேறு என்பது தமிழர் நெறியல்ல.
“கற்றது கைம்மண் அளவு. கல்லாதது உலகளவு”(ஒளவையார்) என்னும் பொழுது யாராலும் யாவற்றையும் கற்க ஏது நேரம்? ஆகவே, குப்பையான நூல்களைத் தவிர்த்துவிட்டு, நமக்குத் தேவையான நூல்களைக் கற்க வேண்டும். அறநூல்களுடன் நம் பணி சார்ந்த நூல்களைக் கற்க வேண்டும்.
” கற்றபின் நிற்க அதற்குத் தக” என்பதன் மூலம், கற்ற பின்னர், அறநூல்களில் கற்ற வற்றைக் கடைப்பிடிக்கவேண்டும்; துறை நூல்களில் கற்றவற்றைப் பயன்படுத்த வேண்டும்; எனவே, கற்றதன் படி நடக்க வேண்டும் எனத் தெளியலாம்..
நாம் எப்போதும் கசடறக்கற்று கற்றபடி வாழ்வோம்!
Leave a Reply