அகல் விளக்கு – மு.வரதராசனார்: 30
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 29 . தொடர்ச்சி)
அகல் விளக்கு
அத்தியாயம் 12 (தொடர்ச்சி)
சந்திரன் தொடர்ந்து பேசினான். “நான் அப்படிக் கோபத்தோடு சொல்லவில்லை. அது என்னுடைய கடமை அல்ல என்று சொன்னது உண்மைதான். சிறுநீர் கழித்த பிறகு ஒவ்வொருவரும் தண்ணீர் பிடித்துக் கொட்டிக் கொண்டிருக்க முடியாது. அதனால் என் கடமை அல்ல என்றேன். அதற்கு இந்த ஆள் என்னைப் பார்த்து ஒரு பெரிய சொற்பொழிவு செய்யத் தொடங்கினார். நீங்கள் எல்லாம் பெரிய காந்தி பக்தர்களா? காந்தி சொன்ன வழியில் நடக்கத் தெரியாமல் வீண் ஆரவாரம் மட்டும் செய்கிறீர்கள்; சமுதாய வாழ்க்கையில் பிறர்க்கு எந்த வகையிலும் இடையூறு செய்யாமல் வாழ வேண்டுமானால், சிறுநீர் கழித்த பிறகு தண்ணீர் கொட்டவேண்டும். அது கடமை என்று உணராதவர்கள் கல்லூரியில் படித்துப் பயன் என்ன? நீங்கள்தான் படித்த பிறகு ஆங்கிலேயனுடைய ஆட்சிக்குத் தூணாக இருந்து நாட்டுமக்களைக் காட்டிக் கொடுப்பீர்கள்; நீங்கள்தான் மக்களிடம் இலஞ்சம் வாங்கும் வன்னெஞ்சர் ஆவீர்கள்; அடிப்படையான ஒழுக்கங்களைக் கற்றுக் கொள்ளாமல் ஏன் படிக்கீறீர்கள்? உங்களால் கல்லூரிக்கும் கெட்டபெயர்; நாட்டுக்கும் கெட்ட பெயர்; உங்களைச் சேர்த்துப் பட்டதாரிகள் ஆக்கி நாட்டைக் கெடுப்பதைவிடக் கல்லூரியை மூடுவதே நல்லது என்று இப்படிப் பலவகையாக உளறினார். நான் உடனே,’ நான்சென்சு வாயை மூடு என்றேன்.'”
இவ்வாறு சந்திரன் சொல்லி நிறுத்தியவுடன் கூட்டத்திலிருந்து பலவகையான குரல்கள் எழுந்தன.
“யாரடா அவன், பெரிய காந்தி பைத்தியம்!”
“இளங்கலை(பி.ஏ.,) நான்காம் வகுப்பில் படிக்கும் சாந்தலிங்கமடா.”
“அவன் எப்போதும் இப்படித்தான் இடக்குச் செய்வான்.”
“ஏன்? வார்தாவுக்குப் போய் வந்து விட்டானோ?”
“அப்படியானால், அங்கே மலம் வாருகிறார்களே அப்படி அய்யா இங்கேயும் அந்த வேலையைச் செய்வதுதானே?”
“இவர் இங்கே படிக்க வந்தாரா? சிறுநீர் அறையை மேற்பார்வை பார்க்க வந்தாரா?”
இவ்வாறு பலர் பலவாறு பேசவும், செயலாளர் எழுந்து “அன்புகூர்ந்து அமைதியாக இருக்கும்படியாக வேண்டுகிறேன். இப்படிப் பலர் பலவாறு பேசினால், நாம் கூடிய கடமை ஆகுமா? பாராளுமன்றங்களின் தோற்றம், வளர்ச்சி, விதிகள், பயன்கள் எல்லாவற்றையும் விரிவாகப் படிக்கிறோம். பேசுகிறோம். ஆனால் நம் வாழ்க்கையில் அந்த முறைகளைப் போற்றிக் கையாளாவிட்டால் பயன் என்ன?” என்றார்.
ஆயினும் அவர் பேச்சால் பயன் விளையவில்லை. மறுபடியும் மாணவர்கள் பலவாறு குரல் எழுப்பத் தொடங்கினார்கள். விடுதிச் செயலாளரைப் பற்றியும் தாக்கிப் பேசினார்கள்.
