அழகு மங்கை
– அன்பு
இன்று மாலை தெரிந்து விடும், யாருக்கு விருது என்று? தனக்குத்தான் கிடைக்கும் எனச் சிலரும், தனக்குக் கிடைக்குமா எனச் சிலரும், அவளுக்குக் கிடைக்கும், இவளுக்குக் கிடைக்கும் என்பதுபோல் சிலரும், இன்னாருக்குக் கிடைக்கக்கூடாது எனச் சிலருமாக எண்ணிக் கொண்டும் பேசிக் கொண்டும் இருந்தனர். என்ன விருது என்று எண்ணுகிறீர்களா? ‘அழகு மங்கை’ விருது. உலக அழகி, நகர அழகி என்றெல்லாம் வழங்குவதுபோல், மங்கையர்க்கரசி பள்ளியில் அழகியைத் தேர்ந்தெடுத்து, அழகி விருது வழங்குகிறார்கள். முதலில் ‘செல்வி மங்கை’ எனப் பட்டம் வழங்குவதாகத்தான் முடிவெடுத்தார்கள். ஆனால், பட்டம் அளிக்க வரும் சிறப்பு அழைப்பாளர் கல்வியாளர் திருவேலன், அப்படிக் குறிப்பிட்டால் ஏதோ பெயர் போல் இருக்கும் எனக் கூறி அதனை மறுத்துவிட்டார். அவரே மங்கையர்க்கரசி பள்ளியின் அழகிக்கு அழகு மங்கை என விருது வழங்கலாம் என்றார். அத்துடன் விருது பெறுபவர் அவர் விரும்பும் கல்லூரிப் படிப்பை முடிக்கும் வரை ஆகும் செலவை அவரே ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்து விட்டார். எனவேதான் பரபரப்பு. மாணாக்கியர்களிடம் இருந்த பரபரப்பு, ஆசிரியர்கள், பெற்றோர்களையும் தொற்றிக் கொண்டது.
மூன்று திங்களுக்கு முன்புதான் அழகிப் போட்டியை அறிவித்திருந்தார்கள். அப்பொழுதே, “அழகு என்றால் உடல் அழகு என்று எண்ணக்கூடாது. தூய்மை,படிப்பு, பிறருக்கு உதவும் செயல் முதலான நற்பண்புகள் என மன அழகைப் பார்த்தே விருது வழங்கப் பெறும்” எனச் சொல்லியிருந்தார்கள். என்றாலும் சிலர், முக அழகிற்கு முதன்மை கொடுத்து வந்தார்கள். இந்த மூன்று திங்களாக, வகுப்பறைகளைத் தூய்மை செய்தல், தோட்ட வேலை செய்தல், நாட்டுநலப்பணித்திட்டத்தில் சிறப்பாகச் செயல்படுதல், பிறருக்குப் பாடம் சொல்லித்தருதல் எனப் பலவகையிலும் மாணாக்கியர் சுறுசுறுப்பாகவே இயங்கினர். தலைமைஆசிரியரும் ஆசிரியர்களும் விருதுக்கு யாரைப் பரிந்துரைப்பது எனத் தெரியாமல் திணறினார்களாம். எனவே, ஒரு பெரிய பெயர்ப்பட்டியலையே குறிப்புகளுடன் சிறப்பு அழைப்பாளரிடம் அளித்துவிட்டனராம். விருது தரப்போகும் அவர் எப்படி முடிவெடுப்பார், யாரைத்தேர்ந்தெடுப்பார் எனப் புரியவில்லை. மாலையும் வந்தது. விழாவும் வந்தது. வழக்கமான கலைநிகழ்ச்சிகள்,வரவேற்புரை, தலைமையுரை முதலானவற்றிற்குப்பின் சிறப்பு அழைப்பாளர் கல்வியாளர் திருவேலன் பேச எழுந்தார். அவர் எழுந்ததுமே விண் அதிரக் கையொலி எழுப்பினர் மாணாக்கியர். அவர் பொதுவான செய்திகள், அறிவுரைகளுக்குப் பின்னர் விருது பற்றிப் பேசத் தொ டங்கினார்; மாணாக்கியர் அமைதியாகவும் விழிப்பாகவும் அவரது உரையைக் கேட்டனர்.
