(அகல் விளக்கு – மு.வரதராசனார்: 6. தொடர்ச்சி)

அத்தியாயம் 3

எங்கள் ஊர் இப்போது ஒருவகைச் சிறப்பும் பொலிவும் இல்லாமற் காணப்பட்டாலும், சிறப்போடு இருந்த பழைய ஊர்களில் அது ஒன்று. முப்பது ஆண்டுகளுக்கு முன் வாலாசாப்பேட்டை என்றால் தென்னிந்தியா முழுவதற்கும் தெரியும். தென்னிந்தியாவில் ஏற்பட்ட பழைய நகராட்சி மன்றங்களில் வாலாசா நகராட்சி மன்றமும் ஒன்று என்றால், அதன் பழைய பெருமை தானே விளங்கும். இன்று உள்ள மிகப் பழைய உயர்நிலைப் பள்ளிகளில் வாலாசாப்பேட்டை உயர்நிலைப் பள்ளியும் ஒன்று. அது ஏற்பட்டு ஒரு நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்டது. அவ்வளவு பழம் பெருமை வாய்ந்த ஊர் எங்கள் ஊர்.

அதன் பழம் பெருமைக்கு வேறு இயற்கைச் சான்றுகள் வேண்டுமானால், இரண்டு சொல்லலாம், ஒன்று, நெடுங்காலமாக மக்கள் வாழ்ந்த ஊர் ஆகையால் எந்தக் கிணற்றிலும் நீர் உப்பாக இருக்கும். மற்றொன்று, மிகப் பழங்காலத்து ஊரமைப்பு ஆகையால் தெருக்கள் எல்லாம், அகலமாக அமைந்து, ஒவ்வொரு வீட்டின் முன்பும் மிகப் பழைய வேப்பமரங்கள் காலத்தை அளந்து காட்டுவனபோல் பருத்த அடிமரங்களோடு நிற்கும்.

அந்த அழகான ஊரில் எங்கள் தெரு தெற்கு வடக்காக அமைந்திருந்தது. எங்கே இருந்து பார்த்தாலும் வேப்பமரங்கள் வரிசையாய் உயர்ந்து நிற்க, வீடுகள் ஏறக்குறைய ஒரே வகையாய் அமைந்து அழகான காட்சியாக இருந்தன. இப்போது அதே தெரு பாழடைந்த காட்சியைத் தருகிறது. அந்தக் காலத்தில் பட்டு நெசவு எங்கள் ஊரில் மிகுதி. நெய்யும் தொழிலாளர்க்கு நல்ல வருவாய் இருந்தது. வயிற்றுப் பிழைப்பைப் பற்றிக் கவலையே இல்லை. பட்டுநூல்காரர் பெருகிய ஊர் அது.

அதன் அடிப்படையில் வியாபாரமும் நன்றாக நடந்து வந்தது. எங்கள் தெருவின் தென்கோடியில் குதிரை வண்டிகள் நாற்பது ஐம்பது நிற்கும். ஒரு பெரிய மண்டபம் ஒன்று உண்டு. அந்த மண்டபம் ஒன்றுதான் இப்போது அழகாக உள்ளது. அதை அடுத்துச் சென்றால், காவேரிப்பாக்கத்திலிருந்து ஆர்க்காட்டுக்குச் செல்லும் பாதை குறுக்கிடும். அதன் மறு பக்கத்தில் தாலுகா நிலையமும் பதிவு நிலையமும் இருந்தன. அதனால் ஊர் மக்களும் மணியக்காரர் கணக்கரும் மற்ற ஊழியர்களும் எந்நாளும் எங்கள் தெருப்பக்கம் போய் வருவார்கள்.

எங்கள் தெரு வழியாகத்தான் வாலாசா தொடர் வண்டி நிலையத்துக்குச் செல்ல வேண்டும். ஒரே நேர்வழி. அம்மூர், சோழசிங்கபுரம் முதலிய ஊர்களுக்கும் எங்கள் தெரு வழியாகவே வண்டிகள் போகும். அதனால் இரவும் பகலும் தொடர் வண்டிக்கும் ஊர்களுக்கும் செல்லும் மாட்டு வண்டிகளும் குதிரை வண்டிகளும் போனது போனபடி இருக்கும். இப்போது பேருந்து போக்குவரத்து மிகுந்துவிட்டபடியால், குதிரை வண்டிகளின் தொகை குறைந்துவிட்டது. வண்டிக்காரர்க்கு இப்போது வருவாய் குறைந்துபோனதால் அவர்கள் குதிரைகளை நன்றாக வைத்திருப்பதில்லை.

