children04

கொஞ்சு மொழி பேசாவிட்டால் குழந்தைகளிடம் நஞ்சு மொழியே மிஞ்சும்!!

முனைவர். ப. பானுமதி

aashira bhanumathi

வெளியிடங்களில் இளம் குழந்தைகளின் நடைமுறைகளைப் பார்க்கும் போது மனத்திற்குக் கலக்கமாக இருக்கிறது. அவர்கள் பெரியவர்களிடம் மரியாதை சிறிதுமில்லாமல் நடந்து கொள்வதும் வசை மொழிகளை வரையறையின்நி வீசுவதும் வெகு இயல்பாகிப் போயுள்ளது. இல்லங்களிலும் அன்னை, தந்தையை வைவது அன்றாட நடைமுறையாகி விட்டது.

அத்தத்தா என்னும்

நின்தேமொழி கேட்டல் இனிது

 children01

  சங்கத் தாயின்  மகிழ்ச்சிச் சாரல் இது. சங்ககாலத் தாய் ஒருத்தி தன் குழந்தை ‘அத்தத்தா….’ என்று பிஞ்சு வாயில் எச்சில் ஊறக் கொஞ்சு மொழி பேசுவதைக் கேட்டு மெய்சிலிர்ப்பாள். தேன் போலும் தித்திக்கும் தீஞ்சுவை வாய்ந்தது குழந்தைகளின் வாயூறும் மழலை மொழி. இப்படி கனிந்த மொழி பேசும் குழந்தைகள் வளர் பருவத்தில் பேசாமலோ வன்மொழி பேசுபவர்களாகவோ ஆவது எதனால்?

  ஒருவருக்கு இசை பிடிக்கும். அவர் இசையைக் கேட்பதையும் இசையைப் பற்றி பேசுவதையுமே விரும்புவார். ஒருவருக்கு இலக்கியம் பிடிக்கும் என்றால் அதைத் தவிர வேறு  செய்தி பேசும் போது சிறிது நேரத்திற்கு மேல் அவரால் அதில் கவனம் செலுத்த முடியாது.  திரைப்படத்தை நேசிப்பவர்களுக்கு அதைத் தவிர வேறு பேசினால் பிடிக்காது. சிலருக்குச்  சமையல் பிடிக்கும். சிலருக்கு அழகுக் கலை பிடிக்கும். சிலருக்கு அரசியல் பிடிக்கும். இப்படி ஒவ்வொருவரின்  விருப்பம் ஒவ்வொரு வகையாக இருக்கும்.

 children02

 

  குழந்தைகளுக்கு எது பிடிக்கும் என்று கேட்டால் நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது விழுக்காடு “விளையாட்டு” என்று கூறுகின்றன. “யாரைப் பிடிக்கும்?” என்று கேட்டால் “இமாம் அண்ணாச்சியை” என்கின்றன. காரணம் அவர் குழந்தைகளுடன் குழந்தையாகப் பழகுவதால். ஒருவர் தம்மைத் தாழ்த்திக் கொண்டு ஒரு நிகழ்ச்சியை நடத்துவது என்பது அவ்வளவு எளிதல்ல. நிகழ்ச்சியில் விரும்பத் தகாதவை ஒன்றிரண்டு இருந்த போதும் அந்தக் குழந்தைகளுக்கு நிகராக, குழந்தை மனநிலையில்  இறங்கிப்பழகும் நிலையே அவரது அந்த நிகழ்ச்சியின் வெற்றி எனலாம்.