“ஓஓ! செயலாளர் சாந்தலிங்கத்தின் நண்பரோ?”
“கல்லூரியின் பெயரை இவர்தான் காப்பாற்றப் போகிறாரோ?”
“சிறுநீர் அறையைக் காப்பாற்றினால்தான் கல்லூரியின் பெயரைக் காப்பாற்ற முடியுமா? சரிதான்.”
“இந்த ஆள் போன பிறவியில் தோட்டியாக இருந்திருப்பான்.”
“அய்யாவின் முகவரியை யாராவது நகராட்சிக்கு(முனிசிபாலிடிக்கு)த் தெரியப்படுத்தினால் ஒரு வேலை கொடுப்பார்களே!”
“வேலையில்லாத் திண்டாட்டம் கொஞ்சம் தீருமே”.
விடுதிச் செயலாளர் “அமைதி, அமைதி” என்று பலமுறை எழுந்து கேட்டுக்கொண்டார்.
மறுபடியும் சில குரல்கள் கேட்டன.
“நாங்கள் இனிமேல் தண்ணீர் பிடித்துக் கொட்டப் போவதில்லை, சாந்தலிங்கம்!”
“அவனுடைய அறையிலேயே போய் இனிமேல் சிறுநீர் கழிக்க வேண்டும். அதுதான் வழி”
“இங்கே என்ன பஞ்சாயத்து? வார்டனிடம் போங்கள்”.
“சந்திரா! உன்னைக் குற்றவாளியாக்கும் முயற்சி இது. இருக்காதே எழுந்து வா”
“இமாவதி சந்திரன் எழுந்து வா.”
அப்போது சிலர் கொல்லென்று சிரித்தனர். என் மனம் ஓர் அதிர்ச்சி உற்றது. இமாவதி என்ற பெயரைக் கேட்டதும், அன்று நாடகத்தின் முடிவில் நான் கண்ட அந்தக் காட்சி நினைவுக்கு வந்தது. சந்திரன் முகம் கவிழ்ந்தபடி இருந்தான்.
“எழுந்து வா? சந்திரன்! எழுந்து வா” என்று தொடர்ந்து சில குரல்கள் கேட்டன.
சந்திரனும் எழுந்தான். செயலாளர் அன்போடு கேட்டுக் கொள்ளவே அவன் மறுபடியும் உட்கார்ந்தான். என் மனம் சாந்தலிங்கம் சொன்னவை சரியென்றும், அவற்றில் தவறு ஒன்றுமே இல்லை என்றும், சந்திரன் தண்ணீர் கொட்டியிருக்கலாம் என்றும், இல்லை என்றாலும் அன்பாகத் தன் குற்றத்தை உடன்பட்டிருக்கலாம் என்றும் பலவாறு எண்ணியது. ஆனாலும், அவனுடைய பழைய தொடர்பையும் குடும்பத் தொடர்பையும் எண்ணிப் பேசாமல் இருந்தேன். இவ்வளவு கூட்டத்தில், மனச்சான்றும் நீதியுணர்ச்சியும் உள்ள மாணவர் சிலராவது இல்லையா? அவர்கள் ஏன் தங்கள் வாயை மூடிக்கொண்டிருக்கிறார்கள்? அநியாயத்துக்கு ஆட்கள் முந்துகிறார்களே, நியாயத்துக்குத் தயங்குகிறார்களே என்று பலவாறு எண்ணி ஏங்கிக் கொண்டிருந்தேன். என் ஏக்கம் தீர ஒரு குரல் துணிவாகத் தெளிவாகக் கேட்டது.
“சாந்தலிங்கம் சொன்னதில் தப்பு என்ன?” என்று அந்தக் குரல் கேட்டதும், என் செவியில் தேன் வார்த்தது போல் இருந்தது.
“எப்படிக் கேட்கலாம்” என்று மற்றொரு குரல்.
மாணவர்கள் ஒரே கூட்டமாக நெருங்கி இருந்தபடியால், குரல் எழுப்பியவர்கள் யார் யார் என்று ஆட்களைக் காணமுடியவில்லை.
“சாலையில் எச்சில் துப்பினால் கேட்கலாம், சுகாதாரத்துக்குத் தீங்கு என்று.”
