(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 28 தொடர்ச்சி)

குறிஞ்சி மலர்

அத்தியாயம்  11 தொடர்ச்சி

 

மனச்சான்றே பூரணிக்கு எதிரியாகி அவளை வாட்டியது. இரண்டு கைகளாலும் தலையை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள் அவள். வேதனைச் சுமை மண்டையை வெடிக்கச் செய்துவிடும் போல் இருந்தது. சைக்கிள் ரிக்குசா ஓடிக் கொண்டிருந்தது. சைக்கிள் ரிக்குசாவுக்கு முன்னும் பின்னும் இரண்டு பக்கங்களிலும் சாவி கொடுத்த கடிகாரம் போல் மதுரை நகரம் இயங்கிக் கொண்டிருந்தது. மதுரை நகரத்து வாழ்வு ஓடிக் கொண்டிருந்தது.

ரிக்குசாவுக்கு வாடகையைக் கொடுத்து அனுப்பிவிட்டு அவள் வீட்டு வாயிலில் இறங்கி உள்ளே நடந்தபோது நடைப்பிணம் போல் பொலிவிழந்து காணப்பட்டாள். தெருவில் மயில் வாகனத்தில் புறப்பட்டு முருகன் தெய்வத் திருவுலா வந்து கொண்டிருந்தான். அதிர்வேட்டுகள் அதிர்ந்தன. மேளக்காரர்களும் நாயனக்காரர்களும் இசை வெள்ளம் பெருக்கிக் கொண்டிருந்தார்கள். தம்பிகளும் குழந்தைகளும் மயில்வாகனம் பார்க்க வாசலுக்கு ஓடிப்போய்க் குழுமியிருந்தார்கள். பூரணி உள்ளே உட்கார்ந்து வேதனையளிக்கும் மனத்தை ஆற்ற முயன்று கொண்டிருந்தாள். மனப்புண் ஆறவில்லை. எப்படி ஆறும்? யாருடைய மனத்தைப் புண்படுத்தும்போது தன் மனத்திலும் அந்தப் புண் உறைக்குமோ அவனுடைய மனத்தையல்லவா அவள் புண்படுத்தி இரணமாக்கிவிட்டு ஓடி வந்திருக்கிறாள். அப்பொழுதே மதுரைக்கு ஓடிப்போய் அரவிந்தன் எங்கிருந்தாலும் அவனைச் சந்தித்து உண்மையைச் சொல்லிக் கதறி அழவேண்டும் போலிருந்தது. அன்றிரவு முழுவதும், உறக்கமும் நிம்மதியும் இன்றித் தவித்தாள் அவள்.

மறுநாள் காலை அவளுக்குக் காய்ச்சல் அனலாகக் கொதித்தது. பாறாங்கல்லைத் தூக்கி வைத்த மாதிரி மண்டை கனத்தது. கண்கள் எரிந்தன. எழுந்து நடமாட முடியாமல் உடம்பு தள்ளாடியது. கமலாவின் தாயார் வந்து பார்த்துவிட்டு, “நீ பேசாமல் படுத்துக்கொள் பூரணி. காய்ச்சல் நெருப்பாகக் கொதிக்கிறது. வைத்தியருக்கு ஆள் அனுப்புகிறேன். குழந்தைகள் இன்றைக்கு எங்கள் வீட்டில் சாப்பிட்டுவிட்டுப் பள்ளிக்கூடம் போகட்டும். இந்த உடம்போடு நீ சிரமப்பட வேண்டா. . .” என்று சொல்லிச் சென்றாள். காய்ச்சலோடு மனத்துன்பங்களும் சேர்ந்து கொண்டு அவளை வதைத்தன. பிறரிடம் மனம் விட்டுச் சொல்ல முடியாத ஊமைக் குழப்பங்களால் உழன்று கொண்டிருந்தாள் அவள். அரவிந்தனிடம் உண்மை நிலையைக் கூறி மன்னிப்புப் பெற்றாலொழிய அந்த ஊமை வேதனை அவள் மனத்திலே தணியாது போலிருந்தது.

