அகல் விளக்கு – மு.வரதராசனார்: 45
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 44. தொடர்ச்சி)
அகல் விளக்கு
அத்தியாயம் 18 தொடர்ச்சி
“சந்திரா!” என்றேன்.
“அம்மா இல்லையா? போய்விட்டார்களா? ஐயோ! அம்மா நினைவு அடிக்கடி வந்ததே! நான் பார்க்கவே முடியாதா?” என்று விம்மி அழுதான்.
அப்பா வந்திருக்கிறார் என்று சொல்ல வாயெடுத்து, உடனே அடக்கிக் கொண்டேன்.
“எப்போது இறந்து போனார்கள்?” என்றான்.
“ஒரு மாதம் ஆச்சு.”
“அய்யோ! என் மனம் என்னவோ போல் இருக்கிறதே” என்று கலங்கினான். சிறிது நேரத்தில் முற்றிலும் மாறியவனாய், “நீ ஏன் இங்கே வந்தாய்! உனக்கு எப்படித் தெரியும்” உன்னோடு யாராவது வந்திருக்கிறார்களா?” என்று படபடப்பாகக் கேட்டான்.
“பொறு. சொல்கிறேன். அவசரப்படாதே. அவசரப்பட்டது போதும். உன்னுடைய நன்மைக்காகவே உன்னைத் தேடிக்கொண்டு வந்தேன். நீ இப்படிக் கல்மனத்தோடு பிரிந்து வந்துவிட்டாயே” என்றேன்.
“அதெல்லாம் இருக்கட்டும். யார் வந்திருக்கிறார்கள் சொல். எங்கே இருக்கிறார்கள் சொல்” என்றான்.
என்னால் எதையும் மறைக்க முடியவில்லை. உண்மையைச் சொன்னேன். “ஐயோ” என்று தலைமேல் கை வைத்துக் கொண்டு அந்த இடத்திலேயே மண்ணில் உட்கார்ந்தான்.
நானும் உட்கார்ந்தேன். “ஒன்றும் கவலைப்படாதே. ஆசிரியர் உனக்கு ஆகாதவரா? அப்பா பகையா? ஏன் இப்படிக் கலங்குகிறாய்? கவலை வேண்டா. சொன்னால் கேள்” என்றேன்.
அதற்குள், “என்னாங்க, என்னாங்க! எங்கே போய்விட்டாரோ, தெரியவில்லையே! இப்படித்தான் சொல்லாமலே எங்கேயாவது போய்விடுவார்” என்று தாயம்மாவின் குரல் கேட்டது. இருள் பரவியதால் நாங்கள் நின்றது தெரியவில்லை. பக்கத்து வீட்டு, அம்மா, “யார்? அவரா?” என்றாள். “ஆமாம். கணக்குப்பிள்ளைதான் வந்தார். மாயமாய் மறைந்துவிட்டார். என்ன அவசரமோ, தெரியவில்லை” என்று தாயம்மா எங்கள் பக்கமாகப் பார்த்தாள்.
சந்திரன் என் கையைப் பற்றிக்கொண்டு ஒரு மரத்தின் பக்கமாகச் சென்றான். அவனுடைய கருத்தை நான் உணர்ந்து கொண்டேன். எனக்கு ஒன்றும் செய்தி தெரியாது என்று அவன் எண்ணிக்கொண்டான். நானும் அவள் யார் என்று தெரியாதது போல் இருந்தேன்.
“நான் இந்த வீட்டில்தான் தங்கிச் சாப்பிடுகிறேன். தெரிந்தவன் ஒருவன் வீடு. அவன் இந்தத் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்கிறான். இங்கே உங்களுக்கு இடம் இல்லை. அப்பாவையும் ஆசிரியரையும் நீயே போய் அழைத்துக் கொண்டு வா. ஒரு தேநீர்க்கடை தெரிந்த கடை இருக்கிறது. அங்கே போய்ப் பேசுவோம். அதற்குள் நானும் அந்த வீட்டாரிடம் சொல்லிவிட்டு வருவேன்” என்றான்.
எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவனை விட்டுச் சென்றால், எங்காவது ஓடிவிடுவானோ என்று அஞ்சினேன். எப்படி நம்புவது? கேட்கவும் முடியவில்லை. தயங்கித் தயங்கி நின்றேன்.
