(அகல் விளக்கு – மு.வரதராசனார். 45. தொடர்ச்சி)

அகல் விளக்கு

அத்தியாயம் 19

நான் எண்ணியது உண்மை ஆயிற்று. இரண்டு வாரங்கள் கழித்து ஆசிரியர் எனக்கு விடுதி முகவரிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். சந்திரன் தேயிலைத் தோட்டத்தை அடியோடு மறந்துவிட்டான் என்றும், அங்கு உள்ளவர்களுக்கு ஒரு கடிதமும் எழுதவில்லை என்றும், முன்போல் பரபரப்பாக அலையாமல் வீட்டோடு ஒதுங்கியிருந்தாலும் கவலை இல்லாமல் இருக்கிறான் என்றும், தந்தையார் திருமணத்துக்காகப் பெண் பார்த்து வருகிறார் என்றும், ஆவணியில் தவறாமல் திருமணம் நடக்கும்போல் இருக்கிறது என்றும் எழுதியிருந்தார். ‘ஏதாவது ஒரு கட்டு ஏற்படுத்தி விட்டால் சரியாய்ப் போகும்’ என்று அந்தத் தேநீர்க் கடையின் இளைஞன் சொன்னது என் நினைவுக்கு வந்தது.

ஆவணி மூன்றாம் நாளிலேயே என் கையில் திருமண அழைப்பிதழ் வந்து சேர்ந்தது, “சந்திரன் – வள்ளி” என்று மணமக்களின் பெயரைப் படித்தவுடனே என் உள்ளத்தில் மகிழ்ச்சி குடிகொண்டது. சந்திரனைக் கல்லூரிக்கு அனுப்பியதற்கு மாறாக, அப்போதே ஒரு திருமணம் செய்து மாமனார் வீட்டுக்கு அனுப்பியிருந்தால் இவ்வளவு தொல்லையும் இருந்திருக்காது என்று கிண்டலாகப் பேசினான் மாலன். “நான் சொல்வதற்காக வருத்தபடாதே, யாருக்கு என்ன பசி என்று அறிந்து உணவு இடவேண்டும். தன் மகனுக்குக் கல்விப் பசியை விடக் காமப் பசி மிகுதி என்று அவனுடைய தந்தை அப்போது தெரிந்து கொள்ளவில்லை. இப்போதாவது தெரிந்து கொண்டாரே, அது போதும்” என்றான்.

“சந்திரனுக்கு கல்வியில் ஆர்வம் இல்லை என்கிறாயா?” என்றேன்.

“நான் அப்படிச் சொல்லவில்லை, அதுவும் உண்டு ஆனால், அதைவிடப் பெண்ணுறவு தேடுவதில் ஆர்வம் மிகுதி என்று சொன்னேன்” என்றான் மாலன்.

பேச முடியாமல் அடங்கினேன்.

“சென்ற ஆண்டில் வேலூரிலிருந்து வந்த பேராசிரியர் அருளப்பர் ஒரு கூட்டத்தில் சொன்னது நினைவு இருக்கிறதா? அருமையான கருத்து” என்றான்.

“எது என்று எனக்கு நினைவு வரவில்லை. மறந்து விட்டேன், சொல்” என்று கேட்டேன்.

“காக்கையின் குஞ்சாக இருந்தாலும், கழுகின் குஞ்சாக இருந்தாலும் கூட்டில் வளர வேண்டிய காலம் வரையில் கூட்டிலேயே வளர வேண்டும். அந்தக் காலத்தில் வளர்ந்த பறவைகளைப் பார்த்துப் பின்பற்றக் கூடாது. மரக்கிளைகளையோ வானத்தையோ எண்ணி ஏங்கினால் வளர்ச்சிக்கு இடையூறு ஆகும் என்று அழகாகச் சொன்னாரே?”

“ஆமாம் மாணவர்களாக இருப்பவர்கள் கல்விக்கு உரிய பருவத்தில் மற்றவற்றில் ஈடுபடாமல் படிப்பது நல்லது என்று பேசினார்.”

