அரசியல் சட்டத்தைத் திருத்தினாலன்றி இந்தி ஒழியாது! – இலக்குவனார் திருவள்ளுவன்
அரசியல் சட்டத்தைத் திருத்தினாலன்றி இந்தி ஒழியாது!
இந்தித்திணிப்பு என்பது புதிய செயல்போல் தலைவர்கள் அவ்வப்பொழுது அறிக்கை விடுவதும் கண்டனம் தெரிவிப்பதும் வழக்கமாக உள்ளது. இந்தியை எதிர்த்து அறிக்கை விடுவதால் எப்பயனும் இல்லை.
“இந்தியைத்திணித்தால் எரிமலையாவோம்”, “இந்தியைத்திணித்தால் புரட்சி வெடிக்கும்! தூங்கும்புலியை இடறாதீர்!”, “நாங்கள் இருக்கும் வரை இந்தியைத்திணிக்க விடமாட்டோம்” என்பனபோன்ற வெற்றுக்கூச்சல்களை அரசியல் தலைவர்கள் நிறுத்த வேண்டும்.
நம்மைப்போல், “என்றும் இந்தி! இன்றும் இந்தி!” என்று சொல்லிக்கொண்டிராமல் எங்கும் எதிலும் இந்தியை மத்திய அரசு திணித்துக்கொண்டுதான் உள்ளது. ஆனால், எப்பொழுதாவது ஏதும் செய்தி வெளியானால் அப்பொழுதுதான் இந்திதிணிக்கப்படுவதுபோல் நாம் வெறும்கூச்சல்போட்டு மறந்துவிடுகிறோம். இதைக் கண்டுகொள்ளாத மத்திய அரசு தன் கடமையைச் செவ்வனே செய்து வருகிறது.
எங்குதான் இந்தி இல்லை! பதவிப்பெயர்கள் எல்லாம் இந்தி! திட்டங்களின் பெயர்கள் எல்லாம் இந்தி! உணவுப் பெயர்கள் எல்லாம் இந்தி! இப்பொழுது (ஞ்)சன் ஆஃகார் (jan aahaar) என்பதுபோல் கடைப்பெயர்கள் எல்லாம் இந்தி! தொடரி, வானூர்திப் பயணச்சீட்டுகளில் இந்தி! பாதுகாப்பு அறிவிப்புகள் தாய்மொழியில் – நமக்குத் தமிழில் இருக்க வேண்டும். ஆனால், அவரசக் கதவு என்ற அறிவிப்பும், அதனை எவ்வாறு இயக்க வேண்டும் என்ற அறிவிப்பும், அபாயச்சங்கிலி அறிவிப்பும் இந்தியில்தான்! தொடரி(தொடர்வண்டி)களில் ஒட்டப்பட்டுள்ள அனைத்து அறிவிப்பும் இந்தியில்தான்! மத்திய அரசின் பள்ளிகளில் இந்தி! பிற பெரும்பாலான மாநிலப்பள்ளிகளிலும் இந்தி! இப்பொழுது மத்திய அரசு விண்ணப்பங்களிலும் இந்தி! கையொப்பங்களில் இந்தி! பணித்தகுதிகளில் இந்தி! விளம்பரங்களில் இந்தி! வானொலிகளில் இந்தி! தொலைக்காட்சிகளில் இந்தி!
இந்தி நம் வரவேற்பு அறையில் அமர்ந்து கொண்டுள்ளது; படுக்கையறையில் வீற்றிருக்கிறது; சமையல் அறையில்கூட ஆட்சிசெய்கிறது; நாளும் செவிகளில் இந்திச்சொற்கள் விழுந்து கொண்டிருக்கும் வண்ணம் ஊடகங்கள் கொடுஞ்செயல் ஆற்றிக் கொண்டுள்ளன. கல்வியில் இந்தி தொடக்கம் முதல் நுழைக்கப்பட்டு அங்கிருந்து தமிழ் அகற்றப்பட்டுவிட்டது.
உச்சநீதிமன்ற நீதிபதி முதலான மத்திய அரசுப் பதவிகளில் பொறுப்பு ஏற்கும் யாராயினும் இந்தியில் கையொப்பம் இட்டால்தான் வேலையில் சேரமுடியும். இந்தி தெரிந்தவர்களுக்குத்தான் மத்திய அரசிலும் அரசுநிறுவனங்களிலும் பணி வாய்ப்பு. இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு 15, சமயம், இனம், குலம், பால், குடிவழி, பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது என்று கூறுகிறதே தவிர, மொழிப்பாகுபாடு குறித்துக் கூறவில்லை. எனவே, இந்தி அறிந்தவர்களுக்கு வாய்ப்பு என்னும் சமன்மைக்கு எதிரான நிலைமையே இந்திய அரசின் செயலாக்கமாக உள்ளது.
