(அகல் விளக்கு – மு.வரதராசனார். 33. தொடர்ச்சி)

அகல் விளக்கு

அத்தியாயம் 14

 

அதற்கு மறுநாள் எங்கள் தேர்வு முடிந்துவிட்டது. அடுத்த நாள் ஊர்க்குப் போகத் திட்டமிட்டோம். மாலையில் மாலனும் நானும் கீழ்ப்புறத்துச் சிமெண்டுத் திண்ணையின் மேல் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அதே திண்ணையில்தான் எங்கள் நட்பு அன்று ஒருநாள் வேர் கொண்டது. அன்று சந்திரனுடைய ஒத்திகையை – பெண்ணாக நடித்த திறமையைப் பார்த்து மனத்தில் பாராட்டிக் கொண்டிருந்தேன். அந்த நாள் நினைவுக்கு வந்தது. சந்திரனிடத்தில் அதுவரையில் கண்டிராத திறமையை அன்று அவனிடம் கண்டேன். அந்தத் திறமை அவனுள் எப்படித்தான் அடங்கிக் கிடந்ததோ என்று வியந்தேன். சிறப்பான கலைத் திறமை எப்படி அவனுள் அடங்கிக் கிடந்ததோ அப்படியே காதலுணர்ச்சியும் அடங்கிக் கிடந்தது போலும் என்று எண்ணினேன்.

கலைத்திறமை இயல்பாகவே வெளிப்பட்டு விளங்கக் கூடியது; நெடுங்காலம் மறைத்து வைக்க முடியாதது. பாடத் தெரிந்தவன் எங்கேனும் எப்படியேனும் பாடித் தீர்வான்; ஓவியம் வரையத் தெரிந்தவன், தரையிலேனும் விரல்களால் கீறித் தீர்வான்; நடிக்கும் கலைத்திறமையும் அப்படிப்பட்டதுதான். வெளிப்படுத்தாவிட்டால் அது மனித உள்ளத்தைக் கொன்றுவிடக் கூடியது. அதனால் சந்திரன் மேடை ஏறி ஆடிவிட்டான்.

ஆனால் காதலுணர்ச்சி அப்படிப்பட்டது அல்ல; பிறர்க்குப் புலப்படாமல் மறைப்பதிலேயே காதலர் கருத்தாக இருக்கின்றனர். சந்திரனும் அப்படித்தான் இருந்துவிட்டான். பைத்தியக்காரன். தன் காதலை என்னிடம் மறைத்தது மட்டும் அல்லாமல், தன் காதலியிடமும் தெரிவிக்காமல் மறைத்திருக்கிறான்! இவ்வாறு எண்ணிக்கொண்டிருந்த போது விடுதி வேலையாள் வந்து, “ஐயா! உங்களை யாரோ தொலைபேசியில் கூப்பிடுகிறார்கள்” என்றான். “என்னையா?” என்று மாலன் எழுந்தான். “அவரை, அவர்தானே வேலு” என்றான். நான் எழுந்து சென்றேன். ஒருவேளை சந்திரன் வேறு எங்கிருந்தாவது என்னை அழைத்திருக்கலாம். வேறு யார் என்னைத் தொலைபேசியில் அழைக்கக்கூடும் என்று ஒருவகை மகிழ்ச்சியோடு சென்றேன். மாலனும் உடன் வந்திருந்தான்.

“வேலு பேசுகிறேன்.”

“இமாவதி, வணக்கம்.”

என் மகிழ்ச்சி குலைந்தது. “வணக்கம்” என்றேன். உடனே ஒரு நம்பிக்கை பிறந்தது. சந்திரனைப் பார்த்ததாகச் செய்தி சொல்லக்கூடும் என்ற நம்பிக்கையோடு “ஏதாவது செய்தி உண்டா?” என்றேன்.

“அதைக் கேட்பதற்குத்தான் உங்களைக் கூப்பிட்டேன். ஒன்றும் தெரியவில்லையா? இன்னும் அவர் வரவில்லையா?”

“இல்லையே!”