“அது உயர்ந்த கருத்து அல்லவா,”

“உயர்ந்த கருத்துத்தான். ஆனால் அப்படிக் கல்வி ஒன்றையே நாடி அடங்கியிருந்தால் பொது அறிவு வளராமல் போகுமே.”

“கற்று முடிந்த பிறகு பொது அறிவு தானாக வருமே. இப்போது அரசியல் தலைவர்களாக உள்ளவர்கள் பலருடைய வாழ்க்கையை எடுத்துப் பார். அவர்கள் படித்து முடித்த பிறகுதான் இந்தத் துறைக்கு வந்தவர்கள். அதற்கு முன் படிப்போடு அடங்கியிருந்தவர்கள் தான்.”

“ஆமாம், செய்வன திருந்தச் செய்ய வேண்டும். படிக்கும் போது படிப்பில் செம்மையாக இருந்தால்தான், பிறகு கொள்ளைக்காரன் ஆனாலும் அதையும் செம்மையாகச் செய்ய முடியும். இதிலேயே அரைகுறை என்றால், எதிலும் அரை குறையாகத்தான் முடியும்.”

“குருவி அருமையாகக் கூடுகட்டிக் குஞ்சுகளைக் காப்பது போல் நம்முடைய பெற்றோரும் நமக்கு அருமையாக ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள். குஞ்சு நன்றாக இறக்கை முளைப்பதற்கு முன் கூட்டைவிட்டு வெளியே வரத்தொடங்கினால் என்ன ஆகிறது பார்த்தாயா? விழுந்து விழுந்து இடர்ப்படுகிறது. தாய்க் குருவியாலும் காப்பாற்ற முடியவில்லை. கடைசியில் காக்கைக்கோ பூனைக்கோ இரையாகிறது.”

இதைக் கேட்டதும், சந்திரனுடைய வாழ்க்கையை அப்படியே படம் பிடித்து காட்டியது போல் இருந்தது. என் மனம் சந்திரனுக்காக உருகியது.

சந்திரனுடைய திருமண நாளன்று எனக்குக் கல்லூரியில் கால் ஆண்டுத் தேர்வு தொடங்குவதாக இருந்தது. ஆகையால் எப்படித் திருமணத்துக்குப் போவது என்று திகைத்தேன். மாலனை அறிவுரை கேட்பது போல் கேட்டேன்.

“கூட்டைவிட்டு வெளியே வருவது என்றால், பெண்ணுறவு தேடி அலைவதற்கு மட்டும் சொன்னது அல்ல. பொதுவாக எந்த வேறு வேலைக்கும் பொருந்தும். திருமணம் குடும்பக் கடமை. அதை உன் பெற்றோர்கள் பார்த்துக் கொள்ளட்டும், நீ போக வேண்டியதில்லை” என்றான்.

“நண்பன் அல்லவா? அவனுடைய வாழ்வில் ஒரு சிறந்த நாள்.”

“இருக்கட்டும். நீ அன்றைக்கு இங்கிருந்தே அவனுக்காக நன்மை எண்ணு. நீ இங்கிருந்தால், உன் தேர்வும் எழுதலாம், அவனுக்குத் தீமை இல்லை. நீ போனால், உனக்குத் தீமை, அவனுக்கு ஒரு பயனும் இல்லை. இரண்டில் எது சிறந்தது? பற்றில்லாமல் நடுநிலையாக எண்ணிப்பார்” என்றான்.

தராசில் இரண்டு தட்டுகளில் வைத்து எடைபோட்டுக் காட்டுவது போல் இருந்தது. போவதில்லை என்று ஒருவாறு முடிவு செய்தேன்.

