(அகல் விளக்கு – மு.வரதராசனார். 3 . தொடர்ச்சி)

அகல் விளக்கு 4.

     நெல்லிக்காய் விற்றவளும் பாக்கியமும் மற்றப் பெண்களும் இவ்வாறு அன்பு செலுத்தியது பற்றி மனம் வருந்தியது ஒரு பக்கம் இருக்க, ஆண்களிலும் பலர் அவனிடம் அன்பு காட்டியதும் எனக்கு வருத்தமாக இருந்தது. சிற்றுண்டிக் கடையில் பரிமாறுபவன் முதல் பேருந்பது விடுபவன் வரையில், பள்ளிக்கூட ஆசிரியர் முதல் கல்வி அதிகாரி வரையில் சந்திரனிடமே மிக்க அன்பு செலுத்தியதைக் கண்டேன். வந்த சில நாட்களுக்கெல்லாம் சிற்றுண்டிக் கடைக்காரன் அவனுக்கு நண்பன் போல் ஆகிவிட்டான். விளையாடும் இடத்திற்குச் சென்றாலும் அவனுக்கு ஆதரவு மிகுதியாகக் கிடைத்தது. பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களோ அவனிடத்தில் தனிநோக்கம் செலுத்தினர்; சந்திரனுடைய குற்றங்களும் அவரவர்களுக்குக் குணங்களாகவே தோன்றின போலும். போதாக் குறைக்கு அவனுடைய கையெழுத்தும் மிக நன்றாக அச்சுப் போல் அழகாக ஒழுங்காக இருந்தது. என் கையெழுத்துத் திருத்தமாக இருந்தாலும் அவ்வளவு அழகாக இல்லை. அதனாலும் அவனுக்குத் தேர்வுகளில் மிக்க எண்கள் கிடைத்து வந்தன. இவை எல்லாம் ஒருபுறம் இருக்க, ஆண்டுக்கு ஒருமுறை வந்து வகுப்பறையைச் சுற்றிவிட்டுச் செல்லும் கல்வியதிகாரியும் சந்திரனைத் திரும்பி நோக்கினார். வகுப்பறையிலிருந்து வெளியே சென்ற போது, சந்திரனுடைய தோள் மேல் கை வைத்துத் தட்டிக் கொடுத்து, வகுப்பு ஆசிரியரைப் பார்த்து, “இவன் படிப்பில் எப்படி இருக்கிறான்?” என்றார். “மிக நன்றாகப் படிக்கிறான்” என்று ஆசிரியர் மறுமொழி கூறியதும், “பார்த்தீர்களா? நான் அப்படித்தான் நினைத்தேன். பார்த்தாலேயே தெரிகிறது. குடும்பத்தார் நன்றாகப் படித்தவர்களாக இருக்க வேண்டும்” என்றார். “அப்படிக் காணோம்” என்று ஆசிரியர் சொன்னதைக் காதில் வாங்காமலே, சந்திரனை மறுபடியும் பார்த்துப் புன்முறுவல் பூத்துச் சென்றார்.

