(பங்குனி 8, 2045 / மார்ச்சு 22, 2015  தொடர்ச்சி)Rasam_ramamurthy

தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின

முதல் கையேடு – 3 (இலக்கணத்தின் அமைப்பு)

  “கையேட்டின் அமைப்பு” 

 போர்த்துக்கீசியப் பாதிரியார் அன்றீக்கு அடிகளார் “மலபார் மொழிக் கருவி /Arte Da Lingua Malabar” என்ற நூலைக் கையால் எழுதினார் என்று தெரிகிறது.

 கையேட்டில் சில இடங்களில் இரண்டு வகைக் கையெழுத்து இருப்பது தெரிகிறது. இந்தக் கையேட்டை உருவாக்க இதை மேலும் ஆராய்ந்தால் இதைப் பற்றிய விளக்கம் கிடைக்கலாம்.

 நிற்க.

 பாதிரியாரின் கடமை: முத்துக்குளித்துறையில் புழங்கிய தமிழைப் படித்துத் தான் புரிந்துகொண்டபடி அந்தத் தமிழைப் பிற பாதிரிமாருக்கு விளக்க வேண்டும். அவர்கள் எல்லாருக்கும் இடையில் ஒரு பொதுக்களம் அமையவேண்டும். பொதுவான விளக்கமுறையும் தேவை. அதற்காக, இலத்தீன் மொழியின் இலக்கணம் இவருக்கு உதவுகிறது. இலத்தீன் இலக்கணக் கூறுகளின் வழியாகத் தமிழை விளக்குகிறார்.

 தமிழ் எழுத்தும் ஒலிக்கும் முறையும், பெயர்ச்சொற்கள், பண்புப் பெயர்கள், வினைச்சொற்கள், சொற்றொடர் அமைப்பு … என்று பல தலைப்புகளில் எழுதுகிறார்.

 தமிழ் ஒலிகளை விளக்கப் போர்த்துக்கீசிய எழுத்துகள் போதவில்லை; அதனால், சில வடிவங்களைத் தானே புதிதாக உருவாக்குகிறார்! அங்கே ஓர் ஓவியக் கலைஞனின் உள்ளம் வெளிப்படுகிறது! அப்படி உருவாக்கிய எழுத்துகளை நூல் முழுவதிலும் பயன்படுத்தவில்லை; பிற வகைச் சிக்கல்களைச் சமாளிக்கவே அவருக்கு நேரம் சரியாக இருந்திருக்கும்!

 பெயர்ச்சொற்களை விளக்குவதில் சிக்கல் இல்லை. வினைச்சொற்களும் பண்புப் பெயர்களும் சிக்கல் தருகின்றன. “நல்ல” என்பதற்கும் “நல்லவன்” என்பதற்கும் இடையில் உள்ள வடிவ வேறுபாடும் கருத்து வேறுபாடும் குழப்பம் தருகின்றன!

 வினையெச்சங்களும் வினைமுற்றுகளும் கால வேறுபாடு காட்டும் நுணுக்கம் குழப்பம் தருகின்றது.

 தமிழில் இருக்கும் வடிவங்கள் தரும் குழப்பத்துக்கு மேல், இல்லாத வடிவைத் தேடும்போது வரும் குழப்பம் கொடுமையானது! தமிழில் “செயப்பாட்டு வினை”யைத் தேடுகிறார்; அது இங்கே இல்லை என்று புரிகிறது. ஆனாலும், இல்லாத கருத்தை விளக்க அவர் படும்பாடு புதுமை!

தமிழ்ச் சொற்றொடர் அமைப்பைச் சுருக்கமாகவே சொல்கிறார். “தமிழில் இப்படிச் சொல்கிறார்கள், இதை நாம் போர்த்துக்கீசியத்தில் இப்படிச் சொல்வோம்” என்று ஒப்பிட்டுச் சொல்வது மிக நல்ல முறை.

 இப்படித்தானே தொல்காப்பியரும் சொல்லியிருக்கிறார்! காட்டு: “மாயோன் மேஎய காடுறை உலகமும் … முல்லை … என்று சொல்லிய முறையால் சொல்லவும் படுமே”

 தெரிந்த ஒன்றின்மூலம் தெரியாத ஒன்றை விளக்குவது மிக நல்ல முறை, இல்லையா!

 தங்கள் மொழியில் இருக்கும் ஒன்றைப் பிற மொழியிலும் தேடி அது அங்கே இல்லாத நிலையிலும் அது இருப்பதாக எடுத்துக்கொள்வதும் புதுமை.

 (தொடரும்)

 http://mytamil-rasikai.blogspot.in/2013/03/3.html