அகல் விளக்கு – மு.வரதராசனார்: 38
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 37. தொடர்ச்சி)
அகல் விளக்கு
அத்தியாயம் 15 தொடர்ச்சி
ஒருநாள் விட்டுவருவதை விட மூடிவருவதே நல்லது. “நான் வேண்டாங்க. என் மனைவியை அழைத்துச் செல்லுங்கள். என் பையனை அழைத்துச் செல்லுங்கள். என் குடும்பத்திலிருந்து இரண்டு பேர் வந்தால் போதாதா?” என்று சொல்லிவிட்டார். அதனால் நானும் அம்மாவும் மட்டும் போய் வந்தோம். அது சின்ன ஊர். உழவுத் தொழில் செய்பவர்கள் நல்ல குடும்பத்தார் பலர் வாழ்ந்த ஊர் அது. எல்லாரும் எளிய ஏழைக் குடும்பத்தாரே.
ஒருநாள் இரவு தங்கி உறுதி செய்து கொண்டு விருந்து உண்டு மறுநாள் விடியற்காலையிலேயே புறப்பட்டு வந்துவிட்டோம். ஒப்பந்தத் தாளில் குறித்த நாளிலேயே திருமணத்தை முடிப்பதென்று, வந்தவுடன் பாக்கியமும் அவருடைய தகப்பனாரும் திருமண ஏற்பாடுகளில் முனைந்து ஈடுபட்டார்கள். மாப்பிள்ளை ஆகவேண்டிய விநாயகமோ, ஒரு மாறுதலும் இல்லாமல், பழையபடியே யாருடனும் பேசாமல் கடிகாரம் போல் தொழிலுக்குப் போவதும் வருவதுமாக இருந்தார். தம் வாழ்க்கையில் நடக்கப்போகும் மாறுதலைப் பற்றி ஒன்றும் அறியாதவர் போல் இருந்தார்.
விடுமுறையில் எவ்வளவோ படிக்க வேண்டும் என்று நானும் மாலனும் திட்டமிட்டுப் புறப்பட்டோம். இண்டர் மீடியட்டு இரண்டாம் ஆண்டு நடைபெற வேண்டிய பாடங்களின் புத்தகங்களையும் வாங்கினோம். மாலன் ஒருவாறு திட்டப்படி படித்து வருவதாகக் கடிதம் எழுதியிருந்தான். எதிர்பார்த்த அளவிற்கு என்னால் படிக்க முடியவில்லை. அமைதியாக இருந்த காலத்தில் சந்திரனைப் பற்றிய கவலையால் என் படிப்புக் கெட்டது. திருமண முயற்சியால் அந்தக் கவலை குறைந்தபோதிலும், திருமண வேலைகளில் ஈடுபட்ட காரணத்தால் மனம் படிப்பில் ஈடுபடவில்லை.
திருமணம் பாக்கியம் வீட்டிலேயே நடைபெற்றது. செல்வம் இல்லாக் குறையால், ஆடம்பரத்திற்கு வழி இல்லை. எளிய முறையில் நடந்தாலும் கூடியவரையில் குறை இல்லாதவாறு நன்றாக நடைபெற வேண்டும் என்று பாக்கியம் பெரிதும் முயன்றார். ஆனால் எண்ணியபடி நடக்கவில்லை. வந்த உறவினர் சிலர் திருமணத்துக்கு முந்திய இரவில் பெண்ணை அழைத்து வந்த போதே சீற்றத்தோடு பேசத் தொடங்கிக் குழப்பத்தில் ஈடுபட்டனர். சிலர் உண்ண மறுத்துவிட்டனர். குழப்பக்காரரில் ஒரு சிலர் நன்றாகக் குடித்திருந்தனர். அதை நான் முதலில் தெரிந்துகொள்ளவில்லை.
அவர்கள் கன்னா பின்னா என்று பேசத் தொடங்கியபோது நான் சமாதானம் செய்ய விரும்பி மெல்ல நெருங்கி ஒன்று இரண்டு சொன்னேன். அப்போது எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் என்னைக் கைப்பற்றி இழுத்து, “என்ன தம்பி! நீ அவர்களிடம் போய்ப் பேசுகிறாயே! குடிகாரரிடம் காரணம் பேசிப் பயன்படுமா?” என்றார். “அப்படியா?” என்று திகைத்து நின்றேன். “கிட்டே போனால் சாராய நாற்றம் மூக்கைத் துளைக்கிறதே, தெரியவில்லையா?” என்றார். அதன் பிறகுதான், அவர்களுடைய முகங்களை நன்றாகக் கவனித்தேன்; குடித்திருக்க வேண்டும் என்று துணிந்தேன்.
