மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 11
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 10. தொடர்ச்சி)
குறிஞ்சி மலர்
அத்தியாயம் 4
“என் செயல் ஆவது யாதொன்றும் இல்லை இனித்தெய்வமே
உன் செயலே என்று உணரப் பெற்றேன் இந்த ஊன் எடுத்த
பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லை பிறப்பதற்கு
முன் செய்த தீவினையோ இங்ஙனே வந்து மூண்டதுவே!”
ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்ற கொதிப்பினால் ஏற்பட்ட துணிவு வெறியில் பூரணி அந்தத் திருட்டுக் கிழவனைப் பிடித்து, அவன் மேல் துண்டாலேயே கைகளைக் கட்டிப் போட முயன்றாள். சங்கிலியைப் பறிகொடுத்த கமலாவோ பயந்தோடி வந்து அவன் பூரணியால் பிடிக்கப்பட்ட இடத்தில் நழுவி விழுந்திருந்த சங்கிலியின் மூன்றாய் அறுந்துபோன துணுக்குகளைத் தேடி எடுத்துக் கொண்டாள்.
இந்தக் கலவரத்திலும் கூக்குரல்களிலும் சரவணப் பொய்கைக் கரை மண்டபங்களில் படுத்துக் கிடந்த இரண்டு மூன்று பரதேசிப் பண்டாரங்கள் எழுந்து ஓடி வந்தனர்.
மூப்பினாலும், முதுகில் பிடரி மேல் விழுந்த கல் எறியினாலும் சோர்ந்து பூரணியிடம் மாட்டிக் கொண்ட அந்த நோஞ்சான் கிழவன், ஆட்கள் ஓடி வருவதைக் கண்டதும் திமிறிக் கொண்டு மறுபடியும் ஓட முயன்றான். திருட்டு முகத்தை நாலு மனிதர்களின் கண்களுக்கு முன் காட்ட வேண்டும் என்ற அவசியம் வரும்போது திருடனுக்குக் கூட வெட்கம் வருகிறது. என்ன இருந்தாலும் பூரணி பெண்தானே? திமிறி உதறிக் கொண்டு அவன் ஓட முயலும் முயற்சியில் பூரணியின் கைகள் தளர்ந்தன. குரூரமும், ‘அகப்பட்டுக் கொள்வோமோ’ என்ற பயமும் கலந்த அந்தக் கிழட்டு முகத்தில் கோலிக்குண்டுகள் போல் கண்விழிகள் பிதுங்கிப் பயங்கரமாகத் தோன்றின.
பூரணியின் மனத்தில் என்ன தோன்றியதோ? கைப்பிடியைத் தானாகவே மேலும் தளரவிட்டாள். அந்தக் கிழவன் விடுவித்துக் கொண்டு ஓடிவிட்டான். “சங்கிலி கிடைத்துவிட்டது. அந்தக் கிழவனைப் பிடித்துக் காட்டிக் கொடுப்பதில் என்ன புதுப் பெருமை வந்துவிடப் போகிறது?” என்று எண்ணியே பூரணி அவனைப் போகவிட்டாள்.
அருகில் நெருங்குவதற்கே அஞ்சி அரண்டு நின்று கொண்டிருந்த கமலா, பூரணிக்குப் பக்கத்தில் வந்தாள்.
“காலம் எவ்வளவு கெட்டுப் போய்விட்டது? முகத்தையும் பேச்சையும் பார்த்து எந்த மனிதர்களையும் நம்பி விட முடியாது போலிருக்கிறதே! மிகவும் நல்லவனைப் போலப் பேசிக் கொண்டு வந்தவன் ஒரே கணத்தில் கழுத்தில் கைவைத்து சங்கிலியை அறுத்தானே பார்த்தியா பூரணி! உன்னைப் போல் ஒரு துணிச்சல்காரி மட்டும் உடன் வந்திருக்காவிட்டால் சங்கிலியைத் திருட்டுக் கொடுத்துவிட்டுக் கண்களைக் கசக்கிக் கொண்டு வீட்டில் போய் நிற்பேன்” என்று பூரணியின் துணிவை வியந்து பேசத் தொடங்கினாள் கமலா. பூரணியின் வலது கையால் அவள் வாயைப் பொத்தினாள்.