“நிறம் என்பது அழகல்ல. எனவே, நிறம் அடிப்படையில் யாரையும் தேர்ந்தெடுக்கமாட்டோம் என்பது உங்களுக்குத் தெரியும். நிறம்போல் உருவ அமைப்பும் பிறவியில் அமைவது. எனவே, இதன் அடிப்படையில் விருது அளிப்பது பொருந்தாது என்பதும் உங்களுக்கே தெரியும். நல்ல உணவு கிடைப்பின் முகப் பொலிவு கிடைக்கும். அவ்வாறு நல்லுணவு சாப்பிடும் வசதி இல்லாதவர்களை நாம் புறக்கணிக்க இயலாது.
சிலர் மருத்துவம் போன்றவற்றிற்காகப் பிறருக்குப் பணஉதவி செய்துவந்துள்ளதை அறிந்தேன். படிக்கும்பொழுதே பிறருக்கு உதவும் எண்ணம் பிறந்துள்ளது உண்மையிலேயே மகிழ்ச்சியாக உள்ளது. பணவசதி உள்ளவர்களின் செயலை அத்தகைய பணவசதி பெறாதவர்களுடன் ஒப்பிட்டு மதிப்பிட முடியாது. எனவே, அந்த அடிப்படையில் விருதாளர் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
சிலர் அயராது உழைத்து வகுப்பில் தொடர்ந்து முதலிடம் பெற்று வந்திருக்கிறார்கள். இத்தகைய நூறு மாணாக்கியரை நான் தேர்ந்தெடுத்துள்ளேன். இவர்கள் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழும் ஆயிரம் உரூபாய்ப பணமும் அளிக்கப் போகின்றேன்.
உங்கள் தலைமைத் தமிழாசிரியர் அவர்கள் பெயர்களை வாசிக்க வாசிக்க நான் தலைமைஆசிரியருடன் இணைந்து பாராட்டிதழ்களையும் பணப்பரிசையும்அளிக்கப் போகின்றேன். அமைதியாக வந்து வாங்கிச் செல்லுங்கள்” என்று பேசினார்.
அழகி விருது கிடைக்கவில்லை என்ற வருத்தம் வந்தாலும் நன்மணி என்ற பட்டமும் ஆயிரம் உரூபாய் பணப்பரிசும் கிடைத்த மகிழ்ச்சியில் இருந்தனர். என்றாலும் விருது தருவதாகக் கூறி ஏமாற்றி விட்டாரோ என்றும் எண்ணினர்.
100 பேருக்குப் பாராட்டிதழும் பரிசுப்பணமும் தந்த பின் மீண்டும் பேசினார். “அழகு மங்கை விருது தரவில்லையா என எண்ண வேண்டா. இப்பொழுது யாருக்கு அந்த விருது தரப்போகின்றேன் என அறிவிக்கப் போகின்றேன். அதற்கு முன்னதாக எந்த அடிப்படையில் நான் தேர்ந்தெடுத்தேன் என்பதைக் கூறப் போகின்றேன். அப்பொழுதுதான் நீங்கள் மகிழ்ச்சியாகப் பாராட்டுவீரகள்” என்றார்.
துப்பறியும் கதையில்கூட முடிவை ஊகிக்க முடியும்.ஆனால், இவரது பேச்சு மருமமாக உள்ளதே என மாணாக்கியரும் கூட்டத்தினரும் எண்ணிக்கொண்டனர்.
“யாருக்கு விருது அளிப்பது என முடிவெடுக்கமுடியாமல் போகும்போல் உள்ளது. பலரும் தகுதி உள்ளவர்களாக உள்ளனர்” எனப் போன மாதமே உங்கள் தலைமை ஆசிரியர் என்னிடம் தெரிவித்தார்.
