(வெருளி நோய்கள் 664-668: தொடர்ச்சி)

கருச்சிதைவுபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் கருச்சிதைவு வெருளி.

கருச்சிதைவு வெருளி உள்ளோரில் ஒரு பகுதியினர் கருத்தடைக்கும் பேரச்சம் கொள்வோராக உள்ளனர்.

00

கருத்து குறித்த வரம்பற்ற பேரச்சம் கருத்து வெருளி.

எதற்கெடுத்தாலும் கருத்துரை சொல்வோர் உள்ளனர். அவ்வாறு கருத்துரை சொல்வது சிலருக்குப் பிடிக்காது. சில நேரம் செயல்பாடுகள் குறித்த கருத்துரையை நல்ல நோக்கததில் சொன்னாலும் எரிச்சல் அடைந்து வெறுப்பர். யாரும் கருத்துரை சொன்னால் அது குறித்துத் தேவையற்ற பேரச்சம் கொள்வர். தம்மிடம் கருத்து கேட்டாலும் சொல்வதற்கு அஞ்சி ஓடி ஒளிவர். தவறான கருத்துகள் சொல்ல நேர்ந்து அதனால் தீய விளைவுகள் நேரும் என அச்சப்படுவர்.  தொலைக்காட்சி வாதுரைகளில் சொல்லப்பட்ட கருத்துகளால் பதவி இழந்தவர் உண்டு.பொதுவாழ்வில் இவ்வாறு தவறான கருத்து சொல்லிப் பதவி இழந்தவர் நிலையைப் பார்த்தும்கருத்து சொல்ல அச்சம் வரும்.

மக்களிடம் தெருக்களில் கருத்து கேட்பதின் மீதான வெறுப்பையும் பேரச்சத்தையும் குறிக்கும் வகையில் Genviaphobia கூறப்பெறுகிறது. கருத்துக் கணிப்பிற்காக வினா தொடுப்பவர்கள் மீதும் நன்கொடை திரட்ட வரும் தொண்டு நிறுவனத்தினர் மீதும் தேவையின்றி ஏற்படும் அளவு கடந்த பேரச்சம் கருத்துக் கணிப்பர் வெருளி(Genviaphobia) என்று தனியாகப் புதிய வெருளியில் சேர்க்கப்பட்டுள்ளது

இவ்வாறு தனியாகக் குறிக்க வேண்டா. இதுவும் அடிப்படையில் கருத்து வெருளிதான். எனவே, இதிலேயே சேர்க்கப்பட்டுள்ளது.

dox என்னும் கிரேக்கச் சொல்லிற்குக் கருத்துரை எனப் பொருள்.

Doxophobia என்பது புகழ்ச்சி வெருளியைக் குறிக்கும். அதுவும் கருத்துரைதான் என்றாலும் வேறுபட்டது.

gens என்னும்பிரெஞ்சு சொல்லின் பொருள் மக்கள்.

via என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் தெரு.

00

கருந்துளை குறித்த வரம்பற்ற பேரச்சம் கருந்துளை வெருளி.

கருந்துளை  அல்லது கருங்குழி (Black Hole) என்பது, இவற்றின் எல்லைக்குட் செல்லும், ஒளி முதலான  எதுவுமே வெளியேற முடியாத அளவு வலுவான ஈர்ப்புச் சத்தியைக் கொண்டுள்ள, அண்டவெளியின் ஒரு பகுதி. இந்த எல்லை நிகழ்வெல்லை (event horizon) எனப்படும். இந்த நிகழ்வெல்லைக்குள் இருந்து பார்க்கக்கூடிய ஒளி அலைகள் போன்ற மின்காந்த அலைகள் கூடத் தப்பி வெளியேற முடியாது என்பதால் உள்ளே நடப்பவை எவற்றையுமே வெளியில் இருந்து அறிந்து கொள்ள முடியாது. இதனாலேயே இதனைக் கருந்துளை/கருங்குழி என்கின்றனர். இது குறித்த பேரச்சமே கருந்துளை வெருளி.

00

கரும்பறவை(blackbird) குறித்த வரம்பற்ற பேரச்சம் கரும்பறவை வெருளி.

பறவை வெருளி உடையவர்களுக்குக் கரும்பறவை வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.

Kotsyfi என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் கரும் பறவை.

00

கரும்பூனைபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் கரும்பூனை வெருளி.

நம் நாட்டில் பூனை குறுக்கே வருவதைத் தீக்குறியாகக் கருதுகின்றனர். மேனாடுகளில் கருப்புப் பூனையையப் பார்ப்பதைத் தீங்கு நேருவதன் அறிகுறியாகக் கருதுகின்றனர்.

Mavrogat என்பது விளையாட்டு ஒன்றில்  கருப்புப் பூனை ஒன்றிற்குச் சூட்டிய பெயர்.அதுவே Mavrogat என்றால் கருப்புப் பூனை என்றாயிற்று.

00

(தொடரும்)