(பங்குனி 1, 2046 / மார்ச்சு 15, 2015 தொடர்ச்சி)

 st-francis-xavier01

தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின

முதல் கையேடு – 2 (பின்னணி)

நினைத்துப் பாருங்கள்!

   உங்கள் நாட்டில், உள்ளூரில் அரசியல் குழப்பம்; அமைதியில்லை. உங்கள் தொழிலுக்குக் கேடு. உங்கள் குடும்பத்துக்குக் கேடு. அந்த நேரத்தில் கப்பலில்/தோணியில் வந்து இறங்குகிறார்கள் சில அயலவர். உங்களுக்கும் அவர்களுக்கும் இடையே மனித உருவம் என்பதைத் தவிர ஒற்றுமை என்பது மிகவும் குறைவு; உருவத்தில், நிறத்தில்,  பார்க்கும் முறையில், உடல் அசைவில், … பல வேற்றுமை. ஒருவர் சொல்வது ஒருவருக்குப் புரியாத நிலை. அவர்கள் ஏன் வந்தார்கள், என்ன செய்யப் போகிறார்கள் என்று தெளிவாகத் தெரியாத நிலை.

   இந்த நிலையில் … வந்து சேர்ந்த அயலவரைத் தயக்கமில்லாமல்  தாரை தப்பட்டை முழக்கத்தோடு மாலை போட்டு வரவேற்றுத் தமிழக விருந்து கொடுத்து … “ஐயா, வந்தீர்களா?? பசியாறினீர்களா?” என்றா கேட்பீர்கள்?

   அயலவனுடைய கால் தமிழ் மண்ணில் பட்டபோதே … வெட்டு, குத்து, கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை போன்ற எல்லாமே தொடர்ந்திருக்கும், இல்லையா?

   முதலில் வந்த அயலவரைத் தன்பால் ஈர்த்த தென்னகம் இரண்டு பெருஞ்சிறப்புடைத்து: தென்மேற்குக் கடற்கரைப் பக்கம் கருமுத்து (கருமிளகு/குறுமிளகு) + தென்கிழக்குக் கடற்கரைப் பக்கம் வெண்முத்து.

   ஆழ்கடலிலிருந்து வெண்முத்துஎடுத்துத் தரும் உள்ளூர்த் தமிழ் மக்களுக்குப் (= பரவருக்குப்) பகைவர்களிடமிருந்து பாதுகாப்புக் கொடுக்க வேண்டும் என்றால், அவர்களைத் தங்கள் நாட்டு அரசரின் குடிமக்களாக மாற்றவேண்டும்; அதற்கு முன்னோடியாக அவர்கள் தங்கள் மதத்தைப் பின்பற்றவேண்டும். இதுவே அயலவராய் வந்த போர்த்துக்கீசியரின் எண்ணம்; குற்றமில்லை, நேரியதே.

   அப்படிப்பட்ட ஒரு காலத்தில்தான் போர்த்துக்கீசியப் பாதிரிமாரும் நம் மண்ணில் கால் வைத்திருக்கிறார்கள்.

   அப்படி வந்த பாதிரிமார்கள் பலரில் முன்னுக்குத் தெரிந்த பெயர்கள் சில: ஃபிரான்சி சு சேவியர், கிரிமினாலி, அன்றீக்கு அடிகளார்.

   ஃபிரான்சிசு சேவியர் நெடுநாள் தமிழகத்தில் தாக்குப் பிடிக்கவில்லை. அன்றீக்கு அடிகளாருடன் இன்னும் சில பாதிரிமாரை இருக்கச் செய்து வேறிடம் போய்விட்டார். பின்னும் தென்னகத் தொடர்பு விடவில்லை; கோவாவில் அவருடைய இறப்புடலின் கூறுகள் புனிதமாகப் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. [நேரில் கண்டு வணங்கிய பேறு எனக்கும் உண்டு.]

அன்றீக்கு அடிகளாருடன் வந்த கிரிமினாலி அடிகளார் உள்ளூர்க் கலவரத்தில் கொலைப்பட்டார்.

அதன் பிறகு சேவியரின் மேற்பார்வையில் அன்றீக்கு அடிகளார் தமிழக முத்துக்குளித்துறையில் கிறித்துவ சமயம் பரப்பும் பணியைச் செய்யவேண்டிய நிலை.

