(அகல் விளக்கு – மு.வரதராசனார். 74. தொடர்ச்சி)

அகல் விளக்கு

அத்தியாயம் 27 தொடர்ச்சி

இரவு மூன்று மணிக்கு விழித்தபோது புயல் அடங்கி இருந்தது. மின்னலும் இடியும் களத்தைவிட்டு அகன்று ஓய்ந்திருக்கச் சென்றிருந்தன. காற்றுத் தோல்வியுற்று அடங்கி எங்கே ஒளிந்திருந்தது. மழையும் களைத்துச் சோர்ந்து விட்டாற்போல் சிறு சிறு தூறலாய் பெய்து கொண்டிருந்தது. எழுந்து போய்ச் சந்திரனைப் பார்த்தேன். பிதற்றாமல் புரளாமல் ஆடாமல் அசையாமல் இருந்தான். நல்ல அமைதியோடு உறங்குகிறான் என்று திரும்பி விட்டேன். மன அமைதி உள்ளபோது உடம்பும் நல்ல அமைதி பெறுவது இயற்கை என்று எண்ணியபடியே மறுபடியும் படுத்து உறங்கிவிட்டேன்.

காலையில் விழித்தபோது, வழக்கம்போல் சந்திரன் அருட்பா பாடுவது கேட்கும் என்று செவிகள் உற்று கேட்டன. ஒருகால் பாடி முடிந்திருக்கும் என்று எண்ணினேன். சிறிது நேரம் கண் மூடியவாறே படுத்திருந்து எழுந்தேன். சந்திரனிடம் சென்றேன். அவன் வழக்கத்திற்கு மாறாக, கதிரவன் வந்த பிறகும் படுத்திருந்ததைக் கண்டேன். சரி, உறங்கட்டும் என்று திரும்பிவிட்டேன்.

பல்துலக்கிக் குளித்தபிறகு சென்று கண்டேன். அப்போதும் அதே நிலையில் படுத்திருக்கக் கண்டதும், என் மனம் திக்கென்றது. நான்கு முறை பெயரிட்டு அழைத்தேன். ஒரு குரலும் இல்லை. அப்போதுதான் அவனுடைய உடம்பில் மூச்சின் அசைவும் இல்லாததை உணர்ந்து திடுக்கிட்டேன்! கைவிரலை மூக்கின் அருகே கொண்டு சென்றேன். காற்று இல்லாததை உணர்ந்ததும், என்னை மீறிச் “சந்திரா, சந்திரா!” என்று கூக்குரல் இட்டேன். என் உடம்பில் ஒருவகை அச்சம் ஊடுருவியது. கண்ணின் இமைகளை என் விரலால் நீக்கித் திறந்தேன். ஒளியற்றுப் பஞ்சடைந்திருந்தது. தலைமேல் கை வைத்துக் கொண்டு, “அப்பா சந்திரா இதற்காகவா என் வீட்டை தேடி வந்தாய்? சாவதற்காகக் கடைசியில் என்னைத் தேடி வந்தாயா?” என்று அழுதேன்.

கதவு தட்டும் ஒலி கேட்டு எழுந்து சென்று, “யார் அது? என்றேன். “பச்சைமலை” என்ற குரல் கேட்டுத் திறந்தேன், பச்சைமலையும் பக்கத்தில் வேலையாளும் நின்றிருந்தனர். என் கண்களில் கலக்கத்தையும் முகத்தின் வாட்டத்தையும் கண்ட பச்சைமலை, “என்ன அய்யா! ஏன் அழுகிறீர்கள்? என்ன காரணம்?” என்றார். நடந்ததைச் சொன்னேன். “நேற்று முந்தாநேற்று ஆபீசில் பேசிக் கொண்டிருந்தபோது ஒன்றுமே சொல்லவில்லையே” என்றார்.

“என்னுடைய வாழ்க்கையிலேயே பெறுவதற்கு அரிய நண்பர், இளமை நண்பர்” என்றேன்.

“முன்னே என் மனைவியும் அவளுடைய அக்காவும் சொன்னார்களே, அந்த நண்பரா?” என்றார்.

“ஆமாம்” என்று சொல்லி உடல் இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றேன். பச்சை மலை சந்திரனுடைய உடம்பைக் கண்டதும், சிறிது தொலைவிலேயே நின்று திகைப்போடு என்னைப் பார்த்து, “தொழு நோயாளிபோல் தெரிகிறதே” என்றார்.

“ஆமாம்” என்றேன். “இவருடைய வாழ்க்கை குடும்பத்துக்கும் ஊருக்கும் ஒரு பொல்லாத கறைபோல் இருந்தது. ஆனாலும், நெருங்கிப் பழகிய என்னுடைய வாழ்க்கைக்கு இவர்தான் ஒரு நல்ல கரைபோல் இருந்தார். இவர் இல்லையானால் நான் படித்து முன்னேறியிருக்க மாட்டேன். இவர் பட்ட துன்பங்களிலிருந்து எனக்கு அறிவு வரவில்லையானால், நான் இப்படிச் சீராக வாழ்ந்திருக்கமாட்டேன். அப்படிப்பட்ட நல்ல நண்பர் கடைசியில் என்னைத் தேடி வந்து என் வீட்டில் இறந்துவிட்டார்” என்றேன்.

“மனைவி திருமகள் சொல்லியிருக்கிறாள். சந்திர அண்ணா கூர்மையான அறிவுடையவர் சிறந்த குணங்கள் உடையவர் என்று அவள் சொல்லியிருக்கிறாள்” என்றார்.

“அறிவு மட்டுமா? குணம் மட்டுமா? இளமையில் இவரைப் போல் சுறுசுறுப்பும் அழகும் உடையவர்கள் நான் கண்டதில்லை” என்றேன்.

“அய்யோ! அவ்வளவு அழகான உடம்பு இப்படிநோயால் கெட்டு மாறிவிட்டிருக்கிறதே” என்று அவர் பின் வாங்கினார். பிறகு என்னைப் பார்த்து, “சரி, இனிமேல் ஊருக்குத் தந்தி கொடுக்கவேண்டும். முகவரி கொடுங்கள். நான் எழுதிக்கொடுப்பேன். வேலையாளை அனுப்பலாம். ஊரிலிருந்து வீட்டார் வந்த பிறகுதான் மற்ற வேலைகள்” என்றார்.

என் உள்ளத்தே துயரம் மேலெழுந்தது. அழுதேன். அழுதுகொண்டே, “நண்பருடைய வேண்டுகோளின்படி வீட்டார் யாருக்கும் தெரிவிக்கக்கூடாது” என்றேன்.

“நோயாளிகள் அப்படிச் சொல்வார்கள். ஆனால் நாம் அப்படிச் செய்யலாமா? அவர்கள் கேள்விப்பட்டால் உங்கள் மேல் வருத்தப்படுவார்கள்” என்றார்.

“அதையும் சந்திரனே சொன்னார். என்ன வருத்தப்பட்டாலும் வேண்டா வேண்டா என்றார். தம்முடைய கடைசி வேண்டுகோள் என்றும் தவறாமல் நிறைவேற்ற வேண்டும் என்று தெளிவாகச் சொல்லிக் கேட்டு கொண்டார்” என்றேன்.

“அப்படியானால் சரி” என்று சொல்லிவிட்டு, நண்பர் வேலையாளிடம் அடக்கத்திற்கு உரிய ஏற்பாடுகள் செய்யுமாறு ஏவினார். என்னிடம் நெருங்கிவந்து, அப்படியானால் வழக்கமான ஊர்வலத்துக்கு இடம் இல்லை. அக்கம் பக்கத்தில் யாருக்கும் தெரியாமல் ஒரு வண்டி வைத்து இடுகாட்டுக்கு கொண்டுபோய் விடுவோம்” என்றார். அதற்கு இசைந்தேன். ஆனால், வண்டியில் உடம்பை ஏற்றியபோது எதிர் வீட்டாரும் பக்கத்து வீட்டாரும் அணுகி வந்து பார்த்தார்கள். யார் என்ன என்று என்னைக் கேட்டார்கள். சொன்னேன்.

