அகல் விளக்கு – மு.வரதராசனார்: 73
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 72 தொடர்ச்சி)
அத்தியாயம் 27 தொடர்ச்சி
அந்த மோசக்காரி ஓ என்று கூச்சலிட்டாள். வந்தவர்கள் என் முதுகைப் பழுக்கப் பார்த்தார்கள். தாம்புக் கயிறு கொண்டு அடித்தார்கள். வீட்டுக்குத் திரும்பியபோது முதுகில் கறை இருந்ததை எப்படியோ மனைவி பார்த்து விட்டாள். என்னிடம் வாய் திறந்து கேட்கத் தைரியம் இல்லை. அழுதுகொண்டு போய் என் அத்தையிடம் சொல்லியிருக்கிறாள். அத்தை அப்போது இருந்தார். நான் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தபோது அத்தை என் முதுகுப்பக்கம் வந்து உட்கார்ந்து பார்த்து வருத்தப்பட்டிருக்கிறார். நான் விழித்தபோது வாசற்படிக்கு அப்பால் மனைவி கண்களைத் துடைத்தபடி நின்றிருந்தாள்.
அத்தையின் கை என் முதுகைத் தடவியது. நான் உடனே எழுந்து உட்கார்ந்து, “என்ன அத்தை! இரண்டு பேரும் சேர்ந்து நாடகம் நடத்த வந்து விட்டீர்களா? என்ன சொன்னாள் இந்த நாய்?” என்று கேட்டு எழுந்தேன். அத்தை பரிவுமிக்க குரலில், “ஒன்றும் இல்லையப்பா. ஏன்டா கண்ணு இப்படி, இராசா போல இருப்பதை விட்டுவிட்டு” என்றார். “போ அத்தை போ. போய் உன் வேலையைப் பார்” என்று அங்கிருந்து எழுந்து அவர்களின் கண்ணுக்குப் படாமல் சட்டையை மாற்றிக் கொண்டு வெளியே வந்தேன்.
இவ்வளவு தண்டனை பட்ட பிறகும் என்னுடைய ஆணவம் அடங்கியதா? அடங்கவில்லை. வேலு! சொன்னால் நம்புவாயா வேலு! நம்முடைய நண்பன் சந்திரனா இப்படிச் செய்தான் என்று நீ எண்ணுவாய். அவ்வளவு கொடுமை செய்தேன் வேலு! என்னை அடித்துத் துரத்திய அந்த குடிசைக்கு ஒரு நாள் தீ வைத்துவிட்டேன். சந்திரனா செய்தான் என்று எண்ணுகிறாயா நான் அல்ல வேலு. என்னுடைய ஆணவம், என்னுடைய ஆணவம்” என்று பலமுறை கதறினான். மறுபடியும் நேற்றுப் போல் உணர்ச்சி வேகம் அளவுகடந்து போய் உடம்பைக் கெடுக்கக்கூடாதே என்று பயந்து, சொல்லாமல் நகர்ந்து வந்து விட்டேன். சிறிது நேரம் கழித்து, அம்மா அப்பா என்று அவன் மூச்சுவிடும் குரல் கேட்டுச் சென்று, “என்ன, ஏதாவது வேண்டுமா?” என்றேன்.
“ஒன்றும் தேவை இல்லை. நேற்றுப் போல் காய்ச்சல் வந்துவிட்டது. தலை கனமாக இருக்கிறது” என்று தலையைப் பிடித்துக்கொண்டு வருந்தினான். தலைவலித் தைலம் கொண்டுபோய்க் கொடுத்தேன். பூசிக் கொண்டான். அதன் பிறகும் அப்பா அம்மா என்று துன்பக் குரல் தணியவில்லை. “குடிப்பதற்கு ஏதாவது சூடாகக் கொடு” என்றான். சூடாக ஆர்லிக்குசு போட்டுக் கொண்டுபோய்க் கொடுத்தேன். குடித்துவிட்டு, “காய்ச்சல் வரவர ஏறுகிறது. என்ன செய்வேன்? நீ போ. நான் படுத்துப் பார்க்கிறேன்” என்றான். “இன்றைக்காவது மருந்து வாங்கி வந்திருக்கலாமே” என்றேன். வேண்டா என்று தடுத்தான்.
அன்று இரவு இரண்டுமுறை எழுந்து போய்ப் பார்த்தேன். முதன் முதலில் வாய் பிதற்றிக் கொண்டிருந்ததைப் பார்த்து விட்டுத் திரும்பினேன். இரண்டாவது முறை சென்றபோது அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். மெல்லத் தொட்டுப் பார்த்தேன். காய்ச்சல் கன கன என்று மிகுதியாக இருந்தது. தொட்ட பிறகு ஏதோ மனக்குறை ஏற்பட்டது. உடனே சோப்பு இட்டுக் கையை நன்றாகக் கழுவி விட்டுப் போய்ப் படுத்தேன்.
மறுநாள் காலையில் முன்போலவே அருட்பா பாடிக்கொண்டிருந்தான். “காய்ச்சல் இருக்கிறதா, மருந்து வாங்கி வரட்டுமா?” என்று கேட்டேன். “எனக்கா? எதற்கு மருந்து? காய்ச்சல் இப்போது இல்லையே” என்றான். காப்பி குடித்த பிறகு இன்னும் தெளிவாகப் பேசினான். உடம்பின் காய்ச்சல் போலவே, உள்ளத்தின் உணர்ச்சி வேகமும் காலையில் அடங்கியிருந்தது. பகலெல்லாம் மெல்ல மெல்ல வளர்ந்து, மாலையில் மலர்ந்து விடுகிறதே என்று எண்ணினேன். அன்று காலையில் தான் அவன் என் குடும்ப வாழ்க்கையைப் பற்றி மிக்க அக்கறையோடு கேட்டான். அப்போது அவன் காட்டிய அன்பால் என் மனம் உருகியது.
“இல்வாழ்க்கை எப்படி நடக்கிறது? மனைவியும் நீயும் மனம் ஒத்துப் போகிறீர்களா? அன்பாக இருக்கிறீர்களா?” என்று கேட்டான்.
“ஒன்றும் குறைவு இல்லை. ஆனால் விட்டுக் கொடுத்துப் போகத் தெரியாதவள். உண்மையானவள்; அன்பானவள்” என்றேன்.
“உண்மையும் அன்பும் இருந்தால் போதுமே. நீதான் விட்டுக் கொடுத்துப்போ. அதனால் ஒரு கெடுதியும் இல்லை. என்னைப்போல் தலைக்கொழுப்போடு நடக்காதே.”
“நான் விட்டுக்கொடுத்துக் கொண்டுதான் போகிறேன். ஆனால்?”
“என்ன குறை? சொல் வேலு! இங்கு இல்லாதபோது பேசினால் என்ன?”
“ஒன்றும் இல்லை. கொஞ்சம் செருக்கு உண்டு.”
“என்ன செருக்கு? பணச் செருக்கா? படிப்புச் செருக்கா? அழகுச் செருக்கா?”
“அந்தச் செருக்கு ஒன்றும் இல்லை. அவற்றிற்கு இடமும் இல்லை.”
“வேறு என்ன? சிலருக்கு ஒழுக்கச் செருக்கு இருக்கலாம்.”
“ஆமாம் அதுதான். மிகப் படித்த பெண்களையும் மதிக்க மாட்டாள். அவர்கள் ஒழுங்கானவர்களா என்று கேட்பாள்.”
