திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)

 44

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்

கற்றாரோடு ஏனை யவர்

(திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்லாமை, குறள் எண்: 410)

சிறந்த நூல்களைக் கற்றவர்களே மக்கள். கற்காத மற்றவர்கள் விலங்கிற்கு ஒப்பாவர் என்கிறார் திருவள்ளுவர்.

“கல்வி கற்காத மனிதர்கள் புதிய விலங்கிற்குச் சமமாவர்” என்று கூறிக் கல்வியை அரசறிவியலறிஞர்கள் வலியுறுத்துகின்றனர்.

அனையர் என்றால் அத்தன்மையர் எனப் பொருள். இலங்கு என்றால் திகழ்தல் எனப் பொருள். நம்மைச் சிறப்புடன் திகழச்செய்யும் நூல்களைக் கற்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

கற்காதவரை விலங்குடன் நேரடியாகத் திருவள்ளுவர் ஒப்பிடவில்லை. விலங்கிற்கும் மக்களுக்கும் எத்தகைய வேறுபாடு உள்ளதோ அத்தகைய வேறுபாடு கற்றவர்க்கும் கற்காதவர்க்கும் உள்ளது எனக் கூறியுள்ளார் என உரையாசிரியர்கள் பலரும் கூறுகின்றனர். விலங்குகளுக்கு ஐந்தறிவுதான். எனவே, ஆறாம் அறிவைப் பயன்படுத்தி நூல்களைக் கற்கவோ அதனால் சிறக்கவோ விலங்குகளுக்கு முடியாது. கல்வி கற்காத மக்களும் ஆறாம் அறிவைப் பயன்படுத்திச் சிறப்பாக வாழ முடியாது. எனவே, நேரடியாக ஒப்பிட்டுக் கூறுவதால் தவறில்லை. அதே நேரம், “மக்களை நோக்க விலங்கு எவ்வளவு இழிந்ததோ” என்றெல்லாம் விளக்கம் அளிக்கின்றனர். மக்களுக்கு உதவும் விலங்குகளை இழிவாகக் கருத வேண்டா. ஆனால், ஆறாம் அறிவு இல்லாததால் அவை மனிதர்க்கு அடிமையாக இருக்கின்றன. கல்வி பெறாதவர்களும் கற்றவர்க்கு அடிமையாக இருப்பர் என்றும் கருதலாம்.

தனக்கும் தன் குடும்பத்திற்கும் தன் ஊருக்கும் தன் நாட்டிற்கும் உதவக் கல்வியறிவு தேவை. கல்வியால் திட்டமிட்டு இடர்ப்பாடுகளைக் களைந்தும் நலப்பாடுகளைப் பெற்றும் சிறக்கவும் பிறரையும் நாட்டையும் சிறப்பிக்கவும் செய்ய முடியும். கல்வியறிவு பெறாதவர் விலங்குபோல் திரிந்து வீணில் காலத்தைக் கழிக்க வேண்டியதுதான். கல்வி கற்காதவர்கள் பட்டறிவால் சிறக்கவில்லையா என்கின்றனர் சிலர். கல்விக்கூடம் செல்லும் வாய்ப்பை இழந்தாலும் பின்னர் அவர்களும் நூலறிவைப் பெற்றுத்தான் சிறக்கின்றனர். நூலறிவு இல்லையேல் அவர்கள் பட்டறிவு வீணாகும்.

கல்வி கற்காமல் விலங்குபோல் இராதே!

இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி