மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 21
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 20 தொடர்ச்சி)
குறிஞ்சி மலர்
அத்தியாயம் 8 தொடர்ச்சி
“செல்லம், அந்த அக்காவை விட்டுவிடாதே. அடுத்த மாதம் முதல் மாதர் சங்கத்திலே தினம் சாயங்காலம் இவங்க தமிழ்ப் பாடமெல்லாம் சொல்லிக் கொடுக்கப் போறாங்க. நீயும் தவறாமப் போகணும்” என்று சிரித்துக் கொண்டே பெண்ணுக்குச் சொன்னாள் மங்களேசுவரி அம்மாள்.
“இந்த அக்கா சொல்லிக் கொடுப்பதாக இருந்தால் நான் இருபத்து நாலுமணி நேரமும் மாதர் சங்கத்திலே இருக்கத் தயார் அம்மா” என்றவாறே புள்ளிமான் போல துள்ளிக் குதித்து ஓடிவந்து பூரணியின் கையோடு தன் கைகளைக் கோர்த்துக் கொண்டு நகைத்தாள் செல்லம். நேரமாயிற்று. பூரணி புறப்பட்டாள். “வண்டிஓட்டியை வண்டி எடுக்கச் சொல்கிறேன். திருப்பரங்குன்றத்தில் போய் இறங்கிக் கொண்டு வண்டியைத் திருப்பி அனுப்பி விடு” என்று அந்த அம்மாள் கூறியதை மறுத்துவிட்டாள் பூரணி.
“என்னை நடந்து போகவிடுங்கள் அம்மா! அதிகப்படியான பெருமைகளைக் கொடுத்து வேதனைப் படுத்தாதீர்கள். இந்த மதுரை நகரத்தில் தெருக்களில் வாழ்க்கை இருக்கிறது. அந்த வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் பிச்சைக்காரத்தனமும், பெருந்தனமும் கலந்து உயிர்களைத் துடிக்க வைக்கிறது. திறந்த புத்தகத்தின் பக்கங்களைப் போல் வாழ்க்கை எழுதுண்டு கிடக்கும். இந்தச் சீரிய வீதிகளைக் கண்களால் அனுபவித்துப் படித்து மனதில் அசைபோட்டுக் கொண்டே போவேன் நான். அது எனக்குப் பிடிக்கும். பேருந்து நிலையத்திற்குப் போய் பின்பு பேருந்து ஏறிக்கொள்வேன். எனக்கு வண்டியும் வேண்டா, ஓட்டுநரும் வேண்டா.”
தெருவில் பூரணி வேகமாக நடந்தாள். விதவையின் திலகமிழந்த முகத்தைப் போல் ஞாயிற்றுக்கிழமை கடை வீதியில் கலகலப்பு இருப்பதில்லை! களை இருப்பதில்லை! நடந்து சென்று கொண்டிருந்தாள். அந்த விளம்பரப் பலகையைப் பார்த்துவிட்டு சிறிது திகைத்து நின்றாள். முகம் சற்றே மலர்ந்தது. ‘மீனாட்சி அச்சகம், குறித்த நேரம், குறைந்த செலவு’ என்று மெல்ல வாய்க்குள் படித்துக் கொண்டாள். அச்சகத்து முன் கதவு அன்று ஞாயிறு விடுமுறையின் அடையாளமாகச் சாத்தியிருந்தாலும் முகப்பு அறையில் விளக்கு எரிவதும் அரவிந்தன் அமர்ந்திருப்பதும் நடைபாதையிலிருந்தே அவளுக்கு நன்றாகத் தெரிந்தன. முதல்நாள் எந்த இடத்தில் மயங்கி விழுந்தாளோ, அந்த இடத்துக்கு மிக அருகில் தான் நிற்பதை அவள் உணர்ந்தாள். இந்த இடத்தில் மயங்கி விழுந்திராவிட்டால் அரவிந்தன் என்னை அப்படிப் பாடியிருக்க மாட்டாரே என்று நினைத்துக் கொண்டபோது இன்பச் சிலிர்ப்பு சிரித்தது அவள் மனத்தில். காலையில் முகவரி அட்டை வாங்கி வைத்துக் கொண்ட போது மறுநாள் தான் அவனைப் பார்க்க வருவதாகச் சொல்லியிருந்தாள் அவள். அதனால் என்ன? இப்பொழுது பார்க்கக் கூடாதென்று சட்டம் ஒன்றுமில்லையே!
