(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 26 தொடர்ச்சி)

குறிஞ்சி மலர்

அத்தியாயம் 11

மண்மீதில் உழைப்பார் எல்லாம் வறியராம்! உரிமை கேட்டால்
புண்மீதில் அம்பு பாய்ச்சும் புலையர் செல்வராம்! இதைத்தன்
கண்மீதில் பகலில் எல்லாம் கண்டு கண்டு அந்திக்குப் பின்
விண்மீனாய்க் கொப்பளித்த விரிவானம் பாராய் தம்பி.
      – பாரதிதாசன்


மனிதர்கள் ஒருவர் மேல் வெறுப்பும் பொறாமையும் கொண்டுவிட்டால் கைகூடாமல் எவ்வளவு பெரிய கொடுமைகளையும் செய்வார்களென்று பூரணி கதைகளில்தான் படித்திருந்தாள். கதைகளில் அவை பொருத்தமில்லாமல் செயற்கையாகத் தோன்றும் அவள் சிந்தனைக்கு. இப்போதோ அப்படி ஒரு கொடுமை அவள் முகவரியைத் தேடிக் கொண்டு வந்து அவளைப் பெருமைப்படுத்துவோர் முன்பு அவள் தலைகுனிந்து நிற்கும்படி செய்திருக்கிறது. எவர்களுக்கு முன் ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் பற்றி அவள் மணிக்கணக்கில் நின்று கொண்டு சொற்பொழிவுகள் ஆற்றினாளோ, அவர்களே அவளுடைய ஒழுக்கத்தைப்பற்றி ஐயப்படுகிறார்கள். அன்று வந்திருக்கும் அக்கடிதம் அவ்வாறு ஐயப்படச் செய்கிறது. மொட்டைக் கடிதம் தான். ஆனால் அவளை வேலைக்கு வைத்துக் கொண்டு சம்பளம் கொடுக்கிறவர்கள் அதை உண்மை என நம்புகிறார்களே? அரவிந்தனுக்கும், அவளுக்கும் இருக்கும் தூய நட்பைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையுமே இழிவான முறையில் எழுதி அவளை அங்கே வேலைக்கு வைத்துக் கொள்ளாமல் நீக்கிவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தது அந்த மொட்டைக் கடிதம். யாருடைய வெறுப்பு முதிர்ந்து இந்தத் தீமை தனக்கு வந்திருக்க முடியுமென்பதும் அவளுக்கு ஒருவாறு புரிந்தது. சற்றுமுன் சொற்பொழிவில் கிடைத்த புகழும், பெருமிதமும் அவள் மனத்துக்குள் தந்திருந்த நிறைவு இப்போது எங்கே போயிற்றென்று தெரியவில்லை. பரிதாபத்துக்குரியவளாகப் பேச வாயின்றிக் கூனிக் குறுகிக் கொண்டு கூசிப்போய் காரியதரிசி அம்மாளின் முன் நின்றாள் பூரணி. அந்த அம்மாள் கடுகடுப்போடு எரிந்து விழுகிற தொனியில் அவளைக் கேட்டாள்.

“இதற்கு நீ என்ன பதில் சொல்கிறாய்? இது கௌரவமானவர்களால் நடத்தப்படும் கண்ணியமான சங்கம். சிறியவர்களும் பெரியவர்களுமாக நல்ல குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் பழகுகிற இடம். இங்கே சொல்லிக் கொடுக்கிறவர்கள் மற்றவர்களுக்கு முன் மாதிரியாகத் தங்கள் தூய்மையைக் காப்பாற்றிக் காண்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் குடம் பாலில் துளி நஞ்சு கலந்த மாதிரி எல்லாமே கெட்டுப் போகும். இப்படி அசிங்கமும் ஆபாசமுமாகக் கடிதம் வருகிறாற்போல் நீ நடந்து கொள்ளலாமா?”

பூரணிக்குக் கண்களில் நீர் மல்கிவிட்டது. தொண்டை கரகரத்து நைந்த குரலில் அவள் அந்த அம்மாளை எதிர்த்து வாதாடினாள்; “உங்களை எதிர்த்துக் குறுக்கே பேசுவதற்காக மன்னிக்க வேண்டும் அம்மா. யாரோ விலாசம் தெரியாத ஆள் என்னைப் பற்றி தவறான கருத்தை உண்டாக்க வேண்டுமென்று என்னென்னவோ எழுதியிருந்தால் அதனால் என் தூய்மை குறைந்ததாக நான் ஏன் ஒப்புக் கொள்ளவேண்டும்? இந்தக் கடிதத்தைப் பற்றி இவ்வளவு அக்கறை எடுத்துக் கொண்டு நீங்கள் என்னைக் கூப்பிட்டு இப்படியெல்லாம் பேசுவது நன்றாயில்லை.”