“பேருந்தில் சுருட்டுப் பிடித்தால் கேட்கலாம், பலருக்குத் தீங்கு என்று.”
“நடுத்தெருவில் காகிதம் கிழித்துப் போட்டால் கேட்கலாம், பொதுவாழ்வின் விதிகள் தெரியவில்லை என்று.”
“இது நடுத்தெரு அல்ல, கேட்கக்கூடாது.”
“இது பேருந்து அல்ல, கேட்கக் கூடாது.”
“இது பொது இடம். கேட்கலாம்.”
“கேட்க உரிமை உண்டு.”
“சொந்த வீடு அல்ல.”
“மற்றவர்களோடு சேர்ந்து வாழ வந்திருக்கும்போது மற்றவர்களுடைய நன்மையைக் கவனித்தே நடக்க வேண்டும்.”
“சாந்தலிங்கம் தன் நன்மைக்காகக் கேட்கவில்லை.”
“சொந்த வீடாக இருந்தாலும், அண்ணன் தம்பி கேட்பதில்லையா?”
“வாழைப்பழத் தோலை நடுத்தெருவில் போடாதே என்று காந்தியடிகள் யங் இந்தியாவில் எழுதவில்லையா?”
“அது பைத்தியம்.”
“நீ பைத்தியம்.”
“நீதான் பைத்தியம்.”
இந்த நிலையில் சாந்தலிங்கம் எழுந்து, “நான் சிறிது நேரம் பேசலாமா?” என்றான். எல்லாரும் அமைதியானார்கள். “என்னால் இவ்வளவு தொல்லை, இவ்வளவு பெரிதாக முடியும் என்று எதிர்பார்த்திருந்தால் நான் வாயைத் திறந்திருக்க மாட்டேன். இன்னும் சில நாளில் இளங்கலை(பி.ஏ.) தேர்வு எழுதி முடித்துவிட்டு நான் விடுதியை விட்டு வெளியேறப் போகிறேன். இரண்டு ஆண்டுகள் வாணியம்பாடியில் இருந்து படித்தேன். இரண்டு ஆண்டுகள் இங்கே இந்த விடுதியில் இருந்தேன். என்னுடைய அனுபவத்தால் – நல்லது செய்யவேண்டும் என்ற ஆர்வத்தால் – அவசரப்பட்டுச் சொல்லிவிட்டேன். மன்னிக்க வேண்டும்” என்று சொல்லிவிட்டு உட்கார்ந்தான்.
“மன்னிப்புக்கு இடமே இல்லை.”
“குற்றமே இல்லை.”
“மன்னிப்புக் கோரவேண்டிய ஆள் நடிகர் சந்திரன்தான்.”
“இல்லை. இல்லை.”
இந்தக் குரல்கள் மறுபடியும் வளருமோ என்று அஞ்சினேன். ஆனால் நியாயத்தின் குரல்கள் எழுந்தவுடன், மற்றக் குரல்கள் ஒருவாறு குறைந்தன.
செயலாளர், ஏன் அதைத் தொடங்கினோம் என்று திகைத்து வருந்திய நிலையிலிருந்து மாறிச் சிறிது ஊக்கம் பெற்றவராய்த் தோன்றினார். “போனது போகட்டும். நடந்ததை மறந்து விடுவோம். இனி என்ன செய்வோம் என்பதைப் பற்றிப் பேசுவோம்” என்றார். கூட்டத்தில் இருந்த சிலர் மெல்ல நகர்ந்து தம் தம் அறைக்குச் செல்லத் தொடங்கினர். கூட்டம் போதும் என்று செயலாளர் பேசினார். “மேற்கு நாடுகளில் எங்கேயும் இதைக் கற்றுக்கொடுக்க வேண்டியிருக்காது. இதை எல்லாம் அவர்கள் இளமையிலேயே கற்று வளர்ந்திருப்பார்கள். காரணம் அங்கெல்லாம் இது குடும்பக் கல்வியாக இருக்கிறது. இங்கே குடும்பங்களில் உள்ளவர்களுக்கே இன்னும் இதைக் கற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது. ஒவ்வொருவரும் இரவில் எழுந்து எதிர் வீட்டு ஓரமாகச் சிறுநீர் கழித்து வருவது இங்கே வழக்கம். கண்ட இடமெல்லாம் துப்புவதும், பக்கத்து வீட்டு ஓரமாகக் குப்பையைக் கொட்டுவதும் நம் வீடுகளில் உள்ள பழக்கம். ஆகையால், சந்திரனையோ மற்றவர்களையோ குறை கூறிப் பயன் இல்லை. பொதுவாக நம் நாட்டுக்குறை என்று கருதித் திருத்தவேண்டும்” என்றார்.
