(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  44 தொடர்ச்சி)

குறிஞ்சி மலர் 17

“எங்கோ இருந்தென்னை அழைக்கிறாய்,
எங்கோ இருந்ததனைக் கேட்கின்றேன்.
எங்கோ இருந்தென்னை நினைக்கின்றாய்!
எங்கோ இருந்துன்னை நினைக்கின்றேன்!”
+

பூரணிக்குக் கண்கள் இருண்டு கொண்டு வந்தது. உணர்வு நழுவிற்று. அடிவயிற்றில் இருந்து மேலே நெஞ்சுக்குழி வரையில் பழுக்கக் காய்ச்சிய இரும்புக்கோலை நுழைத்துக் குடைவது போல் ஒரு வலி ஏற்பட்டது. ‘அம்மா’ என்று ஈனக்குரலில் மெல்ல முனகியபடி மேடையில் நின்று பேசிக் கொண்டிருந்த இடத்துக்குப் பின்னால் போடப்பட்டிருந்த பிரம்பு நாற்காலியில் போய்ச் சாய்ந்தாள். பூத்து இரண்டு நாட்களான பின் ஒவ்வொன்றாகக் காற்றில் அடித்துக் கொண்டு போகப்படும் தளர்ந்த தாமரையின் இதழ்களைப் போல் அவளுடைய தன் நினைவு மெல்ல மெல்ல நழுவி உதிர்ந்து கொண்டிருந்தது. அவளுடைய இதயத்தில் அடி மூலையிலிருந்து தீனக்குரலாய் மெல்ல எழுந்த ‘அம்மா’ என்ற அந்த ஒரே ஒரு சொல் திரையரங்கின் எல்லாத் திசைகளிலுமிருந்து பல்லாயிரம் அனுதாபக் குரல்களாக மாறி எதிரொலித்தன. உடம்பும் உள்ளமும் உணர்வெனப்பட்ட யாவும் அந்த ஒளிப்புனல் வெள்ளத்தில் கரையத் துவண்டு நெளிந்து விழும்படி நாற்காலியில் கழற்றிப்போட்ட பூமாலையைப் போல் அவள் உடல் சாய்ந்து சரிந்திருந்தது. அவள் கனவு மண்டலத்தில் இருந்தாள்.

‘அம்மா அம்மா!’ நெஞ்சு தாங்க முடியாத வேதனையால் வாய்பேசத் துடிக்கும்போது, பிறக்கின்ற முதல் வார்த்தைஅம்மாஎன்ற வார்த்தைதானா? துக்கத்தின் போதும் வாயில் பிறக்கின்ற அழைப்பு, தாயை நோக்கித்தானோ? உடம்பிலோ மனத்திலோ வலியின் வேதனையை உணர்ந்து வாய் அம்மா என்ற சொல்லை உணர்கிறதே! இடுப்பிலும் வலியை உணர்ந்த போது ‘அம்மா’ என்று அலறி முனங்கித் துடித்து அழைத்திருப்பாள்.

மனிதர்கள் வலியின்போது பிறந்தவர்கள். வலியைப் பிறருக்கு அளித்து வலிக்காமல் பிறந்தவர்கள். பிறந்தவுடன் கேட்கும் முதல் சொல் ‘அம்மா’ என்பது. இறக்கப் போகும்போது தான் அரற்றுகிற சொல்லும் இதுதான்! தாயின் கருப்பத்தில் இருந்து வெளியேறும்போது தாய் ‘அம்மா’ என்று முனகும் வேதனைச் சொல்தான் உயிரின் செவி உணர்ந்த முதல் ஓசை. உலகத்தின் கருப்பத்திலிருந்து உயிர்விடுபட்டுப் போகும் போது மனிதன் தன் வாயால் தான் வருகிறபோது கேட்ட இதே சொல்லை மீண்டும் சொல்லிப் பார்த்துக் கொண்டுப் போகிறானா? எப்படியானால் என்ன? ‘அம்மா’ என்ற இந்தச் சொல்லில் அமுதம் இருக்கிறது. துக்கத்தைத் தாங்கிக் கொள்ளும் ஆற்றலை இந்த வார்த்தையை உருவேற்றி அடைய முடிகிறது. இது தெய்வத் திருமொழி. நினைவழிந்த அந்நிலையில் திடீரென்று தான் குழந்தையாகிவிட்டது போன்று உணர்கிறாள் பூரணி. பட்டுப் பாவாடை புரள மொட்டு மலரிதழ் விரித்தாற்போல் சிரித்துக் கொண்டு சின்னஞ்சிறு சிட்டுக் குருவி போல் அம்மாவின் மடியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள் அவள். அம்மா அவளுடைய தலைமுடியை அவிழ்த்து எண்ணெய்த் தடவிப் பின்னுகிறாள். அப்போதுதான் கல்லூரியிலிருந்து வந்த அப்பா வீட்டுக்குள் நுழைகிறார். பூரணி தன் மலர்ந்த கண்கள் விரிய அப்பாவை ஆவலோடு பார்க்கிறாள்.

