(அகல் விளக்கு – மு.வரதராசனார். 34. தொடர்ச்சி)

அகல் விளக்கு

அத்தியாயம் 14 தொடர்ச்சி

எங்களைப் பின் தொடர்ந்திருக்கிறார். நான் அவரைக் கவனிக்கவில்லை. நான் ஏறிய பேருந்திலும் ஏறினார். அங்கும் முரடன் நடந்து கொண்ட முறையைக் கவனித்திருக்கிறார். அவன் ஒதுங்காமல், முன்னுக்கும் செல்லாமல் என் பக்கத்திலேயே நின்று கொண்டிருந்தான் அல்லவா? என் பக்கமாகத் தன் கால்களை நகர்த்தி என் கால்கள்மேல் படுமாறு செய்தான். நான் என் கால்களை எவ்வளவோ ஒடுக்கி உட்கார்ந்தும் பயன் இல்லை.

எனக்கு அழமட்டாத குறைவாக இருந்தது. ஒரு புறம் கோபமாகவும் இருந்தது. ஆனாலும் யாரிடம் சொல்வது? எப்படிச் சொல்வது? இன்னும் சிறிது நேரத்தில் இறங்கப் போகிறோம் என்று பொறுத்துக் கொண்டிருந்தேன். அவனுடைய பார்வை என் மேலேயே இருந்தது. இந்தப் பாவிகள் எல்லாரும் அக்கா தங்கையோடு பிறக்கவில்லையா? இவர்கள் தங்கள் குடும்பத்தில் பெண்களையே பார்த்ததில்லையா? என்ன நாடு இது! என்ன நாகரிகம் இது என்று வெறுப்போடு இருந்தேன். நான் இறங்கும் இடம் வந்தது. எழுந்தேன். அவன் என் பக்கத்தில் உராய்ந்து நின்றான். வழிவிடுங்கள்” என்றேன்.

வழிவிடுவது போய் விலகி நான் முன்னே சென்றவுடன், என் பக்கத்தில் நெருங்கி வந்து தானும் இறங்கத் தொடங்கினான். பேருந்தை விட்டு இறங்கித் தரையில் கால் வைக்கும் நேரத்தில், என் கையில் இருந்த புத்தகங்களையும் சிறு தகரப் பெட்டியையும் வேண்டும் என்றே தட்டிக் கீழே விழச் செய்தான். பிறகு தானே விரைந்து பரபரப்பாக அவற்றை எடுத்துத்தர முனைந்தான். “வேண்டா விட்டுவிடு. நான் எடுத்துக் கொள்வேன். வேண்டும் என்றே தட்டிவிட்டு இப்போது எடுத்துத் தர வருகிறாயா?” என்று கோபத்தோடு கேட்டேன்.

‘யார்? நானா? நல்லதற்குக் காலம் இல்லை’மா என்று எதிரே நின்று மீசைமேல் கைவைத்தான். அப்போது அவனுடைய கன்னத்தில் பளீர் பளீர் என்று இரண்டு அறைகள் விழுந்தன. அறைந்தவர் வேறு யாரும் இல்லை, சந்திரன்தான். உடனே முரடன் அவரை அடிக்கக் கை ஓங்கி ஓர் அடி கொடுத்தான். அதற்குள் பேருந்தில் இருந்தவர் இருவர் இறங்கி அவனுடைய கையைப் பற்றிக்கொண்டு இருவரையும் விலக்கினார்கள். ‘இந்த ஆள் கடற்கரையிலிருந்து என்னைத் தொடர்ந்து வருகிறான்’ என்று வழியில் நடந்தவற்றை எல்லாம் நான் சொன்னேன்.

முதலிலிருந்தே தாம் எல்லாவற்றையும் பார்த்து வருவதாகவும் மனம் கேட்காமல் தாமும் அந்தப் பேருந்தில் ஏறி வந்ததாகவும் சந்திரன் கூறினார். ‘வேண்டும், வேண்டும், அந்த முரட்டுப் பயலை நன்றாக உதையுங்கள்; நாங்களும் கவனித்தோம். அவன் வேண்டுமென்றே செய்ததுதான்’ என்றுபேருந்தில் இருந்த இரண்டு மூன்று பேர் குரல் கொடுத்தார்கள். ‘சரி விட்டுத் தொலையுங்கள்’ என்றனர் சிலர். ‘அப்படியே கையோடு அழைத்துக்கொண்டு போய்க் காவல்நிலையத்தில் எழுதி வைக்கவேண்டும்’ என்றனர் சிலர். ‘விடுங்கள் அவனே பி.ஏ. படித்துப் பிறகு போலீசு இன்ஸ்பெக்டர் வேலைக்கு வந்தாலும் வரலாம். சொல்லிப் பயன் இல்லை. நாகரிகம் வரணும்’ என்றார் ஒருவர். அந்த முரடன் சந்திரனை உற்றுப் பார்த்தபடியே அப்பால் நகர்ந்தான். ‘சரி நான் போய் வருகிறேன். வணக்கம்’ என்றார் சந்திரன். வீட்டு வரைக்கும் வந்து போகுமாறு கேட்டுக்கொண்டேன்.