“நெருப்பில்லாமல் புகையுமா? யார் இந்த அரவிந்தன்? அவனோடு உனக்கு எப்படிப்பட்ட விதத்தில் பழக்கம்? எத்தனை நாட்களாகப் பழகுகிறீர்கள் இருவரும்?”

“அவர் ஓர் அச்சகத்தில் வேலை பார்க்கிறார். என் தந்தையின் புத்தகங்கள் அவருடைய மேற்பார்வையில் வெளியாகின்றன. சிறந்த இலட்சியங்களும், பண்புகளும் உள்ளவர். அந்த இலட்சியங்களையும் அவரையும் மதித்து அன்பு செலுத்துகிறேன். பழகுகிறேன். இதில் தூய்மைக் குறைவு இருப்பதாக நான் நினைக்கவில்லை. மற்றவர்களும் நினைக்க முடியாது.”

“மற்றவர்கள் நினைப்பதைப் பற்றி நீ தடுக்க முடியாது. பனைமரத்தின் கீழ் நின்று பாலைக் குடித்தாலும் உலகம் வேறு விதமாகத்தான் சொல்லும்.”

இதற்கு மேல் அங்கே அந்த அம்மாளுக்கு முன் நின்று பதில் சொல்லிக் கொண்டிருக்கப் பொறுமை இல்லை பூரணிக்கு. ஒன்றும் பேசாமல் விறுவிறுவென்று கீழே இறங்கி மங்களேசுவரி அம்மாளின் வீட்டுக்குப் போனாள் அவள்.


“வா பூரணி! இன்றைக்கு உன் பேச்சு பிரமாதமாக இருந்ததென்று இப்போதுதான் செல்லம் வந்து சொல்லிக் கொண்டிருந்தாள். எனக்கு உடல் நலமில்லை. அதனால் தான் வரமுடியாது போயிற்று. வசந்தா கூட ஏதோ கேள்வி கேட்டாளாமே? நன்றாகப் பதில் கூறினாய் என்று செல்லம் சொன்னாள்…” என்று உற்சாகமாக வரவேற்ற அந்த அம்மாள் பூரணியின் முகத்தைப் பார்த்ததும் திகைத்தாள்.


“என்னவோ போலிருக்கிறாயே! உடம்புக்கு என்ன? முகத்தைப் பார்த்தால் ஒரு மாதிரி தோன்றுகிறதேயம்மா?” என்று பரபரப்படைந்து வினவினாள் மங்களேசுவரி அம்மாள். மௌனமாகச் சோர்வுடன் அந்த அம்மாளின் அருகிலே போய் உட்கார்ந்து கொண்டு சற்று நேரம் கழித்து நிதானமாக பதில் சொன்னாள் பூரணி.


“அம்மா! உங்கள் மங்கையர் கழகத்தில் தூய்மையைப் பற்றிப் பேசச் சொல்கிறார்கள், கேட்கிறார்கள், புகழ்கிறார்கள். ஆனால் அவர்கள் உள்ளங்கள், தூய்மையை நம்புவதற்கு மறுக்கின்றன. தங்களைத் தவிர மற்றவர்களிடமும் தூய்மை இருக்க முடியும் என்பதையே ஒப்புக் கொள்ளத் தயங்குகின்றனர்.”

“என்னம்மா செய்தி? யார் என்ன கூறினார்கள் உன்னிடம்?”

பூரணி நடந்த விவரங்களைக் கூறி அந்தக் கடிதத்தை எடுத்து மங்களேசுவரி அம்மாளிடம் கொடுத்தாள். அந்த அம்மாள் அதைப் படித்துவிட்டுப் பெருமூச்சு விட்டாள். முகத்தில் அக்கடிதத்தில் இருந்த செய்திகளை நம்பாதது போல் சினமும் ஏளனமும் இணைந்த சாயை நிலவ, “இப்படி எல்லாம் கெடுதல் செய்வதற்கு உனக்கு யாராவது வேண்டாதவர்கள் இருக்கிறார்களா பூரணி?” என்று அனுதாபம் இழையும் மெல்லிய குரலில் கேட்டாள் மங்களேசுவரி அம்மாள்.