பூரணி சற்று நெருங்கி சன்னல் அருகே நின்று பார்த்தாள். உள்ளேயிருந்து தற்செயலாகத் திரும்பிய அரவிந்தன் அவள் வாய் திறந்து கூப்பிடுவதற்கு முன்பே அவளைப் பார்த்து விட்டான்.
“ஓ! நீங்களா? ஏது இந்த நேரத்தில்… நாளைக்கு அல்லவா வருவதாகச் சொல்லியிருந்தீர்கள்?” என்று விசாரித்துக் கொண்டே கதவைத் திறப்பதற்காக எழுந்து வந்தான் அரவிந்தன். ‘அந்த இரவு நேரத்தில் வீணாக அவரைத் தொந்தரவு படுத்தாமல், வீட்டுக்குப் போயிருக்கலாமே’ என்று முன்பு நினைத்ததற்கு மாறாக இப்போது நினைத்தாள் அவள். சிறிது நாணமும் வந்து தயங்கச் செய்தது. ஒல்கி ஒதுங்கி ஒசிந்து நின்றாள்.
“உள்ளே வாருங்களேன்… வாசலில் நிற்பானேன்?” கதவைத் திறந்துவிட்டுக் கூப்பிட்டான் அரவிந்தன். நினைப்பவர் மனத்தில் வித்தாக விழுந்து கனவுகளை முளைக்கச் செய்யும் அந்த அதியற்புத மாயப்புன்னகை அவன் இதழ்களில் தோன்றி நின்றது. பூரணி உள்ளே போய் உட்கார்ந்தாள். மேசை மேல் கொஞ்சம் நிலக்கடலைப் பருப்பும் ஒரே ஒரு மலைவாழைப் பழமும், குவளை நிறைய பாலும் வைத்திருந்தான். பூரணி அவற்றைப் பார்த்துவிட்டுக் கேட்டாள்.
“இதெல்லாம் என்ன?”
“இவை என்னுடைய இரவு உணவு”. உள்ளே வந்து அவளுக்குச் சற்றுத் தள்ளி நின்றுகொண்டு பதில் கூறினான் அரவிந்தன்.
“இந்தச் சிறிய வாழைப்பழமும், கொஞ்சம் கடலைப் பருப்பும் கொஞ்சம் பாலும் எப்படிப் போதும் உங்களுக்கு?”
இதைக்கேட்டு அரவிந்தன் சிரித்தான்.
“போதுமா, போதாதா? என்று தீர்மானம் பண்ணுகிற உரிமையை வயிற்றுக்கு விட்டால், போதாது என்றுதான் தீர்மானம் ஆகும். நான் அந்த உரிமையை மனத்துக்குக் கொடுத்துப் ‘போதும்’ என்று தைரியமாகப் பழகிக் கொண்டு விட்டேன். இது ஏழைகள் நிறைந்த நாடு. மூன்று வேளை அரிசிச் சோறும் நாலாவது வேளைக்கு சிற்றுண்டியுமாக வாழ்கிறவர்கள், மற்றொரு பக்கத்து நிலைமையையும் நினைத்துப் பார்க்க வேண்டும். ஒரு வேளைக்குக் கூட வயிறு நிறையச் சோறு இல்லாமல் இருப்பவர்கள் எத்தனை ஆயிரம் பேர்கள் இருக்கிறார்கள் இந்த நாட்டில்? அவர்களுடைய குழிந்த வயிற்றுக்காக நூற்றில் ஒருவராவது கவலைப்பட வேண்டாமா? அக்கறை காட்ட வேண்டாமா?”