“சந்திரன் உண்மையாக அடித்தானா?” என்று நான் வியப்போடு கேட்டேன்.

“உண்மையாக, அவருக்கு என்ன துணிச்சல் தெரியுமா” என்று சொன்னதும் அவளுடைய முகம் மாறியது. கண்கள் கலங்கின. “அப்படிப்பட்ட துணிவும் தைரியமும் அவருடைய மென்மையான உடம்பில் அடங்கிக்கிடக்கின்றன. அதனால்தான், இப்படித் துணிந்து படிப்பையும் தேர்வையும் விட்டு விட்டுப் போய்விட்டார். நீங்களும் நானும் இப்படிச் செய்வோமா? துணிச்சல்தான் அவரைக் கடைசியில் கெடுத்து விட்டது.”

அது உண்மைதான் என்று எனக்குப்பட்டது.

“ஆமாம், உண்மைதான்” என்றேன்.

“வீட்டுக்கு அழைத்து வந்து அதோ அந்த நாற்காலியில்தான் உட்காரவைத்தேன். உள்ளேபோய் அம்மாவிடம் சொன்னேன். அம்மா வந்து அவரைப் பாராட்டி நன்றி கூறினார். ‘உன்னைப்போல் நல்ல பிள்ளைகளும் இருப்பதனால்தான் இந்த நாட்டில் கொஞ்சம் மழை பெய்கிறது’ என்று அவருடைய நல்ல பண்பைப் பாராட்டினார். என்னைக் காப்பி வைத்துக் கொண்டு வரச்சொல்லி அனுப்பிவிட்டுச் சந்திரனோடு பேசிக் கொண்டிருந்தார். ஊர், பேர், குடும்பம் முதலிய எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்துகொண்டார். நான் காப்பிக் குவளையோடு வந்தபோது, ‘உன்னைப்போல் படிக்கிற பிள்ளைதான்’மா. வேறே கல்லூரி; நீ படிக்கும் அதே வகுப்புத்தானாம். இந்தப் பிள்ளையும் கல்லூரியில் சேர்ந்து ஒரு மாதம்தான் ஆச்சுதாம்’ என்றார். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த பிறகு அவர் புறப்பட்டபோது, விடுமுறையில் அடிக்கடி வந்து போகும்படியாக அம்மா கூறினார். நானும் சொன்னேன் இப்படித்தான் எங்கள் நட்புத் தொடங்கியது” என்றாள்.

நல்ல வகையில்தான் நட்புத் தொடங்கியது என்று எண்ணினேன்.

அப்போது முதலில் வந்த பெண் வந்து, “அக்கா! உன்னை அம்மா வரச் சொன்னார்கள்” என்றாள்.

“வருவேன். அவசரம் இல்லையே. அவசரமாக இருந்தால் வந்து சொல்” என்று அவளை அனுப்பிவிட்டு “இவள் தான் எனக்கு அடுத்த தங்கை. திருமகள் என்று பெயர். இன்னும் இரண்டு தங்கை உண்டு. உயர்நிலைப் பள்ளியிலும் தொடக்கப் பள்ளியிலும் படிக்கிறார்கள்” என்றாள்.

“அப்புறம்? சந்திரன் உங்களோடு நெருங்கிய நட்புக் கொண்டான் அல்லவா?” என்றேன்.

“அன்று அவருடைய பெயரை நானும் கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லை. என்னுடைய பெயரை அவரும் கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லை. அதனால் அவரைப் பற்றி அடிக்கடி நினைத்தேனே தவிர, கடிதம் எழுதும் வாய்ப்பு இல்லை. நட்பு, இரயில் நட்புப்போல் அன்றே முடிந்து போயிருக்க முடியும். ஆனால் அவர் உண்மையான அன்பு உடையவர். போலி அன்பு, போலி நட்பு எல்லாம் அவருக்குத் தெரியாதவை. இரண்டு வாரம் கழித்து ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலை ஐந்து மணிக்கு அவர் இதே இடத்தில் வந்து நின்றார். யார் வீட்டுக்கோ போவதற்காக ஒழுங்காக உடுத்துக்கொண்டு புறப்பட்டு வந்த நான், அவரைக் கண்டதும், பெருமகிழ்ச்சி அடைந்தேன். ‘எங்கோ புறப்படுவதாகத் தெரிகிறது. போய் வாங்க’ என்றார்.