“பார்த்துக் கொண்டே இரு! நான் சொல்வதை எதிர்காலத்தில் நீயே உன் கண்களால் காணப்போகிறாய். உன் பொண்ணுக்கு வாய்த்திருக்கும் கண்கள் அற்புதமானவை. பூரணமானவை. அவள் இந்தக் கண்களாலேயே தன்னைச் சுற்றியிருக்கும் உலகத்தை ஆட்டிப் படைக்கப் போகிறாள். இப்படிக் கண் உள்ளவர்கள் தெய்வீக அம்சம் உள்ளவர்கள்” என்று அப்பா அம்மாவைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே சொல்கிறார். அதைக் கேட்டு அம்மாவும் சிரிக்கிறாள்.

“கண்ணேறு படக்கூடாது என்று சொல்வார்கள். குழந்தைக்கு உங்கள் கண்ணே பட்டுவிடும் போலிருக்கிறது” என்று சொல்கிறாள் அம்மா.

“யாருடைய கண்ணும் இவளை எதுவும் செய்துவிட முடியாது. அசுத்தங்களையும், குற்றங்களையும் இவளுடைய கண் பார்வையே அழித்துவிடும். நீ கவலைப்படாதே” என்று சொல்லி அம்மாளின் மடியிலிருந்த பூரணியைத் தூக்கி வாரி அணைத்துக் கொள்கிறார் அப்பா. அப்பாவும், அம்மாவும் தென்படாமல் மறைகிறார்கள். கனவுத் தோற்றம் மாறுகிறது.

அன்புமயமாயிருந்த அந்த அம்மா இன்று எங்கே போய்விட்டாள்? கனவு நிலையில் பூரணியின் கண் முன் கவிந்த குடைபோல் வான விதானம் தெரிகிறது. சாம்பல் நிறமான ஆகாயத்தில் நீலமும் சிவப்புமான மேகங்கள் அழித்து அழித்துக் கோலம் போடுவதுபோல் விளையாடிக் கொண்டிருக்கையில் அவற்றின் நடுவேயிருந்து திடீரென்று வானத்தில் யானைத் தந்தங்கள் முளைத்தாற்போல் இரண்டு வளையணிந்த சிவப்புக் கரங்கள் நீள்கின்றன. மேகங்களுக்கிடையே சரத்து காலத்துச் சந்திரனைக் கண்டதுபோல் அம்மாவின் முகத்தைக் காண்கிறாள் பூரணி. அடடா! வானமே ஒரு முகமாக மாறினாற்போல் அந்த முகம் தான் எத்தனை பெரிதாகத் தெரிகிறது.

“அம்மா! நீ எங்கிருந்து என்னைக் கை நீட்டி அழைக்கிறாய்? நான் எங்கிருந்து அதனை உணர்கிறேன்? நீ எங்கிருந்து என்னை எண்ணுகிறாய்? நான் எங்கிருந்து உன்னை எண்ணுகிறேன்? எனக்கு எதுவுமே விளங்கவில்லையே? என் உடம்பின் கனம் ஏன் இப்படிக் குறைந்து கொண்டே வருகிறது? எலும்பும் தோலும் சதையுமாக வாழும் புண்ணாகி, வளரும் புண்ணாயிருந்த இந்த உடம்பு மணமும் மென்மையுமாய் ஒரு சிறு பூவாக மாறிப் பூத்துவிட்டதா? என்னுடைய பூவுடம்பு காற்றில் மேலே மேலே பறந்து வானத்தை நிறைத்துக் கொண்டு தெரியும் அம்மாவின் கைகளையும் முகத்தையும் நோக்கிப் பறந்து போகிறதா? ஏன் இப்படி நான் பூவாகிறேன். ஐயோ! முகத்தில் யாரோ ஒரு கந்தர்வப் பெண் அமுதத்தை அள்ளித் தெளிக்கிறாளே!

