gold_bars_suitcase-01

(என் பணிவாழ்க்கையில் எண்ணற்ற மறுவாழ்வுப்பணிகளையும் முன்னோடிப் பணிகளையும் ஆற்றியுள்ளேன். காலமுறையில் இல்லாமல் அவ்வப்போது பூக்கும் நினைவின் மணத்தைப் பரப்ப விழைகிறேன்.)

தமிழ்நாடு சிறைத்துறையில் நன்னடத்தை அலுவராகப் பணியாற்றிய பொழுது ஒரு நாள் நண்பர் ‘சௌ.’ என் பக்கத்தில் வந்தமர்ந்தார். “நேர்மையான அதிகாரி ஒருவர் பெயரைக் கூறுங்கள்” என்றார்.

நான்,“திருவள்ளுவன்” என்றேன்.

உடனே அவர், “நீங்கள் நேர்மையானவர் என்பது அனைவருக்கும் தெரியும். அதற்காக உங்கள் பெயரையே கூறுவதா?” என்றார்.

நீங்கள் பன்மையில் கேட்டிருந்தால் செளந்தரபாண்டியன், மீசை(பெரியசாமி) எனச் சிலரையும் சேர்த்துச் சொல்லியிருப்பேன். ஒருமையில் கேட்டதால் என் பெயரைக் கூறினேன் என்றேன்.

ஒரு முன் நிகழ்வையும் கூறினேன். ஒரு முறை இறைப்பொழிவாளர் (ஆன்மிகச் சொற்பொழிவாளர்) ஒருவர் பத்தினிகள் பெயரைக் கூறுங்கள் என்றாராம். அனைவரும் கண்ணகி, சீதை எனத் தொன்மங்கள் அல்லது வரலாற்றில் இடம் பெற்ற பெயர்களைத்தான் கூறினராம். உடன் அவர், “ஒருவரும் தன் தாயின் பெயரையோ, மனைவி அல்லது மகள், மருமகள் பெயரையோ கூறாதது ஏன்? உங்களுக்கே நம்பிக்கையில்லையா?” எனக் கேட்டாராம். எனவே, என்னைப் பற்றிய உண்மையைச் சொல்வதில் தவறில்லையே என்றேன்.

 “நீங்கள் தேநீர்கூட வாங்கிக் குடிக்க மாட்டீர்கள் என்று எல்லார்க்கும் தெரியும். விலையுயர்ந்த நாட்குறிப்பேட்டை ஒருவர் தந்ததாகவும் நிறுவன நாட்குறிப்பேடுதான் பணம் கொடுத்து வாங்கவில்லை எனக் கூறியும் நீங்கள் வாங்க மறுத்ததாகவும் நண்பர் ‘வ’ சொன்னார். ‘அவருக்கு வேண்டாமென்றால் வாங்கி எனக்குத் தாருங்கள் எனக் கேட்க எண்ணினேன். பயந்து கொண்டு கேட்கவில்லை’ என்றார்.

 “ஆமாம், இவரால் முடிகிறது. முடியாத ஒருவர் பணம் கொடுத்து வாங்க முயலலாம். அல்லது அதுகூட முடியாதவர் அவருக்கு எதிராகத் தீர்ப்பு வந்ததென்றால் தான் அவ்வாறு எதுவும் கொடுக்காததால்தான் தண்டனை பெறுவதாக எண்ணலாம். எனவேதான் மறுத்தேன். சரி. இந்தக் கதையெல்லாம் இப்பொழுது எதற்கு?” நேரடியாகச் செய்திக்கு வாருங்கள்.

 “வரவேற்பில்லம் (இப்பொழுது அதன் பெயர் கூர்நோக்கு இல்லம்) சென்றிருந்தேன். நீங்கள் தானாக வந்த தங்கப் பெட்டியையே மறுத்துவிட்டது குறித்து எல்லாரும் சொன்னார்கள்.’

 “தங்கத்தாலான பெட்டி அல்ல. தங்கக்கட்டிகள் உள்ள பெட்டி.”

 “ஆம். அதைப்பற்றித்தான் கேட்க வந்தேன்.”