எனக்கோ அவரை விட்டுப்போக மனம் இல்லை. உட்கார்ந்து பேசினோம். என் படிப்பு முதலியவற்றைப் பற்றிக் கேட்டார். என்ன என்ன பாடங்கள் நடந்தன என்று கேட்டார். நானும் சொன்னேன். இன்னார் இன்னாருடைய குறிப்புகள் நல்லவை என்று சொன்னார். கணக்குகள் எல்லாம் தெளிவாகத் தெரியுமா என்று அவரே கேட்டார். உண்மையில் நான் கணக்குப் பாடத்தில்தான் அரைகுறையாக இருந்தேன். தடுமாறிக் கொண்டிருந்தேன். என் நிலையைச் சொன்னதும் கணக்குப் புத்தகத்தைக் கொண்டுவருமாறு சொல்லி, சந்தேகம் என்ன என்று கேட்டார். என் அறியாமை நீங்குமாறு விளக்கமாகச் சொன்னார். அதன் பிறகுதான் அவருடைய பெயரைக் கேட்டறிந்தேன். என் பெயரைப் புத்தகத்தைப் பார்த்தே தெரிந்து கொண்டார். “போன வாரம் எதிர்பார்த்தேன். நீங்கள் வரவில்லையே” என்று உரிமையோடு கேட்டேன். கடற்கரைக்குச் சென்றுவிட்டதாகக் கூறினார்.”

அவர்களின் உறவின் தன்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசை எனக்கு ஏற்பட்டது. ஆனால் எப்படிக் கேட்பது என்று திகைத்தேன்.

அவளே பேசலானாள்: “அது போகட்டும். என் மனத்தில் ஒரு சந்தேகம் ஏற்பட்டு வேதனைப்படுத்தி வருகிறது. அதை உங்களிடம் சொல்லி நான் குற்றம் அற்றவள் என்பதை விளக்கி, ஆறுதல் பெறவேண்டும் என்றே உங்களை இங்கே வரும்படியாகச் சொன்னேன்” என்றாள்.

அப்போது ஓர் அம்மையார் எங்களை நோக்கி வர இமாவதி எழுந்து, “எங்கள் அம்மா” என்றாள். அம்மாவை நோக்கி, “இவர்தான் வேலு, சந்திரன் நம்மிடத்தில் அடிக்கடி சொல்லியிருக்கிறாரே” என்றாள்.

அந்த அம்மா உடனே என்னை ஆர்வத்தோடு பார்த்து “ஆமாம் சந்திரனோடு ஊரில் படித்த பிள்ளையா?” என்றார்.

“ஆமாம் அம்மா” என்றேன்.

“சந்திரன் எங்கே? என்ன இது, கதையாக இருக்கிறதே! என்னால் நம்பவே முடியவில்லையே” என்று சொல்லிக் கொண்டே என் எதிரே உட்கார்ந்தார். நாங்களும் உட்கார்ந்தோம். “அந்தப் பிள்ளை கள்ளம் கரவு இல்லாமல் குழந்தைபோல் பேசும்! என்ன மனக்குறை இருந்தாலும் எங்களிடம் வந்திருக்கக் கூடாதா? நேரில் சொல்லியிருக்கக் கூடாதா? எங்கள் வீட்டு ஆண்பிள்ளைபோல் எண்ணியிருந்தோம். அப்பா பணம் அனுப்பவில்லையானால் கேள் என்று சொல்லி வைத்திருந்தோம். மகன் போல் பழகிவிட்டு, இப்படிச் சொல்லாமல் போனால், மனத்துக்கு வேதனையாக இருக்கிறது. ஒரு சொல் சொல்லியிருக்கக் கூடாதா? நாங்கள் என்ன செய்வது? ஏதாவது சாமியார் பைத்தியம் உண்டா? எங்காவது மலைக்கு, குகைக்கு” – என்றார்.

“அதெல்லாம் இருந்தால் நமக்குத் தெரியாதா அம்மா? அவரைப் பற்றி நமக்குத் தெரியாதது என்ன இருக்கிறது?” என்றாள் இமாவதி.

“இந்தத் தருணத்தில், நம்மவர்கள், நண்பர்கள் ஆகியவர்களின் உணவு முதலிய வசதிகளைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பைச் சந்திரனிடம் ஒப்படைக்க எண்ணியிருந்தோம். திருமணத்துக்குள் வந்து சேர்ந்தால், என் வயிற்றில் பால் வார்த்ததுபோல் இருக்கும். அவனுடைய அப்பா வந்தாராமே; நம் வீட்டுக்கு அழைத்து வந்திருக்கக் கூடாதா?” என்றாள் அந்த அம்மா.