“இங்கே உள்ளவர்களுக்கு ஒன்றும் தெரியக்கூடாது. தெரிந்தால் வீணாக ஆரவாரமாய்ப் போய்விடும் அதற்காகச் சொல்கிறேன்.”
இரண்டு அடி எடுத்து வைத்து மறுபடியும் நின்றேன்.
“எங்காவது ஓடிவிடுவேன் என்று எண்ணுகிறாயா? இங்கேயே இருப்பேன். போய் அழைத்து வந்துவிடு. என் மானத்தைக் காப்பாற்று, வேலு” என்றான்.
அவனுடைய குரல் நம்பலாம் போல் இருந்தது. நான் ஆலமரத்தை நோக்கி நடந்தேன். அங்கே வேறு யாரோ அவர்களோடு பேசிக்கொண்டிருந்தது கேட்டது. நான் நெருங்கியதும், பார்த்தாயா! இதோ வந்துவிட்டார். இவருக்காகத்தான் இங்கே காத்திருந்தோம்; போகிறோம்” என்று சொல்லி, ஆசிரியர் அந்தப் புதியவரை அனுப்பினார். அந்த ஆள் என்னை உற்றுப் பார்த்து நகர்ந்தார்.
அவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு அந்த மரத்துப் பக்கம் சென்றேன். அங்கே சந்திரன் இல்லை. என் மனம் திடுக்கிட்டது. வீட்டிற்குச் சென்றானோ என்று அங்கே பார்த்தேன். அவன் வீட்டிலிருந்து வெளியே வந்தது கண்டேன். அவள் பின்தொடர்ந்து வந்து நின்றதும், கண்டேன். மனம் தேறியது. ஏதோ அவசர வேலை என்று பொய் சொல்லிவிட்டு வருகிறான் என்று தெரிந்து கொண்டேன். எங்களை நெருங்கி வந்ததும், மேல்துண்டால் வாயைப்பொத்திக் கொண்டு விம்மினான். “சந்திரா! சந்திரா!” என்று சாமண்ணாவும் விம்மினார். ஆசிரியர் அவனுடைய இடக்கையைப் பற்றிக் கொண்டு தேற்றினார். சந்திரன் ஒன்றும் பேசாமல் முன்னே நடந்தான். நானும் சாமண்ணாவும் பின்னே வர ஆசிரியர் அவனுடன் நடந்தார். வழியில் அவன் விம்மி அழுதானே தவிர, வாய் திறந்து பேசவில்லை. எதிரில் யாரேனும் வந்தபோதெல்லாம், அந்த விம்மலையும் அடக்கிக்கொண்டு நடந்தான்.
பழைய தேநீர்க் கடைக்குத்தான் எங்களை அழைத்துச் சென்றான். விளக்கொளியில் பார்த்தபோது அவனுடைய கண்கள் சிவந்திருந்தன. “இங்கே இருங்கள். இதோ வருகிறேன்” என்று சொல்லி உள்ளே நுழைந்தான். எங்களுக்கு வழிகாட்டிய அந்த இளைஞனிடம் சிறிது நேரம் ஏதோ பேசிக் கொண்டிருந்தான். பிறகு இருவரும் எங்களை நோக்கி வந்தார்கள். “இவர்களுக்கு எங்காவது இடம் கொடு. இரவு உன்னோடு இருக்கட்டும். ஓட்டலுக்கு அழைத்துக் கொண்டு போய்ச் சாப்பிட்டு வருவோம். நீ எங்கேயாவது போய் விடாதே. இங்கேயே இரு. வந்துவிடுவேன்” என்று அவனிடம் சொல்லிவிட்டு, வேறோர் இடத்துக்கு எங்களை அழைத்துச் சென்றான். அங்கே மட்டமான உணவு கிடைத்தது. வேறுவழி இல்லை என்று மூவரும் உண்டோம். அங்கிருந்து தேநீர்க் கடையை நோக்கி வந்தபோது, ஆசிரியர் சந்திரனைப் பார்த்து, “நாளைக்கு ஊருக்குப் போகலாம் வா” என்றார்.