“நீங்கள் வந்து சொன்ன அன்று முதல் எனக்கு மனமே நன்றாக இல்லை. பைத்தியம் பிடித்ததுபோல் இருக்கிறது. சந்திரன் நல்லவர்; மிகவும் நல்லவர்; குழந்தை மனம் உடையவர். மிக நல்ல குணம். அவர் மனம் ஏன் இப்படி மாறியதோ, தெரியவில்லை. எனக்கு ஒரு சந்தேகமும் ஏற்பட்டது. நாளைக் காலையில் வீட்டுக்கு வருவீர்களா? நேரில் சொல்வேன். உங்களோடு பேசினால்தான் என் மனம் ஆறுதல் அடையும்.”

“வருவேன்.”

“வீட்டு முகவரி தெரியுமா?”

“10, நடுத்தெரு, இராயப்பேட்டை.”

“அதுதான். தேர்வு முடிந்துவிட்டது அல்லவா? ஓய்வுதானே?

“ஆமாம், வருவேன்.”

“அம்மாவும் தங்கைகளும் இருப்பார்கள். அவர்களுக்குச் சொல்லிவைப்பேன்.

“சரி.”

“என்னவோ, போங்க. எனக்கு இந்த மூன்று நாளாக மனமே கலங்கிவிட்டது. வரும் ஞாயிற்றுக்கிழமை எனக்குத் திருமணம். வீடெல்லாம் ஒரே அமர்க்களமாக ஏற்பாடுகள் செய்துகொண்டிருக்கிறார்கள். நான் ஒருத்திதான் மகிழ்ச்சி இல்லாமல் இருக்கிறேன். என்னைப் பார்ப்பவர்கள் எனக்குத் திருமணம் விருப்பம் இல்லையா என்று கேட்கிறார்கள். நான் என்ன செய்வது? இப்படி இருக்கிறது என் கதை. போகட்டும். நீங்கள் கட்டாயம் வரவேண்டும்.”

“வருவேன்.”

“வணக்கம். நன்றி”

“வணக்கம்” என்று சொல்லிப் பேசும் கருவியைக் கீழே வைத்தேன். மாலனைத் திரும்பிப் பார்த்தேன்.

“பெரிய புதிராக இருக்கிறது” என்றான் மாலன்.

“இமாவதிதான்.”

“அது தெரிந்து கொண்டேன். அரைகுறையாகத் தெரிந்தது. அவள் நிறையப் பேசினாள். நீ இரண்டொரு சொல்லே சொன்னாய்.”

“இப்போது சொல்லமாட்டேன். பிறகு விரிவாகச் சொல்வேன். தவறாக எண்ணவேண்டா. அவள் பேச்சிலிருந்து எனக்கும் விளக்கம் ஏற்படவில்லை. காலையில் வரச் சொல்லியிருக்கிறாள். போய்ப் பேசிய பிறகுதான் விளங்கும்.”

“விழிப்பாக நடந்துகொள். இந்தப் பட்டினத்தில் யார் எப்படி என்று இரண்டொரு நாளில் தெரிந்து கொள்ள முடியாது. நம் கெட்ட காலம் எப்படி இருக்குமோ? எங்கும் அகப்பட்டுக் கொள்ளக் கூடாது” என்றான் மாலன்.

காலையில் எழுந்ததும் இராயப்பேட்டைக்குச் செல்லும் பேருந்தில் ஏறி நடுத்தெருவுக்கு வழி கேட்டுச் சென்றேன். பத்தாம் எண்ணுள்ள வீடு சின்ன வீடுதான். மாடியில் இமாவதி வீட்டார் குடியிருந்தார்கள். நான் சென்று அங்கிருந்த ஒரு பெண்ணிடம் என் பெயரைத் தெரிவித்தேன். அவள் என்னை அங்கே ஒரு நாற்காலியில் உட்கார வைத்துவிட்டு உள்ளே சென்றாள். இமாவதி போலவே இருந்தபடியால், அவளுடைய தங்கையாக இருக்கவேண்டும் என்று எண்ணினேன். வீட்டில் பலர் இருந்தார்கள்; பரபரப்பாக இருந்தார்கள். திருமணத்திற்காக வந்த உறவினராக இருக்கவேண்டும் என்று உணர்ந்தேன்.