“எனவே, நான் ஒரு முடிவிற்கு வந்தேன். விருது வாங்க வேண்டும் என்பதற்காகத்தான் நற்செயல்களா? உண்மையிலேயே நீங்கள் நல்ல பண்பாளர்களாகத் திகழ்கிறீர்களா? எனப் பார்க்க முடிவெடுத்தேன். எனவே, நண்பர்களைக் கொண்டு நீங்கள் வீட்டில் எவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் எனப் பார்த்தேன்.”
“இங்கே தோழிகளுக்கு உதவும் சிலர், வீட்டில் தம்பி தங்கையருக்கு உதவ மறுப்பதை அறிந்தேன். பள்ளித் தோட்டத்திற்குத தண்ணீர் ஊற்றும் சிலர் விட்டுச் செடிகளைக் காயவிடுவதை அறிநதேன்.’’
“அதே நேரம் உங்கள் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருத்தி, பள்ளி தொடங்கும் பொழுது வருவதும் பள்ளி முடடிந்ததும் வீட்டிற்குத் திரும்புவதுமாக உள்ளாள். இடைவேளை நேரங்களில் உடன் படிப்பவர்களுக்கு ஆங்கிலம், கணக்கு முதலான பாடங்களில் ஐயம் தெளிவுபடுத்தினாலும், தோட்ட வேலை முதலான பொது வேலைகளில் ஆர்வம் காட்டுவதில்லை. இப்படிப்பட்டவர்களை நாம் பரிசு கொடுத்து பாராட்டலாமா? என்றார். பள்ளிமாணாக்கர்கள் கூடாது, கூடாது என உரத்துக் கூறினர். எனக்கும் அந்த எண்ணம்தான் இருந்தது. இருப்பினும் அவள் வீட்டிற்கும் ஆளனுப்பி விவரங்களை அறியலானேன். அவள் தந்தை கடந்த 6 மாதங்கள் முன்பு பேருந்து மோதி கால் முறிந்து முழு நலன் அடையாமல் உள்ளார், அம்மா வீட்டு வேலை பார்ப்பவர். எனவே, இச்சிறுமி காலையில் அப்பாவைப் பார்த்துக் கொண்டும் மாலை வீடு திரும்பியதும் அம்மாவுடன் அவர் செல்லும் வீடுகளுக்குச் சென்று வீட்டு வேலை பார்த்து உதவியும் வருகிறாள். படிப்பில் 6 அல்லது 7 ஆம் நிலைதான் பெறுகிறாள். என்றாலும், எல்லா வசதியும் பெற்று முதல்நிலை பெறுபவர்களையும், அனைத்து வசதிகள் இருந்தும் தோல்வியுறுபவர்களையும் விட இந்தச் சிறுமியே சிறந்தவள் எனப்படுகிறது. அம்மாவின் வேலைச்சுமையைக் குறைப்பதும் அப்பாவிற்கு உதவுவதும் உண்மையிலேயே அறப்பணிதானே! இச்சிறுமிக்குப் படிப்பதற்கு நேரம் கிடைத்தால் மேலும் சிறப்பாகப் படித்து வருங்காலத்தில் சிறந்த அறிஞராக வருவாள் அல்லவா என நினைத்தேன். இப்பொழுது நீங்களே சொல்லுங்கள். இந்தச் சிறுமிக்குப் பரிசு தரலாமா?” என்றார். அனைவரும் “பரிசு தரவேண்டும்! பரிசு தரவேண்டும்!” என ஆர்ப்பரித்தனர். ஆம்! “நானும் அந்த முடிவிற்குத்தான் வந்து உள்ளேன். யார் அவள் என்று சிலர் ஊகித்திருக்கலாம். அவள்தான் ஈழச்செல்வி. தான் நலிந்த நிலையில் இருந்தாலும் முடிந்த அளவு திறமையை