“இனிமேல் நான் ஏன் வரணும்? அம்மாவும் இல்லையே” என்றான் அவன்.
சாமண்ணா கனிவான குரலில், “சந்திரா! என்னையும் சாகடிக்காதே. பேசாமல் புறப்பட்டு வாப்பா. அத்தை உன் ஏக்கமாகவே இருக்கிறாள். உன் தங்கை இருக்கிறாள். இப்படிச் சொல்லாமல் விட்டுவிட்டு வந்தாயே. நாங்கள் என்ன பாவம் செய்தோம்? உன்னை ஏதாவது கண்டித்தோமா? வெறுத்து ஒரு சொல் சொன்னோமா? ஊரில் கேட்கிறவர்களுக்குப் பதில் சொல்ல முடியவில்லை அப்பா. இங்கே ஏன் இப்படித் திக்கற்றவன் போல் திரியணும்?” என்றார்.
சந்திரன் மறுமொழி கூறவில்லை.
சாமண்ணாவையும் ஆசிரியரையும் முன்னே போகச் செய்துவிட்டு, நான் சந்திரனோடு தனியே பேச முயன்றேன். எவ்வளவு முயன்றாலும் சந்திரனுக்கு அறிவுரை கூறுவதற்கு எனக்குத் தயக்கமாக இருந்தது. உண்மையாகவே எனக்குத் தாழ்வு மனப்பான்மை இருந்தது என்பதை அப்போது உணர்ந்தேன். அன்று சந்திரன் என்னைப் புறக்கணிக்கவில்லை. இகழ்ந்து நடக்கவில்லை. ஆனாலும், அவனோடு ஒத்த மனப்பான்மையோடு நட்புரிமையோடு அறிவுரை கூற என்னால் முடியவில்லை. என்ன என்னவோ எண்ணிக் கொண்டு வந்தேன். எண்ணியதை எல்லாம் விட்டு, “நாளைக்கே புறப்பட்டுப்போகலாம். அப்பா மிகவும் நொந்து போயிருக்கிறார்?” என்றேன்.
“இனிமேல் அங்கே வந்து வாழ்க்கை நடத்த எனக்கு மனமே இல்லை” என்றான்.
“உனக்கு யாராவது தீங்கு செய்தார்களா? யாராவது பகையா? உன்னை அன்போடு வரவேற்க எல்லாரும் காத்திருக்கும் இடத்துக்கு வந்தால் என்ன?”
“நான் செய்த குற்றம் தான்.”
“குற்றம் செய்வது இயற்கை. திருந்துவதில் தவறு என்ன? என்னைவிட நீ எவ்வளவு வல்லவன்! உன் வாழ்க்கை நல்லபடி இருக்கும் புறப்பட்டு வா.”
“நாளைக்குச் சொல்வேன்.”
“அப்படி ஒத்தி வைக்காதே. உன் கணக்கு முதலியவற்றை எல்லாம் காலையில் ஒப்படைத்துவிட்டுப் புறப்படு”
“ஐயோ! நான் வேலையைவிட்டு ஊர்க்கு வருவது தெரிந்தால் இங்கே ஒரே ஆரவாரம் ஆகிவிடும்.”
இவ்வளவும் அவன் வழியைப் பார்த்தோ, வானத்தைப் பார்த்தோ சொன்னானே தவிர, என்னுடைய முகத்தைப் பார்த்துச் சொல்லவில்லை. தப்பித் தவறி அவன் என் முகத்தைப் பார்த்தால் அப்போது என்னால் நேராகப் பார்க்க முடியவில்லை. நான் பார்வையை மாற்றிக்கொண்டேன். ஏதோ ஒன்று எங்கள் இருவருடைய உள்ளங்களுக்கும் இடையே குறுக்கே இருந்ததை உணர்ந்தேன்.
“அப்படியானால் ஒன்று செய். அவசரமாக ஊருக்குப் போய் வரவேண்டும் என்று மூன்று நான்கு நாள் விடுமுறை கேட்டுப் புறப்படு. அங்கே வந்த பிறகு கடிதம் எழுதிப் போட்டு நின்று விடலாம்.”
“பார்க்கலாம்.”