இமாவதி வந்தாள். வரவேற்றாள். ஆனால் அவளுடைய முகத்தில் புன்முறுவல் இல்லை; மலர்ச்சி இல்லை. ஏதோ வேண்டா வெறுப்போடு வரவேற்பவள் போல் “வாங்க” என்றாள். கூடத்திற்கு அழைத்துச் சென்றாள். அங்கே என்னை உட்காரச் செய்து தானும் உட்கார்ந்தாள். அவளே பேச்செடுப்பாள் என்று எதிர்பார்த்துப் பேசாமல் இருந்தேன். அவளோ தரையைப் பார்த்தபடி சிறிது நேரம் அமைதியாக இருந்தாள். நாம் ஏன் வந்தோம் என்று வருந்தும் அளவிற்கு என் உள்ளம் மாறியது. வரவேண்டும் என்று வற்புறுத்தித் தொலைபேசியில் பேசியவள் இவள்தானா, அல்லது வேறு எந்தப் பெண்ணாவது குறும்புக்கு அப்படிப் பேசி வம்பு செய்தாளா. மாலன் சொன்னது போல் இந்தச் சென்னையில் உண்மையை எளிதில் உணர முடியவில்லையே என்று தடுமாறினேன்.

இமாவதி கற்பகத்தைப் போல் அவ்வளவு அழகானவள் என்று சொல்லமுடியாது. பல ஆண்டுகளாகப் படிப்பின் சுமையும் தேர்வின் தொல்லையும் காரணமாக இமாவதியின் அழகு வற்றிப்போயிருக்கலாம். இருந்தாலும் முகத்தில் கவர்ச்சி இருந்தது. நல்ல சிவப்பு மேனியும் அளவான உடற்கட்டும் உடையவள்; சின்ன நெற்றியும் சுருட்டை மயிரும் அவளுடைய முகத்திற்கு அழகு செய்தன.

உழைப்பவரின் உடம்பு போல், தசைப் பெருக்கம் இல்லாமல் கைகள் கடைந்தெடுத்தவை போல் இருந்தன. இருந்தாலும் அவளுடைய கவர்ச்சி, கற்பகத்தின் அழகுபோல் முற்றிலும் இயற்கையழகின் கவர்ச்சி என்று சொல்வதற்கில்லை. அன்று அவள் அணிந்திருந்த உரோசா நிறப் புடைவையும் பொன்னிறச் சோளியும் அவளுடைய அழகுக்குக் கவர்ச்சி ஊட்டின. கோடுகளும் பூக்களும் இல்லாத புடைவையும், மிகச் சிறு புள்ளிகள் அமைந்த சோளியுமாக இருந்தமையால் அவை அழகாக இருந்தன. இன்னும் சிலநாளில் மணப்பெண் ஆவதற்கு இருந்த அவள் சுமையான நகைகளை அணியாமல், காதில் தோடும் கழுத்தில் பொன் சங்கிலியும் கையில் இரண்டு இரண்டு வளையலும் மட்டும் அணிந்திருந்தது எனக்கு வியப்பாக இருந்தது. கையில் கடிகாரமும் காணப்படவில்லை.

அந்த வழியாக யாரோ போனார்கள். “என்ன’மா! கல்யாணப் பெண் இப்படி உட்கார்ந்திருக்கிறாய்?” என்று ஒருத்தி கேட்டுச் சென்றாள். “எனக்கு என்ன வேலை இருக்கிறது, மாமி! எல்லாவற்றிற்கும் நீங்கள் இருக்கிறீர்கள் பார்த்துக் கொள்வீர்கள்” என்று இமாவதி சொன்னபோது, ஒரு சிறு புன்முறுவல் மின்னல்போல் தோன்றி மறைந்தது. அதன் பிறகு என்னைப் பார்த்து, “நீங்கள் எப்போது ஊருக்குப் புறப்படுவீர்கள்?” என்றாள்.

