அகரமுதல முறைமன்றம்: ஆ.இராசா குற்றவாளியே!

– இலக்குவனார் திருவள்ளுவன்

தி.மு.க.நாடாளுமன்ற உறுப்பினான முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.இராசா, இந்துக்கள் அனைவரையும் இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ளார் எனப் பிராமணியன் என்பார் முறையிட்டுள்ளார். அவர், ஆ.இராசா, சென்னை பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், “இந்துவாக இருக்கிற வரை நீ பஞ்சமன். இந்துவாக  இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன். இந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன்;  சூத்திரனாக இருக்கும் வரை நீ பரத்தையின்(விபச்சாரியின்) மகன். எத்தனை பேர் பரத்தையின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? . .  எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள் என்கின்ற கேள்வியை உரக்க சொன்னால் தான் அது சனாதனத்தை முறியடிக்கின்ற  அடிநாதமாக அமையும் என்பதை விடுதலையும், முரசொலியும், திராவிட முன்னேற்ற கழகமும், திராவிடர் கழகமும் எடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது” எனப் பேசியுள்ளதைக் காணுரையுடன் இணைத்துள்ளார்.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதற்கு மாற்றாக உயர்வு தாழ்வு கற்பிப்பதும் தீண்டத்தகாதவர்களாக மக்களில் ஒரு பிரிவினரை ஒதுக்குவதும் பெருங்குற்றம். எனினும் வழக்குரையின் உண்மைத்தன்மையை ஆராயவேண்டும். வாதுரைக்கு எதிருரையாகத் தன்மானன் என்பார்,

“ஆ.இராசா தன் சொந்தக் கருத்தாக எதையும் கூறவில்லை. ‘மனு சுமிருதி’ என்னும் நூலில் உள்ளதைத்தான் கூறியுள்ளார். முன்னரே பல அறிஞர்களும் தலைவர்களும் இதை எடுத்துரைத்துள்ளனர். மேலும் உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்தைத்தான் கூறியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்

அப்பொழுது கூறியவை என நூல்களில் உள்ள இழிவுபடுத்தும் கருத்துகளை இப்பொழுது கூறுவது முறையல்ல என்கிறார் பிராமணியன். கி.மு.நூற்றாண்டைச் சேர்ந்த இந்நூலின் சிறப்புகளை ஏற்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

மனு அல்லது மநு என்பது கி.பி. நூற்றாண்டுகளைச் சேர்ந்தே. எல்லாச் சமற்கிருத நூல்களையும் தமிழ், பிராகிருதம், பாலி நூல்களுக்கும் முற்பட்டதாகத் திரித்துக் கூறும் வழக்கப்படி இதன்காலத்தையும் கி.மு. நூற்றாண்டுகளில் கூறுகின்றனர். இந்த உண்மையைத் தன்மானம் தெரிவித்ததும், “காலம் எதுவாக இருந்தால் என்ன? இப்போதைய காலத்திற்கு முற்பட்டதுதானே அதை ஏன் இப்பொழுது குறிக்க வேண்டும்” என்று பிராமணியன் தெரிவித்துள்ளார். மனுவை உயர்த்திக் கூறிக்கொண்டிருப்பது காலந்தோறும் தொடர்ந்து கொண்டிருப்பதால் அதன் உண்மைத் தன்மையை உலகறியச் செய்ய வேண்டும் என்கிறார் தன்மானன். இஃது ஏற்றுக்கொள்ளக்   கூடிய வாதமாக உள்ளது. காலப் பழமை என்தாலேயே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கின்றனர் சிலர். அவர்களுக்காகவும் நூலில் இடம் பெற்றுள்ள அறமற்ற கருத்துகளுக்காகவும் அதன்  மக்கள் குலத்திற்கு எதிரான அறமற்ற தன்மையைப் பதிய வேண்டியது கட்டாயம். இதற்கு முன்னர், “ஏதோ சொல்லிவிட்டுக் போகிறார்கள். நாம் ஏற்றுக்கொண்டால்தானே” என எண்ணிப் புறக்கணித்ததால்தான் இன்றும் அதனைப் புகழ்வார் இருக்கின்றனர்.