அதை அவன் சொன்னபோது, பழைய புறக்கணிப்பின் தன்மை இருந்தது. அதற்குமேல் என்னால் பேச முடியவில்லை.
தேநீர்க்கடையும் வந்துவிட்டது. அந்த இளைஞன் எதிரே இருந்தான். “நீங்கள் இங்கே இருங்கள். நான் அந்த வீட்டு வரைக்கும் போய் வந்துவிடுவேன்” என்று என்னைப் பார்க்காமல் நகர்ந்தான். நானும் வாய் திறக்கவில்லை. ஆசிரியரும் பேசாமல் இருந்தார். சாமண்ணா மட்டும் “சந்திரா!” என்றார். “காலையில் வருவேன் அப்பா” என்று திரும்பிப் பார்க்காமல் நடந்தான்.
அதே நேரத்தில் அவனுடைய நெஞ்சில் ஒருவகை முரட்டுத் தன்மை இருந்தது என்பதை அவனுடைய சொல்லாலும் பார்வையாலும் உணர்ந்தேன். மேலும் வற்புறுத்தி ஏதாவது சொன்னால் பயன்படாமல் போகும் என்று பேசாமல் இருந்தேன். அந்தக் கடைக்கார இளைஞனும், “அதுதான் சரி, மெல்லத்தான் திருப்பணும்” என்றான்.
அன்று இரவெல்லாம் சாமண்ணாவின் மனக்கலக்கத்திற்கு மருந்து கொடுப்பதே பெருந்துன்பமாக இருந்தது. “பையனைத் தனியாக விட்டுவிட்டோம். உயிருக்கு ஏதாவது தேடிக்கொண்டால் என் கதி என்ன?” என்று எழுந்து எழுந்து அலறினார். ஒரு பக்கம் நீலகிரியின் குளிர் எங்களை வாட்டியது. மற்றொரு பக்கம் அவருடைய துயரம் வாட்டியது. கடைக்கார இளைஞன் சிறிது நேரம் எங்களோடு விழித்திருந்து பிறகு தன்னை மறந்து குறட்டை விட்டுத் தூங்கினான்.
விடியற் காலையில் அவன் விழித்துக் கொண்டதும் என்னிடம் நம்பிக்கையோடு சொன்னான். “அவர் ஒரு மாதிரியானவர். பொழுது விடியட்டும் பாருங்கள். அவரே வந்து புறப்படுங்கள் என்று சொன்னாலும் சொல்வார்” என்றான்.
“நீ கொஞ்சம் சொல்லக்கூடாதா?” என்றேன்.
“ஐயோ! சொல்லக்கூடாது. முன் கோபக்காரர். பேசாமல் இருந்து விடுவது நல்லது. நான்தான் முதலிலேயே சொன்னேனே. நான் உங்களுக்குச் சொல்லி அனுப்பியதே தெரியக்கூடாது” என்றான்.
திக்கு இல்லாமல் வந்து சேர்ந்த வெளியூரிலும் சந்திரன் இப்படி மற்றவர்களை அடக்கி வைத்திருக்கிறானே? ஒத்த உரிமை கொடுத்துப் பழகாமல் இப்படி உயர்வு மனப்பான்மையோடு முன் கோபத்தோடு பழகுவதாலேயே இவன் இடறி இடறிக் கெடுகிறான் என்று எனக்குத் தோன்றியது. ஒத்த உரிமையோடு பழகினால்தான் மற்றவர்கள் நெருங்கி வந்து அறிவுரை கூறமுடியும். திருத்த முடியும். மற்றவர்களுக்கு என்ன தெரியும் என்று அறிவுச் செருக்கோடு நடந்தால் வழுக்கி விழும்போதும் துணை இல்லாமல் விழுந்து துன்புற வேண்டியிருக்கிறது. சந்திரன் கூர்மையான அறிவு படைத்திருந்தும் இதைத் தெரிந்து கொள்ளவில்லையே. தன் ஊரில் – கிராமத்தில் பெரிய வீட்டுப் பிள்ளையாய் எல்லாரும் ஏவல் செய்து பணியும் பெருமையோடு வளர்ந்தது காரணமாக இருக்குமா? அல்லது புத்தகப் படிப்பாக இருந்தாலும் நாடக நடிப்பாக இருந்தாலும் எதிலும் மற்றவர்கள் போட்டியிட்டு நெருங்க முடியாத அளவுக்குத் தனிச் சிறப்போடு உயர்ந்து நிற்கக்கூடிய அறிவின் திறமையால் ஏற்பட்ட தன்னம்பிக்கை காரணமாக இருக்குமா என்று எண்ணிக்கொண்டே பொழுது விடியும் நேரத்தில் உறங்கி விட்டேன்.
