வெருளி அறிவியல் 38 – 41 : இலக்குவனார் திருவள்ளுவன்
[வெருளி அறிவியல் 34 – 37 தொடர்ச்சி]
வெருளி அறிவியல் 38 – 41
38. இடைவிலகல் வெருளி – exterviaphobia
இடைவழியிலிருந்து விலகுவது குறித்த அளவுகடந்த பேரச்சம் இடைவிலகல் வெருளி.
exter என்றால் கிரேக்கத்தில் வெளிப்புறம் என்றும் via வழி என்றும் பொருள்.
exter என்றால் இலத்தீனில் தன்னியல்பான எனப் பொருள். இலத்தீனிலும் via என்றால் வழி என்றுதான் பொருள்.
00
39.இருள் வெருளி-Achluophobia/Lygophobia/Nyctophobia/Scotophobia
இரவு, இரவுப்பொழுதில் வரும் இருட்டு முதலியன குறித்த வரம்பு கடந்த பேரச்சம் இரவு வெருளி/ இருண்மை வெருளி/ இருள் வெருளி/ இரா வெருளி என அழைக்கப்பெறுகின்றது. எப்படி அழைத்தாலும் பொருள் ஒன்றுதான். எனவே நாம் இருள் வெருளி என்றே அழைப்போம்.
இரவில் வெளியே செல்லுதல், இரவில் தனியாகப் படுத்தல், இரவுப்பொழுதில் யாரேனும் வருதல் அல்லது யாரையாவது பார்த்தல், இருட்டுச் சூழல் என இவர்கள் பேரச்சம் கொள்வர்.
Achluo, Lygo ஆகிய கிரேக்கச் சொற்களுக்கு இருட்டு /இருண்மை எனப் பொருள்கள்.
Scotophobia – சுகாத்தியர் வெருளி என்பது சுகாத்து நாட்டினர தொடர்பான வரம்புகடந்த பேரச்சத்தையும் குறிக்கும் .
nocti என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் இரவு.
00
40. இரும்பு வெருளி-Ferrumphobia
இரும்பு, இரும்புப் பொருள்கள் மீதான வரம்பு கடந்த பேரச்சம் இரும்பு வெருளி.
இரும்புப்பொருள் மேலே விழுந்து அடிபட்டதால் அல்லது பிறருக்கு அடிபட்டதைப்பார்த்ததால இரும்பு மீது ஏற்பட்ட அச்சம் நாளடைவில் வளர்ந்திருக்கலாம்.
இரும்புப்பொருள்கள் விற்பனையகம் அல்லது இரும்பபுப் பொருள்கள் உள்ள பகுதிகளில் வேலை பார்க்கவும் இத்தகையோர் அஞ்சுவர்.
Ferrum என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் இரும்பு.
00
41. இளந்தை வெருளி- Hebephobia
இளம் அகவையரை – இளந்தைப்பருவத்தினர் மீதான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் இளந்தை வெருளி.
சிறார் வெருளி (paedophobia) , பதினகவையர்வெருளி(Ephebiphobia) போன்றதுதான் இதுவும்.
இளந்தைப் பருவத்தினர் மீதான போதிய புரிதலற்ற, துல்லியமற்ற, மிகைப்படுதுதப்பட்ட, பரபரப்பான எண்ணங்களே அவர்கள் மீதான வெருளிக்குக் காரணமாகிறது.
அவர்களைக் கட்டுப்படுத்த இயலவில்லை என்ற கவலையும் எரிச்சலும் வெறுப்பாக மாறி வெருளியை உருவாக்குகிறது.
முதலில் 1994இல் கிருகன் அசுத்திரோத்து (Kirk Astroth) என்பவரால் இச்சொல்( ) உருவாக்கப்பட்டுப் பயன்படுத்துப்பட்டது. பின்னர், குமுகவியலாளர், இளைஞர் நல அமைப்புகள், அரசு முகவாண்மைகள் இச்சொல்லைப் பரவலாகப் பயன்படுத்துகின்றனர்.
Ephebi என்னும் சொல்லிற்கு இளம்பருவம் எனப் பொருள்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
[வெருளி அறிவியல் 42 – 46 காண்க]
Leave a Reply