மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 14
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 13. தொடர்ச்சி)
குறிஞ்சி மலர்
அத்தியாயம் 5 தொடர்ச்சி
“நேற்றுவரை எனக்கு இரண்டு பெண்கள்தான். இன்றைக்கு நீ மூன்றாவது பெண் மாதிரி வந்து சேர்ந்திருக்கிறாய்; வா, என்னோடு உட்கார்ந்து ஒருவாய் சாப்பிட்டுவிட்டுப் போகலாம்” என்று அகமும் முகமும் மலர அந்த அம்மாள் அழைத்தபோது அவள் பேசாமல் எழுந்து உடன் சென்றாள். சாப்பாட்டு அறையில் மேசையின் எதிரெதிரே இலைகள் போடப்பட்டிருந்தன. சமையற்காரப் பெண் பரிமாறினாள். கை வழுக்கினாற்போல் கண்ணாடித் தகடு பரப்பிய நீண்ட மேசை அது. பூரணி தடுமாறினாள். அப்படி அமர்ந்து உண்பது அவளுக்குப் புதிய பழக்கம். “உனக்கு மேசையில் சாப்பிட்டுப் பழக்கமில்லை பூரணி?”
“இல்லை.”
“பார்த்தாயா; இதற்குத்தான் மாறுபட்ட சூழ்நிலையில் பழக வேண்டுமென்பது” என்று சொல்லி சிறிது கேலியாக நகைத்தாள் மங்களேசுவரி அம்மாள்.
“மன்னிக்க வேண்டும் அம்மா! உங்களை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. திருநீறு அணிந்த நெற்றியும் தூய்மை விளங்கும் தோற்றமுமாகப் பழமையில் வந்து பண்பைக் காட்டுகிறீர்கள். பேச்சிலோ புதுமை காட்டுகிறீர்கள். சிலவற்றுக்குப் பழமையைப் போற்றுகிறீர்கள். சிலவற்றுக்கு புதுமையைப் பேணுகிறீர்கள். நேற்று வந்தப் பழக்கத்துக்கு ஆயிரங்காலத்துப் பழக்கத்தை விட்டுக் கொடுப்பதுதான் மாறுபட்ட சூழ்நிலையா? தரையில் உட்கார்ந்து இலையில் சாப்பிடுவது எனக்குப் பழக்கம். என் தந்தைக்குப் பழக்கம். அவருடைய தந்தைக்குப் பழக்கம். பாட்டன், கொள்ளுப்பாட்டன் காலத்தியப் பழக்கத்தை நாகரிகத்தின் பேரால் நான் ஏன் விட வேண்டும்? அன்புக்காகப் பழக்கத்தை மாற்றிக் கொள்ளலாம். கேலிக்குப் பயந்து பழக்கத்தை மாற்றக் கூடாது. எனக்கு மேசையில் சாப்பிடத் தெரியாது. உங்களுக்குக் கேலியாகப் படுமானால் நான் தரையில் இலையை எடுத்துப் போட்டுக் கொண்டு கீழே உட்கார்ந்து விடுவேன். நீங்கள் கீழே வந்தால் நான் உங்களைக் கேலி செய்ய நேரிடும்.”
“ஏ அப்பா! பெரிய குறும்புக்காரியாக இருக்கிறாயே! உன்னிடம் விளையாட்டாக வாயைக் கொடுத்தால் கூட தப்ப முடியாது போலிருக்கிறதே.”
பூரணி தலையைக் குனிந்து கொண்டு சிரித்தாள்.
“உன் தந்தை மட்டும் இப்போது உயிரோடு இருந்தால் உனக்குப் பொருத்தமானதாகப் பேர் வைத்தாரே, அதற்காக ஒரு பாராட்டு விழா நடத்துவேன் நான்.”
தந்தையைப் பற்றி பேச்சு எழுந்ததும் பூரணியின் இதழ்களில் சிரிப்பு மறைந்தது. அவள் பெருமூச்சு விட்டாள். முகத்தில் சோகம் கவிழ்ந்தது. பேச்சு நின்று மௌனம் சூழ்ந்தது.