சோடாவை உடைத்துக் கொண்டு வந்த முருகானந்தம் பூரணி நாற்காலியிலேயே மூர்ச்சையாகியிருப்பதைக் கண்டு சோடா நீரைக் கையில் கொட்டி முகத்தில் மெல்லத் தெளித்தான். மேடையைச் சுற்றிப் பெண்கள் கூட்டம். பல நிறத்துப் பூக்களைச் சிந்தின மாதிரி கூடிக் குவிந்துவிட்டது. பூரணி கண் மலர்ந்து பார்த்தாள். மூச்சு இழைந்தது. நெஞ்சில் வலியின் வேதனை விழிகள் திறந்து திறந்து சொருகின. ‘என்ன ஆயிற்று? தங்கக் குத்துவிளக்கு மாதிரி நின்று பேசிக் கொண்டிருந்தாளே! எந்தப் பாவியின் கண் பட்டதோ?’ என்று மேடையருகில் ஒரு வயதான அம்மாள் அனுதாபத்தோடு யாரிடத்திலோ சொல்லிக் கொண்டிருந்தாள். கூட்டம் அலைமோதிற்று. அத்தனை கண்களும் மேடையில் நாற்காலி மேல் சாய்ந்து கிடந்த அவளையே பார்த்து இரங்கி நின்றன. நினைப்பும் நினைப்புமற்ற நிலையுமாக இருந்த அவள் செவியில் சுற்றிலும் பேசிக்கொள்ளும் உரையாடல்கள் விழுந்தன.


“பத்தாயிரம் உரூபாய்க்கு மேல் வசூலாகியிருக்கிறதாம். ‘ஏழைகளின் குடிசை உதவி நிதி’ என்று இந்தப் பெண் தன்னுடைய சொற்பொழிவினாலேயே இவ்வளவு சேர்த்துக் கொடுத்து விட்டாளே. என்ன வாக்கு! என்ன சொற்சாதுரியம்! எவ்வளவு அழகாகச் சொல்கிறாள்?”


“இது எல்லாருக்கும் வந்துவிடுமா? கருவிலேயே திரு அமைய வேண்டும் என்பார்கள். பழம் பிறவியிலேயே குறைவாக எஞ்சிப்போன ஞானத்தை அடைகிற மாதிரி ஒரு பசி வேண்டும். நாமும் இருக்கிறோமே; அடுப்பங்கரையிலும், புடவைக் கடையிலும், இல்லாவிட்டால் சினிமாக் கொட்டகையிலும் திரிகிறதற்கே போது காணவில்லை.”

“மீனாட்சியம்மன் கிருபையால் இந்தப் பெண்ணுக்கு ஒரு குறைவுமில்லாமல் நெடுங்காலத்துக்கு இவள் நன்றாக இருக்க வேண்டும்” இப்படி எத்தனையோ குரல் அவளை வாழ்த்துகின்றன. புகழ் மாலை சூட்டுகின்றன, வியக்கின்றன.

ஓதுவார் வீட்டு வளைகாப்பில் கேட்ட வார்த்தைகள் மனத்தில் உண்டாக்கிய புண்ணை இப்போது செவியில் விழும் இப்புகழ் வார்த்தைகள் ஆற்றுகின்றனவா? திரையரங்கில் தன்னைச் சுற்றிலும் கேட்கும் உரைகள் அவள் உள்ளத்தைக் குளிர்விக்கின்றன! மெதுவாக அவளுக்கு உணர்வு வந்தது. உடலில் சிறிது தெம்பு பிறந்தது. தட்டுத் தடுமாறி மெல்ல எழுந்து நின்றாள். தூக்கக் கிறக்கத்திலோ, கனவிலோ எழுப்பி நடத்திக் கொண்டு போகிற மாதிரி நடத்தித் திரையரங்கின் வாசலில் கார் ஏறச் செய்து மருத்துவர்(டாக்டர்) வீட்டுக்கு அவளை அழைத்துப் போனார்கள். அரவிந்தன் பதறித் தவித்தான். மருத்துவர் தைரியம் சொல்லுகிற வரை அவனுக்கும் முருகானந்தத்துக்கும் சுயநினைவே வரவில்லை. திரையரங்கிலிருந்து செல்லம் வீட்டுக்கு ஓடிப்போய் தகவல் கூறினாள் போலிருக்க்றது. மங்களேசுவரி அம்மாள் பதறிப்போய் ஓடி வந்தாள். செய்தி கேள்விப்பட்டு அச்சக உரிமையாளர் மீனாட்சிசுந்தரமும் வந்தார். திருப்பரங்குன்றத்திலிருந்து சொற்பொழிவுக் கேட்கத் திரையரங்கிற்கு வந்திருந்த சிலர் திரும்பச் சென்று ஏதோ சொல்லியிருக்கிறார்கள். ‘பூரணி பாதி சொற்பொழிவில் மூர்ச்சை போட்டு விழுந்துவிட்டாள்’ என்பது போல் செய்தி பரவிவிட்டது. வீட்டில் இருந்த தம்பி சம்பந்தனும் மங்கையர்க்கரசியும் அதைக் கேள்விப்பட்டுப் பயத்தில் கதறி அழத் தொடங்கிவிட்டார்கள்.

(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி

குறிஞ்சி மலர்