எனவே, உண்மையை உலகத்தவருக்கு உணர்த்துவது தவறில்லை. ஈராண்டுகளுக்கு முன்னர் முனைவர் தொல்.திருமாவளவன் இதுபோன்ற கருத்தைக் கூறிய பொழுதும் சிறிய கூட்டம் ஒன்று எதிர்த்துப் பெரிதாகப் பரப்பியது. இப்பொழுது ஆ.இராசாவின் பேச்சை எடுத்துக் கொண்டனர். இந்தியாவை ஒற்றைச் சமய நாடாக – ஏக மத நாடாக – மாற்ற எண்ணுவதற்கு இடையூறாக இருக்கும் என்பதால் வலுத்த எதிர்ப்பைக் காட்டுகின்றனர். கட்சித் தலைமைக்குக் கொத்தடிமைகளாக வாழுவோர் உள்ளமையால் கட்சியினரும் தங்கள் மத அழிப்பிற்கான முயற்சி என்னும் பொய்யுரைகளை நம்புவோரும் இதனை எதிர்க்கின்றனர்.

தாசி என்றால் அக்காலத்தில் வேலைக்காரி எனப் பொருள். வேலைக்காரியின் மகன் எனக் கூறியதைத் தவறாகப் புரிந்து கொண்டு பரத்தையின் மகன் எனக் கூறுவதாகப் பிராமணியன் தன் வாதுரையில் தெரிவித்தார். இவ்வாறு தவறான மொழிபெயர்ப்பின் அடிப்படையில் மனுநூலைத் தவறாகக் கூறுகிறார்கள் என்னும் பிராமணியன் தெரிவிக்கிறார். மனுநூல் மட்டுமல்ல, எல்லாச் சமற்கிருத நூல்களுமே தவறன மொழிபெயர்ப்புகளுடன்தான் உள்ளன என்பதை ஒப்புக் கொள்ளும் தன்மானன் ஆனால், அவை மனு முதலிய சமற்கிருத நூல்களில் உள்ள உள்ள குறைகளை நிறைகளாகக் காட்டும் தவறான மொழிபெயர்ப்புகள் என்கிறார். பல இடைச்செருகல்களைப் புகுத்தி மக்கள் குலத்திற்கு எதிரான நூல்களை எல்லாம் உயர்ந்த அறநூல்களாகக்காட்டியுள்ளனர் எனச் சான்றுகளுடன் நிறுவியுள்ளார்.

ஒருவருக்குத் திருமண உறவில் இல்லாத வேலைக்காரியுடன் உறவு கொண்டு பிள்ளை பிறந்தால், அந்த வேலைக்காரியைப் பரத்தை என்றுதானே அழைப்பார்கள். வேலைக்காரி தன் முறையான கணவனுடன் குழந்தை பெற்றால்  அவள் பிறரைப்போன்ற ஒழுக்கமான பெண் எனலாம். ஆனால், தான் வேலை பார்க்கும் முதலாளியிடம் குழந்தை பெற்றால் அவளை என்னவென்று அழைப்பார்கள். எனவே, பணியாளாகக் குறிப்பிட்டிருந்தாலும் பரத்தையாகக் குறிப் பிட்டிருந்தாலும் முறையற்ற பிறப்பு என்பதை உணர்த்தும் பொருள் ஒன்றுதான். இவ்வாறு சொல்லப்படுவதை அதன் இழிதகைமையை அகற்றுவதற்காகக் குரல் கொடுத்ததற்குப் பாராட்ட வேண்டுமே யன்றி எதிராகத் தாக்குவதும் போராடுவதும் முறையல்ல. மேலும் ஆ.இராசா மனு நூலிலிருந்து மட்டும் அல்ல; உச்சநீதிமன்றத்தின் கருத்தைத்தான் மேற்கோளாகக் கூறியுள்ளார். எனவே, உச்சநீதிமன்றக் கருத்திற்கு எதிராகப் போராடினால் அரசுவேடிக்கை பார்த்துக் கொண்டிராமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்து எதிர்ப்புரை தெரிவிப்பவர்கள் மீதும் எதிர் போராட்டம் நடத்துபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