ஆகையால் இப்போது உள்ள குதிரைகளும் முன்போல் பார்ப்பதற்கு அழகாக இல்லை. வட்டாட்சி நிலையத்துக்கு வருவோரும் பதிவு நிலையத்துக்கு வருவோரும் தவிர, வேறு யாரும் இப்போது எங்கள் ஊர்க்கு வருவதில்லை. நெசவுத் தொழிலும் குன்றிவிட்டது ; அதனால் வியாபாரமும் குறைந்துவிட்டது. இந்தப் பக்கத்தில் இந்த ஊரில் மட்டுமே முன்பு உயர்நிலைப் பள்ளி இருந்தது. அதனால் வெளியூரிலிருந்து மாணவரும் பெற்றோரும் படிப்பை நாடியும் வந்தார்கள். இப்போது பக்கத்து ஊர்களிலும் உயர்நிலைப்பள்ளிகள் ஏற்பட்டு விட்டபடியால் கல்வி காரணமாக வருவோரும் குறைந்து விட்டார்கள். முன் இந்தக் குறை எல்லாம் இல்லாத படியால், எங்கள் தெரு கண்ணுக்கு இனிய காட்சியோடு பெருமை பெற்று விளங்கியது.

இந்தத் தெருவில் எங்கள் வீடு கிழக்குப் பார்த்து அமைந்திருந்தது. நான் ஒருநாள் காலையில் வேப்பமரத்தை அடுத்த பெரிய திண்ணையின் மேல் உட்கார்ந்து, சில குச்சிகளும் நூலும் காகிதமும் பசையும் வைத்துக்கொண்டு காற்றாடி செய்து கொண்டிருந்தேன். அதற்கு வால் வேண்டுமே என்று எண்ணித் திண்ணையைவிட்டு எழுந்த போது, “தம்பி” என்று யாரோ அழைக்கும் குரல் கேட்டுத் திரும்பினேன்.

ஐம்பது வயது உள்ள ஓர் அம்மையாரும் என் வயது உள்ள பிள்ளைகள் இருவரும் எங்கள் வீட்டெதிரே நின்றிருந்தார்கள். அந்த அம்மையார் என்னைப் பார்த்து, “23ஆம் எண் உள்ள வீடு எது அப்பா!” என்றார்.

“இது 20, இன்னும் மூன்று வீடு கழித்து இதே போல ஒரு வீடு இருக்குது பாருங்கள்” என்று வடக்குப் பக்கம் காட்டினேன்.

“எல்லா வீடும் ஒரே மாதிரி; வேப்பமரம், நீளமான திண்ணைகள் எல்லாம் ஒரே வகையாக இருந்தால் எப்படிக் கண்டு பிடிப்பது?” என்று சொல்லிக்கொண்டே நகர்ந்தார் அந்த அம்மையார்.

“வீட்டு எண் பார்த்தால் தெரியுமே! வா அத்தை, போகலாம்” என்று ஒரு பையன் முன்னே பரபரப்பாகச் சென்றான்.

உடனே நான் வீட்டிற்குச் சென்று ஒரு மூலையில் கொடியில் தொங்கிக் கொண்டிருந்த பழம் புடைவையில் நீளமாக ஒரு துண்டு கிழித்துக் கொண்டு வெளியே வந்தேன். வீடு கேட்டவர்கள் எங்கே என்று பார்த்தேன். நான் காட்டிய நான்காம் வீட்டின் எதிரே ஒரு மாட்டு வண்டி நின்று கொண்டிருந்தது.

முன் பேசிய பையன் மட்டும் வெளியே இருந்தான். மற்றொரு பையனும் அந்த அம்மையாரும் வண்டியிலிருந்து சில சாமான்களை எடுத்துச்சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் அந்த வீட்டுக்குப் புதிதாகக் குடிவந்தவர்கள் என்று தெரிந்து கொண்டேன். சரி யாரோ, போகட்டும் என்று நான் காற்றாடிக்குச் சூத்திரம் அமைக்கத் தொடங்கினேன். அளவு பார்த்துச் சூத்திரம் அமைத்த பிறகு, கிழித்து வந்த புடைவைத் துண்டை அதற்கு வாலாகக் கட்டினேன். ஒரு பெரிய வேலையைச் செய்து முடித்ததாகப் பெருமிதம் கொண்டேன்.

உடனே வீட்டிற்குள் சென்று என் வேலைத்திறமையை எல்லோருக்கும் காட்டினேன். என் தம்பி பொய்யாமொழி “அண்ணா ! அண்ணா ! எனக்குக் கொடு அண்ணா” என்று கெஞ்சினான். தங்கை மணிமேகலையோ என் திறமையைப் பாராட்டாமல், “ஓஓ ! அம்மா புடைவையிலிருந்து வால் கிழித்துக் கொண்டாயா? தெரிந்து போச்சு! இரு, அம்மாவிடம் சொல்லிவிடுகிறேன்” என்று என்னை மிரட்டினாள். அதற்குள் அம்மாவே வந்து பார்த்து, புடைவை கிழிக்கப்பட்டிருந்ததையும் பார்த்து, என் முதுகில் இரண்டு வைத்தார். அதைப்பற்றி ஒரு சிறிதும் கவலைப்படாமல் என் பெருமிதம் சிறிதும் குன்றாமல், பெட்டியிலிருந்து நூலுருண்டையை எடுத்துக் கொண்டு காற்றாடியுடன் வெளியே வந்தேன்.

(தொடரும்)

முனைவர் மு.வரதராசனார்

அகல்விளக்கு