புதுமண்டபத்துப் பதிப்பாளரையும் அவருக்கு வெறுப்பேற்படக் காரணமாக இருந்த நிகழ்ச்சியையும் பற்றிச் சொன்னாள் பூரணி.

“உனக்கு அவர் மேல் சந்தேகமா?” என்று கேட்டாள் மங்களேஸ்வரி அம்மாள்.

“வேறு யார் மேலும் சந்தேகப்படக் காரணமில்லையம்மா? இது அவர் செய்த வேலையாகத்தானிருக்க வேண்டும்.”


“உனக்கு நான் முன்பே சொல்லியிருக்கிறேனே. மங்கையர் கழகத்தில் வம்பு அதிகம். ஏற்கெனவே நீ இத்தனை சிறுவயதில் இவ்வளவு படிப்பும் புகழும் பெற்றவளாக இருப்பதைக் கண்டு அவர்களுக்குப் பொறாமை. அன்றைக்கு உன்னைச் சிபாரிசு செய்யும்போதே ‘வயது ஆகவில்லை, மணமாகவில்லை, பட்டம் பெறவில்லை’ என்று குறைகள் சொல்லித் தட்டிக் கழிக்கப் பார்த்தார்கள். எப்படியோ சொல்லிச் சமாளித்து உன்னை உள்ளே நுழைத்து விட்டேன். வெறும் வாயை மென்று கொண்டிருப்பவர்களுக்கு அவல் கிடைத்த மாதிரி இப்போது இந்தக் கடிதமும் வந்து சேர்ந்திருக்கிறது. இதெல்லாம் என்ன போதாத காலமோ அம்மா?”


போதாத காலம் தானாக வருவதில்லை. மனிதர்கள்தாம் இதை உண்டாக்குகிறார்கள். நேருக்கு நேர் நின்று கெடுதல் செய்யத் தெம்பில்லாத துப்புக்கெட்ட மனிதர்கள் இந்தத் தலைமுறையில் அதிகமாக இருக்கிறார்கள் அம்மா. பரவலான கோழைத்தனம் என்பது இந்த நூற்றாண்டில் பொதுச்சொத்தாகி விட்டது. பழைய காலத்தில் வீரம் ஓங்கி நின்றதுபோல் இந்தக் காலத்தில் கோழைத்தனம் ஓங்கி நிற்கிறது. துன்பங்களை நேருக்கு நேர் நின்று செய்ய வேண்டும். நேருக்கு நேர் நின்று தாங்கிக் கொள்ள வேண்டும். இரண்டுமே இன்றைக்குச் சமூகத்தில் இல்லை” என்றாள் பூரணி.

“ஆத்திரப்படாதே பூரணி! நான் அவர்களைப் பார்த்துச் சொல்கிறேன். நீ இதை மெல்ல மெல்ல மறந்துவிடு. இதை ஒன்றும் பெரிதுபடுத்த வேண்டாமென்று நான் காரியதரிசி அம்மாளிடம் சொல்கிறேன். நான் காரியதரிசியாக இருந்தால் இந்த மாதிரி குப்பைக் கடிதத்துக்கு இத்தனை மதிப்புக் கொடுத்து உன்னைக் கூப்பிட்டு விசாரித்து இவ்வளவு சிரமப்படுத்தியிருக்க மாட்டேன். கிழித்துக் குப்பைத் தொட்டியில் எறிந்திருப்பேன்.”


“அக்கா! எடுத்துக்குங்க. . .” என்று தேநீர் கொண்டு வந்து வைத்தாள் செல்லம். அந்தப் பெண் அப்போது தன்னிடம் காட்டிய ஆவலையும் மலர்ச்சியையும் பார்த்தபோது பூரணிக்குத் தோன்றியது, ‘ஐயோ! இப்படி எத்தனை எத்தனை இளம் உள்ளங்கள் எனக்காக மலர்ந்திருக்கின்றன. இந்த உள்ளங்களிலெல்லாம் எனக்கு இப்படி ஒரு கடிதம் வந்ததைப் பற்றித் தவறான கருத்துகள் பரப்பப்படுமானால் என்ன ஆகும்?” என்று நினைக்கிறபோதே மனம் கூசியது. அருவருப்பு ஏற்பட்டது. உலகத்திலேயே இழக்க முடியாத பொருள் தன்னைப் பற்றிப் பிறர் மனங்களில் உருவாகியிருக்கும் மதிப்புத்தான். ஒருமுறை இழந்து விட்டால் எளிதில் புதுப்பித்துக் கொள்ள முடியாத பொருள் அது.
(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி