திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)

 40

உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்

களர்அனையர் கல்லா தவர்

(திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்லாமை, குறள் எண்: 406)

கல்லாதவர் ஏதோ இருக்கின்றார் என்று சொல்லும் நிலையில் யாருக்கும் பயன்படாத களர்நிலம்போல் இருப்பர் என்கிறார் திருவள்ளுவர்.

‘விடுதலையின் மறைபொருள் மக்களைக் கற்றவாராக்குவது; கொடுங்கோன்மையின் மறைபொருள் அவர்களை அறியாமையிலேயே வைத்திருப்பது” என்கிறார் அரசியலாளர் மாசிமில்லென் உரோபெசுபியர்சு(Maximilien Robespierre). கொடுங்கோன்மைக்குக் காரணமான பயனற்றவர்களாக இருக்கும் கல்லாதவர்கள் அரசிற்குப் பாரமே என்கின்றர் அரசியலறிஞர்கள். திருவள்ளுவரும் கல்லாதவர்கள் பயன்படாமல் பாரமாக இருப்பதாகக் குற்றஞ்சுமத்துகிறார்.

உளர் என்னும் = உயிரோடு உள்ளார் என்னும்;  மாத்திரையார் = அளவுடையார். என்ன அளவு? உயிர் உடலோடு ஒட்டிக் கொண்டிருக்கிறது என்ற அளவு உடையார். அஃதன்றி வேறு சிறப்பு இல்லை. பயவா=நன்மை எதுவும் விளைவிக்காத; களர் = களர்நிலம்.  யாருக்கும் பயன்படாத களர்நிலம்.  

களர்நிலத்தை உப்பு நிலம் என்றும் உவர் நிலம் என்றும் சொல்வர். எனவே,களர்நிலத்தால் ஏதோ பயன் உள்ளது. எனவே, தேவநேயப்பாவாணர் ‘இக்குறளில் சொல்லப்பட்டது உவர் நிலமல்ல; “காலாழ்களரின் நரியடும்” (500) என்னுங் குறளிற் கூறப்பட்ட உளைநிலம் அதாவது புதைசேறு நிலமாக இருக்கலாம்” என்கிறார். புதைசேற்றில் எதுவும் விளையாது என்பதால் பொருத்தமாக உள்ளது. வெறும் உப்பால் என்ன பயன்? உணவு இல்லாமல் வாழ முடியுமா? எனவே, பெரிதும் பயன்தராத களர்நிலம் என்றும் கருதலாம்.

களர்நிலம் தானும் பயன்பெறாது. மற்றவர்க்கும் பயன்தராது. கல்லாதவர்களும் அத்தகையோரே என்கிறார் திருவள்ளுவர்.

படிப்பின்றிப் பாருக்குப் பாரமாக இருக்காதே!

இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி 11.09.2019