“மனுநூல் பலரால் எழுதப்பட்டிருக்க வேண்டும்; வருணாசிரம தருமத்தைக் காப்பதே அதன் தலையாய நோக்கு; அதில் மூன்றில் ஒரு பங்கு அல்லது பாதி மகாபாரதத்தில் அப்படியே இரு்க்கிறது; அவற்றுள் எது மூலம், பின்னால் எழுதப்பெற்றது எது என்று கண்டுபிடிக்க இயலவில்லை; அது பிராமணரால் எழுதப்பட்டது; பிராமணருக்காக, பிராமணரின் நலன் கருதி எழுதப்பட்டது; அன்னார் தங்களைப் பண்டைய இந்தியாவின் மூளைகளாகவும் வாக்குகளாகவும் கருதி, அதனை உறுதிசெய்து கொள்ளப் பயன்படுத்திக் கொண்ட நூல்; பல அடிப்படைக் கொள்கைகள்பற்றி அதில் முரண்பட்ட கருத்துகள் சொல்லப்பட்டிருக்கின்றன; மனுநீதியின் பகுதிகள் வெவ்வேறு காலங்களில் பல நூற்றாண்டுகளாகச் சேர்க்கப்பட்டதனால் இது நிகழ்ந்தது; சட்டங்களைப்பற்றிய பகுதிகள் இறுதியாகச் சேர்க்கப்பட்டவை; அதுகூறும் சட்டங்கள் என்றும் நடைமுறைக்கேற்றவையாக இருந்திருக்க முடியாது.” இவ்வாறு சிகாகோ பல்கலைக்கழத்துப் பேராசிரியை வெண்டி தானிகர்(Wendy Doniger) தெளிவாக ஆராய்ந்து உரைத்துள்ளார். இக்கருத்துகளையும் மனுநூல் கூறும் நீதி எக்காலத்துக்கும் எவ்விடத்திற்கும் எம்மனிதர்க்கும் பொருந்தாது என ஏ.கே.இராமனுசன் கூறுவதையும் எதிர் வழக்காடி குறிப்பிடுகிறார்.

மனுநூலிலிருந்து உயர்ந்த கருத்துகள் எனச் சிலவற்றை வழக்காடி தெரிவித்துள்ளார். பெண்களைப்பற்றிப் பல இடங்களில் இழிவாகப்பேசும் மனுநீதி இரண்டொரு இடங்களில் அவர்களே குடும்பத்திற்கு அணிகலன் என்று உயர்வாகக் கூறுதலும் கொல்லாமையையும் ஊன் உண்ணாமையையும் ஆங்காங்கே சிறப்பித்தலும்  திசைதிருப்பிவிடப் பின்னால் வந்தவர்கள் மேற்கொண்ட முயற்சியின் விளைவு ஆகும் எனத் திறனாய்வு அறிஞர்கள் முன்னரே சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே, இடைச்செருகல்களை வைத்துக்கொண்டு ஒரு நூலைச் சிறப்பித்து அதன் குறைகளைக் கூறக்கூடாது என வாதிடுவது ஏற்புடைத்தல்ல.

