அயலவரின் முதல் தமிழ்க்கையேடு 6 – இலக்கிய அறிஞர் இராசம் அம்மையார்
(பங்குனி 29, 2046 / ஏப்பிரல் 12, 2015 தொடர்ச்சி)
தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின
முதல் கையேடு – 6
(புத்தக வெளியீட்டு முயற்சி-1)
2009-இலிருந்து புத்தக வெளியீட்டிற்கான என் தனி முயற்சி மும்முரமாகத் தொடங்கியது.
இயேன் அம்மையாருடன் தொடர்புகொள்ளவே முடியவில்லை. அவர் இருந்தும் இல்லாத நிலை. எனவே, பல இடங்களில் விளக்கம் தருவதற்காக அடிக்குறிப்புகளை நானே சேர்க்கவேண்டியிருந்தது.
ஒரு வழியாகக் கருத்துக் கோவையை முடித்தேன். பிறகு புத்தக வடிவை உருவாக்கத் தொடங்கினேன்.
சிக்கல் − 1
பாதிரியாரின் 16-ஆம் நூற்றாண்டுத் தமிழ்க் கையெழுத்தை இந்தக் காலக் கணினிக்குள் கொண்டுவருவது பெரும்பாடாய் இருந்தது.
எனக்கு மிகவும் தேவையாக இருந்தது என்ன?
1.தமிழ் எழுத்தின் ஒற்றைக்கொம்பு. அதாவது, “கொ” என்ற வடிவில் முதலில் இருக்கும் கொம்பு மட்டும்.
- “ர” என்ற எழுத்தில் நமக்கு வலதுபுறம் தெரியும் நெட்டைக் கோட்டின் கீழே நீட்சி இன்மை. அதாவது “கா” போன்ற நெடிலில் உள்ள துணையெழுத்துப் போல மட்டும்.
3.பழைய முறையில், ‘யானைக்கொம்பு’டன் எழுதப்பட்ட “ணை, லை, ளை, னை” வடிவங்கள்.
- பழைய முறையில் எழுதப்பட்ட”றா, னா” வடிவங்கள்.
ஏன் இந்தத் தேவை?
பாதிரியார் கொடுத்த எடுத்துக்காட்டுச் சொற்களை அவர் 16-ஆம் நூற்றாண்டுத் தமிழ் எழுத்தில் எழுதியதை அப்படியே காட்டத்தான்!
கீழே உள்ள படங்களைப் பாருங்கள்.
கீழே உள்ளது பாதிரியாரின் கையேட்டில் ஒரு பக்கம்.
மேலே உள்ள பக்கத்தை இந்தக் காலக் கணினிக்குள் அகப்படுத்திய என் முயற்சி இங்கே:
இன்னும் சில பக்கங்கள்:
இவைபோலப் பல பல பக்கங்களை உருவாக்க வேண்டிய தேவை!
தமிழ் ஒருங்குகுறியெழுத்துக் கோவை (unicode), கணினியின் வகை (Windows, Apple Mac), போன்ற எல்லாமேஉதவியைவிடத் தடையைக் கூடுதலாகக் காட்டின.
மலேசியாவில் முத்து நெடுமாறனைக் கேட்டு அவருடைய தமிழ் ஒருங்குகுறி எழுத்துக் கோவையை வாங்கிக்கொண்டேன். அது மட்டும் போதவில்லை.
நண்பர் மணிவண்ணனிடம் பாதிரியாரின் கையேட்டுப் படியிலிருந்து சில பக்கங்களைக் கொடுத்தனுப்பித் தமிழகத்தில் உதவி கிடைக்குமா என்று கேட்டேன்.
மருத்துவர் தி. வாசுதேவனின் (திரு. திவாசியின்) மகனார் சிரி இரமண(சர்மா), மதுரை உதயசங்கர், வினோத் இராசன் … எல்லாரும்உடனடியாக உதவி செய்ய முன்வந்தார்கள். ஆனால் அவர்கள் எனக்காக உருவாக்கிய எழுத்துக் கோவையைப் பயன்படுத்த இயலவில்லை — என் கணினியில் அந்தக் கோவையைப் பயன்படுத்த சுற்றுவட்ட முயற்சி தேவையாக இருந்தது; அதற்கேற்ற நேரமும் காலமும் எனக்கில்லை.
ஆகவே, என்னிடம் இருந்த இரண்டு மூன்று வகைத் தமிழ் எழுத்துக் கோவையை ஒட்டிப்போட்டு எப்படியோ எனக்குத் தேவையான எழுத்துக் கோவையை உருவாக்கிக்கொண்டேன்.
சிக்கல் — 2
பதிப்பகத்தாரின் பக்க அளவுக்குள் நம் புத்தகக் கருத்தை அடக்குவது!
(தொடரும்)
Leave a Reply