supersinger-finalists

தமிழ்ப்பற்றுக்கு வழி வகுக்கும் விசய் தொலைக்காட்சி!

தேர்வு முறையில் நடுநிலையைப் பின்பற்றுக!

  மக்கள் தொலைக்காட்சி நீங்கலான தொலைக்காட்சி நிறுவனங்கள் தமிழ்க்கொலையையே தொழிலாகக் கொண்டுள்ளன. சிறிய தொலைக்காட்சி நிறுவனங்கள் கதைத் தொடரை ஒளிபரப்பாமல் பண்பாட்டுக் கொலைபுரியாமல் தொண்டு புரிகின்றன. அவ்வாறிருக்க விசய் தொலைக்காட்சி – அதுவும் சீ சீ என்பதுபோல் பெயருக்குப்பின்னர் பாட்டியம்மா சொல்வதும் முதல் எழுத்துகளைத் தமிழில் குறிப்பிடும் தொகுப்பாளரும் அவ்வாறே சொல்லத் தொடங்கியுள்ளதும் பாடல்நிகழ்ச்சிகளில்கூட சாங்கு, சிங்கர், சூப்பர் போன்று ஆங்கிலச் சொற்களைக் கூறுவதையே கடமையாகக் கொண்டுள்ளதுமான விசய் தொலைக்காட்சி – எவ்வாறு தமிழ்ப்பற்றுக்கு வழி வகுத்துள்ளது என வியக்கலாம்!

 ஆனால், இதன் உச்சப்பாடகர்  அல்லது மேன்மைப்பாடகர் நிகழ்ச்சியைப் பார்ப்பவர்களுக்கு அவர் தமிழராக இருந்தால் இயல்பாகவே தமிழ்ப்பற்று ஊற்றெடுக்கும். பொதுவாகத் தமிழரல்லாதவர்தான் நடுவர்களாக இரு்பபார்கள். அவர்கள் தெரிவில் நடுநிலையுள்ளதுபோல் காட்டப்படும். அவர்கள் தமிழ் உச்சரிப்பிற்கு முதன்மை அளிப்பது பாராட்டிற்குரியதாக இருக்கும். ஆனால் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராத பிற மொழிச்சிறாரைப் புகழ்வதையும் அவர்களுக்குக் கூடுதல் மதிப்பெண்கள் தருவதையும் காணலாம். தமிழ்ச்சிறார் நன்றாகப் பாடினாலும், “உன் குரல் உடைந்து விட்டது; அதனால் இப்படிப் பாடுகிறாய்” என்பதுபோல் பாடலில் குறை இருப்பதுபோன்ற தோற்றத்தைக் காட்டுவதையும் பிற மொழிச்சிறார் பாடலில் குறை இருந்தால், “உனக்கு இன்று உடல்நலக்குறைவு அவ்வாறிருந்தும் நன்றாகப் பாடியுள்ளாய்; எனவே, முந்தைய திறமை அடிப்படையில் மதிப்பெண் அளிக்கிறோம்” எனச் சொல்வதையும் காணலாம்.

  சிறார் எம் மொழியினராக இருப்பினும் அவர்களின் ஆர்வம், முயற்சி, திறமை முதலியவற்றைப் பாராட்டுகிறோம். பொதுவாக அனைவரையைும் ஊக்குவிக்கும் முறையில் கருத்து தெரிவிக்கும் நடுவர்களையும் சிறப்பு அழைப்பாளர்களையும் பாராட்டுகிறோம்! ஆனால், தமிழ்நாட்டில் தமிழில் நன்றாகப் பாடக்கூடிய தமிழ்ச்சிறார் யாருமில்லையா? எப்பொழுதுமே பிற மொழிச்சிறார்களை வெற்றியாளர்களாக அறிவிப்பதேன்? இதனால் மனம் குமுறிய உலகத் தமிழ் மக்கள், பிற மொழிச்சிறார் மூவரை நடுவர்கள் இறுதிப்போட்டிக்குத் தேர்ந்தெடுத்ததால் தமிழுணர்வு கொண்டு தமிழ்ச்சிறார்களை வாக்களித்து இறுதிப் போட்டிப் பங்கேற்பாளர்களாகத் தேர்ந்தெடுத்துள்ளனர். இத்தகைய தமிழ் உணர்வு பரவக் காரணமாக இருந்த விசய் தொலைக்காட்சிக்கு வாழ்த்துகள்!

  நிகழ்ச்சிக்குப் பொறுப்பாளர்கள் நிகழ்ச்சியை நடத்தும் விதத்திற்கும் பங்கேற்பாளர்களை மதித்து அளிக்கும் வாய்ப்பு வசதிகளுக்கும் பாராட்டுகிறோம். அதே நேரம் தேர்வு முறை நடுநிலை பிறழ்ந்து அமைந்துள்ளதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

  நடுவர்கள் மதிப்பெண் அளித்து வெற்றியாளர்களை ஒவ்வொரு நிலையிலும் முடிவெடுக்கும் நேர்வுகளில், அம் முடிவு தவறாக இருந்தாலும் பொதுமக்கள் குறுக்கிட இயலாது. அவ்வாறிருக்க, பொதுமக்கள் வாக்குகள் அளித்து வெற்றியாளர்களைத் தெரிந்தெடுக்கும் முறையில் நடுவர்களின் குறுக்கீடு ஏன்? தாங்கள் விரும்பியவர்கள் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால் அவருக்கு அதிக மதிப்பெண் அளித்து வெற்றியாளராகக் காட்டுவது எந்த வகையில் முறையாகும்? எனவே, எப்பொழுது தெரிவு முடிவு பொதுமக்களின் கைகளுக்கு வந்து விடுகிறதோ அப்பொழுதே நடுவர்கள் தெரிவு முடிவில் இருந்து விலகி யிருக்க வேண்டும். வாக்கெடுப்பு என்றால் வாக்கெடுப்பைமட்டும்தான் அளவுகோலாகக் கொள்ள வேண்டுமே தவிர, நடுவர்களின் மதிப்பீட்டை அல்ல!

  மேலும், ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை முடிவிலும் வெற்றியாளரர்களின் வாக்கு விவரங்களை மட்டும்மதான் தெரிவிக்கின்றனர். பிறரது வாக்கு எண்ணிக்கையைத் தெரிவிப்பதில்லை. அவர்கள் குறைவான வாக்குகள் பெற்றுள்ளமையால் தெரிவிக்கவில்லை என்ற முடிவு தவறாகும். வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் தங்களுக்குள்ள செல்வாக்கைப் புரிந்துகொள்ள வாக்கு எண்ணிக்கை துணையாகும். இல்லையேல் முடிவு அறிவிப்பதில் முறைகேடு இருக்கிறது எனப பொதுமக்கள் எண்ணுவதில் தவறில்லை என்றாகும்.

  பணவசதி உள்ளவர்கள் வெற்றி பெறும் வகையில் வாக்களிப்பு முறை இருப்பதும் தவறாகும். ஒருவர் எத்தனைக் குறுந்தகவலும் அனுப்பலாம் என்பது வாக்களிப்பு முறை. எனவே, வசதியுள்ள போட்டியாளர்கள் தாங்களே மிகுதியாக வாக்களித்து வெற்றி முடிவைத் திருப்ப இயலும். இதுபோல், ஒரு கணிப்பொறியிலிருந்து – ஓர் இணையநெறிமுவரியிலிருந்து (IP address) – 500 வாக்கு அளிக்கலாம் என உள்ளது. இம்முறையும் பணச் செல்வாக்கு உள்ளவர்கள் வெற்றியை முடிவுகட்டும் வகையில்தான் உள்ளது. எனவே, இம்முறை தவறானதாகும்.

  இறுதிப்போட்டிக்கான பங்கேற்பாளர்களைத் தெரிவு செய்யும் வாக்கெடுப்பு முடிவை உடனே அறிவிக்காமல் காலந்தாழ்த்தி அறிவிப்பதும் தெரிவுமுறையில் ஊழல் உள்ளதாகப் பொதுமக்களை ஐயப்பட வைக்கின்றது. 500க்குமேல் ஒரே இணையநெறி முகவரியிலிருந்து வந்த வாக்குகளை எண்ணிக் கழிப்பதற்கு நேரம் எடுத்துக்கொண்டதுபோல் கருதும் வகையில் விவரம் அளிக்கிறார்கள். இதுவும் தவறே. கணிணி மூலம் நடைபெறும் வாக்கெடுப்பில் உடனுக்குடன் முடிவுகளை அறிய இயலும். அவ்வாறிருக்க வியாழன் முடிவான வாக்குப்பதிவின் எண்ணிக்கையை அறிய திங்கள் அல்லது செவ்வாய்வரை ஆனதாகக்காட்டுவதும் மோசடியே என மக்கள் எண்ணுகின்றனர். இதை உடனே அறிந்து தெரிவிப்பதுடன் ஒருவருக்கு இவ்வாறு (மொத்த எண்ணிக்கையிலிருந்து நீக்கப்பட்ட) போலியாக அளிக்கப்பட்ட வாக்குகள் எண்ணிக்கையையும் தெரிவிக்க வேண்டும்.

  விசய் தொலைக்காட்சியின் மூடுமந்திரம் அதன் மோசடியை உணர வைப்பதாக உள்ளது. எனவே, திறந்த புத்தகம்போல் விசய் தொலைக்காட்சி இருக்க வேண்டும்.

  பங்கேற்பாளர்களின் பாடல் சிறப்பிற்கு இசையமைப்புக் குழுவினர் முதன்மைக் காரணமாக உள்ளனர். எனவே, பரிசளிக்கும் பொழுது இசைக்குழுவினர் ஒவ்வொருவருக்கும், நிகழ்ச்சியின் பின்னணியில் உழைக்கும் ஒப்பனையாளர்கள், படக்குழுவினர் முதலான ஒவ்வொருவருக்கும் பொதுமக்கள் முன்னிலையில் சிறப்பான பரிசுகள் அளிக்க வேண்டும்.

அடுத்த நிகழ்ச்சியையாவது பண்பாட்டை எதிரொலிக்கும் பாடல்கள்மட்டும் இடம் பெறும் வகையிலும் தமிழ்ச்சிறாரைப் புறக்கணிக்காத வகையிலும் அமைக்க வேண்டுகின்றோம்.

வெற்றி வாய்ப்பைப் பெற்றாலும் இழந்தாலும் பாடல் சிறார் அனைவருக்கும் வாழ்த்துகள்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் feat-default

அகரமுதல இதழுரை 65

நாள் தை 25, 2046, பிப்பிரவரி 08, 2015