அப்போது சாந்தலிங்கம் கொஞ்சம் பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, “மேற்கு நாடுகளில் இந்த ஒழுக்கங்கள் இயல்பாக இருப்பதற்குக் காரணம் உண்டு. இங்கு இல்லாமைக்குக் காரணம் உண்டு. அங்கே பிறர்க்கு உதவி செய்வதே கடவுளுக்கு விருப்பமானது என்ற நம்பிக்கையின் மேல் சமயம் வளர்ந்திருக்கிறது. இங்கே இந்த உண்மை இலைமறை காய்போல் உள்ளதே தவிர, வெளிப்படையாக இல்லை. நேர்மாறாக, பிறர்க்குத் தீமை செய்தாவது பணம் சேர்த்து அருச்சனை, அபிசேகம் செய்வதைக் கடவுள் விரும்புவார் என்ற மூடநம்பிக்கை வளர்ந்திருக்கிறது.
அங்கே பிறர்க்குத் தொண்டு செய்த சமயத் தலைவர்கள் பலர், இங்கே காட்டில் ஒதுங்கித் தவம் செய்தவர்களும், உலகம் பொய் என்று சொல்லித் தம்மளவில் மோட்சத்துக்குப் பாடுபட்ட பக்தர்களும் பலர். அங்குள்ள சமய அமைப்புகளில் மடங்களில் பல, பிறருடைய வாழ்வுக்கு உதவி செய்வதற்காக ஏற்பட்டவை. இங்கே விவேகானந்தரின் காலத்துக்குப் பிறகுதான் அப்படிப்பட்டவை சில ஏற்பட்டன. அதனால் இங்கே புண்ணியம் பாவம் என்று சொன்னால்தான் மதிப்பு உண்டு; சமுதாய நன்மை என்று சொன்னால் மதிப்பு இல்லை. சட்டம் என்று சொன்னால்தான் அடங்கி நடக்கிறார்கள்; நாகரிக வாழ்க்கை முறை என்று சொன்னால் கேட்டு நடப்பதில்லை. இதை மாற்றினால்தான் நமக்கு விடுதலை கேட்க உரிமை உண்டு; ஒருகால் அதற்குமுன் நம் தலைமுறையில் விடுதலை கிடைத்துவிட்டாலும் அதைக் காப்பாற்ற வழி தெரியாமல் வருந்துவோம்.
இந்த ஆர்வத்தால் ஏதோ பேசினேன். நான் எந்த வகையிலாவது நண்பர் சந்திரனுடைய மனத்தைப் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கும்படியாக அவரை கேட்டுக்கொள்கிறேன். நீர் கொட்டவில்லை என்பதை மட்டும் கேட்டதாக நண்பர் சந்திரன் சொன்னார். அதுமட்டும் அல்ல. சுவரில் பெய்திருக்கக் கூடாது; பெய்தால் நீர் கொட்ட வேண்டும்” என்று சொன்னேன். சிறுநீர் கழிக்க அதற்கென்று பீங்கான் குழிவு வைக்கப்பட்டுள்ளது. அதில் சிறுநீர் கழிக்காமல், சுவரில் கழிக்கப்பட்டிருந்தது. சுவர் அந்தக் கெட்ட நாற்றத்தை நெடுநேரம் வைத்திருந்து பரப்பும் அல்லவா? எங்கே போனாலும் இந்தக் கொடுமையைக் காண்கின்றேன். இது தவறான பழக்கம் என்று உணர்த்துவதற்காகவே கேட்டேன். நண்பர் சந்திரன் என்னை மன்னிக்க வேண்டும்.” என்று சொல்லிச் சந்திரனுடைய கையைப் பற்றி அவனுடைய முகத்தைப் பார்த்தான்.