சாப்பிட்டுவிட்டுச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பின் பூரணி புறப்படுவதற்காக எழுந்தாள்.
“வீட்டில் தங்கை, தம்பிகள் காத்துக் கொண்டிருப்பார்கள். நான் போய்த்தான் ஏதாவது சமைத்துப் போட வேண்டும். எனக்கு விடை கொடுத்தால் நல்லது?”
“போகலாம் இரு. இந்த உச்சி வெய்யிலில் போய் என்ன சமைக்கப் போகிறாய்? எல்லாம் ஒரேயடியாகச் சாயங்காலம் சேர்த்துச் சமைத்துக் கொள்ளலாம். ஐந்து ஐந்தரை மணிக்கு சின்னப் பொண்ணும் பெரிய பொண்ணும் வந்துவிடுவார்கள். அவர்களைப் பார்த்து விடலாம். ஓட்டுநரிடம் சொல்லி வண்டியிலேயே உன்னைக் கொண்டுவிடச் சொல்கிறேன்.” என்று கெஞ்சினாற் போல் அன்போடு வேண்டிக் கொண்டாள் மங்களேசுவரி அம்மாள். காப்பாற்றி உதவிய நன்றிக் கடமை அந்த அம்மாவிடம் எதையும் உடனடியாக மறுத்துவிட வாய் எழவில்லை பூரணிக்கு. கருத்துகளை மறுத்துப் பதில் பேச நா எழும்பிற்று; விருப்பங்களை மறுத்துப் பேச நா எழவில்லை; உட்கார்ந்தாள்.
அன்று காலையிலிருந்து நடந்ததை ஒவ்வொன்றாக நினைத்த போது விநோதமாகத்தான் இருந்தது. முதல் நாள் திருட வந்த கிழவன் பாம்பு கடிபட்டு இறந்த செய்தி, வயிற்றுப் பசியுடன் மனத்தில் விரக்தியோடு மதுரை நகரத் தெருக்களில் வேலை தேடி அலையும்போது மயங்கி விழுந்தது – மங்களேசுவரி அம்மாள் காப்பாற்றியது, அந்த அம்மாளுடன் பேசிய விவாதப் பேச்சுகள் எல்லாம் நினைத்துப் பார்த்த போது கதைகளில் படிப்பது போலிருந்தது. வாழ்க்கையில் நடக்காமலா கதைகளில் எழுதுகிறார்கள். வாழ்க்கைப் புத்தகத்தில் ஒவ்வொரு பக்கமாய்ப் படிப்பதுபோல் எதிர்பாராத புதிய புதிய நிகழ்ச்சித் திருப்பங்களை நினைப்பதில் சுவை கண்டாள் பூரணி.
மங்களேசுவரி அம்மாள் பூரணிக்குப் பொழுது போவதற்காக மாடிக்கெல்லாம் அழைத்துக் கொண்டு போய் வீட்டைச் சுற்றிக் காண்பித்தாள். இலட்சங்களை இலட்சியமில்லாமல் செலவழித்து வீட்டை அழகுபடுத்தியிருந்தார்கள். மாடி அறையில் பெரிய கடிகாரம் ஒன்று இருந்தது.
“இது மணியடிக்கிறபோது இன்னிசைக் குரல் எழுப்பும். இலங்கையிலிருந்து கொண்டு வந்தது. கொஞ்சம் இரு, நாலரையாகப் போகிறது. இப்போது ஒரு மணியடிக்கும். நீ கேட்டால் மிகவும் ஆச்சரியப்படுவாய்” என்று பூரணியை அந்த அழகிய பெரிய கடிகாரத்தின் முன் கையைப் பிடித்து நிறுத்தினாள் மங்களேசுவரி அம்மாள்.