பணத்தாளில் இந்தி எண் (தேவநாகரி) திணிக்கப்பட்டதும் அரசமைப்புச்சட்டத்தின்படிதான். இந்திய அரசமைப்புச்சட்டப்பிரிவு 351 இன்படி, இந்தியைப் பரப்புவது மத்திய அரசின் கடமை. அந்தக் கடமையை அது செய்கிறது.
ஏதோ இதுவரை இந்தியே திணிக்கப்படாததுபோலும் இப்போதுதான் முதன் முறையாக இந்தி திணிக்கப்படுவதுபோலும் கூக்குரலிடுவது குறித்து மத்திய அரசு கவலைப்படுவதில்லை.
“இந்தியைத்திணிப்பது மத்திய அரசின் கடமை! அஃதை ஏற்பது நம் மடமை” என்று முன்னர்க் (02 ஏப்பிரல் 2017) குறிப்பிட்டிருந்தோம். அதுதான் உண்மை. அரசியலமைப்பின்படி இந்தியை மத்திய அரசின் மொழியாக ஏற்றுக் கொண்டு அதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடும் பொழுது எதிராக அறிக்கை விடுவது விழலுக்கு இறைக்கும் நீரே!
அப்படியானால் இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்றால் அதுதான் இல்லை.
இந்தி நம்மை இரண்டாந்தர மக்களாக ஆக்குவதுடன் நம் மொழியையும் இனத்தையும் அழிக்கிறது. எனவே எதிர்த்துத்தான் ஆக வேண்டும். அதற்குப் பின்வரும் உறுதிகளை நாம் ஏற்க வேண்டும்
- “இந்தியை எதிர்க்கவில்லை. இந்தித்திணிப்பை எதிர்க்கிறோம்” எனப் பிதற்றுவதை நிறுத்த வேண்டும். கல்விச்சந்ததை மூலம் பள்ளிகளில் இந்தியைத் திணிப்பவர்கள் இத்தகைய கருத்துகளை அள்ளவீசுகிறார்கள். அப்பாவித்தனமாகச் சிலர், “நம் நாட்டு மொழி்யை நாம் எதிர்க்கலாமா” என எண்ணுகின்றனர்.
நம் மொழிக்கு நாம் செலவிடவேண்டிய தொகையைக் கொண்டு விருப்பப்பாடம் அல்லது வேறு ஏதேனும் பெயரில் இங்கே இந்தி கற்பிக்கப்பட வேண்டிய தேவையில்லை. இந்தியால் என்ன தீமை வரும என்கிறார்களே, அவர்கள், இந்தி, இந்தியத்துணைக்கண்டத்திற்கு வந்த அயலவர் ஆட்சியால் இறக்குமதியாகி உருவான அயல்மொழி என்பதையும் இன்றைக்குத் தேசிய மொழி, பொதுமொழி, அலுவலக மொழி என்றெல்லாம் சொல்லப்பட்டு இம் மண்ணிற்குரிய பிற மொழிகளை அது விழுங்கிவருவதையும் உணராதவர்களே! எனவே, தமிழ்நாட்டில் எல்லாக் கல்வி நிலைவயங்களில் இருந்தும் இந்தி அகற்றப்பட வேண்டும். இந்தியைத் தாய்மொழியாக உள்ளவர்கள் அதற்கான சான்றிதழ் அளித்துத் தமிழையும் படிப்பதாக இருந்தால் அவர்கள் இந்தி பயில்வதற்கு ஏற்பாடு செய்யலாம். எனவே, “இந்தி வேண்டா! வேண்டவே வேண்டா!” என்பதே நம் முழக்கமாகவும் செயற்பாடாகவும் இருத்தல் வேண்டும்2.
2.இந்திய அரசியல் யாப்பில் உள்ள பதினேழாம் இயல் அடியோடு நீக்கப்பட்டுப் புதிய விதிகளுடன் அவ்வியல் சேர்க்கப்படவேண்டும்.
எட்டாம் இணைப்புப்பட்டியல்களில் உள்ள மொழிகளை இயலின் பகுதியாகக் குறிப்பிட்டு அனைத்தையும் தேசிய மொழிகள் என்றே குறிக்க வேண்டும். வட்டார மொழிகள் எனக் குறிக்கக் கூடாது எனக் குறிப்பும் இருக்க வேண்டும்.