இடுகாட்டில் வேலையாளும் பச்சைமலையும் வண்டிக்காரனும் தவிர வேறு யாரும் இல்லை. தன் கிராமத்தில் பெரிய வீட்டில் செல்வ மகனாக வளர்ந்த ஒருவனுடைய வாழ்வு இப்படித் திக்கற்ற முடிவு அடைந்து விட்டதே என வருந்தினேன். சந்திரனுடைய முகத்தைப் பார்த்து நெஞ்சு உடைந்து கலங்கினேன். உடம்பைக் குழியில் இறக்குவதற்காக நாங்கள் நான்கு பேரும் பிடிக்கத் தொடங்கியபோது, “இருங்கள் இருங்கள்” என்று ஒலி கேட்டது. “அண்ணா!” என்று கதறிய பெண்ணின் குரல் கேட்டது வண்டி ஒன்று நிற்க, அதிலிருந்து மாலனும் கற்பகமும் இரண்டு குழந்தைகளும் இறங்குவதைக் கண்டேன். அழுதுகொண்டே எதிரில் சென்றேன்.

“அண்ணா போய்விட்டாயா? அண்ணாவா?” என்று கதறிக்கொண்டே வந்தாள் கற்பகம்.

“ஆமாம் அம்மா” என்று விம்மினேன்.

உடனே அவள் ஓடிச்சென்று தன் அண்ணனுடைய உடலின் அருகே உட்கார்ந்து அவனுடைய முகத்தைத் தொட்டு அழுதாள். “எங்களை எல்லாம் வெறுத்து வந்து விட்டாயா, அண்ணா! அப்பாவுக்கு என்ன சொல்லுவேன் அண்ணா” என்று கதறினாள்.

“உங்களுக்குத் தெரிவிக்கக் கூடாது என்று வற்புறுத்திச் சொல்லி விட்டுச் செத்தார். அதனால்தான் தெரிவிக்கவில்லை” என்று மாலனுக்குச் சொன்னேன். அவன் கண்களைத் துடைத்துக்கொண்டே, “பழைய கசப்பு எல்லாம் தீர்ந்து புது வாழ்க்கை தொடங்கும் போது முதன் முதலில் உன் வீட்டுக்கு வர வேண்டும் என்று நாங்கள் புறப்பட்டு வந்தோம். வீடு பூட்டியிருந்தது. பக்கத்து வீட்டுக்காரர் வந்து இப்படி ஒரு தொழுநோயாளி செத்து விட்டார் என்ற செய்தியும், நீங்கள் இடுகாட்டுக்குப் போயிருப்பதும் சொன்னார். உடனே தன் அண்ணன்தான் என்று கற்பகம் உணர்ந்துகொண்டு இடுகாட்டுக்குப் போகவேண்டும் என்று வற்புறுத்தினாள். அந்த வண்டியிலேயே நேரே இங்கே வந்தோம்” என்றான்.

கற்பகத்தின் கதறல் எளிதில் ஓயவில்லை. நாங்கள் எல்லோரும் சொல்லி ஓயப்படுத்தினோம். அவள் மகன் திருவாய் மொழியைப் பார்த்து, “மாமா’டா, தெரியுதா’டா” என்றாள். மகள் திருப்பாவையைப் பார்த்து, அழுது கொண்டே “மாமா’டி கும்பிடு” என்றாள். அந்தச் சிறுமியோ, எதையோ கண்டு அஞ்சியவள் போல் தன் தாயைப் பார்த்தபடியே இரு சிறு கைகளையும் எடுத்துக் கூப்பினாள்.

இடுக்காட்டிலிருந்து திரும்பியபோதும் கற்பகத்தின் அழுகை ஓயவில்லை. வழியில் மிதிவண்டியில் சென்ற இருவரில் ஒருவன், “டே! எப்போதும் இதில் வேகம் வேண்டாம்டா. வேகம் உன்னையும் கெடுக்கும். உன்னைச் சார்ந்தவர்களையும் கெடுக்கும்” என்றான். வலப்பக்கத்தே விளையாட்டு வெளியில் ஒரு பந்தாட்டம் நடந்து கொண்டிருந்தது. ஆரவாரத்திற்கு இடையே, “விளையாட்டாக இருந்தாலும் விதிகளுக்குக் கட்டுப்படவேண்டும் தெரியுமா? நீயே அரசன் என்று எண்ணிக் கொண்டு, உன் விருப்பம்போல் ஆட முடியாது. தெரிந்துகொள்” என்ற குரல் கேட்டது. சிறிது தொலைவு வந்துவிட்ட பிறகும் பந்தாட்டகாரரின் ஆரவாரம் கேட்டுக்கொண்டிருந்தது.


அகல் விளக்கு’ முற்றிற்று