பியானோ ஒலிபோல் நீட்டி முழக்கி இனிதாய் ஒரு முறை ஒலித்தது கடிகாரம். அந்த ஒலி எதிரொலித்து அதிர்ந்து அழகாய் அடங்கிய விதம் தேன் வெள்ளம் பாய்ந்து பாய்ந்த வேகம் தெரியாமல் வற்றினாற் போலிருந்தது. பூரணி சிரித்துக் கொண்டே சொன்னாள். “கடிகாரம் காலத்தின் கழிவைக் காட்டுவது. மனிதனுடைய உயிர் நட்டம் அதில் தெரிகிறது. ஒவ்வொரு மணி அடிக்கும் போதும் அதில் ஓர் அழுகை ஒலி கேட்டால் மிகவும் பொருத்தமாக இருக்கும். புத்திசாலித்தனமாகவும் இருக்கும்.”
“போடி அசட்டுப் பெண்ணே? உனக்கு வாழ்க்கையை இரசிக்கவே தெரியவில்லை. என் வயதுக்கு நான் இப்படி அலுத்துப் பேசினால் பொருந்தும். நீ இப்படிப் பேசுவது செயற்கையாக இருக்கிறது.”
“செயற்கையோ, இயற்கையோ எனக்குத் தோன்றியதைச் சொன்னேன்.”
“எல்லாருக்கும், தோன்றாததாகத்தான் உனக்குத் தோன்றுகிறது.”
“நான் மாறுபட்ட சூழ்நிலையில் பழகாதவள். ஒரே மாதிரி நினைக்கிறவள். எனக்குத் தோன்றுவது தப்பாகவும் இருக்கலாம்.”
“பார்த்தாயா? பழையபடி வம்புக்கு இழுக்கிறாயே என்னை!”
பழமைக்கும் புதுமைக்கும் பாலம் போலிருக்கும் அந்த அம்மாளிடம் பேசுவதே இன்பமாக இருந்தது பூரணிக்கு. குழந்தையைச் சீண்டிவிட்டு அதன் கோபத்தை அழகு பார்ப்பது போல் அந்த அம்மாளுக்கும் பூரணியின் வாயைக் கிண்டிவிட்டு வம்பு பேசுவது இன்பமாக இருந்தது.
ஐந்து மணிக்கு அந்த அம்மாளின் மூத்த பெண் கல்லூரியிலிருந்து வந்தாள். “கல்லூரி வேலை நாட்களை அதிகமாக்கிய பின் சனிக்கிழமை கூட வகுப்பு வைத்து உயிரை வாங்குகிறார்கள் அம்மா” என்று அலுத்தபடியே படிப்பைக் குறை கூறிக் கொண்டு வந்தாள் படிக்கிற பெண். அவளுடைய தோற்றத்தைப் பார்த்ததும் பூரணி அசந்து போனாள். பஞ்சாபி பெண்களைப் போலப் பைசாமாவும் சட்டையுமாகக் காண்போரை வலிந்து மயக்கும் தோற்றம். மேகப் பிசிறுகளைத் துணியாக்கினாற் போலத் தோளில் ஒரு மெல்லிய தாவணி. பூரணிக்குக் கண்கள் கூசின. தமிழ்ப் பண்போடு பார்த்துப் பழகிய கண்கள் அவை.
“பெண் அழகாயிருக்கலாம். அது அவளுடைய தவறு இல்லை. ஆனால் அழகாயிருப்பதாகத் தானே பிறரை நினைக்கச் செய்ய வலிந்து முயல்வது எத்தனை பெரிய பாவம்” என்றுதான் அந்தப் பெண்ணின் கோலத்தைக் கண்டபோது பூரணி எண்ணினாள். எண்ணியதை யாரிடம் சொல்வது? யாரிடமும் சொல்லவில்லை.