“நாளைக்கு”

“அவரைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லையா?”

“இல்லை.”

“நான் இப்படி எதிர்பார்க்கவே இல்லை.”

“இப்படிச் செய்யக்கூடியவன் என்று நான் கனவிலும் கருதவில்லை.”

“ஏன் இப்படிச் செய்தார் என்றுதான் தெரியவில்லை. நீங்கள் வந்து போனதுமுதல் நான் நன்றாகப் படிக்கவும் முடியவில்லை. தேர்வு வரையில் எப்படியோ மூச்சுப் பிடித்தேன். தேர்வு நாட்களில் விடுதியிலேயே இருந்து படித்தேன். அங்கே வகுப்புப் பெண்கள் பலருடைய சூழலில் இருந்த காரணத்தால் மனம் எப்படியோ ஒரு வகையாகத் தேறியிருந்தது. இங்கே வந்த பிறகுதான் பைத்தியக்காரி போல் ஆகிவிட்டேன். உனக்குத் திருமணம் விருப்பம் இல்லையா, மாப்பிள்ளை விருப்பம் இல்லையா, அதை முன்னமே சொல்லியிருக்கக் கூடாதா என்று பலரும் கேட்கத் தொடங்கினார்கள். நான் என்ன செய்வது? சொன்னால், உண்மையைத் தெரிந்து கொள்ளக்கூடியவர்களும் அல்ல. அம்மாவுக்கு மட்டும் சொன்னேன். அம்மாவுக்கு அவரைப் பற்றி எல்லாம் தெரியும். அதனால் சொன்னதும் விளங்கிக்கொண்டார்கள்.”

இவ்வாறு சொல்லிக் கொண்டிருந்தபோது, நாற்பத்தைந்து ஐம்பது வயது உள்ள ஒருவர், சிறிது வழுக்கையாய் மாநிறமாய் வெள்ளாடை உடுத்தியவராய் அந்தப்பக்கம் வந்தார். அவரைக் கண்டதும், இமாவதி எழுந்து “எங்கள் அப்பா” என்றாள். “இவர் சந்திரனுடைய நண்பர்; அவருடைய ஊரார்; பக்கத்து அறையில் உள்ளவர்” என்று என்னை அறிமுகப்படுத்தினாள்.

அவர் உடனே என்னைப் பார்த்து, “சந்திரன் இன்னும் வரவில்லையா?” என்றார்.

“இல்லை” என்றேன்.

“திருமண வேலைக்கெல்லாம் எவ்வளவோ உதவியாக இருப்பான் என்று மனைவி சொல்லிக்கொண்டிருந்தாள்” என்று சொல்லி, அந்தப் பக்கம் போனவர் ஒருவரைக் கூப்பிட்டு, “சரி வரட்டுமா? கொஞ்சம் வேலை இருக்கிறது” என்று நகர்ந்தார்.

“இந்தப் பிள்ளைக்குக் காப்பி சிற்றுண்டி கொடு அம்மா” என்று தம் மகளுக்குச் சொல்லிக்கொண்டே சென்றார்.

மறுபடியும் நானும் அவளும் உட்கார்ந்தோம்.

“திருமண வேலையாக இருக்கிற வீடு. நீங்கள் வந்த வேளையில் பரபரப்பாக இருக்கிறோம். மன்னிக்கவேண்டும்” என்றாள்.

“அதற்கு என்ன? இருக்கட்டும்.”

“அவர் போவதற்கு முன் உங்களிடம் ஒன்றும் சொல்லவில்லையா? கடிதம் ஏதாவது எழுதி வைத்துவிட்டுப்போகவில்லையா?”

“இல்லை.”