 “சொல்கிறேன். கேளுங்கள்.

boys-withgoldindhoes

அம்பத்தூர் பேருந்து நிறுத்தத்தில் இரு சிறுவர்கள் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தனர். இது காவல் துறையின் கவனத்திற்கு வந்ததும் உசாவியுள்ளனர். அவர்களின் அடியுயர்ந்த காலணியைப் பார்த்து ஐயம் ஏற்பட்டது. பிரித்துப் பார்த்தால் உள்ளே தங்கக் கட்டிகள். இருவரும் ஊமை எனவும், அண்ணன் தம்பியர் எனவும் செய்கையில் தெரிவித்தனர். எனினும், தங்கக்கட்டிகளைக் கடத்தியதாக வழக்கு பதிந்தனர். இவ்வழக்கில் சுங்கத்துறையும் தன்னை இணைத்துக் கொண்டது.

goldbiscuitsindhoes

  இருவரும் சிறுவர்கள் என்பதால் சிறுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது. இருவரி்ன் தந்தை என ஒருவர் பிணையில் தன் பொறுப்பில் விடுவிக்கக் கேட்டுள்ளார். காவல்துறை சார்பில் அரசு வழக்குரைஞரும் சுங்கத்துறை வழக்குரைஞரும் பிணையில் விடுவதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. இளஞ்சிறார் நடுவர் மன்ற நீதிபதி என்னிடம் அறிக்கை கேட்டிருந்தார். சிறுவன் சார்பாக வாதிடும் வழக்குரைஞர் அவரைப் பிணையில் விடுவிக்கப் பரிந்துரைக்குமாறு த.ந.க.விடம் வேண்டினார். (தலைமை நன்னத்தைக் கண்காணிப்பாளர் என்னும் பதவிப்பெயரை நாங்கள் தமிழில் சுருக்கமாக இவ்வாறுதான் கூறுவோம்.)

   இந்த வழக்குரைஞர் ஊழலின் காரணமாகச் சுங்கத்துறையில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டவர் எனவும் சிறார் இருவரும் ஊமையர் அல்லர்; அண்ணன் தம்பியருமல்லர்; வெவ்வேறு வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்; எனவே, பிணையில் விடுவிக்கப் பரிந்துரைக்க இயலவில்லை எனவும் கூறினேன். உடன் அவரும் நான் எதுவும் தலையிடவில்லை. மத்திய அரசின் வழக்குரைஞராக இருந்தவர் எனக் கூறியதாலும் பிணைதானே என எண்ணியதாலும் தெரிவித்தாகவும் தான் குறுக்கிடவில்லை எனவும் கூறினார். ‘’சிறுவர்களைப் பிணையில் விடுவதற்குப் பரிந்துரைக்கு வருகிறார் என்றால் வேறு ஏதோ இருக்கிறது’’ என நான் தெரிவித்தேன்.

  வட மாநிலங்களில், இருவரையும் பயன்படுத்தி பெரிய அளவில் தங்கக்கடத்தலில் ஈடுபடுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். தமிழ்நாட்டில் இதற்கானமுன்னோடி முயற்சியாகத்தான் காலணிமூலம் தங்கக் கடத்தலில் ஈடுபட்டுள்ளார்கள் எனவும் அறிய வந்தேன். ஊமையர், உடன்பிறப்பினர் என்ற தவறான விவரங்களை அளித்துள்ளதால் பிணை விண்ணப்பத்தை மறுக்குமாறும் இருவரின் குடும்ப விவரம் அறிய அந்தந்த மாநில நன்னடத்தை அலுவலர்களிடம் அறிக்கை கேட்டுள்ளதால் வழக்கை ஒத்தி வைக்குமாறும் அறிக்கை அளித்தேன். இளஞ்சிறார் நடுவர் மன்ற நீதிபதியும் பிணையை மறுத்துவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார். நான் வரவேற்பில்லத்தில் உள்ளவர்களிடம் இவர்களை யார் சந்திக்க வந்தாலும் இசைவளிக்க வேண்டா என்றும் அவர்கள் விவரங்களை அறிந்து என்னிடம் தெரிவிக்குமாறும் கூறினேன்.

   மறுநாள் மேற்கொண்டு விவரம் அறியச் சென்றேன். அப்பொழுது அங்கு வந்த ‘வே’, “இந்தப்பக்கமே தலைகாட்டாதீர்கள் என நான் கடுமையாகச் சொல்லிவிட்டேன்” என்றார். நான் ஒன்றும் சொல்லாமல் புன்னகை பூத்தேன். “ஐயாவை என்ன நினைத்துக் கொண்டீர்கள்? ஐயா சொல்வதைத்தான் நீதிபதி ஐயா கேட்பார். குறுக்கு வழியெல்லாம் வேண்டா என்றேன்” எனச் சொல்லி விட்டு அறையை விட்டு வெளியேறினார். அங்கிருந்த வரவேற்பு உதவியாளர் வேணுகோபால், “ஐயா, அவர் உங்களிடம் நூல்விட்டுப் பார்க்கின்றார். நான் இந்த முயற்சியில் ஈடுபடாதே என்றேன். கேட்கவில்லை” என்றார். அழுக்குப்படிந்த கைகளை உடைய ‘வே’க்கு மாறான நேர்மையான உதவியாளர் இவர். ‘வே’ நீதிமன்றத்திற்குச் சிறாரை அழைத்து வரும் பொறுப்பில் இருப்பதால் அவரை அணுகி உள்ளனர்.