     அதற்கு அடுத்த வாரத்தில் வரலாற்று வகுப்பில் ஆசிரியர், திருமலைநாயக்கன் வரலாற்றைக் கற்பித்துக் கொண்டிருந்தபோது, அதை விட்டுவிட்டுப் பொதுவாக மனிதப் பண்பைப் பேசத் தொடங்கி எங்கெங்கோ சென்றார். இடையில் வடிவழகையும் நிறத்தையும் பார்த்து ஓர் ஆளை விரும்புவதோ வெறுப்பதோ தவறு என்றார். அறிஞர் சான்சன் என்ற ஆங்கிலப் புலவரின் தோற்றம் வெறுக்கத்தக்கது என்றும், ஆனால் அவருடைய உள்ளத்தின் அழகைக் கண்டே பாசுவெல் முதலான அறிஞர் பலர் அவரை எந்நேரமும் சூழ்ந்து நட்புக் கொண்டு மகிழ்ந்தார்கள் என்றும் கூறினார். அம்பு நேரானது யாழ் வளைவானது. ஆனாலும் யாழையே எல்லாரும் விரும்புகிறார்கள் என்று சொல்லி ஒரு குறளையும் மேற்கோளாகக் காட்டினார். உடலின் அழகைவிட உள்ளத்தின் அழகே போற்றத்தக்கது என்றும், வடிவ அமைப்பைவிட அறிவின் நுட்பமே பாராட்டத் தக்கது என்றும் முடித்தார். கல்வியதிகாரியின் பாராட்டுக்குக் காரணம் என் நினைவுக்கு வந்தது. உடனே எழுந்து ஆசிரியரிடம் குறிப்பிடலாம் என்று எண்ணினேன். ஆனாலும் வாய் திறக்காமல் இருந்தேன். அந்த நினைவோ என்னைவிட்டு நீங்கவில்லை. அதிலேயே சுழன்று கொண்டிருந்தேன். வரலாற்று ஆசிரியரோ மக்கட்பண்பை விட்டுத் திருமலைநாயக்கனின் தொண்டுகளை விளக்கிக் கொண்டிருந்தார். இடையே என் முகத்தைப் பார்த்துப் பாடத்தைக் கவனிக்காமலிருந்ததை உணர்ந்தார் போலும், “வேலய்யன்!” என்றார். நான் அலறி எழுந்தேன். “நான் என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்? எங்கே எந்தத் திரைப்படத்தைப்பற்றி எண்ணமிட்டுக் கொண்டிருக்கிறாய்?” என்றார். நான் திகைத்தேன்; விழித்தேன். “ஏன்’பா இப்படிக் காசைச் செலவழித்துப் படிக்க வருகிறீர்கள்? இங்கே வந்து திரை நட்சத்திரங்களைப்பற்றிக் கனவு காண்கிறீர்கள்?” என்றார். “இல்லை ஐயா!” என்றேன். “எப்படியாவது கெட்டுத் தொலையுங்கள்” என்று எனக்கு ஒரு பொதுவான சாபம் கொடுத்துவிட்டுச் சந்திரனை நோக்கிக் கேட்டார். அவன் திருமலைநாயக்கன் தொண்டுகளை ஒன்றுவிடாமல் கூறி முடித்து, ஆசிரியரின் பாராட்டுகளைக் குறைவில்லாமல் பெற்றான்.

 வகுப்பை விட்டு வெளியே வந்ததும், “வேலு, உனக்கு என்ன கவலை? ஏன் பாடத்தைக் கவனிக்கவில்லை?” என்று சந்திரன் கேட்டான்; என் தோள்மேல் கை போட்டவாறு அன்போடு கேட்டான். அதனால் நானும் மறைக்காமல் உண்மையைச் சொன்னேன். சந்திரன் ஒரு பெருமூச்சு விட்டு, “அது நடந்து ஒரு வாரம் ஆச்சே! இன்னும் மறக்காமல் மனத்தில் வைத்திருந்து இவ்வளவு கவலைப் படலாமா? அந்தக் கல்வியதிகாரி என்னுடைய சிவப்புத் தோலைக் கண்டு மயங்கித்தான் அவ்வாறு சொல்லிவிட்டுப் போனார். ஆசிரியரும் அதற்கு ஏற்றாற் போல் தாளம் போட்டார். விட்டுத்தள்ளு” என்று சொல்லி என் தோள்களைப் பற்றிக் குலுக்கினான்.

     “இன்றைக்கு ஆசிரியரிடம் சாபமும் கிடைத்தது” என்று வருந்தினேன்.

  “ஆசிரியர்கள் என்ன; முனிவர்களா? முனிவர்களே இப்போது வந்து, சாபம் கொடுத்தால் பலிக்குமா? ஆசிரியரின் சாபத்துக்கு வருந்தலாமா? அம்மா திட்டவில்லையா? ‘நாசமாய்ப் போ, பாழாய்ப்போ’ என்று எத்தனை தாய்மார்கள் வைகிறார்கள். அவை பலிக்குமா? உண்மையாகத் தம் பிள்ளைகள் கெட்டுப்போக வேண்டும் என்றா வைகிறார்கள்? இல்லவே இல்லை, ஆசிரியர்களும் இப்படித்தான்” என்று சொல்லி என்னைத் தேற்றினான்.

(தொடரும்)

முனைவர் மு.வரதராசனார்

அகல்விளக்கு