திருக்குறளுக்கு முன்னோடி மனுநூல் என்றும் அந்நூலை வழிகாட்டியாகக் கொண்டு திருவள்ளுவர் திருக்குறளை எழுதியுள்ளார் என்றும் எனவே, சிறப்பு மிக்க மனுநூலைப் பழிக்கக் கூடாது என்றும் பிராமணியன் தவறாகத் தெரிவிக்கிறார். திருக்குறளின் சிறப்பையும் மனுவின் கீழ்மையையும் ஒப்பிட்டும் அறிஞர்கள் கூறியுள்ளனர். “திருவள்ளுவர் உழவைப்போற்றுகிறார்; மனுநூல் உழவை இழிதொழிலாகக் கூறுகிறது; வேள்வி செய்வோன் பல மனைவியரோடு சேர்ந்து செய்யவேண்டும் என்பது மனு; மனைவியை வாழ்க்கைத் துணை என்று சொல்வதுடன் ஆடவர் கற்பையும் வலியுறுத்துவது குறள்; மனிதவினத்தில் பாதியான பெண்ணோடு இணைந்து மக்களைப் பெற்று வாழும் இல்லறச் சிறப்பைப் போற்றும் திருக்குறள்போன்ற அறநூலையோ சமயநூலையோ சமற்கிருதத்தில் காண இயலவில்லை” என்று முனைவர் பேரா.ப.மருதநாயகம் கூறுகிறார். மனித நேயத்திற்கும் அறத்திற்கும் எதிரான மனுநீதியைத் திருக்குறளுக்கு முன்னோடி வழிகாட்டி நூல் எனத் திரித்துக் கூறி அதனடிப்படையில் மனுநூலை ஏற்க வேண்டும் என்பதும் சரியல்ல.

மனுநூலை அறத்திற்கு எதிரான நூல்  என முழுநூலையும் ஆராய்ந்து முறை கூறுவதைத் தனியாக வைத்துக் கொள்ளலாம். கீதை பற்றியும் வழக்காளி பிராமணியன் தெரிவித்தார். கீதை முதலான பிற சமற்கிருத நூல்களின் சிறப்பின்மை பற்றியும் தனியே ஆராயலாம். இப்பொழுது முறையீட்டுரையில் தெரிவித்த இராசாவின் கருத்தான “இந்து என்றால் சூத்திரன், சூத்திரன் என்றால் பரத்தையின் மகன்” என்ற கருத்தை மட்டும் பார்ப்போம்.

முறையீட்டில் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்  ஆ.இராசாவின் பேச்சு அவரது சொந்தக்கருத்தல்ல. மேற்கோள் கருத்து. மனு நூலில் இருந்தும் அதனடிப்படையில் உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்துகளில் இருந்தும் எடுத்து மேற்கோளாகக் கூறியுள்ளார். அவரின் கருத்து இந்து சமயத்தினரை இழிவுபடுத்துவதற்காகத் தெரிவிக்கப்பட்டதல்ல. இந்துக்களை இழிவுபடுத்தும் கருத்துகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அவற்றை அகற்ற வேண்டும் என்ற மான உணர்வினால் தெரிவிக்கப்பட்டது. அவர் கூறிய கருத்துகள் முன்னரே சமற்கிருத அறிஞர்கள் உட்படப் பலரும் பல இடங்களில் பேசியும் எழுதியும் வந்துள்ளனர். தன்மானத் தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி அவர்கள்,

… சாத்திரத்திலே தேவடியாள் மகன் என்கிறான், பார்ப்பானுக்கு பிறந்தவன் என்கிறான், சூத்திரனுக்கு பெண்டாட்டியே கிடையாது என்கிறான். சூத்திரச்சி பார்ப்பானுடைய வைப்பாட்டி என்று எழுதி இருக்கிறான்…(இதையெல்லாம்) யார் கவனித்தீர்கள்… ((பெரியார் ஈவெரா சிந்தனைகள் தொ.1:1:3234)”