   கல்லையும் மண்ணையும் கும்பிட்டுக்கொண்டிருந்த உள்ளூர் மக்களுக்குக் கிறித்துவக் கோட்பாடுகளை எப்படி விளக்குவது?

   இரண்டு பிரிவினரும் (தமிழர் + அயலவர்) தங்கள் உடல் உறுப்புகள் செய்யும் செயல்களைச் செய்து காட்டி, ஒவ்வொரு செயலையும் அடுத்தவர் எப்படிச் சொல்கிறார்கள் என்று காதால் கேட்டுத் தாங்களும் அப்படியே சொல்ல முயற்சி செய்யலாம்.

ஆனால் … உள்ளம் மட்டுமே உணர்ந்த இறைத் தத்துவங்களை எப்படி விளக்குவது?

   காட்டாக … கிறித்துவக் கோட்பாடுகளான மும்மை, விழுமிய கருதுகோள் (Trinity, Immaculate conception)  போன்றவற்றை உள்ளூர் மக்களுக்கு எப்படி விளக்கி அவர்களை நம்பச்செய்வது?

நம்மூர்க்காரர்களிடம் ஆயிரம் புராணக்கதைகள் இருக்கும்; மணிமேகலையின் ஆபுத்திரனைக் கேட்டுப் பாருங்கள். ஆனாலும் விழுமிய கருதுகோள்(‘Immaculate conception’) என்று ஒரு பாதிரியார் சொன்னபோது  நம்மூர் ஆட்களுக்குப் புரிந்திருக்குமா? “ யோவ், யார் கிட்ட ஐயா, கதை விடுகிறாய்?” என்று நம்மூர் ஆட்கள் கேட்டிருப்பார்கள், இல்லையா? தொடர்ந்து … நம்பச் சொல்லிக் கசையடியும் கிடைத்திருக்கும், கலகமும் நடந்திருக்கும், இல்லையா?

   இதற்காகவே உள்ளூர் ஆட்களை அரவணைத்து அவர்கள் பேசும் மொழியைப் புரிந்துகொள்ள வேண்டும்.மொழிக்குள்ளே பண்பாடும் அடக்கம். 

அன்றீக்கு அடிகளாருக்கு இருந்த உதவியாளர் (interpreter) வேறு வேலை தேடிப்போய்விட்டார். [அந்த உதவியாளரும் ஒரு கலப்பில் பிறந்தவராகத்தானே இருந்திருப்பார்!]

அன்றீக்கு அடிகளாருக்குத் தமிழ்மொழியைத் தானே கற்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கிறித்துவப் போதனை செய்யும் பணியிலிருந்து சிறு ஓய்வு கேட்டுப் பெற்று, அல்லும் பகலுமாக உழைத்துத் தமிழைப் படித்தார்! பிறகு, தான் புரிந்துகொண்ட தமிழைத் தன்னைப் போன்ற பிற பாதிரிமாருக்கு விளக்குவதற்காகத் தன் மொழியில் எழுதிய கையேடுதான் ‘தமிழ்மொழிக் கருவி’ / Arte Da Lingua Malabar.

உள்ளூர் மக்களுடன் பழகி அவர்களுடன் பேசித் தனக்குப் புரிந்த தமிழைப் போர்த்துக்கீசிய மொழியில் விளக்கியிருக்கிறார். பல நூற்றாண்டுகளுக்குப் பின் வரப்போகும் மொழியியல் ஆய்வாளருக்காக எழுதவில்லை! இந்த நிலையில் இவரைப்போய் … “நீர் ஏன் தொல்காப்பியத்தை மேற்கோள் காட்டவில்லை? திருக்குறளைச் சுட்டிக் காட்டவில்லை? ஒலியனியலைச் சரியாகச் சொல்லவில்லை? … ” என்று குத்திக் குடைந்தால் … யாருக்கு இழப்பு?

(தொடரும்)

பேரா.முனைவர் இராசம்  இராமமூர்த்தி

rajam-ramamurthy02

http://mytamil-rasikai.blogspot.in/2013/03/2.html

pirar-karuvuulam