இந்தி பெரும்பான்மையர் மொழி அல்ல என்றும் தவறான புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அம்மாயத்தோற்றம் உருவாக்கப்பட்டது என்பதையும் அரசியல் யாப்பிலேயே குறிக்க வேண்டும்.
அந்தந்த மாநிலங்களில் அந்தந்த மாநிலத் தேசிய மொழியே எல்லா நிலைகளிலும் பயன்படுத்த வேண்டும் என்பதையும் மத்தியஅரசும் இதைச் செயற்படுத்தஉதவ வேண்டும் என்பதையும் குறிக்க வேண்டும்.
சமற்கிருதம் என்பது தமிழ், பாலி, பிரகாருதம் முதலான மொழிகளில் இருந்து செய்யப்பட்ட மொழி என்பதையும் தமிழே இந்த மண்ணின் மொழி, மூத்த செம்மொழி என்பதையும் அரசியல் யாப்பிலேயே குறிக்க வேண்டும். எனவே, தமிழ் மொழி வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்பதையும் அரசியல் யாப்பில் சேர்க்க வேண்டும்.
3.தமிழை இந்திய அரசின் அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும். இப்பொழுது நடைமுறையில் உள்ள இந்தி, ஆங்கிலம் இரண்டும் தொடர்ந்து அலுவல் மொழியாக நீடிக்கும் எனவும் அறிவிக்க வேண்டும்.
அப்படியானால், எல்லா மொழிகளும் அலுவல் மொழிகளாக அறிவிக்கப்பட வேண்டாவா? என்கிறீர்களா? அவ்வாறு கேட்பது நம் வேலையல்ல! யாரேனும் எங்கள் மொழிக்கும் அலுவலக மொழித்தகுதி வேண்டும் என்று போராடி நம்முடன் இணைய முன்வந்தால் இணைந்து போராடலாம். நாம், தமிழை இந்தியஅரசின் அலுவல்மொழியாக அறிவிக்கச்செய்தால், போட்டி போட்டுக்கொண்டு பிற மொழியினரும் தத்தம் மொழியையும் அலுவல் மொழியாகஅறிவிக்கப் போராடுவார்கள். அம்முயற்சி வெற்றி பெறும் பொழுது இந்தி தானாகவே அகலும்.
4.இந்திய அரசியல் யாப்பில் இந்தி என முதன்மையாகக் குறிக்கப்படும் எல்லா நேர்வுகளிலும் தமிழ் என்பதும் இடம் பெறும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்.
5. மத்திய அரசின் அதிகாரங்களாக, ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்கள் தொடர்பான சிக்கல், நாட்டுப்பாதுகாப்பு, நாணயம் முதலான சில தொடர்பானவை மட்டுமே இருந்தால், மாநிலங்கள் மத்தியஅரசுடன் தொடர்பு கொள்ளும் நேர்வு குறைவாகவே இருக்கும். இதனால், பொதுமொழி என்ற சிக்கல் எழாது.
6. மாநிலங்களவையின் உறுப்பினர் தெரிவு அமைப்பு மாற்றப்பட வேண்டும். மாநிலம் பெரியதாக இருந்தாலும், சிறியதாக இருந்தாலும் மாநிலங்களவையில் சம எண்ணிக்கையில்தான் உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஒரு மாநிலம் தொடர்பான சிக்கலில் அந்த மாநில உறுப்பினர்கள் வாக்கே முதன்மையாகக் கருதப்பட்டு அவர்களுக்கு மறுப்புறுரிமை (வீட்டோ) அதிகாரம் வழங்கப்பட வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்கள் தொடர்பானவற்றில் மட்டுமே மாநிலங்களவை தீர்மானிக்க வேண்டும். இதுபோல் மாநிலத்தன்னாட்சி நடைபெற்றால் மொழிச்சிக்கல் எழாது. தொடர்புமொழியான ஆங்கிலமே போதுமானது.
இவ்வாறு அரசியல் யாப்பில் திணிக்கப்பட்டுள்ள எல்லாம் இந்தி என்ற நிலைப்பாட்டை எதிர்த்துப் போராடி வெற்றி காணாமல், தவணை முறையில் இந்தி எதிர்ப்புக் கூச்சல் போடுவதில் பயனில்லை என்பதை அரசியல் தலைவர்கள் உணர்ந்து மக்களுக்கும் உணர்த்த வேண்டும்.
அரசியல் யாப்பைத் திருத்துவோம்!
இந்தியை மத்திய அரசிலிருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் அகற்றுவோம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை அகரமுதல 185, சித்திரை 24, 2048 / மே 07, 2017
Leave a Reply