(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.8 – 1.6.12 தொடர்ச்சி)

இராவண காவியம்

1. தமிழகக் காண்டம்

6. தாய்மொழிப் படலம்

13.     ஈங்கொரு புதுமை யில்பொரு ளுவமை

                      யெனத்தகு சிறுமுகை மணம்போற்

                 பாங்கொடு மக்கள் பற்பல பெற்றும்

                      பழமையென் றளவிடு மகவுந்

                 தாங்கிய தாவிற் கன்னியா யிளமை

                      ததும்பிடுந் தண்டமிழ்த் தாயை

                 நீங்கிய விளமைச் சிறியவ ருலக

                      நெறியிலா ரொத்துளே மெனலே.

          14.     வண்புகழ் மூவ ரொடுதமிழ்க் குயிரை

                      வழங்கிய தலைவனுங் காத்த

                 தண்பொழில் வேலித் தமிழக முழுதுந்

                      தழைத்தினி திருந்தசெந் தமிழர்

                 கண்பொலி பாவை யுயிரினும் பெரிதாக்

                      கருதியே கவினுற வளர்த்த

                 மண்புகழ் தமிழ்த்தாய்ச் சிறப்பினை முழுதும்

                      வகுத்துரைத் திடவலன் கொல்லோ.

           15.    உருவமு மியல்போ டெளிமையும் வளமு

                      மொருங்கமைந் தெழுதரு மெழுத்தும்

                 அருமையி னெழுத்தா னியன்றசெஞ் சொல்லு

                      மாகிய வுறுப்பினை யுடைய

                 பொருளெனும் பெண்ணை யருமையி னீன்று

                      பொருந்திசை யோடுகூத் தென்னுந்

                 திருமணிக் கலனோ டுடையணிந் துள்ளந்

                      திகழ்ந்தன ளருந்தமி ழன்னை.

16.     இன்னணம் வேண்டுஞ் சிறப்பெலாம் பொருந்தி

                      யிருந்தமி ழகத்திடை யொளிரும்

                 பொன்னெனப் பொலிந்து பூவென மலர்ந்து

                      புலவர்செந் நாவிடை வளர்ந்த

                 தன்னிக ரில்லாத் தனித்தமிழ் மொழியைத்

                      தாய்மொழி யாகவே யுடைய

                 மன்னிய பெரும்பேர் மருவிய தமிழ

                      மக்களே மக்களுள் மக்கள்.

அறுசீர் விருத்தம்

          17.     வில்லே ருழும்போர் வீரர்களும் வெவ்வே றான வினைவலரும்

                 நெல்லே ருழும்வே ளாளர்களும் நிலங்காப் புடைய மன்னர்களும்

                 மல்லே ருழும்பொன் வாணிகரும் மனையே ருழுமா தருமவரிற்

                 கல்லா தவரே யில்லாராய்க் கற்றே யறிவைப் பெற்றாரே.

++

              13. அகவு – வயது.

17. மல் – வளம், வருவாய்.

++

(தொடரும்)

இராவண காவியம் – புலவர் குழந்தை