இவர்களின் உறவு முதலியவற்றை எனக்கே தெரிவிக்காமல் மறைத்திருந்தான் சந்திரன். அவன் என்னைவிட்டு ஒதுங்கி நின்ற தன்மையும் இவர்களுக்குத் தெரியாது. ஆனால் அதை எப்படிச் சொல்வது?

“சரி, சரி, தம்பி! எனக்கு வேலை ஏராளமாக இருக்கிறது. யாரோ இமாவதியோடு நெடுநேரமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு வந்தேன். சரி, வரட்டுமா? இமாவதி! தம்பி இருக்கட்டும். அங்கே உறவினர்கள், வந்தவர்கள் தப்பாக நினைக்கக்கூடும். அப்படி வந்து அவர்களோடு கூடிப் பேசிக் கொண்டிருக்கலாமே” என்று சொல்லிச் சென்றார்.

“கொஞ்சம் பேசிவிட்டு வருவேன்’மா” என்று சொல்லி விட்டு, இமாவதி என்னை நோக்கினாள்.

“என்னவோ சொல்லவேண்டும் என்கிறீர்கள்?”

“ஆமாம் என்று சிறிது நேரம் அமைதியானாள். பிறகு அவருடைய மனக்கவலைக்கு என்ன காரணம்? உங்களுக்குத் தெரிந்த காரணம் ஏதாவது இருந்தால் மறைக்காமல் சொல்லுங்கள்” என்றாள்.

உண்மையை எப்படிச் சொல்வது என்று தயங்கினேன். தலை குனிந்தேன்.

“தயவு செய்து உண்மையைச் சொல்லுங்கள். என் திருமண அழைப்பிதழ் வந்தபிறகுதான் கவலைப்பட்டாரா?”

“ஆமாம்” என்று சொல்லித் தலை நிமிர்ந்து பார்த்தேன். அவள் தன் முந்தானையின் ஒரு முனையை வாயில் வைத்தபடியே தன் கால்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.


“உங்களிடம் ஏதாவது சொன்னாரா?” என்றாள். அவளுடைய உள்ளத்தின் கலக்கம் குரலில் புறப்பட்டது.

“சொன்னார்.”

“ஏமாற்றம் அடைந்ததாகச் சொன்னாரா?”

“ஆமாம்.”

முந்தானையால் கண்களைத் துடைத்தாள். யாரோ வருவதைக் கண்டு நிமிர்ந்து உட்கார்ந்தாள். “நான் உண்மையாகச் சொல்கிறேன். நான் குற்றவாளி அல்ல. அவர் தவறாக எண்ணிக்கொண்டு பழகியிருக்கிறார். அவருடைய எண்ணம் இப்படி இருக்கும் என்று நான் சந்தேகப்பட்டதே இல்லை. தங்கையோடு பழகுவதுபோல் என்னோடு பழகினார்.

நான் அண்ணன் என்று கருதிப் பழகினேன். அதனால்தான் அன்போடு திருமண அழைப்பிதழ் அனுப்பிக் கடிதமும் எழுதியிருந்தேன். அவர் ஏமாற்றம் அடைவார் என்று தெரிந்திருந்தால், தேர்வு முடியும் வரைக்கும் அழைப்பிதழ் அனுப்பியிருப்பேனா? அதை ஏன் அவர் உணரவில்லை?” அப்போது அவளுடைய மனக்கலக்கம் தீர்ந்துவிட்டது. தெளிவாகப் பேசினாள். “எல்லாவற்றிலும் வெளிப்படையாகக் குழந்தை மனத்தோடு பழகியவர் இதில் மட்டும் ஏன் இப்படி மறைத்து நடந்தார்? ஆண்களோடு எப்படிப் பழகினாலும் ஆபத்துக்கு இடம் இருக்கும்போல் தெரிகிறது” என்றாள்.

“ஒரு பெண் திருமணம் ஆனபிறகு இப்படிப் பழகினால் இடர்ப்பாடு இல்லை” என்றேன்.

அவள் உடனே மறுத்துப் பேசினாள்: “அப்போதும் உண்டு. அந்தப் பெண்ணின் கணவன் அப்போது அவள்மேல் சந்தேகப்படுவான்” என்றாள்.

“உண்மைதான்” என்று சிரித்தேன்.

(தொடரும்)

 முனைவர்மு.வரதராசனார், அகல்விளக்கு