வைத்தியர் வந்து மருந்து கொடுத்துவிட்டுப் போனார். குழந்தையும் தம்பிகளும் கமலாவின் வீட்டில் சாப்பிட்டுவிட்டுப் பள்ளிக்கூடம் போனார்கள். அவளுக்குக் கூட கமலாவின் அம்மாதான் பார்லியரிசிக் கஞ்சி போட்டுக் கொண்டு வந்து கொடுத்தாள். குளுக்கோசு கரைத்துக் கொடுத்தாள். வாய் விளங்காமற் போய்விட்டதுபோல் எதைச் சாப்பிட்டாலும் கசப்பு வழிந்தது. நெஞ்சில் வந்து நிறைந்து கொண்டிருக்கும் கசப்பு எல்லா புலன்களுக்கும் பரவிவிட்டதா, என்ன? இரண்டு நாட்களுக்கு இதே நிலைமை நீடித்து வளர்ந்தது. காய்ச்சல் டிகிரி மேல் டிகிரியாக ஏறியது. மூன்றாவது நாள் காலை மங்களேசுவரி அம்மாள் செல்லத்தோடு வந்தாள். “இரண்டு நாட்களாக மங்கையர் கழகத்து வகுப்பு நடத்த வரவில்லை என்று செல்லம் சொன்னாள். ‘நீ இப்படி வராமல் இருப்பதனாலேயே உன்னைப் பற்றி அவர்களுக்கு ஏற்பட நேர்ந்த சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறாயே’ என்று வருத்தமாக இருந்தது எனக்கு. செல்லமும் உன்னைப் போய்ப் பார்க்க வேண்டுமென்று இந்த இரண்டு நாளைக்குள் நூறு தரம் சொல்லியிருப்பாள். அதுதான் இப்படி வந்தேன். இங்கே வந்து பார்த்தால் நீ இந்த நிலைமையில் படுக்கையில் விழுந்து கொண்டிருக்கிறாய். உடம்புக்குச் சரியில்லை என்றால் ஒரு வார்த்தை எனக்குச் சொல்லி அனுப்பக்கூடாதா நீ?”

“யாரிடம் சொல்லி அனுப்புவது அம்மா! தம்பிகள் பள்ளிக்கூடம் போய்விடுகிறார்கள். அன்றைக்கு உங்கள் வீட்டுக்கு வந்துவிட்டுத் திரும்பினேனே அதிலிருந்து மனமே சரியில்லை.”

“பார்த்தாயா? இன்னும் அந்த நிகழ்ச்சியை நினைவு வைத்துக் கொண்டிருக்கிறாயே? அதை மெல்ல மறந்து விடு என்று அன்றே சொன்னேன். மனக்குழப்பத்தால் நீ உடம்புக்கு இழுத்துவிட்டுக் கொண்டிருக்கிறாய். உனக்கு எதற்கு அந்தக் கவலை? நான் காரியதரிசி அம்மாளைப் பார்த்து வேண்டியதெல்லாம் சொல்லிச் சரிசெய்துவிட்டேனே” என்றாள் மங்களேசுவரி அம்மாள். ‘வேலை போய்விடுமே என்பதற்காகவோ காரியதரிசி அம்மாளின் மிரட்டலுக்காகவோ நான் இப்போது வேதனைப் படவில்லை. சிரித்துக் கொண்டே களங்கமில்லாமல் பேச வந்த அன்பரிடம் முகத்தைத் திருப்பிக் கொண்டு ஓடி வந்த அன்புத் துணிவில்லாத கோழைத்தனத்தை எண்ணியல்லவா உருகுகிறேன்’ என்று மங்களேசுவரி அம்மாளின் வார்த்தைகளைக் கேட்டுத் தன் மனத்துக்குள் எண்ணிக் கொண்டாள் பூரணி. தன்னைக் கோயிலில் பொற்றாமரைக் குளத்துப் படியில் கண்டது பற்றிக் காரியதரிசியோ, துணைத்தலைவியோ மங்களேசுவரி அம்மாளிடம் சொல்லியிருக்க இடமுண்டு என்று பூரணிக்குத் தோன்றியது. அவள் அந்த அம்மாளிடம் கேட்டாள்.

“நீங்கள் காரியதரிசியைச் சந்தித்த போது என்னைப் பற்றி வேறு ஏதாவது உங்களிடம் கூறினார்களா, அம்மா?”

“சொல்ல என்ன இருக்கிறது. ‘நல்ல பெண்ணாக இருந்தாலும் நாம் எச்சரிக்கை செய்ய வேண்டியது முறை. அதற்காகத்தான் கூப்பிட்டுச் சிறிது கண்டிப்புடனேயே விசாரித்தேன்’ என்று என்னிடம் கூறினாள் காரியதரிசி.”

காரியதரிசி அம்மாளைப் பற்றிப் பயங்கரமாகக் கற்பனை செய்து வைத்திருந்த பூரணிக்கு இது ஏமாற்றமாக இருந்தது. ‘ஒருவேளை கோயிலில் அந்த அம்மாள் தன் பக்கம் பார்க்காமலிருக்கும்போதே தானாக அப்படிக் கற்பனை செய்து கொண்டு பதறி ஓடி வந்திருக்கலாமோ?’ என்று ஒரு சந்தேகம் உண்டாயிற்று அவளுக்கு.

