வைகை அணையில் பேணப்படாமல் உள்ள பூங்காக்கள்-வைகை அனிசு
வைகை அணையில் பேணப்படாமல் உள்ள பூங்காக்கள்
தேனிமாவட்டத்தில் உள்ள வைகை அணையில் பூங்காக்கள் பேணப்படாமல் உள்ளதால் சிறுவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
வைகை அணையில் பொழுது போக்குவதற்காகப் பூங்காக்கள், சிறுவர்கள் விளையாட்டுத்திடல், இராட்டினம், சறுக்கி விளையாடும் இடம், தொடரி(இரயில்வண்டி), பாரஉந்து போன்ற பொழுது போக்குவாய்ப்புகள் நிறைய உள்ளன. மேலும் சிறுவர்கள் தனியாக விளையாடுவதற்குத் தனியாக சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது சிறுவர்கள் விளையாடும் பூங்காக்களுக்குத் தனியாக நுழைவுக்கட்டணம் பெறப்படுகிறது. கட்டணம் வாங்கியும் எந்த வித அடிப்படை வசதியும் பொதுப்பணித்துறை சார்பில் செய்துதரப்படவில்லை. இதனால் இப்பகுதியில் விளையாடும் சிறுவர்கள் அங்கு உடைந்துள்ள கம்பியில் அடிபட்டு இரத்தக்காயத்துடன் செல்கின்றனர்.
மேலும் மின்சாரக் கம்பிகள் ஆங்காங்கே எந்த விதப் பாதுகாப்பும் இன்றித் தரையில் விழுந்து கிடக்கின்றது. குழந்தைகள் அதனை மிதித்துவிட்டால் மின்விபத்து ஏற்பட்டுவிடும் கண்டம்(அபாயம்) உள்ளது.
இவை தவிர பூங்காக்கள் முறையாகப் பேணப்படாமையால் மண்டிக்கிடக்கும் புதர்களில் பாம்பு, பிற நஞ்சுயிரிகள் புல், புதர்களில் நுழைந்து உள்ளன. இதன் மூலம் பாம்புக்கடி, நச்சுக்கடிகளுக்கு உள்ளாகும் பேரிடர் உள்ளது.
எனவே பொதுப்பணித்துறை குழந்தைகள் உயிர் இழப்புகள் ஏற்படும் முன் எச்சரிக்கையாகப் பழுதுகளைச் சரிசெய்யவேண்டும் எனச் சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
Leave a Reply