அயலவரின் முதல் தமிழ்க்கையேடு – 1 – இலக்கிய அறிஞர் இராசம் அம்மையார்
தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின
முதல் கையேடு – 1
முதலில் இந்தத் தலைப்பைப் பற்றி …
ஆம் … பிற நாட்டுக் கிறித்துவப் பாதிரிமார், குறிப்பாக 18-ஆம் நூற்றாண்டுக்கு முன்னால் நம் நாட்டுக்கு வந்தவர்கள், தம் சமயத்தைப் பரப்புவதற்காக நம் மொழிகளைப் படித்து அந்த மொழிகளை விளக்க எழுதிய “இலக்கணம்” அனைத்துமே “கையேடு”களே.
20~21-ஆம் நூற்றாண்டுப் பல்கலைக்கழகத்து ஆய்வாளர்களைப்போல மொழி ஆராய்ச்சி செய்வதற்காக அந்த இலக்கணங்களைப் பாதிரிமார் எழுதவில்லை. தங்களை ஒத்த பாதிரிமாருக்கு உதவும் வகையில் தாங்கள் படித்து அறிந்த மொழிகளை விளக்கியிருக்கிறார்கள், அவ்வளவே.
இந்தக் கையேடுகள்/இலக்கணங்கள் நேரிடையாகவும் மறைமுகமாகவும் சொல்லும் கதைகளும், மொழி/சமூக/சமய வரலாறும் தலைமேல் வைத்துக் கும்பிடத்தக்கவை. இவற்றின் உண்மையான, அடிப்படை நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல் …
“இது தொல்காப்பியத்தை மேற்கோள் காட்டவில்லை; திருக்குறளை மேற்கோள் காட்டவில்லை.” “இதில்ஒலியியல்(phonology) சரியாயில்லை; ஒலியன்(phonetics) சரியாயில்லை” “இந்தச் சொல்லின் வேர்ச்சொல் இது; இதை இந்தப் பாதிரி புரிந்துகொள்ளவில்லை” … என்று களத்தில் இறங்காமல், மேலே சேறு படாமல், தந்தக் கோபுரத்தில் அமர்ந்துகொண்டு,வெதுப்பி(உரொட்டி) கிடைக்காவிட்டால் ‘ அணிச்சல்(இனிமா/cake)’ தின்னட்டும் என்ற வகையில் “திறனாய்வு” செய்கிறவர்களுக்கு இந்தக் கையேடுகளையும் அவை உருவான சூழலையும் நேரிய வகையில் புரிந்துகொள்ள இயலாது!
அவர்களைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள், சரியா! அவர்கள் சுற்றிச் சுற்றி வந்து குழப்பியடித்தால் கேளுங்கள்: “அம்மாமாரே, ஐயாமாரே, அந்தப் பாதிரிமார் நம் மொழிகளைப் படிக்க முயன்று துன்புற்ற அந்தக் காலத்தில்…அவர்களுடன் இருந்து அவர்களுக்கு உதவி செய்யாமல் நீங்கள் எங்கே போயிருந்தீர்கள்?”
அன்றீக்குப் பாதிரியாரின் நூல்கள்: அறிமுகம்:
நம் தமிழருக்கு “முதல்” என்பதிலும் “கடைசி” என்பதிலும் மிகுந்த ஆர்வம்! முதல் பிள்ளை/தலைச்சன், கடைக்குட்டி; முதல் நூல், கடைசி நூல்; …இப்படி.
அதனால் எனக்கும் இந்த “முதல்” பற்றிய கிறுக்கு பிடித்துவிட்டது! இங்கே நான் சொல்லியிருப்பது தமிழில் ஒரு “முதல்” நூல்!
ஆமாம். “முதல்” என்ற நடப்பு நிகழ்ந்துகொண்டேயிருக்கும்.