“போதும் கமலா! ஏதோ கெட்ட சொப்பனம் கண்டு விழித்துக் கொண்ட மாதிரி இதை மறந்துவிடு. இருவருமே முன் யோசனையின்றி இந் நேரத்துக்கு இங்கு வீடு தேடிக் கொண்டு வந்ததே தப்பு. வா, மாற்றவர்கள் வந்து இந்த வெட்கக் கேட்டை விசாரிப்பதற்கு முன் இங்கிருந்து போய்விடலாம்” என்று கமலாவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வேகமாகத் திரும்பி நடக்கத் தொடங்கினாள் பூரணி.
கீழ இரத வீதி திருப்பத்தில் வந்ததும், தெருவிளக்கின் ஒளியில் பூரணியின் கைகள் தற்செயலாகக் கமலாவின் பார்வையில் பட்டன.
வளையல் உடைந்து நகங்களால் கீறிய காயங்களோடு கன்றிச் சிவந்து போயிருந்த அந்தப் பூக்கரங்களை விளக்கொளியில் தூக்கிப் பிடித்துப் பார்த்தாள் கமலா.
வெண்ணிறக் காகிதத்தில் தாறுமாறாக விழுந்த சிவப்பு மைக் கீறல் மாதிரி அந்த அழகிய முன்கையில் நகக்கீறல்கள் குருதிக்கோடு இழுத்திருந்தன. கமலாவின் கண்களில் அதைக் கண்டதும் நீர் மல்கி விட்டது. பூரணியின் முகத்தைப் பார்த்தாள். அவள் துன்பத்தையும் உணராதது போல் முகம் மலரச் சிரித்தாள்.
“அடி அசடே! இதற்கெல்லாமா அழுவார்கள்? பேசாமல் அந்தச் சங்கிலித் துணுக்குகளை இப்படிக் கொடு. எங்கள் தெருவில் ஒரு பத்தர், பொற்பட்டறை வைத்திருக்கிறார். நாளைக்கு சாயங்காலத்துக்குள் சரிப்படுத்திக் கொண்டு வந்து தந்து விடுகிறேன். அதுவரையில் உன் அம்மாவுக்குத் தெரிந்து விடாமல் பார்த்துக்கொள். நடந்ததைப் பற்றி யாரிடமும் மூச்சுவிடக் கூடாது” என்று அந்தச் சங்கிலித் துணுக்குகளை வாங்கிக் கொண்டாள் பூரணி.
“சங்கிலி போயிருந்தாலும் பரவாயில்லை பூரணி. அதற்காக உன் கைகளை இப்படி இரணமாக்கிக் கொண்டு வந்திருக்க வேண்டா.”
“கைகளில் இரணம் படாமல் தான் எதையும் செய்து விட ஆசைப்படுகிறோம். ஆனால் கைகளிலும் மனத்திலும் எண்ணங்களிலும் படுகிற புண்களைச் சுமக்காமல் வாழ முடிவதில்லை.”
இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு வயதுக்கு அதிகமான முதுமையை வரவழைத்துக் கொண்டாற்போலச் சிரித்தாள் பூரணி. அப்படிச் சிரிப்பதற்கு அவளால்தான் முடியும்.
கமலாவை வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு பூரணி சந்நிதித் தெருவில் திரும்பி நடந்தபோது ஏறக்குறையத் தெரு அடங்கிப் போயிருந்தது. நெடுநேரம் கதவைத் தட்டியபின் திருநாவுக்கரசு விழித்தெழுந்து வந்து கதவைத் திறந்தான். கதவைத் தாழிட்டுக் கொண்டு உள்ளே போய் அப்பாவின் படிப்பறையில் விளக்கைப் போட்டாள். காலையில் நினைவாகப் பத்தரிடம் கொண்டு போய்க் கொடுக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் சங்கிலித் துண்டுகளை ஒரு காகிதத்தில் சுற்றி மேஜை மேல் வைத்தாள். சிறிது நேரம் எதையாவது படித்துவிட்டு உறங்கப் போகலாம் என்று அப்பாவின் புத்தகத்தை உருவினாள்.
கவியரசர் பாரதியாரின் பாடல் தொகுதி அது. தானாகப் பிரிந்த பக்கத்தில் மேலாகத் தெரிந்த அந்தப் பாட்டு பூரணியின் அப்போதைய மனநிலைக்கு இதமாக இருந்தது.
“தேடிச்சோறும் நிதம்தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித்துன்பம் மிகவுழன்று – பிறர்
வாடப்பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவம் எய்திக்கொடுங்
கூற்றுக்கு இரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?”