வெளிப்படுத்துகிறாள். மனித நேயத்துடன் நடந்து கொள்கிறாள். பிறரிடம் சண்டையிட்டுப் பேசுவதில்லை. எனவே, ஈழச்செல்வியே உங்கள் பள்ளியின் அழகு மங்கை! எனவே, அவளின் தந்தையின் முழு மருத்துவச் செலவையும் நானே ஏற்றுக் கொள்கின்றேன்! முழு நலமடைந்ததும் நல்ல சம்பளத்தில் வேலைக்கு அமர்த்துகிறேன். ஈழச்செல்வியின் அம்மாவிற்கு ஒரு வேலை வாங்கித் தருகிறோம்! இன்று முதல், ஈழச்செல்வி விரும்பும் படிப்பினை முடிக்கும் வரை முழுச் செலவையும் ஏற்றுக் கொள்கின்றேன். அவள்விரும்பினால் மருத்துவராகலாம். அல்லது வேறு துறையிலும் படிக்கலாம். எப்படிப்பாக இருந்தாலும் கல்விச்செலவு குறித்துக் கவலைப்பட வேண்டா!” என்றார். உடன் பள்ளித் தலைமையாசிரியர் எழுந்து பள்ளி சார்பிலும் பெற்றோர் – ஆசிரியர் சங்கம் சார்பிலும் கல்வியாளர் திருவேலன் அவர்களுக்கு நன்றி தெரிவித்து “இவர்போல் ஒவ்வொருவர் ஒவ்வொரு சிறுமியின் குடும்பத்தைத் தத்து எடுத்துக் கொண்டால், வளமான தமிழகத்தை உருவாக்கலாமே” என்றார்.
ஈழச்செல்வியையும் சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டிருந்த அவள் தந்தையையும், தாயையும் மேடைக்கு அழைத்தனர். சிறப்பு அழைப்பாளரான கொடைவள்ளல் திருவேலன் ‘அழகுமங்கை’ என்னும் பட்டத்தை ஈழச்செல்விக்கு அணிவித்தார். மருத்துவச்செலவிற்காகவும் பிற அடிப்படைச் செலவிற்காகவும் நூறாயிரம் உரூபாயை அவளின் பெற்றோரிடம் அளித்தார். ஈழச்செல்வியின் கல்விச் செலவு முழுவதையும் தான் ஏற்றுக் கொள்வதாகப் பள்ளித் தலைமையாசிரியரிடம் மடலளித்தார். ஈழச்செல்வியின் பெற்றோர் கண்களில் நீர்மல்க,
ஈன்றபொழுதின்பெரிதுவக்கும்தன்மகனைச்
சான்றோன்எனக்கேட்டதாய்.
எனத் திருக்குறள் தெரிவிக்கும் மகிழ்ச்சியுடனும் நெகிழ்ச்சியுடனும் நன்றி தெரிவித்தனர். கூட்டம் முடிந்ததும் வந்திருந்தவர்கள் ஈழச்செல்வியையும் விருது என்று சொல்லி கல்விச் செலவை ஏற்றுக்கொண்ட வள்ளலையும் பாராட்டத் தவறவில்லை.
மாணாக்கியர்களும் உண்மை அழகைப் புரிந்து கொண்டவர்களாகக் கலைந்து சென்றனர். மங்கையர்க்கரசி பள்ளி புரட்சிப் பாதையில் இப்பொழுது காலடி எடுத்து வைத்துள்ளது. நம் பள்ளி எப்பொழுது? எனப் பிற பள்ளியினர் எண்ணியவாறு சென்றனர்.
சிறுகதை சிறுவர்சிறுமிகளுக்குத் தேவையான அறிவுரை கூறுவதாக உள்ளது. இதுபோன்ற கதைகள் பாடத்திட்டத்தில் சேர்த்தால் மாணவர்களுக்குப் பேருதவியாக இருக்கும். நல்ல தமிழில் கதை எழுதியுள்ள திருமிகு அன்பிற்கும் அகரமுதல இணைய இதழுக்கும் பாராட்டுகள்.