அகல் விளக்கு – மு.வரதராசனார்: 20
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 19. தொடர்ச்சி)
அகல் விளக்கு
மறுநாள் கற்பகம் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டாள். பள்ளிக்கூடத்துக்குப் புறப்பட்ட போதும் அவள் முகம் வாடியே இருந்தது. அங்கே சேர்ந்து பெயர் எழுதிவிட்டுத் திரும்பிய பிறகுதான் முகத்தில் மலர்ச்சி இருந்தது. மறுநாள் சாமண்ணா ஊருக்குத் திரும்பிவிட்டார். கற்பகம் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து என் தங்கை மணிமேகலையோடு சேர்ந்து விளையாடிக் கொண்டும் பள்ளிக்கூடத்தைப் பற்றிப் பேசிக் கொண்டும் இருந்தாள். மணிமேகலையும் அவளும் ஒரே வகுப்பில் படித்தமையால் நெருங்கிய தொடர்பும் ஏற்பட்டது. ஆனால் சந்திரனும் நானும் என்றும் மாறாத அன்போடு பழகியது போல் அவர்களால் பழக முடியவில்லை. சில நாட்களில் ஒருவரோடு ஒருவர் பேசாமல் தனித்தனியே முன்னும் பின்னுமாகப் பள்ளிக்கூடத்துக்குப் போனார்கள். “பெண்களே, இப்படித்தான். அடிக்கடி சண்டை போடுவார்கள். முறுக்கிக் கொள்வார்கள்” என்றான் சந்திர
அடுத்த மாதத்தில் வேலூரிலிருந்து என் அத்தையும் அத்தை மகள் கயற்கண்ணியும் மகன் திருமந்திரமும் வந்து எங்கள் வீட்டில் பத்துநாள் தங்கியிருந்தார்கள். அப்போது இன்னும் வேடிக்கையாக இருந்தது. சில நாள் என் தங்கை தனியே இருக்க கயற்கண்ணியும் கற்பகமும் ஒரு கட்சியாக இருந்தார்கள். மற்றும் சில நாள் மூன்று பேரும் சேர்ந்து எங்கள் வீட்டையே அமர்க்களம் செய்தார்கள். அது கால் தேர்வின் நெருக்கமாக இருந்தபடியால், எனக்கு ஒரு வகையில் இடையூறாக இருந்தது. ஆனாலும் கற்பகத்தின் ஆடல் பாடல்களைப் பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று பேசாமல் பொறுத்துக் கொண்டிருந்தேன். கற்பகம் இல்லாமல், என் தங்கையும் கயற்கண்ணியும் மட்டும் சேர்ந்து விளையாடிய போது, அவர்களைக் கடிந்துரைத்தேன். “கயற்கண்ணியின் குரல்தான் வீட்டையே தூக்கிக் கொண்டுபோகுது. அப்பப்பா! படிக்கவே விடமாட்டேன் என்கிறாள்” என்று அவள்மேல் குறை சொல்வேன். கற்பகம் வந்து அவர்களுடைய ஆட்டத்தில் கலந்துகொண்ட பிறகு, எவ்வளவு ஆரவாரம் கேட்டாலும் வாய் திறக்காமல் பொறுமையாக இருப்பேன். என்னுடைய போக்கு எனக்கே வேடிக்கையாக இருந்தது. அந்தப் பெண்கள் என்னைப் பற்றி என்ன பேசிக் கொண்டார்களோ, தெரியவில்லை.
இவ்வளவு மகிழ்ச்சியான கூட்டமும் ஆட்டமும் இருந்த படியால், அத்தைமகள் கயற்கண்ணி இங்கேயே தங்கியிருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள். அத்தையோடு ஊருக்குப் போகமாட்டேன் என்றும் சொன்னாள். இங்கேயே இருந்து படிக்க விரும்புவதாகவும் சொன்னாள். அத்தை வற்புறுத்தி அழைத்துக் கொண்டு போனதைக் கண்டு என் மனம் மிக மகிழ்ந்தது. “இந்த வருசம் ஊரிலே படித்துப் பரீட்சையிலே தேறிவிடு. அடுத்த வருசம் அப்பாவுக்குச் சொல்லி இங்கே கொண்டு வந்து சேர்க்கச் சொல்வேன்” என்று ஆறுதல் கூறி அத்தை அவளை அழைத்துச் சென்றார். என்னுடைய நல்ல காலம், அவள் அந்த ஆண்டில் முழுத்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. அதனால் இங்கே வந்து படிக்கும் முயற்சிக்கு இடம் இல்லாமற் போயிற்று. பள்ளிக்கூடப் படிப்புப் போய், சமையலறைப் பயிற்சி அவளிடம் உரிமையோடு வந்து சேர்ந்தது.
