மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 77
குறிஞ்சி மலர்
அத்தியாயம் 27 தொடர்ச்சி
“ஏண்டா, முருகானந்தம்! இன்றே உன் வீட்டுக்கு நான் வந்தாக வேண்டுமா, அப்படி என்ன அவசரமப்பா?” என்று கேட்டான் அரவிந்தன். முருகானந்தம் வெட்கப்பட்டுக் கொண்டு சொல்லத் தயங்கினாற்போல் நின்றான். அரவிந்தனுக்குப் புரிந்து விட்டது.
“ஓகோ? உன் திருமண ஏற்பாட்டைப் பற்றி உங்கள் வீட்டில் பெரியவர்களிடம் எடுத்துச் சொல்லிச் சம்மதம் பெற வேண்டுமென்கிறாயா? இதை என்னிடம் சொல்லுவதற்கு வெட்கமென்ன வேண்டியிருக்கிறது? நான் வருகிறேனப்பா. இப்போதே வேண்டுமானால் புறப்படு” என்று விவரம் புரிந்து கொண்டதும் முகமலர்ச்சியோடு வருவதற்கு ஒப்புக் கொண்டு விட்டான் அரவிந்தன்.
நண்பகலில் எங்கும் வெளியேற முடியாதபடி அத்தனை நாட்கள் அவன் ஊரில் இல்லாமையால் சுமந்து கிடந்த வேலைகள் அச்சகத்தில் குவிந்திருந்தன. பூரணி தேர்தலில் நிற்கச் சம்மதம் கொடுத்துவிட்டதனால் மீனாட்சிசுந்தரம் அது சம்பந்தமான ஏற்பாடுகளுக்காகவும், வேலைகளுக்காகவும் இப்போதே அலைவதற்குத் தொடங்கியிருந்தார். அத்தனை வயதுக்கு மேல் திடீரென்று இளைஞராகி விட்டாற் போன்று அவ்வளவு சுறுசுறுப்போடும் உற்சாகத்தோடும் வேலைகளைச் செய்து கொண்டிருந்தார் அவர். அச்சகத்துக்கு வந்திருந்த முக்கியமான கடிதங்களுக்கு மறுமொழி எழுதியும், கணக்குகளைச் சரிபார்த்தும், திருத்த வேண்டிய அச்சுப் பிரதிகளைத் திருத்தியும், அசைந்து கொடுக்க நேரமில்லாமல் வேலைகளைச் செய்தான் அரவிந்தன். மாலை ஐந்தரை மணிக்கு வேலைகள் முடிந்து முகங்கழுவி உடை மாற்றிக் கொண்டு அவன் தயாராக இருந்தபோது முருகானந்தம் வந்து அழைத்துக் கொண்டு போய்விட்டான். இருவரும் பேசிக் கொண்டே நடையில் கிளம்பிவிட்டார்கள். மதுரை ஆலைக்கு அருகில் இரயில் பாதை ‘லெவல் கிராசிங்‘கில் நடந்து போக இடமில்லாமல் ஒரே கும்பலாக இருந்தது. அந்த வழியாகத்தான் அவர்கள் பொன்னகரத்துக்குப் போய்க் கொண்டிருந்தார்கள்.
“கொஞ்சம் இரு அரவிந்தன்! அது என்ன கும்பலென்று பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன்” என்று கூறி அரவிந்தனை நிறுத்திவிட்டுக் கும்பலுக்குள் புகுந்தான் முருகானந்தம்.
சிறிது நேரம் கழித்து அவன் கூட்டத்திலிருந்து வெளியேறி வந்தான்.
“வா… போகலாம் அரவிந்தன்” என்று அரவிந்தனுடைய கையைப் பிடித்துக் கொண்டே மேலே வழி விலக்கிக் கொண்டு நடந்தான் முருகானந்தம்.
“மாலையில் வெளியான செய்தித்தாளில் ஏதோ பரீட்சை முடிவு வெளியாயிற்றாம். பரீட்சையில் தேறாத மாணவன் ஒருவன், ‘என்னுடைய தற்கொலைக்கு யாரும் காரணமில்லை. நான் பரீட்சையில் தேறாத ஏமாற்றமே காரணம்’ என்று சட்டைப் பையில் கடிதம் எழுதி வைத்துக் கொண்டு இரயிலுக்கு முன் விழுந்து விட்டான். கையும் காலும் துண்டாகி இரத்த வெள்ளத்தில் எடுத்துக் கிடத்தியிருக்கிறது. பார்க்கச் சகிக்கவில்லை.”
“அடப் பாவமே!”