சாராய நாற்றத்தை அறிவதற்காக மறுபடியும் நெருங்கிச் சென்றேன். அந்த நாற்றம் இருந்ததை உணர்ந்தேன். அம்மாவிடம் அதைப் பற்றிச் சொன்னேன். “அப்படித்தான் இருப்பார்கள். கிராமத்தில், படிக்காத மக்கள் அப்படித்தான். நம்முடைய பங்காளிகளும் சிலர் அப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள். அப்பா அவர்களை வீட்டுப்பக்கமே சேர்ப்பதில்லை. எதற்கும் அழைப்பதும் இல்லை. என்ன செய்வது? படிப்பும் இல்லை, பண்பும் இல்லை” என்றார்.
உள்ளூராரும் வெளியூராரும் சிலரும் சேர்ந்து கடைசியில் இரவு 11 மணிக்குப் பெண் அழைத்து வந்தோம். அதற்கு மேல் நாதசுரம் முழங்க, நலுங்கு வைக்கத் தொடங்கினார்கள். அந்தக் குடிகாரரில் இருவர் அங்கே வந்து உட்கார்ந்து விட்டார்கள். அவர்களை யாரும் அழைத்ததாகவும் தெரியவில்லை. அவர்களே வலிய வந்து பந்தலில் உட்கார்ந்து கொண்டார்கள். மணப்பெண்ணுக்கு நலுங்கு வைக்கப் பெண்கள் ஒவ்வொருவராக வந்து சந்தனம் பூசி ஆரத்தி சுற்றிச் சென்றார்கள்.
ஒருவர் வடக்குப் பக்கத்தே உட்கார்ந்து, நலுங்கு வைத்த பெண்களுக்கு வெற்றிலை பாக்கு எடுத்துக்கொடுத்துக் கொண்டிருந்தார். இளம் பெண்கள் இருவர் சேர்ந்து பாட்டுப் பாடினார்கள். பாட்டும் நாதசுர இசையும் மாறி மாறி அமைந்து கேட்பதற்கு இனிமையாக இருந்தது. பெண் வீட்டுக்காரரும் பிள்ளை வீட்டுக்காரருமாகக் கலந்து நலுங்கு வைத்துச் சென்றார்கள். அம்மா நலுங்கு வைக்க முன் வந்ததைப் பார்த்து என் மனத்தில் ஊக்கம் ஏற்பட்டது. அம்மா சந்தனத்தை எடுத்து மணப்பெண்ணின் முகத்திலும் கைகளிலும் தடவிவிட்டு ஆரத்தி சுற்றத்தொடங்கியபோது, “போதும் அம்மா! ஒன்பது பேர் ஆகிவிட்டது. நீங்களே கர்ப்பூரம் ஏற்றிச் சுற்றி விடுங்கள், போதும்” என்றார் ஒருவர்.
இல்லை எட்டுபேர்தான் நலுங்கு வைத்தார்கள். இன்னும் ஒருவர் குறையாக இருக்கிறது” என்றார் அம்மையார் ஒருவர். அவர் வெளியூரார் போல் தெரிந்தது. உடனே, அவரைப் பின்பற்றி, மற்றோர் அம்மையார், “அது என்ன வழக்கம்? சாதியில் இல்லாத வழக்கம். குலத்தில் இல்லாத வழக்கம்! எட்டுப்பேர் நலுங்கு வைப்பது பற்றி நான் இப்போதுதான் கேள்விப்பட்டேன். வேண்டும் என்றே செய்வதாக இருக்கிறதே! முன்னே பின்னே வாழ்ந்த வீடாக இருந்தால் தெரியும்” என்றார். சும்மா உட்கார்ந்திருந்த குடிகாரர் கிளம்பிவிட்டார். “முதலில் இருந்தே இப்படித்தான் செய்து வருகிறார்கள். நானும் பார்த்து வருகிறேன். யாரையும் மதிப்பதில்லை. ஒன்றும் இல்லை. யாரைக் கேட்டுப் பெண் அழைத்தார்கள்? அதற்கு முதலில் பதில் சொல்லட்டும்” என்று மீசையை முறுக்கிக்கொண்டு எழுந்தார்.
“இன்னும் ஒருத்தர் நலுங்கு வைத்து முடித்துவிடலாமே. இந்தச் சின்ன வேலைக்கு ஏன் இவ்வளவு பெரிய பேச்சும் குழப்பமும்?” என்றேன்.