கற்பகம் சந்திரனைப்போல் அவ்வளவு நுட்பமான அறிவுடையவள் அல்ல; அதனால் எந்தப் பாடத்திலும் முதன்மையாக வரவில்லை. ஆனால் செய்வன திருந்தச் செய்யும் பழக்கம் அவளிடம் இருந்தது. என் தங்கையை விட அழகான கையெழுத்து எழுதினாள். புத்தகங்களை மிக ஒழுங்காக வைத்துப் போற்றினாள். சில நாட்களில் என்னுடைய அலமாரியும் மேசையும் இருக்கும் நிலையைப் பார்த்து, “இதென்ன இப்படிக் கன்னா பின்னா என்று வைத்திருக்கிறீர்களே! மணிமேகலை! நீயாவது உன் அண்ணாவுக்காக அடுக்கி ஒழுங்காக வைக்கக் கூடாதா? பலசரக்குக் கடைகூட நன்றாக வைத்திருக்கிறார்களே” என்று சொல்லிக் கொண்டே எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்துவாள். நான் பார்த்துக்கொண்டே பேசாமல் இருப்பேன். அவளை ஒழுங்குபடுத்த விட்டதனால் எனக்குத்தான் தொல்லை. குறிப்போ புத்தகமோ பொருளோ நான் வைத்த இடம் வேறு; ஒழுங்குபடுத்தியபோது அவள் வைத்த இடம் வேறு. அதனால் எது எங்கே இருக்கிறது என்று தேடிக் காலத்தைப் போக்க வேண்டியிருந்தது. இருந்தாலும், அவளை நான் தடுப்பதே இல்லை.
சில நாட்களில் சந்திரனுடைய வீட்டுக்குப் போனால் வலிய ஏதாவது ஒரு காரணம் பற்றி என்னோடு பேச வருவாள். ஒரு காரணமே இல்லாதபோதும், கணக்குப் புத்தகத்தை எடுத்து வந்து, ஏதாவது ஒன்றைக் காட்டி, “இந்தக் கணக்கைச் சொல்லிக் கொடுங்கள்” என்பாள், “சந்திரன் சொல்லிக் கொடுப்பதில்லையா?” என்று நான் கேட்டால், “அண்ணனுக்கு மூக்கிற்கு மேல் கோபம் வருகிறது. அதனால் நான் கேட்பதில்லை” என்பாள். அந்தக் கணக்கைப் படித்துப் பொறுமையோடு போட்டுக் காட்டுவேன். ஒரு நாள் கணக்குப் போட்டுக் காட்டி முடிந்த பிறகு, முன் பக்கத்தைத் தள்ளிப் பார்த்தேன். அதே கணக்கை அவளே சரியாகப் போட்டு வைத்திருந்தாள். அதை நான் கண்டு கொண்டதால், “அதெல்லாம் நீங்கள் ஏன் பார்க்கிறீர்கள்” என்றாள். “வேறு சுருக்கமான வழி இருக்கிறதா என்று தெரிந்து கொள்வதற்காக உங்களைப் போடச் சொன்னேன்” என்று பொய்யான காரணத்தை சொன்னாள்.
அரைத் தேர்வு நெருக்கத்தில் நானும் சந்திரனும் மும்முரமாகப் படிக்கத் தொடங்கினோம். விளையாட்டையும் பொழுது போக்கையும் குறைத்துக் கொண்டோம். வீட்டில் கற்பகத்தின் ஆரவாரம் கேட்டாலும் முன்போல் பொறுத்திருக்காமல், கடிந்து பேசத் தொடங்கினேன். அவளும் தேர்வு நெருக்கத்தை உணர்ந்து கொண்டாள். முன்போல் ஆரவாரம் செய்யாமல் அமைதியாக வந்து போனாள்.
அரைத்தேர்வில் இருவரும் நன்றாக எழுதினோம். சந்திரன் வரலாறு தவிர மற்றப் பாடங்களில் முதன்மையான எண்கள் பெற்றிருந்தான். வரலாற்று ஆசிரியர் வேண்டும் என்றே கெடுத்ததாகச் சொல்லி அவனே மனத்தைத் தேற்றிக் கொண்டான். ஆனால் ஆசிரியர் ஒருவர் மட்டும் “வரலாற்றில் எண்கள் குறைந்து போனதைப் பற்றிக் கவலைப்படாதே. கணக்கில் வல்லவர்களாக இருப்பவர்களுக்கு அந்தக் குறை இருப்பது உண்டு. கணக்குக்கும் வரலாற்றுக்கும் உறவு இல்லை” என்றார். எனக்கு யாரும் இப்படித் தேறுதல் கூற வேண்டிய தேவையே இல்லை. நான் எதிலுமே ஐம்பதுக்கு மேல் எண்கள் வாங்கவில்லை என்றால், முதன்மையைப் பற்றிய பேச்சு ஏது?
மிகுதியாகப் பாடுபட்டுப் படித்த காரணமோ என்னவோ தெரியவில்லை; முந்திய ஆண்டு வராமல் விலகியிருந்த சிரங்கு இந்த ஆண்டில் தை பிறந்ததும் என்னிடம் குடி புகுந்தது. ஆனால் நல்ல காலம்; அது முன்போல் யானைச் சிரங்காக வராமல் நமட்டுச் சிரங்காக வந்தது. அதுவும் ஒரு வகையில் பொறுக்க முடியாததாக இருந்தது. இப்போதுபோல், நல்ல ஊசி மருந்துகள் அப்போது அதற்குக் கிடைக்கவில்லை. ஆகவே மேற்பூச்சையே நம்பியிருக்க வேண்டியிருந்தது. இரவும் பகலும் நடக்கும் போதும் உட்காரும் போதும் சொரிந்துகொண்டே இருக்க நேர்ந்தது. வீடு, வகுப்பு, தெரு என்ற வேறுபாடு அதற்கு இல்லை. நன்றாக ஆழ்ந்து படிக்கும்போதும் கை சொரிவதில் ஈடுபட்டிருக்கும்.
Leave a Reply