“அதற்காக நீங்கள் அரை குறையாகச் சாப்பிட்டுவிட்டுப் பட்டினிக் கிடக்க வேண்டுமென்பதில்லையே?”
“தவறு! நான் பட்டினி கிடக்கவில்லை. பகல் உணவைப் பசிக்காக உண்கிறேன். மற்ற நேரங்களில் மனம் நிறைவதற்குத் தான் உண்கிறேன். வயிறு நிறைவதற்கு அல்ல. எனது இந்த உணர்வுக்கு மூன்றே அணாக்கள் தான் செலவு. இப்படி மீதம் பிடிக்கும் காசுகளை இந்தத் தெருவில் குழந்தையும் கையுமாகப் பிச்சைக்கு வரும் பெண்களுக்குத் தருகிறேன். பெண்கள் புனிதமான தாய்க்குலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தெருப் புழுதியில் நடந்து பிச்சையெடுக்கும் நிலை வருவது ஒரு நாட்டுக்கு எவ்வளவு கேவலம்? வீட்டு வாயில்படியில் வந்து நிற்கும் பிச்சைக்காரர்களுக்கு எல்லாம் உணவு அளித்து, அறம் வளர்க்கும் அன்னபூரணிகள் பெண்கள். அவர்களே வீடு வீடாகப் படியேறிப் பிச்சைக் கேட்க வரும்படி விடுவது எவ்வளவு ஈனமான காரியம்?” அரவிந்தன் கொதிப்போடு பேசினான். இதைப் பேசும்போது, முகம் சிவந்து உதடுகள் துடித்தன அவனுக்கு.
“நீங்கள் கூறுவது உண்மை. இப்போதெல்லாம் மதுரையில் பெண் பிச்சைக்காரர்கள் அதிகமாகிவிட்டார்கள்” என்ற பூரணியை நோக்கி, மேலும் அவன் கூறலானான்.
“கோபுரமும் கடைவீதியும் பங்களாக்களும் திரையரங்கங்களும் நிறைந்த அழகிய மதுரையைத்தான் நீங்கள் பார்க்கிறீர்கள். இன்னொரு மதுரையையும் இங்கே நான் பார்க்கிறேன். தொடர் வண்டி நிலையத்திலிருந்து வெளியே வருகிற வழியில் தூங்குமூஞ்சி மரங்களின் கீழ் வெய்யிலே கூரையாய், மழையே கருணையாய்ச் சேற்றிலும் புழுதியிலும் வாழ்கிற அனாதைகளின் அழுக்கு மயமான மதுரையைப் பற்றி யாராவது கவலைப் படுகிறார்களா? யாராவது நினைக்கிறார்களா?”
அந்தக் கருத்துகளைக் கேட்கக் கேட்க அந்த முகத்திலே ஒளிரும் இலட்சியச் சாயையைப் பார்க்கப் பார்க்க அரவிந்தனுடைய கம்பீரமும் அவனது இலட்சியமும் மனத்தின் நினைவுகளில் அடங்காத அளவுக்கு உயரத்தில் இருப்பதைப் பூரணி உணர்ந்து கொண்டாள்.
வெளியில் போய்ப் பக்கத்துப் பால்கடையில் இன்னொரு குவளைப் பாலும் இரண்டு மலைப்பழமும் வாங்கிக் கொண்டு வந்து “இவற்றை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று பூரணியை உபசாரம் செய்தான் அரவிந்தன். அவள் அந்த உபசாரத்தை ஏற்றுக் கொண்டாள். அரவிந்தனைப் பற்றி நினைக்கும் போது, “உன்னைப் போன்று இன்னொருவர் இருக்க முடியாதபடி நீ உயர்ந்து நிற்கிறாய். நினைக்கின்றவர்கள் மனத்தில் வித்தாக விழுந்து எண்ணங்களாக முளைக்கிறாய்” என்று தேவாரத்தில் வருகிற கருத்துதான் பொருத்தமாகத் தோன்றியது பூரணிக்கு. அவனுடைய மனத்தின் எல்லை பெரியது. அவனோடு பேசிக் கொண்டிருந்ததில் நேரம் கழிவதே தெரியவில்லை. முகத்தையும் சிரிப்பையும் போலவே பேச்சும் கவர்ச்சியாயிருந்தது அவளுக்கு. வெளியே இருந்தாற் போலிருந்து மழை தூறத் தொடங்கியிருந்தது. முதலில் தூறலாக இருந்த மழை சிறிது நேரத்தில் தெருவில் நடந்தால் நனைந்து போய்விடுகிற அளவுக்கு வலுத்துவிட்டது. பூரணி அச்சகத்தின் சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தாள். மணி பத்தரை ஆவதற்கு இருந்தது.