பக்கத்தில் இருந்தவர் என்னைப் பார்த்து, “நீ சும்மா இரு. தம்பி! உனக்கு என்ன தெரியும்? வெற்றிலை பாக்குக் கொடுத்து வருபவர் பெரிய மனிதர். அவர் சொல்கிறார் ஒன்பது பேர் ஆகிவிட்டது என்று, இப்போது இன்னொருவர் வந்து நலுங்கு வைத்தால் பத்து ஆகிவிடுமே! எட்டு ஆகாது என்றால், பத்து மட்டும் ஆகுமா?” என்றார்.
மணப்பந்தல் முழுவதும் ஒரே குழப்பமாக மாறிவிட்டது. எண்குணத்தான் என்று திருவள்ளுவர் கடவுளைச் சொன்னது நினைவுக்கு வந்தது. ஒவ்வோர் அதிகாரத்திலும் அவர் பத்துப் பத்துக் குறள் பாடியிருப்பதும் நினைவுக்கு வந்தது. “எட்டு, பத்து எல்லாம் நல்ல எண்கள்தானே? ஒன்பதாக இருந்தால் என்ன? எட்டு அல்லது பத்தாகவே இருந்தால் தான் என்ன?” என்றேன்.
பக்கத்தில் இருந்தவரின் முகம் மாறியது. “நீ சும்மா இருப்பா, இந்தக் காலத்தில் இளம்பிள்ளைகளே இப்படித்தான். கடவுளே இல்லை என்று சொல்கிறவர்கள் நீங்கள். உங்களுக்கு எட்டு, பத்து எல்லாம் நன்றாகத்தான் இருக்கும். நாளைக்கு இதனால் ஏதாவது கேடு வந்தால் யார் முன்வந்து காப்பாற்றுவார்கள்? செய்கிறவர்கள் சரியாகச் செய்வதுதானே? செய்யத் தெரியாவிட்டால், எங்கள் வீட்டிலே கலியாணம் என்று ஏன் பெருமையோடு ஒப்புக்கொண்டு வந்தீர்கள்?” என்றார்.
குடிகாரனின் மனநிலை மயங்கியது போலவே, அவருடைய மனநிலையும் மயங்கியிருந்ததை உணர்ந்ததும் பேசாமல் அமைதியானேன். மூட நம்பிக்கையும் ஒருவகைப் போதைப் பொருள் என்பது முன்னமே தெரியும். நெருக்கடியான நேரத்தில் அமைதியைக் கெடுப்பதற்கு மூடநம்பிக்கையும் கள்போல் எவ்வளவு பயன்படுகிறது என்பதை அன்று உணர்ந்தேன்.
அந்த நேரத்தில் அப்பா வந்து சேர்ந்தார். எல்லாவற்றையும் கேட்டறிந்த பிறகு உரத்த குரலில் பேசி எல்லாரையும் அமைதிப்படுத்தி, வெற்றிலை பாக்குக் கொடுத்தவர் சொல்லும் எண்ணையே எல்லாரும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும், அம்மாவே கருப்பூரம் ஏற்றிப் பெண்ணின் நலுங்கை நிறைவேற்றவேண்டும் என்றும் சொன்னார். அவர் சொல்லி முடித்தவுடன், “அதுதான் சரி” என்றும் “அப்படியே செய்வோம்” என்றும் நாலைந்து பேர் உரக்கச் சொன்னார்கள். பிறகு யாரும் எதிர்த்துப் பேசவில்லை. அப்பாவின் திறமையால் அமைதி ஏற்பட்டது என்று சொல்ல முடியாது. மணி பன்னிரண்டே முக்கால் ஆகிவிட்டது. பேசிப் பேசிக் களைத்துப் போன காரணத்தால், எப்படியாவது முடியட்டும் என்று சோர்ந்துதான், அப்பாவின் தீர்ப்பை ஒப்புக் கொண்டார்கள் என்று சொல்ல வேண்டும். நானும் களைத்துப் போனேன். உடம்பின் களைப்புக்கும் காரணம் இல்லை. உள்ளத்தின் சோர்வால் உடம்பும் சோர்ந்திருந்தது. எழுந்து வீட்டுக்கு வந்தேன்.
மறுநாள் காலையில் திருமணப் பந்தலுக்குப் போன போதுதான் மணப்பெண்ணின் முகத்தை நன்றாகப் பார்க்க முடிந்தது. முந்திய நாள் கவிழ்ந்த முகத்தையே பார்த்தேன். விளக்கொளியில் பார்த்த காரணத்தால் உண்மையான அழகும் தெரியவில்லை. திருமணத்தன்று காலையில் பந்தலைச் சுற்றி வந்தபோது மணப்பெண்ணின் முகத்தை நன்றாகப் பார்த்தேன். முகத்தில் அவ்வளவாக கவர்ச்சி இல்லை. மாநிறமான பெண்கள் பலர் எவ்வளவோ கவர்ச்சியாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட கவர்ச்சியும் காணப்படவில்லை. மூக்கு அளவாக அமையவில்லை.
உருண்டு திரண்ட அந்த மூக்கின் கொடியவடிவம் முகத்தின் அழகையே கெடுத்துவிட்டது. கன்னங்களில் தசைப்பற்று இல்லை. ஒரு பெண்ணின் இளமைக்கு அழகு செய்யும் சிறு நெற்றி இல்லை. ஆண்களுக்கு இருப்பது போன்ற பரந்த பெரிய நெற்றி இருந்தது. இவை எப்படியாவது போகட்டும் உடுத்திருந்த உடையிலாவது, அணிந்த நகைகளிலாவது அழகைக் கூட்டியிருக்கலாம். அதுவும் செய்யப்படவில்லை. ஆடம்பரத்தைப் புலப்படுத்தும் முயற்சி இருந்ததே தவிர அழகை எடுத்துக் காட்டும் முயற்சி இல்லை. பொன்னிறப் பட்டுச் சேலையும் சரிகை மிகுந்த சோளியும் மணமகள் உடுத்திருந்தாள்.
கோயிலில் சாமியின் அழகு புலப்படாதபடி – மார்பும் கழுத்தும் கைகளும் தெரியாதபடி – நகைகளால் மூடி மறைப்பது போல் அந்த மணமகளைப் பலவகை அணிகலன்களால் – காசுமாலை முதல் சிலவகைப் பதக்கங்கள் வரையில் – எல்லாவற்றையும் அணிவித்துப் – போர்த்திருந்தார்கள் என்று சொல்லவேண்டும். அந்த நகைகளில் முக்கால் பங்கு இரவல் வாங்கியனவாக இருக்கவேண்டும் என்பது தானே தெரிந்தது. ஏன் என்றால், பெண் வீட்டார் பெரிய செல்வர் அல்ல என்பது, அவர்களின் வீட்டுக்குப் போய் வந்த எனக்கு நன்றாகத் தெரியும்.
தவிர, அந்த நகைகளில் சில, காலத்திற்கு ஏற்காத பழைய நகைகள், பொருட்காட்சியில் வைக்கத் தகுந்தவை. ஆகையால் மணமகள் இருந்த அழகும் குறைந்து விளங்கினாள். அந்த வீட்டில் விதவையாக வாழ்ந்த பாக்கியத்தின் இயற்கை அழகில் அரைக்கால் பங்கும் அவளுக்கு இல்லை. ஆனால் மணமகன் விநாயகத்தின் அழகை நோக்கியபோது, அந்தச் சிடுமூஞ்சிக்கு இவள் போதும் என்று தோன்றியது. மணப்பந்தலிலும் அவருடைய முகத்தில் ஒரு பொலிவோ புன்னகையோ இல்லை. வழக்கம் போல் உம்மென்று உட்கார்ந்திருந்தார். சொன்னதைச் செய்து சடங்குகளை முடித்தார். இப்படிப்பட்டவர் புதிய ஒருத்தியோடு பேசிப் பழகி எப்படி வாழ்க்கை நடத்தப் போகிறாரோ என்று எண்ணினேன்.
திருமணம் முடிந்த பிறகும் பகல் விருந்தின் போது சிறு குழப்பம் நடந்தது. தாலி கட்டுவதற்குமுன் எதற்காகவோ யாரையோ கேட்கத் தவறிவிட்டார்கள். அவ்வாறு செய்தது தப்பு என்று சிலர் கோபத்தோடு எதிர்வீட்டுத் திண்ணையில் போய் உட்கார்ந்துகொண்டு அங்கே ஒரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டார்கள். திருமணத்துக்கு வந்த உறவினர்கள், ஆளுக்கு ஒருவகை உதவி செய்து துணையாக இருந்து போவதை விட்டு, ஆளுக்கு ஒரு குழப்பம் செய்து கலகம் விளைவிக்கிறார்களே என்று வருந்தினேன். இவ்வளவு அறியாமை உடைய மக்களுக்கு இடையே வாழ்க்கை நடத்துவது எவ்வளவு துன்பம் என்றும் எண்ணி வருந்தினேன்.
(தொடரும்)
முனைவர் மு.வரதராசனார், அகல்விளக்கு
Leave a Reply