அப்பா போன துக்கம், குடும்பத்தைத் தாங்கிக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு, விட்டைக் காலி செய்துவிட்டுப் புதிய இடம் பார்க்கும் கவலை, கையை ஒடித்துக் கொண்டு வீழ்ந்து கிடக்கும் தம்பி, இருட்டில் வீடு தேடப்போன இடத்தில் திருட்டுக்கு ஆளாகித் தப்பின வம்பு – இத்தனை எண்ணங்களும் சுமையாகிக் கனத்து ஏங்கும் அவள் மனத்தில் பாரதியின் இந்தப் பாட்டு ஏதோ ஓர் உணர்ச்சிப் பொறியைத் தூண்டியது.
நீர்க்கரைத் தவளைகள் விட்டு விட்டு ஒலிக்கும் குரலும், தென்னை மட்டைகள் காற்றில் ஆடிச் சரசரக்கும் ஓசையும் தவிர, இரவு அமைதியில் இணைந்திருந்தது. இடையிடையே பெரிய சாலையில் சுமையுந்துகள்(இலாரிகள்) போகும் சத்தம் அதிர்ந்து ஓயும். ஊர் உறங்கும் சூழலில் தானும் தன் மனமும் உறங்காமல் விழித்திருந்து அந்தப் பாட்டில் மூழ்கி எண்ணங்களில் திளைப்பது, குளிருக்குப் போர்வை போல் சுகமாக இருந்தது பூரணிக்கு. இப்படி எண்ணத்தில் திளைப்பது அவளுக்குப் பழக்கம். “சோற்றை இரையாகத் தின்று காலத்துக்கு இரையாவது தான் வாழ்க்கையா? துன்பத்தில் உழன்றுகொண்டும் பிறரை துன்பத்தில் உழல வைத்துக்கொண்டும் வாழ்வதுதான் வாழ்க்கையா? பிறரைத் தானும், தன்னைப் பிறரும் வம்பு பேசிக் கழிவதுதான் வாழ்க்கையா? இதையெல்லாம் விடப் பெரிதாக ஏதோ ஒன்று வாழ்க்கையில் இருக்கிறது அல்லது வாழ்க்கைக்காக இருக்கிறது.” குளிர்ந்த தண்ணீரைத் தெளித்த மாதிரி இவற்றை நினைத்தபோது அவளுடைய உடம்பும் மனமும் மலர்ந்து சிலிர்த்தாற்போல் ஒரு புல்லரிப்பு ஏற்பட்டது. பனிக்கட்டிகளில் உடம்பு சிலிர்த்தாற் போல் ஒரு புல்லரிப்பு ஏற்பட்டது. பனிக்கட்டிகளில் உடம்பு உரசுகிறார் போலப் பரிசுத்தமான நினைவுகளுக்கு இப்படி ஒரு சிலிர்ப்பு எப்போதும் உண்டு. நினைவு தெரிந்த வயதிலிருந்து இத்தகைய சிலிர்ப்பை அவள் பலமுறை உணர்ந்திருக்கிறாள். பவளமல்லிகைப் பூ மலர்கிறபோது தோட்டம் முழுவதும் ஒரு தெய்வீக நறுமணம் பரவி நிறைவதுண்டு. அபூர்வமான சில மனிதர்களுக்கு மனமும் எண்ணங்களும் வளர்ந்து விகசிக்கிற பருவத்தில் அந்த எண்ணங்களின் மலர்ச்சியால் எண்ணுகிறவர்களைச் சுற்றி ஒருவகை ஞானமணமோ எனத்தக்க புனிதமான சூழ்நிலை நிலவும்.
கண்ணிமைகள் சோர்ந்து விழிகளில் சாய்ந்தன. புத்தகம் இரண்டொரு முறை கை நழுவியது. பூரணி விளக்கை அணைத்துவிட்டுப் படுக்கையில் போய்ப் படுத்துக் கொண்டாள். உடலே கனம் குறைந்து இலவம் பஞ்சாகிப் போய்விட்ட மாதிரி சுகமான உறக்கம் அவளைத் தழுவியது.