இந்திய மொழிகளிலேயே முதன் முதலில் அச்சேறிய நூல் தமிழில், இரண்டாவதாக அச்சேறிய நூல் தமிழில் … இதெல்லாம் பற்றிப் பல வகை விளக்கங்களைப் பலரும் எழுதிவிட்டார்கள், பேசிவிட்டார்கள். அதெல்லாம் ஊர் முழுவதும் நாடு முழுவதும் இணைய முழுவதும் எதிரொலித்துக் கிடைக்கிறது. இனியும் நான் எழுதினால் பேசினால் அரைத்த மாவை அரைத்து விழுங்கிக் கக்குவது போல ஆகிவிடும்.
ஆனாலும் … அச்சேற்றப்பட்ட அந்த “முதல், இரண்டாவது” நூல்களுக்கெல்லாம் முன்னோடியாக இருந்த ஒரு “முதல்” கையேடு பற்றி இதுவரை யாரும் கண்டுகொண்டு, பேசி, பாராட்டியதாகத் தெரியவில்லை. எனவே நானே “முதல்” ஆளாக இதைச் செய்யத் துணிகிறேன்! )
இந்தக் கையேடு என்றிக்கு என்றிக்கியூசு/அன்றீக்கெ அன்றீக்கசு (Henrique Henriques; Anrique Anriquez) என்ற ஒரு போர்த்துக்கீசியப் பாதிரியாரால், தமிழ் மொழியைப் பிற போர்த்துக்கீசியப் பாதிரிமாருக்கு விளக்குவதற்காக, தாளில் (paper) கருப்பு மையில் கையால் எழுதப்பட்டது. இந்த முயற்சிக்கு உதவிய தாள்கள் சீனாவில் இருந்து தமிழகத்துக்கு வரவழைக்கப்பட்டன என்று கேள்விப்பட்டேன். அன்றீக்கு அடிகளார் கி. பி. 1548~1549-ஆம் ஆண்டுகளில் இந்தக் கையேட்டை உருவாக்கினார்.. நுணுக்கமாகப் பார்க்கவும் — இது உருவான காலம் 1548~1549. எனவே, அச்சில் ஏறிய தமிழ் நூல்களுக்கெல்லாம் இது முந்தியது!
பின்வரும் உண்மைகளைத் தெரிந்துகொள்ளவும்:
- கார்த்திலா என்பதுவே கி.பி. 1554-இல் முதலில் அச்சில் ஏறிய தமிழ் நூல் (Cartilha: pp. 38, Germano Galhardo, Lisbon, 11th February, 1554). இறைவணக்கம் பற்றியது. ஆனால் இது தமிழ் எழுத்தில் இல்லை, உரோமன் எழுத்தில். அச்சான இடமும் தமிழகம் இல்லை; போர்த்துக்கலில் இலிசுபன்(Lisbon) என்ற இடத்தில்.
- முதலில் அச்சில் ஏறிய தமிழ் நூல்கள் — தமிழ் எழுத்தில்; கொல்லத்திலும் கொச்சியிலும் தூத்துக்குடியிலும் எனப் பின்வருமாறு: தம்பிரான் வணக்கம் (Doctrina Christam en Lingua Tamul or தம்பிரான் வணக்கம், pp.16, Colligio do Saluador, Quilon, 20 Febraruy, 1577) — கி.பி. 1577
கிரீசித்தியானி வணக்கம் (Doctrina Christam: கிரீசித்தியானி வணக்கம், pp. 120, Collegio da madre de Deos, Cochin, 14 November, 1579) — கி.பி. 1579
அடியார் வரலாறு (Flos Sanctorum o Libro de las vidas di algunos santos trasladas en lengua malavar, pp. 669, (Tuticorin or Punnaikayil), 1586) — கி.பி. 1586
நான் குறிப்பிடும் கையேடு (தமிழ் மொழியைப் போர்த்துக்கீசிய மொழியில் விளக்குவது) — கி.பி. 1548~1549
இப்போது சொல்லுங்கள் — அயலவரால் எழுதப்பட்ட “முதல் தமிழ் நூல்” எது என்று!