”தங்கள் குழந்தையின் மழலைச் சொல்லைச் சுவைக்காதவர்கள்தான் குழலையும் யாழையும் இனிமையானது என்பார்கள்” என்று சற்று காரசாரமான கருத்தைப் பதிவு செய்வார் திருவள்ளுவர். குட்டிக் குழந்தைகளின் மொழி மழலை மொழியா? இல்லவே இல்லை! மனக் கவலையைப் போக்கும் மந்திர மொழி. இந்த மந்திர மொழியைக் கேட்டல் இனிது. ஆம்,

குழவி தளர்நடை காண்டல் இனிதே

அவர்மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே

 

என்று இனியவற்றைப் பட்டியலிடும் இனியவை நாற்பது அமிழ்தினும் இனியதான மழலைச் சொல்லை உண்டு சுவைத்து நமக்கும் எடுத்துக் காட்டுகிறது.,.

  பெற்றவர் உற்றவர் மட்டுமல்ல, மற்றவரும் குழந்தையின் இனிய சொற்களைக் கேட்கப் விரும்புவர்.

நாவொடு நவிலா நகைபடும் தீம்சொல்

யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வன்

என்று கூறும் அகநானூற்றுப் பாடலும், குழந்தைகளின் மழலைச் சொல் எவருக்கும் மயக்குறும் மந்திரமாவதை எடுத்துக் காட்டும்.

  படிப்பு படிப்பு என்று கல்விக்கு முதன்மை கொடுக்கும் இக்காலத்தில் இவ்வளவு இனிய மழலைச் சொல்லைக் கேட்டுக் களிப்படைய வேண்டிய குழந்தைகளிடம் பேசும் பலர் அக்குழந்தையை முதல் கேள்வியிலேயே முடக்கி விடுகின்றனர். குழந்தைகளிடம் பேசும் போது அவர்களின் பெயரைக் கூடக் கேட்பதில்லை. குழந்தைகளைப் பார்த்தவுடன் பெரியவர்கள் பலரிடம் எழும் முதல் வினா, ‘என்ன படிக்கிறாய்?’ என்பதுதான். ஏனென்றால் அக்குழந்தையின் பெயர் இவர்களுக்குத் தெரிந்திருக்கும். அதனால் எடுத்த எடுப்பிலேயே படிப்பைப் பற்றித் தொடங்கி விடுவார்கள். வேண்டா வெறுப்பாக அக்குழந்தை, தான் படிக்கும் வகுப்பைச் சொல்லும். அதோடு விடுவதில்லை சிலர். அடுத்த வினாவாக ‘நன்றாகப் படிப்பாயா?’ என்று கேட்டு விடுவர்.

  பெண்கள் இருவர் பேசத் தொடங்கினாலே “உங்கள் பெண் எப்படிப் படிக்கிறாள்? என் பெண் படிக்கவே மாட்டேன் என்கிறாள்.  வீட்டுப்பாடம் எல்லாம் உங்கள் பெண், தானே முடிக்கிறாளா? என்  பெண் நான் உட்கார்ந்தால்தான் முடிக்கிறாள்” என்று படிப்பில் தொடங்கி படிப்பிலேயே முடிகிறது.

  இது ஒரு புறம். ஆண்குழந்தைகளைப் பெற்ற பெண்கள், “எப்பொழுது பார்த்தாலும் விளையாட்டு விளையாட்டு, படிக்க மட்டும் மாட்டேன் என்கிறான். உங்கள் பையன் எப்படி? என்று ஒருவர்.

  “மாதத்துக்கு இரண்டு முறையாவது  பள்ளியிலிருந்து  கூப்பிட்டு விடுகிறார்கள். என்ன செய்வது என்றே தெரியவில்லை.” இது மற்றொருவர்.

  இது போன்ற உரையாடலைத்தான் கேட்க முடிகிறது. குழந்தையைப் பற்றி பேச்சு எடுத்தாலே பெற்றோருக்கு அந்தப் பேச்சின்  தொடக்கம் படிப்பாகத்தான் இருந்து தொலைகிறது.