மங்களேசுவரி அம்மாள் தன் பெண்ணுக்குப் பூரணியை அறிமுகப்படுத்தினாள். அந்தப் பெண்ணுக்குப் பார்வை, பேச்சு எல்லாமே அலட்சியமாக இருந்தன. அந்தப் பெண் ஆங்கிலமும் தமிழும் கலந்து பெரிதாகச் சிரித்து கலகலப்பாகப் பேசினாள். பெண்ணின் பெயர் ‘வசந்தா’ என்று மங்களேசுவரி அம்மாளிடம் கேட்டுத் தெரிந்து கொண்டாள் பூரணி. சிறிது நேரம் பேசினோம் என்று பேர் செய்த பின்னர் பூரணியைக் கீழே தனியே தள்ளி விட்டு விட்டு இரட்டைப் பின்னல் சுழல மாடிக்குப் போய் விட்டாள் வசந்தா. அவள் தலை மறைந்ததும் மங்களேசுவரி அம்மாள், “இவளுக்கு ஆடம்பரம் கொஞ்சம் அதிகம்” என்று பூரணியின் மனநிலையைப் புரிந்து கொண்டவள் போல் சிரித்தவாறு சொன்னாள். பூரணி ஒன்றும் கூறவில்லை. பதிலுக்கு மெதுவாகச் சிரித்தாள்.
“இளையவளுக்குக்கூட இன்று பள்ளிக்கூடம் கிடையாது. ஏதோ சிறப்பு வகுப்பு (தனி வகுப்பு) என்று போனாள். இன்னும் காணவில்லையே” என்று அந்த அம்மாள் சொல்லிக் கொண்டிருந்த போதே இளைய பெண் உள்ளே நுழைந்தாள். அகலக் கரைபோட்ட பட்டுப் பாவாடையும் தாவணியுமாக இந்தப் பெண் அடக்கமாய் அம்மாவைக் கொண்டிருந்தாள்.
“செல்லம்! உனக்கு இந்த அக்காவை அறிமுகப்படுத்தப் போகிறேன். இப்படி வா” என்று இளைய பெண்ணை அழைத்தாள் தாய். இளைய பெண் அடக்கமாக வந்து நின்று கைகுவித்து வணங்கினாள். பூரணிக்கு இவளைப் பிடித்திருந்தது. குடும்பப் பாங்கான பெண்ணாகத் தெரிந்தாள் செல்லம்.
“இவளுக்குப் பேர் மட்டும் செல்லமில்லை. எனக்கும் இவள் தான் செல்லம்” என்று பெருமையோடு இளையப் பெண்ணைப் பற்றிச் சொன்னாள் மங்களேசுவரி அம்மாள்.
“இந்தப் பெண்ணிடம் தான் உங்களைக் காண்கிறேன்” என்று தயங்காமல் தனக்குள்ள கருத்தை அந்த அம்மாவிடம் சொன்னாள் பூரணி. அப்போது மூத்தவள் மாடியிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தாள். பூரணி கூறியது அவள் காதில் விழுந்திருக்குமோ என்று தெரியவில்லை; விழுந்திருந்தாலும் குற்றமில்லை என்பதுதான் பூரணியின் கருத்து.
“உன்னைக் காப்பாற்றியதற்கு வெறும் நன்றி மட்டும் போதாது. அடிக்கடி நீ இங்கு வந்து போய்க் கொண்டிருக்க வேண்டும். நானும் வருவேன். நீ சொல்லியிருக்கிறாயே வாழ்க்கை விபத்து; அதிலிருந்து உன்னைக் காப்பாற்றுவதற்கு நான் ஒரு வழி செய்கிறேன். சீக்கிரமே செய்கிறேன். இப்போது நீ வீட்டுக்குப் புறப்படலாம்” என்று கூறி தன் வண்டியிலேயே பூரணியை ஏற்றி அனுப்பினாள் மங்களேசுவரி அம்மாள். பூரணி புறப்பட்டாள். தானப்ப முதலி தெருவிலிருந்து திரும்பி மேலக் கோபுரத் தெருவில் வண்டிர் நுழைந்தது. மாலை மயங்கி இரவு மலரும் நேரம். வீதியிலே விளக்கொளி வெள்ளம். கண்ணாடி மேல் விழுந்த உளுந்துகள் சிதறிப் பிரிவதுபோல் கும்பல் கும்பலாக மக்கள் கூடிப் பல்வேறு வழிகளில் பிரியும் கலகலப்பான இடம் அது. திரைப்படத்திற்கு நிற்கிற (கியூ) வரிசை, கடைகளின் கூட்டம், நீலமும் சிவப்புமாக விளம்பரம் காட்டும் மின்சாரக் குழல் விளக்குகள் எல்லாம் பார்த்துக் கொண்டே பூரணி வண்டியில் சென்றாள்.