இந்தக் கையேட்டை அன்றீக்கு அடிகளார் “Arte Da Lingua Malabar” என்று குறிப்பிட்டார். “மலபார் மொழியின் கருவி; மலபார் மொழிக்குத் திறவுகோல்” என்றும் இன்றைய நாட்களில் உருவாகிவரும் “30 நாட்களில் தமிழ்” போன்ற ஒரு கையேடு என்றும் வைத்துக்கொள்ளுங்களேன்.
அண்மைக்கால முயற்சி:
அன்றீக்கு அடிகளாரின் இந்தக் கையேட்டைத்தான் ஓர் அமெரிக்கப் பெண்மணியும் (Jeanne Hein; இப்போது அகவை 94+) நானுமாகச் (V.S. Rajam; இப்போது அகவை 70+) சேர்ந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தந்துள்ளோம்.
எல்லாம் வல்ல இணைய அறிஞர்களே, அந்தக் காலப் (16-ஆம் நூற்றாண்டுப்) போர்த்துக்கீசிய மொழியில் அந்தக் காலத் தமிழை (16-ஆம் நூற்றாண்டுத் தமிழை) விளக்கி அந்தக் காலப் (16-ஆம் நூற்றாண்டுப்) போர்த்துக்கீசிய-தமிழ் எழுத்துகளில் எழுதிய பாதிரியாரின் கையேட்டைப் படித்துப் புரிந்துகொள்வது எளிதான வேலையில்லை, நம்புங்கள்! நம்ப முடியாதவர்களைப் பற்றி நான் கவலைப்படப்போவதில்லை! அடம் பிடிப்பவர்கள் இருந்தால் … பழைய போர்த்துக்கீசியக் கையேட்டிலிருந்து ஒரு பத்துப் பக்கம் அனுப்பிவைக்கிறேன். அந்தப் பக்கங்களை அவர்கள் மனம் போன போக்கில் மொழிபெயர்த்துத் தமிழ்கூறு நல்லுலகை உய்விக்கலாம்!
பல பல ஆண்டுகளாக, பல பல இடையூறுகளுக்கு நடுவில், மிகவும் பாடுபட்டு உழைத்து இந்த நூலை இன்று வெளியிட்டிருக்கிறோம். இதைச் செய்யத் தேவையான பண உதவி எங்களுக்கு எங்கிருந்தும் இல்லை. அதுவும், கடைசி ஆண்டுகளில் (2009-2013) எல்லாமும் என் தனி முயற்சியும் என் கைச்செலவும்.
இதை ஆர்வர்டு பல்கலைக்கழகக் கீழ்த்திசை நூல்களில் ஒன்றாகச் சேர்த்து அச்சிட்டு உதவிய ஆர்வர்டு பல்கலைக்கழகத்துக்கும், குறிப்பாகப் பேராசிரியர் விட்சல் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
(தொடரும்)
தமிழ்ப்பெண்மணி அமெரிக்கப்பெண்மணியுடன் சேர்ந்து சாதனை புரிந்துள்ளார். பழைய கையேட்டைஅறிமுகப்படுத்துவதன் மூலம், அன்றைய காலச் சூழலையும் நாம் புரிந்து கொள்ள முடிகிறது. சொந்த முயற்சியிலும் கைச்செலவிலும் இந்நூலை வெளியிட்டார் என்னும் பொழுது தமிழகப் பல்ககைலக்கழகங்கள் உதவக்கூடாதா எனத் தோன்றுகிறது. முனைவர் இராசம், முனைவர் இயேன் எயின ஆகியோருக்குப் பாராட்டுகள். போர்ச்சுகீசிய பாதிரியார் அன்றிக்கு அடிகளாருக்கு நம் தலை தாழ்ந்த வணக்கம்.