“அடடா! உங்களோடு பேசிக் கொண்டிருப்பதில் நேரமானதே தெரியவில்லை. பத்தரை மணியோடு பேருந்துப் போக்குவரத்து சரி. அப்புறம் நான் எப்படி ஊருக்குப் போவது?” என்று பரபரப்பாக கூறிக்கொண்டே புறப்பட எழுந்தாள் பூரணி.
“மழை பெய்கிறதே. எப்படிப் போவீர்கள்? நீங்கள் பேருந்து நிலையத்திற்குப் போவதற்குள் கடைசி வண்டி போய்விட்டால் என்ன செய்வீர்கள்?”
“எப்படியாவது போய்ச் சேர்ந்தாக வேண்டுமே? வேறென்ன செய்வது?” அவளுடைய தவிப்பு அரவிந்தனுக்குப் புரிந்தது. உள்ளே போய் ஒரு குடை கொண்டு வந்தான்.
“இதை நீங்கள் பிடித்துக் கொள்ளுங்கள். நானும் பேருந்துநிலையம் வரையில் உங்களோடு வருகிறேன். கடைசி வண்டி போய்விட்டால் வேறு ஏற்பாடு செய்து கொள்ளலாம்” என்று அவளுடைய மறுமொழியை எதிர்பாராமலே கதவைப் பூட்டிக் கொண்டு கிளம்பிவிட்டான் அரவிந்தன்.
“ஒரு குடைதானே இருக்கிறது. நீங்கள் எப்படி வருவீர்கள்? வீணாக நனைய வேண்டா. நான் எப்படியாவது போய்க் கொள்கிறேன். நீங்கள் அலையாதீர்கள்” என்று சொல்லி விட்டுத் தெருவில் இறங்கிய பூரணியை அரவிந்தன் தனியாக விடவில்லை. பிடிவாதமாக உடன் புறப்பட்டுவிட்டான்.
“அதனால் பரவாயில்லை! எனக்குச் சிறு பிள்ளையிலிருந்தே மழையில் நனைவதென்றால் மிகவும் பிடிக்கும். வெய்யிலும் மழையும் வானம் பூமிக்குத் தரும் சௌபாக்கியங்கள். அவற்றை நாம் ஏன் வெறுத்துப் புறக்கணிக்க வேண்டும்!” என்று சொல்லி விட்டுச் சிறு குழந்தைபோல் சிரித்துக் கொண்டு அவளைப் பார்த்தான் அவன். இருவரும் வேகமாக நடந்தார்கள். நல்ல மழை. அரவிந்தனை நனையவிட்டு தான் மட்டும் குடையின் கீழ் நனையாமல் போவது வேதனையாக இருந்தது பூரணிக்கு. அவனோ விளையாட்டுப் பிள்ளைபோல் உற்சாகமாக மழையில் நனைந்து கொண்டு வந்தான். ‘மனத்தில் இடம் கொடுத்து விட்டேன். குடையில் இடம் கொடுக்க ஏன் நாணப்பட வேண்டும்?’ என்று நினைவுகள் புரளும் மனத்தோடு தெருவிளக்கின் மங்கி நனைந்த மழை வெளிச்சத்தில் அவனைத் திரும்பிப் பார்த்தாள் அவள்.