  பசுவின் வலி பறவைக்குத் தெரியுமா? ‘நன்றாகப் படிப்பாயா’ என்று வினா எழுப்பினால், அந்தக் குழந்தை என்ன செய்யும். நன்றாகப் படிக்க வில்லை என்றால் “நான் நன்றாகப் படிக்க மாட்டேன்” என்றா சொல்லும். நன்றாகப் படிப்பேன் என்று சொல்ல வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி அங்கே பொய் சொல்லும் சூழலுக்கு அக்குழந்தையைக் கடத்தி விடுகிறார்கள், இந்தப் பெரியவர்கள். நன்றாகப் படிக்கும் குழந்தையாக இருந்தாலும்கூட எல்லா நேரத்திலும் படிப்பைப் பற்றிச் சிந்திக்க விரும்புவதில்லை அவை. உரையாடல் படிப்பில் தொடங்கினாலே குழந்தைகள் சுருங்கி விடும். அதற்கு மேல் அவை பேச விரும்புவதே இல்லை.

  குழந்தைகளிடம் பேசும் போது அவர்களின் உலகத்திற்குப் பெரியவர்கள் செல்ல வேண்டும் எடுத்த எடுப்பிலேயே ‘’நீ என்ன படிக்கிறாய்? எப்படி படிப்பாய்? எத்தனையாவது நிலை(ரேங்க்)?’’ என்றெல்லாம் கேட்கும் கேள்விகளைத் தவிர்த்தல் வேண்டும். ஏனெனில் இப்படி வினாக்கள் தொடுக்கும்போது மிக மிக நன்றாகப் படிக்கும் குழந்தையாக இருந்தால் உற்சாகத்துடன் விடை அளிக்கலாம். அவை கூட பள்ளியைத் தவிர பிற இடங்களில் படிப்பு, பாடம் இவற்றைப் பற்றி பேச விரும்புவதில்லை. அவ்வளவாகப் படிக்காத குழந்தைகளாக இருந்தால் சொல்லவே வேண்டா. அவை இது போன்ற வினாக்களை அறவே விரும்புவதில்லை. ஒன்று, குழந்தைகள் இப்படிப் பட்டவர்களுடன் பழகுவதைத் தவிர்த்து விடுகின்றன. இல்லாவிட்டால் குழந்தைகள் மனத்தில் மூண்டெழும் சினம் ‘‘சொல்ல முடியாது . போ’’ ‘‘உங்களை எனக்குப் பிடிக்கவில்லை. நீ உன் வீட்டுக்குப் போ’’ என்று கூற ஆரம்பித்து விடுகின்றன.  இது போன்ற வினாக்கள் எழுப்பிய கோபத்தின் உச்சம் சில சமயங்களில்  ‘போடா’, ‘போடி’, போன்ற சொற்களும் குழந்தைகளின் வாயிலிருந்து வெளிப்படுகின்றன. அமுத மொழி பேசும் குழந்தைகளின் மலர் போன்ற மென்மையான வாயிலிருந்து நஞ்சு போன்ற கொடுஞ்சொற்கள் உமிழப் படுவதற்குப் பல நேரங்களில் பெரியவர்களே காரணமாகி விடுகின்றனர் என்பதைப் பெரியவர்கள் உணர வேண்டும்.

  மழலையரிடம் பேசும்போது பேச்சு விளையாட்டில் தொடங்கலாம். ”உனக்கு என்ன விளையாட்டு பிடிக்கும். உன் நண்பர்கள் யார்? யாரோடு இந்த விளையாட்டு விளையாடுவாய்?” என்று தொடங்கி விளையாட்டு, நட்பு பற்றியெல்லாம் பேசலாம். பின்பு உணவில் தொடர்ந்து, ”உனக்குச் சாப்பிட எது பிடிக்கும்? பனிப்பால் குழைவா(ஐசு கிரீமா)?  நூலடையா(நூடுல்சா)? தோசையா? நூலடை எப்படி இருக்கும்? பனிப்பால் குழைவு எப்படி இருக்கும்?” என்றெல்லாம் பேசலாம். குழந்தைகளுக்குப் பிடித்தவற்றைப் பற்றி பேசும் போது ஒரு கல்லில் இரு மாங்காய். எல்லோரிடமும் அன்பாகப் பழகும் மனநிலையை உருவாக்கலாம். மற்றும் குழந்தைகளிடம் சுவைகளை, வடிவங்களை, நிறங்களைப் பிரித்தறியும் திறனையும் வளர்க்கலாம்.

puu parikka varukirom01

பழைய காலத்தில் குழந்தைகள் விளையாட்டில்,

பூப்பறிக்க வருகிறோம்! பூப்பறிக்க வருகிறோம்!