 “எனக்கும் புரிகின்றது. தங்கக்கடத்தல் வழக்கு குறித்துத்தான் கூறுகிறார். மீண்டும் இங்கே வருவார். அப்பொழுது நான் கூறிக் கொள்கிறேன்”. என்றேன்.

 மீண்டும் வந்தார் ‘வே’.

“ஐயா, என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் . வாசலிலேயே நின்று கொண்டு உள்ளார்கள்.”

“சொல்ல வருவதை வெளிப்படையாகச் சொல்லுங்கள். நான் ஒன்றும் சொல்லவில்லை.”

“இல்லை ஐயா நீங்கள் கோபப்படக்கூடாது.”

“நீங்கள் சொல்லாமல் விடப்போவதில்லை. நேரத்தை வீணாக்காமல் சொல்லுங்கள் .“

   “பெட்டி நிறையத் தங்கம் கடத்ததான் இவர்களைப் பயன்படுத்தினார்களாம். சோதனைக்காக முதலில் காலணியில் வைத்துத் தங்கம் கடத்த வைத்தார்களாம். இருவரையும் சந்திக்க மட்டும் விட்டால் அந்தப் பெட்டித் தங்கம் முழுவதையும் உங்களுக்கே கொடுத்து விடுகிறார்களாம். நான் உங்களிடம் சொல்ல மாட்டேன், சொல்ல மாட்டேன் என்றுதான் சொன்னேன். நாங்கள் சொல்வதைத்தானே சொல்லப் போகிறீர்கள். சொல்லுங்கள் என்றார்கள்.”

goldcoin_in_shoe01

   “தங்கக்கட்டி உள்ள பெட்டியையே தர முன்வருகிறார்கள் என்றால் அவர்கள் கடத்தும் தங்கத்தின் அளவு எவ்வளவு இருக்கும் என நீங்களே எண்ணிப்பாருங்கள். சிறுவர்களைக் கொண்டு பல இடங்களில் தங்கம் கடத்தி உள்ளார்கள். பிடிபட்டால் ஊமைகள்மாதிரி நடிக்கச் செய்து இரக்கம் சம்பாதித்துத் தப்பிக்க வைத்து விடுவார்கள். சிறுவர்கள் மூலம் எங்கெல்லாம் தங்கம் கடத்தி உள்ளார்கள் என்பது தெரிந்து விடும் என்பதால்தான் துடிக்கிறார்கள். எனவே, நீங்கள் அவர்களுக்கு உதவக்கூடாது. சிறுவர்களின் பெற்றோர் அல்லது உறவினர் வந்தால் சந்திக்க மட்டுமல்ல அவர்களிடம் பிணையில் விடக்கூட ஏற்பாடு செய்கிறேன். எனவே, அவர்களிடம் சொல்லி வாசலில் நிற்க வேண்டா எனத் தெரிவித்து விடுங்கள்” என்றேன்.

 “நான் அப்பவே இப்படித்தான் சொல்வீர்கள் என்று சொல்லி விட்டேன். இப்பொழுது நீங்களே சொல்லி விட்டீர்கள் என்பதால் போய்விடுவார்கள்” என்றார்.

 நீதிபதியிடமும் விவரத்தைத் தெரிவித்து மிகப்பெரிய கடத்தல் தொழில் பின்னலில் இக் கும்பல் ஈடுபட்டுள்ளதைக் குறிப்பிட்டேன்.

  மறுநாள், வடக்கே இருந்து, அதிகக் கட்டணம் வாங்கும் இரு வழக்குரைஞர்கள் விமானத்தில் பறந்து வந்து நீதி மன்றம் வந்தனர். வேறு இருவரிடம் பிணைப் பொறுப்பில் விடுமாறு வேண்டினர். அவர்களிடம் நன்னடத்தை அலுவலர் சொல்லாமல் பிணையில் விட மாட்டேன் என நீதிபதி மறுத்து விட்டார்.

  “தொடர்புடைய அதிகாரிகளும் வழக்குரைஞர்களும் பிணையில் விடலாம் என்னும் பொழுது போயும் போயும் நன்னடத்தை அதிகாரி விடக்கூடாது என்பதால் பிணை தர மறுக்கிறீர்களே” என்றனர். “உங்களுக்கு அவர் போயும் போயும் நன்னடத்தை அதிகாரி என மதிப்பு குறைந்தவராகத் தோன்றலாம். நீதிமன்றத்தின் கண், காது, மூச்சு எல்லாம் அவர்தான். எனவே, அவரது பரிந்துரையே என் தீர்ப்பு”

 “எங்கள் மாநிலங்களில் நாங்கள் ஒரு மணி நேரத்தில் பிணையில்எடுத்து விடுவோம் தமிழ்நாட்டில்தான் இப்படிச் சொல்லுகிறீர்கள்.”