“அந்தச் செருக்கு இருந்து போகட்டுமே. அதனால் ஒரு கெடுதியும் இல்லை, நல்லதாச்சு. என் தங்கை கற்பகத்துக்கும் அப்படிப்பட்ட செருக்கு உண்டு. தான் ஒழுங்கானவள் என்றும், கெட்டிக்காரி என்றும் எண்ணிக் கொண்டு, தன் கணவனை ஏமாந்த பேர்வழி என்று சொல்கிறாள். அப்படிப்பட்ட செருக்கு இருந்தால் இருந்து போகட்டும். அந்தச் செருக்கு இல்லாத மனைவியாக வேண்டுமானால் முப்பது வயது உள்ள விதவையாகத் தேடிக் கல்யாணம் செய்து கொண்டிருக்க வேண்டும்.”
நான் சிரித்தேன்.
“நான் சொல்வது தப்பா? உள்ளதைத்தான் சொல்கிறேன். என்னிடத்தில் உண்மையாகப் பணிவோடு நடந்தவர்கள் இரண்டு பேர். ஒருத்தி நீலகிரித் தேயிலைத் தோட்டக்காரி. காரணம் அவளுடைய பழைய குறையான வாழ்க்கை. மற்றொருத்தி – இறந்துபோன மனைவி; காரணம் அவளுடைய பயம். பயந்த மனைவியைவிட, செருக்கு உள்ள மனைவியே மேல்” என்றான். திடீரென எதையோ நினைத்தவன் போல், “உன் மனைவியை நான் பார்க்கவே இல்லையே” என்றான்.
“பார்த்திருக்கிறாயே. வேலூரில் என் அத்தை மகள்.”
“ஓ! அந்தப் பெண்ணா? சின்ன வயதில் உன் தங்கையோடும் என் தங்கையோடும் சேர்ந்து விளையாடிக் கொண்டு…”
“ஆமாம் அவளே தான்.”
“நீ உன் அத்தை மகளை மணந்து கொள்ளமாட்டேன் என்று என்னிடம் சொல்லியிருக்கிறாயே, நினைவு இருக்கிறதா? அது சரி. இப்போது ஏன் அதைப் பற்றிப் பேசவேண்டும்? நான் ஒன்று சொல்கிறேன். உள்ளதைக் கொண்டு மகிழ வேண்டும். வியாபாரம், செல்வம் இவற்றில் மட்டும் அல்ல; மனைவியோடு வாழும் வாழ்க்கையிலும் இது வேண்டும்.
சில இளைஞர்கள் காலை மாலை இரண்டு வேளையும் பூசை, கோயில் வழிபாடு எல்லாம் ஓயாமல் செய்து, கடவுளிடம் நிறையப் பயன் எதிர்பார்த்து எதிர்பார்த்து, கடைசியில் பயன் கிடைக்காமல் ஏமாந்து திடீரென்று ஒருநாள் நாத்திகர் ஆகிவிடுகிறார்கள். தெரியுமா? அப்புறம் சாமியாவது பூதமாவது என்பார்கள். அதுபோல் மனைவியிடம் அளவுக்கு மேல் அன்பு பணிவு அடக்கம் ஒடுக்கம் அழகு ஆர்வம் எல்லாவற்றையும் எதிர்பார்த்தாலும் இப்படித்தான் கடைசியில் ஏமாந்து வருந்த வேண்டி ஏற்படும்.
குடும்ப வாழ்க்கைக்கு வேண்டிய ஊதியம் வந்தால் போதும் என்று வியாபாரம் செய்கிறவர்கள் அவ்வளவாகக் கெடுவதில்லை. அளவுக்கு மேல் ஒன்றுக்குப் பத்தாக எதிர்பார்த்து வியாபாரம் செய்கிறவர்கள் சிலர் கடைசியில் அடியோடு அழிந்து மண்ணோடு மண்ணாய் போகிறார்கள். சரி, சரி, பட்டுக் கெட்டு நான் கற்றுக் கொண்ட பாடங்களை உனக்கு ஏன் சொல்ல வேண்டும். நீதான் ஒழுங்காக வாழ்க்கை நடத்துகிறாயே. உன்னுடைய வாழ்க்கையைப் பார்த்து மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். நான் தான் கற்றுக் கொள்ளத் தவறிவிட்டேன்” என்றான்.
Leave a Reply