ஆனால், மாலன் என் அறையை விட்டுப் போன பிறகு, மனம் ஊசாலாடத் தொடங்கியது. போகாவிட்டால் சந்திரன் என்ன நினைப்பான், சாமண்ணா என்ன நினைப்பார் என்று வருந்தியது. போவதால், என்னுடைய காலமும் முயற்சியும் அவை போலவே ஓரளவு அவனுடைய காலமும் முயற்சியும் வீணாவது தவிர வேறு பயன் இல்லேயே; போகாமல் இருந்தால், காலமும் முயற்சியும் தேர்வுக்குப் பயன்படுமே என்றும் எண்ணினேன்.

திருமண அழைப்பு மட்டும் அனுப்பினானே தவிர, சந்திரன் தனிப்பட்ட ஒரு கடிதம் எழுதவில்லையே, நீலகிரியிலிருந்து வந்தபிறகு ஒரு வரியும் எழுதவில்லையே என்று சிறிது வருந்தினேன். ஒரு வேலையும் இல்லாத அவன் சிறிது நேரம் செலவிட்டு ஒரு கடிதம் எழுதவில்லையானால், அவனுக்காக நான் ஏன் காலத்தையும் முயற்சியையும் வீணாக்க வேண்டும்? ஊருக்குக் கடிதம் எழுதினால் வீட்டிலிருந்து யாராவது ஒருவர் போய்ப் பார்த்து வரட்டும் என்று அமைதியானேன்.

அடுத்த வாரம் ஊரிலிருந்து கடிதம் வந்தது. அதில் அவர்களுக்குத் திருமண அழைப்பே வரவில்லை என்றும், யாரும் திருமணத்துக்குப் போகவில்லை என்றும் குறித்திருந்தார்கள். எனக்கு அது வியப்பாக இருந்தது. சந்திரன் மறந்திருக்கலாம்; புறக்கணித்திருக்கலாம்; அது அவனுக்கு இயற்கை. சாமண்ணா எப்படி மறந்தார் என்று வருந்தினேன். மனைவியை இழந்த அவர் பலவகையிலும் மனம் நொந்தவராக இருப்பதால், எத்தனை கடமைகளை நேரில் கவனிக்க முடியும் என்று எண்ணி ஆறுதல் பெற்றேன்.

அடுத்த ஆவணி தொடக்கத்தில் மாலன் என்னுடைய அறைக்கு வந்து ஏதோ பேசிக்கொண்டிருந்து, திடீரென்று “எனக்குத் திருமண ஏற்பாடு நடக்கிறது; ஊரிலிருந்து கடிதம் வந்திருக்கிறது” என்றான்.

எனக்கு வியப்பாக இருந்தது. “என்ன அவசரம்? இன்னும் ஆறு மாதம் பொறுத்தால், பி.ஏ. தேர்வு எழுதி முடித்து விடலாமே. அதற்குள் ஏன்? கூட்டில் வளரவேண்டிய காலத்திற்கு முன்பே வெளியே தலை நீட்டலாமா?” என்றேன்.

என்னுடைய குத்தலை உணர்ந்துகொண்ட மாலன் “இது குஞ்சு தானாகவே வெளியே போய்க் கெடுவது அல்ல. தாய்க் குருவி பொறுப்போடு பார்த்துக் கொண்டு தன் குஞ்சை வெளியே அழைத்துப் போவது இது” என்றான்.

“எப்படியும் கெடுதல்தானே? இறக்கை நன்றாக முளைத்து வரவேண்டிய பருவம் அல்லவா,”

“முதல் கடிதத்திற்கு வேண்டா என்றுதான் எழுதினேன். ஆனால் எங்கள் குடும்பத்துக்குப் பழக்கமான சோதிடர் இந்த ஆவணியில் முகூர்த்தப் பொருத்தம் இருப்பதாகவும், குருதசை பலமாக இருப்பதாகவும், இன்னும் நான்கு வாரத்தில் திருமணம் கூடிவிடும் என்றும் தெற்குத் திசையில் அல்லது தென்மேற்குத் திசையில் பெண் வீடு அமையும் என்றும், இராசிநாதனை எடுத்துப் பார்த்தால் அப்படித் தெரிகிறது என்றும் சொல்லியிருக்கிறாராம்” என்றான்.

