andhra_encounter07

ஆந்திரரின் அளப்பரிய கொடுமை!

வெங்கையாவிற்குக் கடும் கண்டனம்!

சித்தூர் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும்!

  கொடுங்கோல் கொலையாளி இராசபக்சேவை அழைத்து அழைத்து ஆந்திரர்களும் அவனின் மறு பதிப்பாக ஆகிவிட்டனர் போலும்! கூலி வேலைக்கு அழைத்து வந்த தமிழர்களைத் திட்டமிட்டுத் துன்புறுத்தி, உடலுறுப்புகளை வெட்டி, எரியூட்டி, குண்டுகளால் துளைத்துக் கொன்ற செய்தி ஊடகங்களிலும் இணையத் தளங்களிலும் வந்து கொண்டுள்ளன. ஆனால், அப்பாவி மக்களைக் கொன்றோமே என்ற உணர்வு கிஞ்சித்தும் இல்லை. எப்படி இரக்க உணர்வு வரும்? திட்டமிட்ட படுகொலை என்னும் பொழுது அதைத்தானே சரி என்பார்கள்.

  150 பேர் மரம் கடத்தினார்களாம்! வெட்ட வெளியில் முழுநிலவு ஒளியில் அடையாளம் தெரிந்ததால் சுட்டார்களாம்! இறந்தவர்கள்தவிர மீதி பேர் எங்கே போனார்கள்? ஒருவர்கூட அடிபட்டு குண்டடிக்காயங்களுடன் விழுந்து உயிருடன் இல்லையா? சுடப்பட்ட வட்டாரத்தில் செம்மரங்களே காணவில்லையே! கொல்லப்பட்டவர்களின் அருகில் இருந்த செம்மரங்கள் காய்ந்துபோன பழைய மரங்களாயிற்றே! அவற்றில் பதிவுஎண்கள்கூட உள்ளனவே! தாக்கும்பொழுது அல்லது தாக்கிவிட்டுத் தப்பி ஓடும்பொழுது எப்படி அனைவரின் மார்பிலும் குண்டுபடும்படிச் சுட முடிந்தது? கொல்லப்பட்டவர்கள் உடல்களில் காயங்கள், தோல்கள் எரிந்து அரைகுறை உடையுடன் இருந்தார்களே! அந்தத்தோற்றத்தில்தான் கடத்த வந்தார்களா? தமிழ்நாட்டில் இருந்து கடத்துவதற்கு ஆள்கள் வருவதாகத் தகவல் கிடைத்து வந்ததாகக் கூறுகிறார்களே! தகவல் கிடைத்தது என்றால் மாநில எல்லையிலேயே தளையிட்டிருக்கலாமே! அவர்கள் வந்து இரவு வெட்டிக்கொண்டிருக்கும் வரை காத்திருந்து சுட்டதேன்? இப்படிப் பல கேள்விகள் மூலம் ஆந்திரக் காவல்துறை, வனததுறை, அரசு, முதல்வர் அறிவிக்கும் தெரிவிக்கும் செய்திகள் யாவும் பொய் என அனைவருக்கும் தெளிவாகிறது.

  நாள்தோறும் கோடிக்கணக்கில் பணம் புரளும் செம்மரக் கடத்தலைத் தடுக்க எண்ணினால் கடத்தும் முதலாளிக் கயவர்களை அல்லவா பிடிக்க வேண்டும்? கடத்தப் பயன்படும் கப்பலை அல்லவா தடுக்க வேண்டும்? கடத்தும் பாதையை அல்லவா அடைக்க வேண்டும்? எனவே, ஆந்திர அரசின் நோக்கம், கடத்தலைத் தடுப்பதல்ல என்பது அனவைருக்கும் புரிகின்றது.