“பாவமாவது, புண்ணியமாவது அரவிந்தன்! நம்முடைய பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் வாழ்வதற்குச் சொல்லிக் கொடுக்கிறார்களா? அல்லது இம்மாதிரி சாவதற்குச் சொல்லிக் கொடுக்கிறார்களா? வாழும் தைரியத்தைக் கற்பிக்காத கோழைத்தனமான ஏட்டுப் படிப்பு ஒன்று இருக்குமானால் அது இந்த நாட்டுக்கே அவமானம். படிப்பு முயற்சியையும் நம்பிக்கையையும் தூண்டி, உற்சாகப்படுத்துகிற சஞ்சீவி மருந்தாக இருக்க வேண்டாமோ? வாழவும் விடாமல் சாகவும் விடாமல் இது என்ன படிப்பு?”
“இங்கே தான் கல்லூரிகளெல்லாம் விளம்பரப்பலகை மாட்டாத ‘போர்டிங் அண்டு லாட்சிங்’ ஓட்டல்களாக இருக்கின்றனவே அப்பா? வாழ்க்கையிலேயே சோர்வடைந்தவர்கள் ஆசிரியர் தொழிலுக்கு வருகிறார்கள். அல்லது ஆசிரியராக வந்தபின் அந்த சோர்வை அடைகிறார்கள். இப்படிச் சோர்வடைந்தவர்கள் கற்பிக்கும் உள்ளங்களில் எப்படி ‘வாழும் தைரியம்’ வளரும்? கவி தாகூரின் விசுவ பாரதி பல்கலைக்கழகத்தையும், சாந்தி நிகேதனத்தையும் போல் மாகாணத்துக்கு ஓர் இலட்சியக் கல்லூரியாவது இந்த நாட்டுக்கு வேண்டும். அப்போதுதான் ‘வாழும் தைரியத்’தைக் கற்பிக்க முடியும்.”
“சோர்வடைந்தவர்கள் என்று ஆசிரியர்களை மட்டும் குறைசொல்லிப் பயனில்லை, அரவிந்தன்! பாரத நாட்டுக்குக் குடியரசு வாழ்வு வந்த பின்னும் ஆசிரியர்கள் பாடு பிடியரிசி வாழ்க்கைதான். எல்லாரும் சேர்ந்து மொத்தமாக மறந்து விடவேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டு மறந்துவிட்ட இனம் ஆசிரியர் இனம்தான். இப்போது இந்தப் பையன் விழுந்து செத்திருக்கிறானே, இதே இரயில்வே ‘லெவல் கிராசிங்’கில் பதினைந்து நாளைக்கு முன் நாலைந்து பெண்களுக்குத் தந்தையான ஓர் ஆரம்பப் பள்ளிக்கூட ஆசிரியர் ‘அந்தப் பெண்களுக்கெல்லாம் திருமணம் செய்து கொடுக்கப் பணவசதி இல்லாததால் சாகிறேன்’ – என்று கடிதம் எழுதி வைத்துவிட்டுச் செத்தார். அநேகமாக இந்தப் பகுதியில் போகிற இரயில்களின் சக்கரங்களில் மனித இரத்தம் படாத நாளே இருப்பதில்லை.”
“வேலை கிடைக்காத வாலிபர்களும், திருமணமாகாத பெண்களும் இன்று இந்த நாட்டின் மிகப்பெரிய பிரச்சினைகள் முருகானந்தம். பெரும்பாலான தற்கொலைகளுக்கு இந்த இரு பிரச்சினைகளே காரணம். ‘புல்லினில் வைரப்படை தோன்றுங்கால் பூதலத்தில் பராசக்தி தோன்றுவாள்’ என்று பாரதி பாடினான். இந்தப் பெரிய பிரச்சினைகள் வைரம் பாய்ந்தவையாக மாறினால் ‘இந்த நாட்டில் ஏன் பிறந்தோம்?’ என்று ஒவ்வொருவரும் கொதிப்படைய நேரிடும். தெருவின் இருபுறங்களிலும் நடந்து போகிறபோதே துன்பமும், நோயும், மரணமும் தென்படுவதைக் கண்டால் ஒரே ஒரு கணம் புத்தருக்கு உண்டான உணர்வு போல் ‘இந்த உலகத்தை இப்படியே விடக்கூடாது. இவற்றைப் போக்க நிரந்தரமான மருந்து தேட வேண்டு’மென்று தணியாத தவிப்பு உண்டாகிறது. ஆனால் அடுத்த வினாடியே அந்தத் தவிப்பு மரத்துப் போய்விடுகிறதே?”