எனக்குத் தோன்றிய சிரிப்பை அடக்கிக்கொண்டே “இன்னும் என்ன எழுதியிருக்கிறார்கள்?” என்றேன்.

“ஒரு நல்ல குடும்பத்தில் பெண் பார்த்திருக்கிறார்களாம். கொஞ்சம் தென்மேற்கே உள்ள ஊராம். இலக்கினாதிபதி அந்த இடத்தில்தான் பலமாகப் பார்க்கிறானாம். பெண்ணுக்கு மாங்கல்ய பாக்கியம் இருக்கிறதாம். ஆனால் கேதுவின் பார்வை எட்டில் இருப்பதால், இல்வாழ்க்கையில் கொஞ்சம் கசப்பும் இருக்குமாம். நாகபூசை செய்தால் சரியாகிவிடுமாம்” என்றான்.

என்னால் முன் போல் சிரிப்பை அடக்க முடியவில்லை. சிரித்து விட்டேன்.

“நீ இப்போது இப்படித்தான் சிரிப்பாய். உனக்கு ஒரு காலம் வரும். அப்போது நம்புவாய். அதற்கு ஒரு கிரகம் வந்து அமையும்” என்றான்.

“நீயே முக்கால் சோதிடனாக இருக்கிறாயே” என்று சொல்லிச் சிரித்தேன்.

“என் தகப்பனார்க்கு நன்றாகத் தெரியும். அவர்க்குச் சில நாட்களில் சளி பிடிக்கும். உடனே கிரக பலன் பார்ப்பார். அவர் சொல்வது சரியாக இருக்கும். புதனுடைய பார்வை இருந்தாலோ என்னவோ சொல்வார். சூடான உணவுப் பொருள்களையே சாப்பிட்டாலும் உடம்பில் சீதளம் ஏற்படுமாம். சில கிரகத்துக்கு, எவ்வளவு சீதளமான பொருள் சாப்பிட்டாலும் உடம்பு சூடாகிவிடுமாம். அதில் கற்கவேண்டியது எவ்வளவோ இருக்கிறது.”

“எவ்வளவு இருந்தும் என்ன பயன்? இறக்கை நன்றாக வளர்வதற்கு முன்னமே குஞ்சு கூட்டைவிட்டு வெளியே வரப்போகிறதே.”

“அது நம் கையிலா இருக்கிறது? கிரக பலனை யார் என்ன செய்ய முடியும்,”

“இதே காரணத்தை சந்திரனுக்குச் சொல்ல வேண்டும் அல்லவா? அவன் கெட்டது கிரக பலனால் என்று சொல்லாமல், அவனையே பழிக்கிறாயே! உனக்கு ஒரு காரணம், அவனுக்கு ஒரு காரணமா?”

மாலன் சிறிது தடுமாறினான்.

“போகட்டும். எண்ணிப்பார். இன்னும் ஆறுமாதம் கடத்தினால் உனக்கும் நல்லது; குடும்பத்துக்கும் நல்லது. வீட்டுக்கு எழுது. உன் நிலையில் நான் இருந்தால், முடி வேண்டா என்று துணிந்த இளங்கோவடிகள் போல், எனக்கு இப்போது திருமணம் வேண்டா என்று பிடிவாதம் செய்வேன். சந்திரன் வழி தெரியாமல் இருளில் இடறி விழுகிறான்; நீயோ பட்டப்பகலில் நேர்வழி தெரிந்தும் ஆசை மிகுதியால் குறுக்கு வழியில் நடக்கிறாய்” என்றேன்.

அறைக்குள் நுழைந்தபோது அவன் முகத்தில் இருந்த மகிழ்ச்சி, போகும் போது இல்லை. அவன் வருந்தினாலும் உண்மையைச் சொன்னதே நல்லது என எண்ணினேன்.

(தொடரும்)

 முனைவர் மு.வரதராசனார்அகல்விளக்கு