  முன்னரே மரம் வெட்டிய கூலித் தொழிலாளிகளான தமிழர்களைச் சிறையில் வைத்துள்ளனர். கடத்தும் தெலுங்கு முதலாளிகளையும் கடத்தச் சொன்ன கடத்தல் தரகர்களையும் மரம் வெட்டும் தெலுங்குத் தொழிலாளிகளையும் விட்டுவிட்டுத் தமிழர்களைமட்டும் சிறைவைப்பதேன்? எனக் கேள்வி கேட்டு வழக்கு மன்றத்திற்கும் மனித உரிமை ஆணையத்திற்கும் போனதால் சிறையில் இருந்து அழைத்து வரப்பெற்று – அழைத்து அல்ல கடத்தி வரச் செய்து –     ஒரு பகுதியினரைக் கொன்றுள்ளனர். மறு பகுதியினர் தமிழ்நாட்டில் இருந்து பேருந்தில் வந்தவர்கள். தமிழ்நாட்டில் இருந்து கடத்த வந்தவர்களைப் பிடிக்க முயன்றதாக நாடகமாட வேண்டுமல்லவா? அதற்காக இவர்கள்! பேருந்தை மறித்து இவர்களைக் கடத்திச் சென்றதைப் பிற பயணிகளும் மக்களும் பார்த்துள்ளார்கள். சிறையில் இருந்து முன்சொன்னவர்களைக் கடத்தி வந்ததையும் பொதுமக்கள் பார்த்து இருக்கின்றனர். நாடகமாடத் தெரியா ஆந்திரக் காவல்துறையினர் சாயம் உடனேயே வெளுத்து விட்டது. கொடுங்கொலை புரி்ந்த அதிகாரிகளும் பிறரும் முதல்அமைச்சர் முதலான அமைச்சரவையும் தண்டிக்கப்படவேண்டும். ஆந்திராவில் மனிதநேய அமைப்புகளும் சில கட்சியினரும் கொலையைக் கண்டித்து எதிராகப் போராடி வருவது மகிழ்ச்சிக்குரியது! மனித உரிமை ஆணையமும் உயர்நீதிமன்றமும் கூட்டுக்கொலையில் உறைந்துபோய் மனித நேய நடவடிக்கைகள் எடுத்து வருவதும் பாராட்டிற்குரியது.

  ஆனால், மார்க்சிய இலெனினிய மக்கள்விடுதலையின் பொதுவுடைமைக்கட்சி (சி.பி.எம்.எல்.) ஆளும் வருக்கம் அடித்தட்டுமக்கள்மீது நடத்தும்கோரமான வன்முறை என்றும் தமிழர்களுக்கு எதிரான தெலுங்கர்களின் சிக்கல் எனப் பார்க்கக்கூடாது என்றும் அறிவித்துள்ளது. இக்கட்சி கூறுவது உண்மையானால் ஏன், ஓர் ஆந்திரர்கூடப் பிடிக்கப்படவில்லை? எனவே, இத்தகைய போலிப்பொதுவுடைமைக் கட்சியினரை இந்த நேரம் நாம் அப்புறப்படுத்த வேண்டும்.

   மத்திய அமைச்சர் வெங்கையா(நாயுடு), வழக்குமன்றத்தில் வழக்கு உள்ளதால் கருத்து தெரிவிக்கவில்லை எனக் கூறிவிட்டு, “எனினும் கடத்தப்பட்டவை செம்மரம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்” என முத்து உதிர்ந்திருக்கிறார். இவரது கருத்தின்படி மரம் வெட்டியவர்களைச் செத்தொழியச் செய்வதுதான் ஏற்றது என்றாகிறது. இத்தகையவர் மத்திய அமைச்சராக இருந்து நாட்டிற்கு என்ன நல்லது செய்துவிடப்போகிறார் எனத் தெரியவில்லை. தன் மாநிலத்தின் படுகொலைகளுக்குச் சப்பைக்கட்டும் வெங்கையா பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். சில பசுக்கள் கொல்லப்பட்டிருந்தால் ஆந்திர அரசையே கலைத்திருக்கக்கூடிய நரேந்திரர் மோடி) அறவழி நடக்க மாட்டார் எனத் தெரியும். எனினும் நாம் இத்தகைய கோரிக்ககைய வைப்பதன் மூலம் இவர்கள் வாயை அடைக்கச் செய்யலாம்; நீதிமன்றததிற்கு நெருக்குதல் வராமல் பார்த்துக் கொள்ளலாம்.

 அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை (திருவள்ளுவர்,திருக்குறள் 555)

கொலையுண்ட தமிழர்கள் விடும் கண்ணீர் கொலையாளிகளைத் தண்டிக்க வழி வகுக்கட்டும்!

  ஈழத்தமிழர்கள் பன்னூறாயிரவர் படுகொலை செய்யப்பட்டதால் விழித்து எழுந்த தமிழர்கள் இப்பொழுது ஆந்திர அரசின் வன்முறைக்கொலைகளுக்கு எதிராக ஆர்த்து எழுந்திருப்பது வரவேற்கத்தக்கது. இதற்கு முன்னர் இவ்வாறு தமிழர்கள் ஐவர் கொல்லப்பட்டனராம். அப்பொழுது இந்த விழிப்புணர்வு வந்திருந்தால் இந்த இருபது தமிழர்களும் காப்பாற்றப்பட்டிருப்பர். இப்பொழுது நாம் விழிப்புடன் இரு்நதால்தான் தமிழர்கள் காப்பாற்றப்படுவர். இத்துடன் ஆந்திரச் சிறைகளில் உள்ள அப்பாவித்தமிழர்களை விடுதலைசெய்யவும் நாம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

 தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் (ஈரோடு மாவட்டக்குழு) ஆந்திராவில் இவ்வாறு மரம் வெட்டச் சென்ற தமிழர்களைக் கொல்வது ஒன்றும் புதியதல்ல என விளக்கி யுள்ளார்கள். இவற்றுக்கு முற்றுப்புள்ளி இட வேண்டும் என்றால் தமிழர் நிலம் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டின் கொங்குமண்டலம்தான் இன்றைக்குச் சித்தூர் மாவட்டமாக ஆந்திரத்தில் உள்ளது. சித்தூர் மாவட்டத்தில்தான் தமிழகத்தின் வட எல்லையாக இருந்த திருப்பதியும் உள்ளது. எனவே, நாம் சித்தூர் மாவட்டத்தைத் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பாடுபட வேண்டும். சித்தூரில் உள்ள தமிழர்களைத் திரட்டியும் இங்கிருந்து ஆதரவு அளித்தும் மொழிவாரி மாநிலப் பிரிவினையின் பொழுது நம்மைவிட்டுப் பிரிக்கப்பட்ட சித்தூர் மாவட்டத்தைத் தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும். அததுதான் அதுதான் இறந்த இருபதின்மருக்கும் நாம் செலுத்தும் அஞ்சலியாகும்.

   உழைக்கச் சென்று உயிரைப் பறிகொடுத்த இருபதின்மருக்கும் வீர வணக்கத்தையும்

அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களையும்

அக்குடும்பத்தினருக்கு உதவும் தமிழக அரசிற்கும் கட்சியினருக்கும் அமைப்பினருக்கும் அறவாணர்களுக்கும் பாராட்டுகளையும்

கொலையாளிகள் தண்டிக்கப்பட முனைந்து செயலாற்றும் மனித நேயர்களுக்குவாழ்த்துகளையும் அகரமுதல இதழ் தெரிவிக்கிறது!

 

தமிழர்களின் மொழி உணர்வே நாம் எங்கிருந்தாலும் நம்மை ஒற்றுமைப்படுத்தும்!

தமிழர்களின் இனஉணர்வே நாம் எங்கிருந்தாலும் நம்மைக் காப்பாற்றும்!

மொழிஉணர்வு கொள்வோம்! இன நலம் பேணுவோம்!

மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம்

எல்லாப் புகழும் தரும். (திருவள்ளுவர், திருக்குறள் 457)

 

துயரத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை    feat-default

– அகரமுதல 74: பங்குனி 29, 2046 / ஏப்பிரல் 12, 2015