 “அதற்கென்ன அங்கேயே வழக்கை நடத்திக் கொள்ளுங்கள்.”

   இவ்வாறு அவர் சொன்ன பொழுது “எம் மன்னரைப் போரில் வெல்ல முடியாது. இரவலர் வேடம் கொண்டு வந்து கேட்டால் நாட்டை நன்கொடையாகத் தந்து விடுவார் என்னும் பொருளில் உள்ள சங்கப் பாடல்  நினைவிற்கு வந்தது.

ஆனால், நம்ப முடியாதபடி அடுத்த நாள் வந்தது.

  மறுநாள் காலையில் வழக்கினை மத்தியப் பிரதேசத்திற்கு மாற்றி ஆணை வாங்கி விட்டார்கள். எனவே சிறுவர்களையும் அந்த மாநிலத்திற்கு அழைத்துக் கொண்டு சென்று விட்டார்கள்.

 நம் முயற்சி முழுமையாக வெற்றி பெறாத பொழுது அதில் மகிழ ஒன்றும் இல்லை.

  “மாவட்ட ஆட்சியர் அல்லது உயர் நிலை வருவாய்த்துறை அதிகாரிகள் நேர்மை மட்டும் விளம்பரப்படுத்தப்படுகின்றது. எல்லாத் துறைகளிலும் எல்லா நிலைகளிலும் நேர்மையானவர்கள் உள்ளனர். அவர்களை எல்லாம் பாராட்டுவதன் மூலம்தான் நேர்மையானவர்களை அதிகரிக்க முடியும் என நாம் பேசியுள்ளோமே! எனவே, உங்களைப் பாராட்ட வேண்டும்.”

   “நம்துறையில் உள்ளவர்களை வெளிப்படையாகப் பாராட்டும் பொழுது குற்ற வழக்கு தொடர்புடையவர்கள் விவரமும் வெளிவரும். திருந்த எண்ணும் அவர்களுக்கு இப்பாராட்டு இடையூறாக அமையும். ஆகவே, தொடர்புடையவர்கள் உள்ளத்தால் பாராட்டுகிறார்களே அதுவே போதும். மேலும், இதில் நான் மட்டும் பாராட்டப்படவேண்டியவன் அல்லன். இதற்குச் சொந்தக்காரர்கள் பலர்.”

“அது எப்படி? நீங்கள்தானே ஒரு பெட்டித்தங்கமே வேண்டா” என்றீர்கள்.

   “அப்படி அல்ல. நீதிபதி கெங்க சுப்பையா தங்கம் வாங்கிக் கொண்டு வேறு வகையாகத் தீர்ப்பு சொல்லியிருக்கலாம். வரவேற்பு இல்லத்தில் உள்ள கண்காணிப்பாளர் பிற பணியாளர்கள் தங்கம் வாங்கிக் கொண்டு அவர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யலாம். நான் ஒன்றும் 24 மணி நேரம் அங்கேயே இருப்பவன்அல்லன். வாய்மொழி வேண்டுகோளை ஏற்றுப் பின்பற்றி யிருக்கிறார்கள். இந்த வழக்கில் எல்லாருமே பாராட்டிற்குரியவர்கள். என்னிடம் பேரம்பேச முயன்றதால் தாங்களும் பாராட்டிற்குரியவர்கள் என்று அறியாமல் என்னைப் பாராட்டிக் கொண்டுள்ளார்கள்.“

   “எப்பொழுதும் நேர்மையாக இருக்கும் உங்களைப் பாராட்டுவது பொருந்தாது. ஆனால், பெருமைக்குரியவர்கள் பலர் என்று சொல்லும் இந்த நல்ல மனத்திற்காக உண்மையிலேயே பாராட்ட வேண்டும்.”

“சரி! சரி! இது இருக்கட்டும்! ஏதோ காப்புவிடுப்பு (பரோல்) குறித்து என்னிடம் பேச வேண்டும் என்றீர்களே! அதைப்பற்றிப் பேசுவோம்” என முற்றுப்புள்ளி வைத்தேன்.

என்றாலும் நேர்மையானவர்கள் பலர் உள்ளதால்தான் இந்த உலகம் இன்னும் இயங்கிக் கொண்டு இருக்கிறது என மனம் அசைபோட்டது.