திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 41

(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)

 

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்

மண்மாண் புனைபாவை அற்று

(திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்லாமை, குறள் எண்: 407)

நுட்பமும் சிறப்பும் மிக்க கல்வி இல்லாதவன் அழகு, மண்ணால் அழகாகச் செய்யப்பெற்ற பொம்மையைப் போன்றதே என்கிறார் திருவள்ளுவர்.

“அழகு என்பது ஒயிலான முகமல்ல. ஒயிலான அறிவே” என்றும் “கல்லாதவன் அழகு மூளை இல்லாதவன் தலைக்குச் சமம்” என்றும் அரசியலறிஞர்கள் கூறி அறிவை வலியுறுத்துகிறார்கள்.

நுண் மாண்நுழை புலம் என்றால் என்ன? நுட்பமும் மாட்சிமையும் உள்ள நூல்களில் நுழைந்து – அவற்றை நுண்ணிதாக அணுகி – ஆராய்ந்து பெறும் அறிவு.

மண்மாண் புனை பாவை என்பது சிறப்பான மண்ணில்  அழகு படச்செய்யப்படும் பொம்மை.  அழகான பொம்மை என்றால் விரும்பத்தான் செய்வர். அதுபோல் அழகும் கவர்ச்சியான ஆளுமையால் விளங்கிப் பிறரால் விரும்பப்படும். ஆனால், அறிவுதான் உண்மை அழகு. நாலடியாரும் “கல்வி அழகே அழகு”(பாடல் 133) எனக் கூறுகிறது.  அறிவில்லாத அழகு யாவராலும் விரும்பப்படாது. அழகுள்ளவன் மற்றவரால் சிறப்பிக்கப்பட வேண்டும் என்றால் கல்வி அழகைப் பெற வேண்டும். கல்வி என்றால் மேலாட்டமாகப் படிப்பதல்ல. சென்றவிடமெல்லாம் சிறப்பைப் பெறும் வகையில் ஆராய்ந்து பெறும் கல்வி. பாவை அழகாக இருந்தாலும் மண்ணால் செய்யப்பெற்றதுதானே! அதன் சிறப்பும் அந்த அளவிற்குத்தானே இருக்கும். அறிவற்றவனின் அழகும் மதிப்பைப் பெறாதே.

அழகு என்பது இயற்கையாக அமையக்கூடியது. ஒப்பனை மூலம் அழகினைக் கூட்ட முடியும். என்றாலும் அது நிலையானதல்ல. ஆனால் சிறந்த நூல்களை ஆராய்ந்து படித்து நிலையான அழகினைப் பெற நம்மால் முடியும். முயற்சியால் வருவதே இவ்வழகு. எனவே, நம்மால் பெறக்கூடிய கல்வி அழகை நாம் பெறுவதே நமக்கு நல்லது.

அழகிருந்தாலும் இல்லாவிட்டாலும் அறிவாகிய அழகைப் பெற்றுச் சிறந்திடுக!

இலக்குவனார் திருவள்ளுவன்
தினச்செய்தி 12.09.2019