சந்திரனும் அவனுடைய கைகளைத் தன் கைகளால் ஏற்றுக்கொண்டு தன் பக்கத்தில் உட்காரச் செய்தான்.
“இவ்வளவு தொல்லை இல்லை. மேற்கு நாட்டார் கண்டுபிடித்து அமைத்த மேல் தொட்டி நன்றாக வேலை செய்து வந்தால் போதும். அதில் தொங்கும் சங்கிலியைப் பிடித்து இழுத்தால், தண்ணீர் வேகமாக வந்து சிறுநீரை அடித்துப் போய்விடும்” என்றான் மாணவன் ஒருவன்.
“செயலாளர் கேட்டுக் கொண்டிருக்கிறார். வார்டனுக்குச் சொல்லி, முதலில் அந்த மேல்தொட்டிகளைப் பழுது பார்க்கச் சொல்லுங்கள்” என்றான் மற்றொருவன்.
“அப்படியே செய்தாலும் பீங்கான் குழியை விட்டு விட்டு, சுவரில் பெய்துவிட்டு வருகிறவர்களை எப்படித்தான் திருத்துவது?”
“கடவுள்தான் திருத்தவேண்டும்”
“அது பாவம் என்று புராணங்களில், திருக்குறளில் எழுதி வைத்தால்தான் நடக்கும்.”
“அது மட்டும் போதாது. அப்படிச் சுவரில் பெய்தவர்களை மறுபிறவியில் நரகலோகத்தில் கொதிக்கும் இரும்புச் சுவரைத் தழுவுமாறு செய்து யமகிங்கரர் தண்டிப்பார்கள் என்று எழுதினால்தான் ஒழுங்காக நடப்பார்கள்.”
“அப்படி எழுதிவிட்டால் மட்டும் போதாது. அந்தப் புத்தகங்களைப் புராணங்களாக்கி, அவற்றைப் பற்றிக் கதாகாலட்சேபங்கள் நடக்குமாறு செய்ய வேண்டும்.”
“இப்போது கதா காலட்சேபத்தில் கேட்டறிந்த நல்வழிகளை மக்கள் வாழ்க்கையில் பின்பற்றுகிறார்களா? நாட்டில் பொய் போயிற்றா? விபசாரம் குறைந்ததா? பேராசை தொலைந்ததா? சூதாட்டம் ஒழிந்ததா? அரிச்சந்திர புராணம் முதல் பாரதம் வரையில் படிக்கக் கேட்டும் திருந்தினார்களா?”
“அதனால் புதுவழி காணவேண்டும். சாந்தலிங்கம் போன்றவர்கள் ஊர்தோறும் தெருவுதோறும் வீடுதோறும் பலர் ஏற்பட வேண்டும். அதுதான் வழி.”
“அதுமட்டும் போதாது. சாந்தலிங்கம் செய்வது சரி என்று குரல் எழுப்புவதற்கு ஆட்கள் தேவை. ஊர்தோறும் நூற்றுக்கணக்கானவர்கள் தேவை. உண்மையின் சார்பில், நியாயத்தின் சார்பில் தயங்காமல் குரல் கொடுப்பவர்கள் தேவை.”
இப்படிப் பலர் பலவாறு பேசினார்கள். அத்தனைக்கும் செயலாளர் இடம் கொடுத்தார். முடிவில் எல்லோருக்கும் நன்றிகூறி, மேல்தொட்டிகளை விரைவில் பழுதுபார்க்க ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தார்.
சந்திரனோடு தொடர்ந்து வந்தேன். “வீண் வம்பு” என்று இரண்டு சொல் சொல்லித் தன் அறையின் வாயிலில் நின்று எனக்கு விடை கொடுத்தான். நான் வந்துவிட்டேன். அவ்வளவு நடந்த பிறகும் அவனுடைய மனம் திருந்தியதாகவோ, மாறியதாகவோ எனக்குத் தோன்றவில்லை. அவன் நிலையில் நான் இருந்திருந்தால் சாந்தலிங்கத்திடம் மன்னிப்புக்கோரி வருந்தியிருப்பேன். அவனுக்கு அந்த எண்ணமே தோன்றியதாகத் தெரியவில்லை.
(தொடரும்)
முனைவர் மு.வரதராசனார், அகல்விளக்கு
Leave a Reply