அழகிய சிவந்த நெற்றியில் முத்து முத்தாக நீர்த்துளி உருள அலை அலையாக வாரிப் படிந்த தலையில் ஈரம் மினுமினுக்க அரவிந்தன் வந்து கொண்டிருந்தான்.
“நீங்களும் உடன் வரலாம். நனையாதீர்கள்” என்று அவளாகவே அருகில் நெருங்கிச் சென்று குடையை அவனுக்கும் சேர்த்துப் பிடித்தாள். வனப்புமயமான அந்தப் பெண்ணின் பொன்னுடல் தனக்கு மிக அருகில் நெருங்கிய அந்த ஒரு கணத்து அண்மையில் மல்லிகைப் பூவின் மணமும் பன்னீரின் குளிர்ச்சியும் பச்சைக் கற்பூரத்தின் புனிதமும் ஒன்றாக இணைந்த ஒரு பவித்திர மயமான உணர்வு அரவிந்தனுக்கு ஏற்பட்டது. அந்த உணர்வில் அவனுடைய நெஞ்சும் உடலும் சிலிர்த்து ஓய்ந்தன. தாமரைப்பூ மலர்வது போல் மனத்தில் ஏதோ நெகிழ்ந்து இதழ்கள் பிரிந்தன.
அடுத்த கணம் தன்னுணர்வுடன், “வேண்டா! இந்தச் சிறிய குடையில் இரண்டு பேர்கள் போவதனால் இரண்டு பேருமே நன்றாக நனைய நேரிடும். நீங்களாவது நனையாமல் வாருங்கள்” என்று சொல்லிப் புன்னகையோடு தானாகவே விலகிக் கொண்டு நடந்தான் அரவிந்தன். ஒரே ஒரு விநாடி அன்பில் நனைந்து மூழ்கிய பெருமிதத்தோடு மறுபடியும் அவள் அருகே மழையில் நனையலானான் அவன். பூரணி அனுதாபமும் அன்பும் மிதக்கும் கண்களால் அந்த வயது வந்த குழந்தையைப் பார்த்துக் கொண்டே கன்னக்கனிகள் கனிய முறுவல் பூத்தவாறே நடந்தாள்.
அவர்கள் பேருந்து நிலையத்தை அடைந்தபோது கடைசி வண்டியும் போய்விட்டது. அந்த நேரத்தில் தனியாக ரிக்குசாவிலோ, குதிரை வண்டியிலோ போவதைப் பூரணி விரும்பவில்லை. தயங்கினாள். “நான் வேண்டுமானால் துணைக்கு வருகிறேன். குதிரை வண்டியில் போகலாம்” என்றான் அரவிந்தன். அவள் அதற்கும் தயங்கினாள். மழையில் அவனும், குடையில் அவளுமாக நனைந்து கொண்டும் நனையாமலும் பேருந்து நிலையத்தின் முன் நின்று கொண்டிருந்தார்கள் அவர்கள்.
“நடந்தே வேண்டுமானாலும் போகலாம்; நான் துணை வருகிறேன்.”
“திருப்பரங்குன்றம் வரையில் நனைந்து கொண்டேயா?”
“திருப்பரங்குன்றம் வரை என்ன? உங்களோடு இப்படியே கன்னியாகுமரி வரையில் கூட நனைந்து கொண்டு வர நான் தயார்” என்று கூறிச் சிரித்தான் அரவிந்தன். சர்ரென்று மழை நீரும் சேறும் வாரி இறைபட ஒரு வண்டி வந்து நின்றது. அரவிந்தனுடைய சட்டையில் சேறு தெறித்துவிட்டது. கோபத்தோடு அந்தக் கருவம் பிடித்த வண்டிக்காரனை விசாரிக்கத் திரும்பினான் அரவிந்தன். மீனாட்சி அச்சக உரிமையாளர் மீனாட்சிசுந்தரம் வண்டியிலிருந்து இறங்கி அவனை நோக்கி வந்தார்.
(தொடரும்)
Leave a Reply