எந்த மாதம் வருகிறீர்? எந்த மாதம் வருகிறீர்?

ஐப்பசி மாதம் வருகிறோம் ஐப்பசி மாதம் வருகிறோம்

எந்தப் பூவைப் பறிக்கிறீர்? எந்தப் பூவைப் பறிக்கிறீர்? திசம்பர் பூவைப் பறிக்கிறோம்! திசம்பர் பூவைப் பறிக்கிறோம்!

யாரை விட்டுப் பறிக்கிறீர்? யாரை விட்டுப் பறிக்கிறீர்?

கார்த்திகைப் பூவை விட்டுப் பறிக்கிறோம்!

கார்த்திகைப் பூவை விட்டுப் பறிக்கிறோம்!”

என்று ஒரே நேரத்தில் தமிழ், ஆங்கில மாதங்கள், பூக்கள் பற்றியெல்லாம் தெரிந்து கொண்டனர்.

  இக்காலத்துக் குழந்தைகளின் உலகம் வேறுபட்டது, வியப்பானது, விந்தையானது.. அக்காலத்தை விட நூறு மடங்கு அறிவானதும் ஆக்க முழுமையானதும்கூட. “தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க்கெல்லாம் இனிது” என்று வள்ளுவர் கூறுவது போல, அக்காலத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இப்போது பன்மடங்கு அறிவுத்திறன் வளர்க்கு,ம் விளையாட்டுகள் கணினியிலும், கைப்பேசியிலும் கூகுல், முகநூல்  நிறுவனத்தாரால் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளன. ஏழை பணக்காரர் என்னும் வேறுபாடு இல்லாமல் குழந்தைகள் எல்லாரும் இவ்விளையாட்டுகளை விளையாடுகின்றனர்.

  குழந்தைகளோடு பேசப் போகும் பெரியவர்கள் கொஞ்சம் கொஞ்சம் அந்த விளையாட்டுகள் பற்றியும் தெரிந்து கொள்ளலாமே. அவர்கள் விளையாடும் கணினி விளையாட்டுகளைப் பற்றி பேசினால் குழந்தைகள் அதிகம் ஈடுபாடோடு பேசுவர். ஆகவே குழந்தைகளோடு பழகும் பெரியவர்கள் குழந்தைகள் விரும்பும் இக்கால உணவு வகைகள், விளையாட்டு வகைகள் முதலிய அவர்களின் உலகையும் அறிந்திருத்தல் இன்றியமையாத் தேவையாகின்றது. அத்துடன் கோபமில்லாமல், கடினமான அதிகாரக் குரல் இல்லாமல், குழந்தை மொழியில் பேசும் மழலை மனத்தோடு அவர்களின் உலகத்திற்குள் நுழைதல் தேவையாக இருக்கிறது. வன்மொழி பேசாது நன்மொழி பேசும் குழந்தைகளை உருவாக்குவது பெற்றோர்களின் மற்றும் குழந்தைகளைச் சுற்றி இருக்கும் பெரியவர்களின் கடமை. பெரியவர்கள் குழந்தைகளிடம் கொஞ்சு மொழியும் கெஞ்சு மொழியும் பேசாவிட்டால் குழந்தைகளிடம் நஞ்சு மொழியே மிஞ்சும்!!

children03

 [படங்கள் நன்றி: தமிழ்இணையக் கல்விக்கழகம், பிறஇணையத்தளங்கள்]