அரசு கலைக்கப்பட வேண்டும் – இங்கல்ல! கருநாடகாவில்! – இலக்குவனார் திருவள்ளுவன்
அரசு கலைக்கப்பட வேண்டும் – இங்கல்ல! கருநாடகாவில்!
பயனில்சொல் பராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல். (திருவள்ளுவர், திருக்குறள் 196)
‘அந்த ஆள்’ பேச்சைப் பொருட்படுத்தக்கூடாதுதான். என்றாலும் பா.ச.க.வின் ஊதுகுழல் போல் அவ்வப்பொழுது உளறிக்கொண்டிருப்பதால் இதனைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
முதல்வரின் நலக்குறைவால் தமிழக அரசு செயல்படாமல் உள்ளதால் தமிழக அரசைக் கலைக்க வேண்டும் என்பதே அந்த ஆளின் வேண்டுகோள்.
‘தமிழக அரசு கலைப்பு’ என்னும் மிரட்டல், பா.ச.க. குறுக்கு வழியில் அரசை நடத்துவதற்கு வழி வகுப்பதே ஆகும். கட்டுப்பாட்டுடன் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள், பேரங்களுக்கு ஆட்பட்டு மக்களாட்சியைக் கேலிக்குரியதாக ஆக்குவர். எனவே, இவ்வாறு உளறுவதற்கு முற்றப்புள்ளி வைக்க அவர் கட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
யார் முதல்வர் என்பதைச்சட்ட மன்றப் பெரும்பான்மை உறுப்பினர்கள்தாம் முடிவெடுக்க இயலும். முதல்வர் நலக்குறைவாக இருந்தாலும் அவர்மீது நம்பிக்கை வைத்து மாற்றாள் தேடலில் ஈடுபட விரும்பாதபொழுது பிறர் தலையிட இயலாது. எனினும் இந்நிலை ஒரு கட்சியின்நிலைப்பாடு என்ற அளவைத்தாண்டி நாட்டின் நிலைப்பாடு என்ற அளவிற்கு மாறிவிட்டது. முதல்வர் நலமடைந்து திரும்பியபின் இப்போதைய பணித்தேக்கம் அவருக்குக் கடுஞ்சுமையாக மாறும். ஓய்வை நாடி இருக்க வேண்டிய சூழலில் பணிச்சுமை என்பது நலக்கேட்டிற்கே வழி வகுக்கும். எனவே, இயல்பான செயல்பாட்டிற்குத் தக்கன எனக் கருதக்கூடியவற்றை ஆளுங்கட்சியினரும் முதல்வருக்கு நெருக்கமாக உள்ளவர்களும் விரைவில் மேற் கொள்ள வேண்டும்.
கருநாடக நிலை வேறு. இந்தியம் எனப் பேசிக்கொண்டு இந்திய இறையாண்மைக்கு எதிராகக் கருநாடகா நடந்து கொள்கிறது. உச்சநீதி மன்றத்தை எப்போதும் மதிப்பதில்லை! இப்போதும் மதிக்கவிலலை! இந்தியா ஒரே நாடு என்றால் இந்தியாவில் இருந்துகொண்டே இந்தியர்களுக்கு எதிராகக் கொலை, கொள்ளை, கலவரம் போன்றவற்றில் ஈடுபட்டுத் தமி்ழர்களின் உயிர்களையும் உடைமைகளயைும் அழிக்கும் கருநாடகாவின் அரசு ஒழிக்கப்பட வேண்டியதுதானே!
இந்த வாரம் காவிரிநீர் திறந்துவிட்டபொழுது எக்கலவரமும் இல்லை. அப்படியானால் இதற்கு முன்னர்த் தொடக்கத்திலும் தண்ணீர் திறக்கப்படும் முன்னரும் நடந்த கொலை முதலானவை யாவும் வஞ்சகர்களால் தூண்டிவிடப்பட்டவைதான் என்பதில் ஐயமில்லையே! தண்ணீரைத்திறந்துவிட உச்சநீதிமன்றம் சொன்னதற்கே கலவரங்களில் ஈடுபட்டவர்கள், காவிரிநீர் திறந்துவிட்டபொழுது அமைதி காத்தது எவ்வாறு? எனவே, அரசின் தூண்டுதலால்தான் அட்டூழியங்கள் நடந்துள்ளன என்பது வெள்ளிடைமலை. காவிரிநீரைத் தமிழகத்திற்குத் தரமாட்டோம் என்பதில் உறுதியாக இருப்பவருக்கே வாக்கு என்பதுபோன்ற மாயையை உருவாக்கி, அனைத்துக் கட்சிகளும் தேர்தலைக்கருத்தில் கொண்டு மனிதநேயமற்று நடந்து கொள்கின்றனர். இதனால் அழிவு, தமிழ் மக்களுக்குமட்டுமல்ல!
அழிவிலிருந்து தமிழர்களைக் காப்பாற்ற வேண்டிய மத்திய அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டுள்ளது. தமிழ்நாட்டிற்குப் பேரளவு உரிமையுடையதே காவிரிநீர் என்பதை உணர்ந்த உச்சநீதிமன்றம், ஒப்புக்குச்சப்பாணி என்பதுபோல் தீர்ப்பு வழங்குகிறது. முதல் தீர்ப்பைச் செயல்படுத்தாத பொழுதே கடுமையான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், ஒவ்வொரு முறையும் தண்ணீர் அளவையும் திறந்துவிட வேண்டிய நாள் எண்ணிக்கையையும் குறைத்துக்கொண்டே வருகிறது. இரு மாநில அரசுகளும் 33 முறை இதன் தொடர்பில் பேசியிருந்தும், இதுவரை சொல்லாடலே நடைபெறாததுபோலும், சொல்லாடல் நடைபெற்றால் சிக்கல் தீரும் என்பதைப் புதிதாகக் கண்டுபிடித்ததுபோலும், பேசித்தீர்க்க வேண்டும் எனத் தீர்ப்பு வழங்குகின்றது. இந்தியாவெங்கும் மாநிலங்கள் நிலைதடுமாறாமல் இருக்க உச்சநீதிமன்றம் நடுவுநிலையுடன் செயல்பட்டுத் தமிழர்க்கு உரிமையான காவிரிநீர் தங்குதடையின்றித் தமிழகத்தில் பாய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீதிநெறிக்கு அடங்காத, அறநெறிக்குக்கட்டுப்படாத, அட்டூழியங்களை அரசோச்சச் செய்கின்ற கருநாடக அரசு உடனே கலைக்கப்பட வேண்டும். இதனால் அடுத்து அமையும் அரசிற்கு இஃது ஓர் எச்சரிக்கைப் பாடமாகவும் அமையும்.
இதற்குக் குரல் கொடுக்காமல் திசை மாற்றுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
காவிரியைத் தாயாகக் கருதாவிடடால் காலனாக மாறும் என்பதைக் கருநாடகத்தினர் உணர வேண்டும். அற்றைத் தமிழர்க்கு உரிமையைாயிருந்த காவிரி இற்றைத்தமிழர்க்கும் பயன்பெற வேண்டும்! இந்திய ஒருமைப்பாட்டை வலியுறுத்துவோர் இதில் கருத்து செலுத்த வேண்டும்!
– இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
அகரமுதல 155, புரட்டாசி 23, 2047 / அட்டோபர் 09, 2016
Leave a Reply