காலையில் நாட்டு வைத்தியர் வந்து சம்பந்தனின் கையைப் பார்த்துவிட்டுப் போனார். அன்று சனிக்கிழமை திருநாவுக்கரசுக்குப் பள்ளிக்கூடம் விடுமுறை. பால்காரனுக்கு மாதம் முடிகிறவரை கணக்கு இருப்பதால் பால் ஊற்றிவிட்டுப் போயிருந்தான். காப்பியைப் போட்டுக் கொடுத்துவிட்டு முதல் நாள் இரவு வாங்கிக் கொண்டு வந்திருந்த கமலாவின் அறுத்த சங்கிலியைச் செம்மைப்படுத்திக் கொண்டு வருவதற்குப் புறப்பட்டாள் பூரணி.
பத்தர் மிகவும் வேண்டியவர் தான். ஆனால் ஏழைகளாயிருப்பவர்கள் ஒருவருக்கொருவர் வேண்டியவராயிருப்பதால் என்ன பயன்? உதவவும் முடியாது. உதவும்படி வேண்டவும் முடியாது. சங்கிலிப் பழைய சங்கிலியாவதற்கு இரண்டு மணி நேரம் பிடித்தது. வேலையை முடித்துச் சங்கிலியைக் காகிதத்தில் வைத்துக் கொடுத்த பத்தரை நோக்கி, “இதற்கு நான் என்ன தரவேண்டும்?” என்று கேட்டாள் பூரணி.
“ஐந்து ரூபாய் கொடு, குழந்தை”. பத்தருக்கு எத்தனை வயதுப் பெண்ணாயிருந்தாலும் எல்லாரும் குழந்தைதான். கொஞ்சம் வம்பு பேசி வழக்காடியிருந்தால் பத்தர் இரண்டொரு ரூபாய்கள் குறைத்திருப்பாரோ என்னவோ? பண்பட்ட குடிப்பிறப்பைத் தாங்கிய நாக்குப் பேரம் பேச எழவில்லை. ஐந்து ரூபாயை மறு பேச்சின்றிக் கொடுத்து விட்டாள். சங்கிலியை வாங்கிக் கொண்டு கமலாவின் வீட்டுக்குப் போனாள். மணி பதினொன்று ஆகியிருந்தது. நல்ல வெய்யில், இரத வீதியில் மலைப்பாறைகளின் வெப்பமும் சேர்ந்து கொண்டால் சுண்ணாம்புக் காளவாய் மாதிரி ஒரு சூடு கிளம்பும்.
நல்லவேளை, கமலாவின் கூட வேறு யாருமில்லை. வீட்டு முன் அறையில் தனியாக உட்கார்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள் அவள். பூரணியைப் பார்த்ததும் ஆவலோடு எதிர் கொண்டு எழுந்து வந்து வியப்பான செய்தி ஒன்றைத் தெரிவித்தாள் கமலா.
“பூரணி உனக்குத் தெரியுமா செய்தி! உன்னிடம் திமிறிக் கொண்டு தப்பி ஓடினானே, அந்தத் திருட்டுக் கிழவன் பாம்பு கடித்துச் செத்துப் போனான். காலையில் நானும் அம்மாவும் சரவணப் பொய்கைக்குக் குளிக்கப் போயிருந்தோம். அவன் உடலை அந்த நாவல் மரத்தடியில் கொண்டு வந்து போட்டிருந்தார்கள். அந்த இடத்துக்குச் சிறிது தொலைவில் வயல் வரப்பின் மேல் செத்து விழுந்து கிடந்தானாம். விடிந்ததும் தண்ணீர் பாய்ச்சப்போன ஆட்கள் யாரோ பார்த்துத் தூக்கிக்கொண்டு வந்து மரத்தடியில் கிடத்தியிருக்கிறார்கள். அவன் விழுந்திருந்த வரப்பின் மேல் பாம்புப் புற்று இருந்ததாம். பாவம் திருடினதுதான் கிடைக்கவில்லை, உயிரையும் கொடுத்து விட்டானா பாவிப்பயல்!”
இதைக்கேட்டதும் பூரணியின் உடம்பில் எலும்புக் குருத்துக்களெல்லாம் நெக்குருகி நெகிழ்ந்தாற்போல் ஒரு நடுக்கம் பரவியது. கண்கள் பயந்தாற்போல் பராக்குப் பார்த்து விழித்தன. கைவிரல்களில் கொலை நடுக்கம் போல் ஒரு உதறலை அவள் உணர்ந்தாள். “நான் கொலை செய்துவிட்டேனா?” என்று அவள் உள்மனம் அவளையே கேட்டது. இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. முகத்தில் வேர்த்துவிட்டது.
Leave a Reply