கடைகளில் மின்விளக்குகளில் நியாயம் மொத்தமாகவும் சில்லரையாகவும் எரிந்து கொண்டிருந்தது. வியாபாரம் சுறுசுறுப்பாக நடக்கிற கூட்ட நேரம். வடக்கத்திக்காரன் கடை ஒன்றிலிருந்து சப்பாத்தி நெய்யில் புரளும் மணம் மூக்கைத் துளைத்தது. சோதி என்னும் கரையற்ற வெள்ளம் தோன்றி எங்கும் திரைகொண்டு பாய்வது போன்று இலங்கிற்று அந்த வீதி. வண்டியின் வேகத்தில் ஓடுகிற திரைப்படம் போல அந்தக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டே போன அவள் மனத்தில் சோர்வு வந்து புகுந்தது. வீட்டையும், பசியோடு விட்டு வந்த தங்கை, தம்பியரையும் நினைக்கிற போது கவலை வந்து நிறைந்தது. வண்டி திரும்பித் திரும்பி வழிகளையும் வீதிகளையும் மாற்றிக்கொண்டு விரைந்தது.
‘சாயங்காலம் கமலாவை வீட்டுக்கு வரச்சொல்லியிருந்தேன். அவள் வேறு வந்து காத்திருப்பாள். குழந்தையிடம் பேச்சுக் கொடுத்து வீட்டு நிலைமையைத் தெரிந்து கொண்டிருந்தாளானால் அவள் முகத்தை ஏறெடுத்துப் பார்க்கவே வெட்கமாக இருக்குமே! கடவுளே, உலகத்தில் பசியையும் பண்பையும் ஒரு இடத்தில் ஏன் சேர்த்துப் படைத்திருக்கிறாய்? வயிற்றையும் வாய்மையையும் ஏன் ஒன்றாக இணைக்கிறாய்?’
பூரணியின் நினைவு நிற்கவில்லை. ஆனால் வண்டி நின்று விட்டது. இரயில்வே கேட்டு அடைத்திருந்தது. மதுரையிலிருந்து திருப்பரங்குன்றம் போகும் சாலையில் மூன்று இரயில்வே கேட்டுகள் குறுக்கிடுகின்றன. அந்தச் சாலையில் அது ஓர் ஓயாத தொல்லை. ஆண்டாள் புரத்துக்கு அருகில் உள்ள கதவு மூடியிருந்தது. தெற்கேயிருந்து விரைவுத்தொடர் வண்டி போகிற நேரம்.
விரைவுத்தொடர் வண்டி போயிற்று. கதவைத் திறந்தார்கள். வண்டி மறுபடியும் விரைந்தது. வீட்டு வாசலில் போய் எல்லாரும் காணும்படி வண்டியிலிருந்து இறங்க விரும்பவில்லை அவள். வீதி முகப்பில் மயில் மண்டபத்துக்கு அருகிலேயே இறங்கிக் கொண்டு விட்டாள். “அம்மா வீட்டைப் பார்த்துக் கொண்டு வரச் சொன்னாங்களே” என்றான் ஓட்டுநர். அவனுக்கு அங்கே நின்றே தன் வீட்டை அடையாளம் காட்டிவிட்டு நடந்தாள் பூரணி. வண்டி திரும்பிப் போயிற்று. வீட்டு வாசலுக்கு வந்தவள் வீடு பூட்டியிருப்பதைக் கண்டு திகைத்தாள்.
(தொடரும்)
தீபம் நா.பார்த்தசாரதி
Leave a Reply