“..ஆனதினாலே, நாம் முதலாவது இப்போது மானத்துக்காகப் போராடுகிறோம், வேறே எதற்காகவும் இல்லை. இழிவு – தேவடியாள் மகன், பார்ப்பானுடைய வைப்பாட்டி மகன், தாசிப் புத்திரன் என்று சட்டத்திலே இருக்கிறது.. (பெரியார் ஈவெரா சிந்தனைகள் தொ.1:1:3249) என்றல்லாம் பல காலம் எழுதியும் பேசியும் வந்துள்ளார். அவரது சிந்தனை வழியில் நடைபோடும் ஆ.இராசா அவரது கருததுகளால் ஈர்ககப்பட்டு இப்போதைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே பேசியுள்ளார். இவர் கூறியது தவறென்றால் நூற்றுக்கணக்கான நூல்களில், ஆயிரக்கணக்கான கூட்டங்களில் இக்கருத்து தெரிவிக்கப்பட்டுளதே! அதற்கு என் செய்வது? ஆ.இராசாவின் கருத்துக்கு ஒரு சாரார் பாய்கின்றனர் என்றால் அதற்குக் காரணம் அக்கருத்தின் இழிவால் அவமானமுற்றதுதானே! மனுநூலில் மக்களை இழிவு படுத்தும் கருத்துகள் இடம் பெற்றுள்ளன என்பதை ஒப்புக் கொள்ள மனமின்றி, அதற்கு எதிராகக் குரல் கொடுக்காமல் இழி கருத்துகளை எடுத்துச் சொல்பவர் மீது பாய்வது ஏன்?

சூத்திரனுக்கு ஒரு நீதி,

தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு ஒரு நீதி,

சாத்திரம் சொல்லுமாயின்

 அது சதியெனக் காண்போம்

என மாக்கவி பாரதியார் மனுமுதலான நூல்களில் உள்ள ஆளுக்கொரு நீதி கூறும் அறமற்ற கருத்துகளுக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளார். அவர் வழியில்  சாத்திரத்தின் சதிகளை முன்னோர் வழியில் அம்பலப்படுத்தும் ஆ.இராசா பாராட்டிற்குரியவரே!

இக்கருத்துகளை அலசி ஆராய்ந்து உண்மையை உரைக்கவைத்த முறையீட்டாளருக்கு நன்றி.

மேனாள் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா சிறந்த நாவன்மை மிக்கவர்.

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்

வேட்ப மொழிவதாம் சொல் (திருக்குறள் 643)

என்னும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் உரைக்கும் இலக்கணத்திற்கேற்ப மக்களைக் கட்டிப்போடும் சொற்பொழிவாளர். மதம், மொழி முதலான அனைத்திலுமே  ஒற்றைத் தன்மையை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த எண்ணும் கட்சி ஒன்றியத்தில் ஆளுங்கட்சியாக இருந்தாலும் துணிந்து எதிர்க்குரல் கொடுத்து வருபவர். ஆனால், இதற்கு முன்னர் இக்கட்சியுடன் உறவு கொண்டு தம் கட்சி, ஆட்சி நலன்களைச் சுவைத்த பொழுது வாய் மூடி இருந்தவர். எனவே, தாம் உணர்ந்துள்ள கருத்தை எக்காலத்திலும் பரப்ப வேண்டு்ம் என்றில்லாமல் அவ்வப் பொழுது வாய் மூடி இருப்பது முறையல்ல. எனவே, மக்களிடம் ஆரிய நூல்களில் உள்ள இழிவுகளைச் சரியான முறையில் தொடர்ந்து சுட்டிக்காட்டாமையால் அவரைக் குற்றவாளியாகவே கருதுகிறோம்.

இதற்குத் தண்டனையாக அவர் மனுமுதலான சமற்கிருத நூல்களில் உள்ள மக்கள் குலத்திற்கு எதிரான அறமற்ற கருத்துகளை மக்களிடையே பரப்புவதில் முழுக்கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கிறோம்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல இதழுரை

புரட்டாசி 12, 2053 / 29.09.2022