விழித்தபோது, அந்த இளைஞன் அங்கே இல்லை. தேநீரும் சிறு சிற்றுண்டியும் செய்து கொண்டிருந்தான். ஆசிரியரும் சாமண்ணாவும் பல் துலக்கிக் கொண்டிருந்தார்கள். காலைக் கடன்களை முடித்துவிட்டு, சந்திரன் வருவான் வருவான் என்று ஆவலுடன் அந்த வழியையே நோக்கிக் கொண்டிருந்தோம். மணி எட்டும் ஆயிற்று. ஒன்பதும் ஆயிற்று. அவன் வரவில்லை. சாமண்ணாவின் மனத்தில் இருந்த ஏமாற்றமும் திகைப்பும் எங்கள் மனத்திலும் புகுந்தன. கடைக்கார இளைஞனும் வருந்தினான். ஆனாலும் நம்பிக்கை ஊட்டிக்கொண்டே இருந்தான்.
சரியாக ஒன்பதரை மணிக்குச் சந்திரன் வெறுங்கையோடு வந்து சேர்ந்தான். கையில் ஏன் ஒன்றும் எடுத்து வரவில்லை என்று எண்ணினோமே தவிர, ஒருவரும் கேட்கவில்லை. அவன் வந்ததே போதும் என்று மகிழ்ச்சியோடு நோக்கினோம். கடைக்கார இளைஞனை அழைத்தான். அவன் கையில் இரண்டு ரூபாய் கொடுத்து, “தபால் எழுதுவேன்” என்று சொல்லிவிட்டு, ஆசிரியரைப் பார்த்து “வாங்க போகலாம்” என்றான். சாமண்ணாவின் முகத்தில் அப்போதுதான் மலர்ச்சி காணப்பட்டது. கடைக்கார இளைஞன் என்பின் வந்து, என் காதில் மட்டும் விழும்படியாக, “அப்படியே எனக்கும் ஒரு வேலை பார்த்து எழுதினால் நானும் அங்கே வந்துவிடுவேன்” என்றான். அவனுக்கு நம்பிக்கையாகச் சொல்லித் தலையசைத்துவிட்டு நகர்ந்தேன். தொடர்வண்டி நிலையத்துக்கு வந்த சிறிது நேரத்திற்கெல்லாம் ஒரு வண்டி வந்தது. அதில் ஏறினோம்.
பயணத்தின்போது உணவு, சிற்றுண்டி, காப்பி இவற்றிற்காகப் பேசியது தவிர, வேறு எந்தப் பேச்சும் பேசவில்லை. நான்குபேரும் பேசா நோன்பு பூண்டவர்கள் போலவே வந்தோம். சந்திரனுடைய முகத்தை அடிக்கடி கவனித்தேன். அதில் தயக்கமோ தடுமாற்றமோ கலக்கமோ ஒன்றும் காணோம். கல்லூரி விடுதியைவிட்டு ஒருநாள் எப்படித் துணிந்து மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் வந்து விட்டானோ, அப்படியே நீலகிரியை விட்டுத் துணிந்து தேயிலைத் தோட்டத்து உறவைப் பற்றிக் கவலைப்படாமல் வந்துவிட்டான். அவன் நிலையில் நான் இருந்திருந்தால் எவ்வளவோ வருந்தியிருப்பேன். அந்தத் தாயம்மாவுக்காகவும் கண்ணீர் விட்டிருப்பேன். அவனிடம் வருத்தமோ ஏக்கமோ சிறிதும் காணப்படவில்லை.
(தொடரும்)
முனைவர் மு.வரதராசனார், அகல்விளக்கு
Leave a Reply