“அக்கா நீங்க வராம அங்கே ஒண்ணுமே நல்லாயில்லே. எல்லோரும் வந்து பார்த்திட்டு நீங்க வரலேன்னு தெரிஞ்சதும் திரும்பிப் போயிடறாங்க. களையில்லாமல் கெடக்கு” என்று செல்லம் கூறியபோது பூரணிக்கு ஆறுதலாக இருந்தது. தனக்காக ஏங்கவும், அனுதாபப்படவும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று அறிய நேரும்போது உண்டாகிற ஆறுதல் அது.

“மறுபடியும் நாளைக்கு வருகிறேன். பெண்ணே உடம்பைப் பார்த்துக்கொள். மங்கையர் கழகத்து வேலையைப் பொறுத்தமட்டில் உனக்கு ஒரு கெடுதலும் வராது” என்று கூறிவிட்டு அந்த அம்மாள் சென்றாள். எப்படியோ விபரம் தெரிந்து அன்று மாலையிலும் மறுநாள் காலையிலுமாக அவளிடம் வகுப்புகளில் படிக்கும் பெண்கள் ஒவ்வொருவராக வந்து பார்த்துவிட்டுப் போனார்கள். செல்லம் ஒருத்தி போதாதா? அவளுடைய காய்ச்சலைப் பற்றி அவள் மேல் அனுதாபம் உள்ளவர்களிடமெல்லாம் பறையறைவதற்கு?

யார் வந்தால் என்ன? யார் போனால் என்ன? எவனைப் பார்த்துக் கதற வேண்டுமென்று அவள் தவித்துக் கொண்டிருந்தாளோ, அவன் வரவே இல்லை; கையெழுத்துப் படிகளை வாங்கவும், அச்சுப் படிகளைத் திருத்தவும் என்று தினம் ஒரு தடவையாவது இங்கு வந்து கொண்டிருந்த அரவிந்தன், அவள் காய்ச்சலாகப் படுத்துவிட்ட அந்தச் சில நாட்களில் எட்டிப் பார்க்கவும் இல்லை. அரவிந்தன் மானமுள்ளவன்! நீ அவனை ஏறெடுத்துப் பார்க்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு வந்தாயே, ‘அந்த விநாடியிலிருந்தே அவன் உன்னை மறக்கத் தொடங்கியிருப்பான்’ என்று அவள் உள்ளமே அவளுக்குப் பதிலளித்தது. வருவான் வருவான் என்று பொறுத்துப் பார்த்தாள். அவன் வருகிற வழியாயில்லை. இனிமேல் ஒரு விநாடி கூட அந்தத் தவிப்பைத் தாங்கிக் கொள்ள முடியாது போலிருந்தது. எவ்வளவோ படித்திருந்தாலும் அவள் பெண். அன்புக்காக ஏங்குகிற அந்த உள்ளத்தில் இனிமேலும் அவ்வளவு பெரிய ஆற்றாமையைத் தாங்கிக் கொண்டிருக்க முடியாது. அதனால் மாலையில் தம்பி திருநாவுக்கரசு பள்ளியிலிருந்து திரும்பி வந்ததும் அச்சகத்துக்குத் துரத்தினாள்.

ஆனால் எத்தனை பெரிய ஏமாற்றம்? ஒரு மணி நேரத்துக்குப் பின் திரும்பி வந்த தம்பி அவளிடம் கூறினான்: “அரவிந்தன் ஊரில் இல்லையாம் அக்கா? அந்தப் பெரியவர் தான் முன்புறத்து அறையில் உட்கார்ந்து கொண்டிருந்தார்.”

“எந்தப் பெரியவர்?”

“அவர் தான். அன்றைக்கு ஒரு நாள் உன்னைக் காரில் கொண்டு வந்து விட்டாரே – அந்த அச்சகத்தின் சொந்தக்காரர். . .”

“அரவிந்தன் எங்கே போயிருப்பதாகச் சொன்னார் அவர்?”

“அதெல்லாம் ஒன்றும் அவர் சொல்லவில்லை. ‘என்ன சமாசாரம்?’ என்று கேட்டார். உனக்குக் காய்ச்சல் என்று சொன்னேன். ‘நான் இன்னும் சிறிது நேரத்தில் அச்சகத்தை மூடிக் கொண்டு உன் அக்காவை பார்க்க வருகிறேன். போய்ச் சொல்லு’ என்று கூறியனுப்பினார். பூரணிக்கு உள்ளமே வெடித்துவிடும் போலிருந்தது. ஏக்கம் நெஞ்சைத் துளைத்து ஊசிக் கண்களாக ஆக்கியது. பெருமூச்சு விட்டாள். வேறென்ன செய்வது?

(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி