மீனியல் (Icthyology)
– முனைவர் இலக்குவனார் மறைமலை
(சென்ற இதழின் தொடர்ச்சி)
இக்கட்டுரையில் பயிலும் கலைச்சொற்கள்:
குறுக்கம்-Depression; நெருக்கம்-Compression; தோள்துடுப்பு-Pelvic Fin; கால்துடுப்பு- Pectoral Fin; புறத்துடுப்பு-Dorsal Fin; அகத்துடுப்பு-Ventral Fin; வால்துடுப்பு-Caudal Fin; இளகி-Plastic Fin; குறுக்கு வெட்டு-Transverse Section; உள்நுழைக்கோணங்கள்- Entering Angels; வளைவும் இடப்பெயர்வும்-Curves and Displacement; துள்ளல்–Runs; புதையிர்த்தடம்-Fossil
சென்ற இதழில் மீனியலை அறிமுகப்படுத்தினோம். அருந்தமிழ்ப் புலவர்களின் மீனியல் அறிவைப் பற்றியும் அறிந்தோம். மீன் என்றால் என்ன? விலங்கு உலகத்தில் அஃது எத்தகைய பங்கு கொண்டு திகழ்கிறது? என மேலே காண்போம்.
உயிர்களை வெவ்வேறு உடலங்கட்கு மாற்றும் பெற்றியோர், கல்லாமை, அறியாமை ஆகியவற்றால் மாசடைந்த உயிர்கட்குத்தூயவளியின் சுவாசம் ஏற்புடைத்தன்று எனக் கருதி அவற்றை ஆழ்ந்த சேற்றிடை வாழும் மீன்களாக ஆக்கினர் எனக் கிரேக்க அறிஞர் பிளேட்டோ கூறிப்போந்தார். ஆயினும் தாடைகள் கொண்ட குளிர்ந்த இரத்தத்தினையுடைய நிர்வாழும், பெரும்பான்மையாய், செவுள்களையும், வளிப் பையும் பெற்றிருக்கும் முதுகென்பு உயிரினங்களே மீன் என வரையறுக்கப்பட்டன. நமது உடல் வெப்பம் குளிர் காலத்திலும் வெப்பக்காலத்திலும் 98.4 பாகையளவே இருக்கும்.இவ்வெப்பம் கூடினாலோ, குறைந்தா்லோ, நாம் நோயினால் பிணிப்புறுதல் இயற்கை. இவ்வாறு வெப்பநிலை ஒரே சீராக உள்ள உயிரினங்கள் வெங்குருதி உயிரினங்கள் என அழைக்கப்பெறும். உடல் வெப்பம் ஒரு நிலையாக இல்லாது சூழ்நிலைக்கேற்ப உடல் வெப்பம் மாறுகின்ற உயிரினங்கள் குளிர்ந்த இரத்த உயிரினங்கள் ஆகும். மீன் குளிர்ந்த இரத்த உயிரினமாகும்.
பெரும்பான்மையான மீன்கள் செவுள்கள் மூலம் நீரில் கரைந்துள்ள காற்றை உட்கொள்கின்றன. வளிப்பை (Swim-bladder or Air – bladder) சிறுபான்மை மீன்களின் உடலில் உளது. இம் மெல்லியத் தோற்பை மீனை நீரில் நிலைப்படுத்தற்கும் (Balancing) நுரையீரல் இன்மையை ஈடுசெய்வதற்கும் உளது. இவைபற்றிப் பின்னொரு பகுதியில் விளங்கக் காண்போம்.
குருத்தென்பு மீன்கள் (Chondrichthyes)என்பு மீன்கள் (Osteichthyes) என மீன்கள் இரு பிரிவாக்கப்பட்டுள்ளன. இன்று வழக்காற்றுப் போன ‘ஆசட்ரகோடெர்மி’. ‘பிளேகோடொமி’ ஆகியவற்றின் புதையுயிர்த்தடங்களிலிருந்து அவை வலிய என்புக் கவசத்தைக் கொண்டிருந்தன என அறிகிறோம். எனவே, என்புமீன்கள், குருத்தென்பு மீன்களினும் முற்பட்டவை என்பது போதரும்.
பாலூட்டிகளுக்குக் கை கால்கள் அமைந்துள்ளவாறே, மீன்கட்குத் துடுப்புகள் அமைந்துள. தலைக்கு அருகில் ஓர் இணைத் தோள்துடுப்புகளும், அதற்குப் பின்புறம் ஓர் இணைக்கால் துடுப்புகளும், முதுகின் நடுவில் ஒரு புறந்துடுப்பும், உணவுப்பாதை முடியுமிடத்தில் ஓர் அகத்துடுப்பும், வலிய தசைநார் பொருந்திய வால் துடுப்பு ஒன்றும் உள.
ஒரு பிரெஞ்சு அறிவியலாளர் உருக்கப்பட்ட இளகிப் பந்துகள் சிலவற்றை நீரில் போட்டுக் கையினால் இழுத்து நீந்தச் செய்தார். உடனே அதன் இரண்டு அற்றங்களும் ஒடுங்கின ; நடுப்பாகமும் அகன்றது ; எனவே, எளிதில் நீந்துதற்கு இவ்வித உருவமே தேவை யென்பது எளிதிற் புலனாகும்.
மீனின் உருவமைப்பு ஒரு நீண்ட படகு போன்றும் குறுக்குவெட்டில் வட்டமாக அல்லது நீள்வட்டமாகவும் இருக்கும் மீனின் வளைவும் இடப்பெயர்வும் உள் நுழைக் கோணங்களும் துள்ளல்களும் பல இயந்திர நுணுக்கங்களைக் கொண்டவை. இவற்றை யறிந்த பின்னரே, இவ்வறிவபை் பயன்படுத்தி நீர் மூழ்கிக் கப்பல்கள் செய்யப்பட்டன.
இத தொடரில் மீன்களின் சிறப்பியல்புகளும் தனிப்பண்புகளும் எட்டுப் பிரிவுகளில் விளக்கப்படுகின்றன.
- உருவும் அசைவும்
- வண்ண அமைப்பும் ஒளிர் தன்மையும்
- மீன்களின் நச்சுத்தன்மை
- மீன்களின் மின்னாற்றல்
- பெற்று வளர்த்தலும் பேணிக்காத்தலும்
- ஆழ்கடல் வாழ்வும் கிருமி களைதலும்
- புலம் பெயர்தல்
- மீன்தரும் செல்வம்
1. உருவும் அசைவும்
உறைவிடத்தைப் பொறுத்து மீன்கள் இருவகைப்படும்.
1.) நீரின் மேற்பரப்பில் வாழும் மீன்கள். 2.) ஆழ்கடல் மீன்கள். மீனின் உடலமைப்பு உறைவிடத்தைப் பொறுத்தும் பழக்கவழக்கங்களைப் பொறுத்தும் மாறுபடும்.
‘கெர்கேரினசு’ எனும் சுறா இனம் பிற மீன்களைத் துரத்தி அவற்றை உண்டுவாழும் பழக்கமுடையதாதலின் அதற்கேற்ப வலிய தசைநார் பொருந்திய வால்துடுப்புகளைக் கொண்டுள்ளது. அது நீரின் மேற்பரப்பில் வாழ்தலால் கடற்பறவைகள கொன்றுவிடா வண்ணம் நீலநிறம் பெற்று கடலிலிருந்து எளிதில் பகுத்தறிய இயலா வண்ணம் விளங்குகிறது.
‘ஓர்சிடோலோபசு’ எனும் சுறா இனம் ஆழ்கடலில் வாழும் மீனினமாகும். அதன் உடல் அமைப்பு நீந்துதற்கேற்றவாறு அமைந்துள்ளது. அம் மீன் ஒரே இடத்தில் இருந்து கொண்டு தன் இரையைப் பிடித்துண்பதற்கு, அதன் வாழ்விடத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்றவாறு வண்ண அமைப்பும் உருமாற்றமும் பெற்று விளங்குகிறது.
‘ஓர்சிடோலோபசு’ ஓரிடத்தில் நிலையாய் இருக்கும்போது ஒரு பாசிபடர்ந்த பாறையைப்போல் தோற்றமளிக்கும். எனவே, அதன் இரை அம்மீனைப் பிற பாறைகளிலிருந்து பகுத்தறிய இயலாது, அவ்விடம் தயங்காமல் வரும். எனவே, ஒரே இடத்தில் இருந்தவாறே இரையைப்பிடித்துண்பது அதற்கு எளிதாகிவிடுகிறது.
(தொடரும்)
குறள்நெறி: 15.10.1964
Leave a Reply