இருவரும் மனம் நொந்த நிலையில் உணர்ச்சி வசப்பட்டுப் பேசியவாறே நடந்து கொண்டிருந்தார்கள். தலை மயிரிலும் உடம்பிலும் பிஞ்சுப் பிசிறுகள் படிந்து சோர்ந்த கோலத்தில் ஆலைக் கூலிக்காரப் பெண்கள் தெருவில் கூட்டமாக நடந்து கொண்டிருந்தார்கள். பஞ்சாலை எந்திரங்களின் ஓசை தெருவின் எல்லை வரை குறைவின்றி ஒலித்துக் கொண்டிருந்தது.
“அரவிந்தன் இந்த வட்டாரத்தில் நாள் ஒன்றுக்கு எப்படியும் நாலைந்து தற்கொலைக்குக் குறைவதில்லை. போதாத குறைக்கு இப்போது மூட்டைப்பூச்சி மருந்து என்று சுலபமாகத் தற்கொலை செய்து கொள்ள ஒரு மருந்து வந்து தொலைத்திருக்கிறது.”
“வாழ்வதற்கு மருந்து தெரியவில்லை. அது கிடைக்கிற வரை சாவதற்கு மருந்து தேடிக் கொண்டுதான் இருப்பார்கள்” என்று மனம் புண்பட்ட பொருளில் மெல்லச் சொன்னான் அரவிந்தன்.
பொன்னகரத்தில் முருகானந்தத்தின் வீட்டில் ஒரு மணிநேரத்துக்கு மேல் தாமதித்தான் அரவிந்தன். “பையனுக்கு பெரிய இடத்திலிருந்து பெண் வருகிறது” – என்றவுடன் முருகானந்தத்தின் பெற்றோர் திகைத்து மருண்டனர். அவர்களுக்கு எல்லாவற்றையும் விவரமாக எடுத்துக்கூறி விளக்க வேண்டியிருந்ததனால் அரவிந்தனுக்கு அவ்வளவு நேரமாயிற்று. கடைசியில் அவர்களுடைய இசைவையும் பெற்றுவிட்டான். அரவிந்தன் சொல்லி அவர்கள் எதையும் மறுத்ததே இல்லை. ‘பொறுப்புத் தெரிந்த பிள்ளை’ என்று அவனைக் கொண்டாடுவார்கள் முருகானந்தத்தின் பெற்றோர். அரவிந்தன் கோடைக்கானலிலிருந்து புறப்படும் போது, ‘முருகானந்தத்தின் பெற்றோரைக் கலந்து கொண்டு முடியுமானால் நிச்சயதாம்பூலத்துக்கு ஒருநாளும் குறிப்பிட்டு எழுதவேண்டும்’ என்று மங்களேசுவரி அம்மாள் அவனிடம் வேண்டிக் கொண்டிருந்தாள். அந்த அம்மாள் வேண்டிக் கொண்டிருந்தபடி அப்போதே அங்கே ஓர் அட்டையில் விவரம் எழுதி நான்கு நுனியிலும் மஞ்சள் தடவி மறுநாள் கோடைக்கானலில் கிடைக்கிறாற் போல் அவசரமாகத் தபாலிலும் சேர்க்கச் செய்துவிட்டான் அரவிந்தன். அவர்கள் எல்லாரும் வற்புறுத்தியதால் இரவுச் சிற்றுண்டியை அங்கேயே சாப்பிட வேண்டியதாயிற்று.
பொன்னகரத்திலிருந்து அவன் அச்சகத்துக்குத் திரும்பிய போது, இரவு சுமார் எட்டு மணி இருக்கலாம். அந்த நேரத்திலும் அங்கே முன் பக்கத்து அறையில் விளக்கு வெளிச்சம் தெரிந்தது. திருநாவுக்கரசு ஏதாவது வரவு செலவுக் கணக்கை எழுதிக் கொண்டிருப்பான் என்று நினைத்து உள்ளே நுழைந்த அரவிந்தன் மீனாட்சிசுந்தரமே அங்கு இருப்பதைப் பார்த்து வியப்புற்றான். கன்னத்தில் கையூன்றிக் கொண்டு சோர்ந்து போனாற் போல் கவலையோடு ஏதோ சிந்தித்துக் கொண்டிருக்கிற மாதிரி இருந்தார் அவர். முகம் பார்க்க நன்றாக இல்லை. இந்த விதமாக மிகவும் தளர்ந்த நிலையில் பெரும்பாலும் அவரைப் பார்த்ததில்லை அவன். மிகச் சில சமயங்களில் மட்டுமே இத்தகைய நிலையில் அவரைக் கண்டிருக்கிறான்.
(தொடரும்)
தீபம் நா.பார்த்தசாரதி
குறிஞ்சி மலர்
Leave a Reply