“அவர் எவ்வளவு நல்லவர் தெரியுமா? குழந்தை போன்ற மனம் உடையவர். அழகாக இருப்பவர்கள் பலர் பொல்லாதவர்களாக, வஞ்சகர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவர் ஒரு தீமையும் அறியாதவர். எனக்கு மிகவும் பிடித்திருந்தது அவருடைய பேச்சு. ஒரு கெட்ட சொல் அவருடைய வாயிலிருந்து வராது. ஒரு கெட்ட பழக்கமும் அவரிடம் இல்லை. உங்களுக்குத்தான் தெரியுமே நானும் அவரும் ஒரே பாடம் எடுத்திருந்த காரணத்தால், அவர் எழுதி வைத்திருந்த குறிப்பை எல்லாம் என்னிடம் கொடுத்தார். எனக்குக் கணக்கில் அடிக்கடி சந்தேகம். தெரியாத கணக்கை எல்லாம் எனக்குக் கற்றுக்கொடுத்தார். கற்றுக் கொடுக்கும்போது எவ்வளவு பொறுமை. எவ்வளவு எளிமை!”

“எனக்கு உயர்நிலைப் பள்ளியில் அவன்தான் கணக்குக் கற்றுக்கொடுத்தான். அவனுடைய உதவி இல்லாவிட்டால் நான் தேர்வில் வெற்றி பெற்றிருக்கமாட்டேன்.”

“எங்கள் ஆசிரியர்க்கும் அவ்வளவு திறமை இல்லை என்று சொல்லலாம். நல்ல வருவாய் மட்டும் கிடைப்பதாக இருந்தால் அவரை ஆசிரிய வேலைக்கே போகச் சொல்வேன்.”


“கடைசியில்…..” என்று வாய் திறந்து பேசத்தொடங்கி நிறுத்தி விட்டேன்.

“கடைசியில்?”

“ஒன்றும் இல்லை, சொல்லுங்கள்.”

“இதை எல்லாம் சொன்னால்தான் மனம் ஆறுதல் அடையும். அம்மாவிடம் சொன்னேன். கொஞ்சம்தான் சொன்னேன். முதலில் அவருடைய பழக்கம் எப்படி ஏற்பட்டது தெரியுமா? கல்லூரியில் இண்டரில் சேர்ந்ததற்கு அடுத்த மாதம் ஒரு நாள் மாலையில் கடற்கரையில் தனியே வந்து கொண்டிருந்தேன். அப்போது கல்லூரியில் பெண்களிடையிலும் எனக்கு நண்பர்கள் குறைவு. என் பக்கத்தில் முரடன் ஒருவன் நடந்து வந்தான். அவன் முன்னே போகட்டும் என்று நான் பின் தங்கினேன். அவன் என்னை ஒரு கண்ணால் பார்த்தபடியே மெல்ல நடந்து ஓர் இடத்தில் நின்றான். நான் பரபரப்பாக நடந்து முன்னே சென்றேன். அவன் தொடர்ந்து என் பக்கத்தில் வந்தான். மறுபடியும் நின்றேன். அவன் முன்போலவே செய்தான். பேருந்து நிற்கும் இடத்திற்கு நடந்தேன்.

அவனும் அங்கே வந்து உராய்வது போல் சென்றான். நான் ஒதுங்கியும் பயன் இல்லை. என்மேல் உராய்ந்து கொண்டு முன்சென்று நின்றான். பேருந்து வந்து நின்றது. பெண்கள் முந்திக்கொள்ளட்டும் என்று ஆண்கள் ஒதுங்கினார்கள். எனக்கு முன்னே ஒரு கிழவி ஏறட்டும் என்று வழிவிட்டு, பிறகு நான் ஏறினேன். அந்த முரடன் என் பின்னே வந்து நெருங்கி ஏறி, நான் உட்கார்ந்த இடத்திற்குப் பக்கத்திலேயே நின்றான். “தொலையட்டும், இனிமேல் என்ன?” என்று பேசாமல் இருந்தேன். நல்ல பட்டுச்சொக்காயும் நீலக் கால்சட்டையும் அணிந்திருந்தான். வயது இருபது இருபத்தைந்துதான் இருக்கும். சந்திரன் என்னையும் அவனையும் கடற்கரையிலிருந்தே கவனித்து வந்திருக்கிறார்.

 

(தொடரும்)

 முனைவர் மு.வரதராசனார், அகல்விளக்கு