அருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே!

     அறிவியல் என்றால் நம்மில் பலர் ஆய்வகத்தில், குடுவைகளில் ஆய்வு செய்வது எனத் தவறாகக் கருதுகிறோம். ஆனால், “கூர்ந்து நோக்குவதாலும்  ஆய்வாராய்ச்சியாலும் கண்டறியப்பட்டு முறைமைப் படுத்தப்படும்” எல்லாம் அறிவியலே.

  இத்தகு அறிவியலில் தமிழ் மக்கள் தொடக்கக் காலத்தில் இருந்தே சிறந்து விளங்கியுள்ளமையை இலக்கியங்கள் உணர்த்துகின்றன. “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்கிறார் தொல்காப்பியர். இவ்வாறு பொருள் குறித்து அமையும் சொற்கள் எல்லாம் அறிவியல் தன்மை கொண்டுள்ளமைதான் தமிழுக்கே உள்ள சிறப்பு. காலம் செல்லச் செல்ல பல சொற்களின் அறிவியல் தன்மை நமக்குப் புரியாமல் போயுள்ளது. எனினும் இன்றும் வழங்கும் பல சொற்கள் உணர்த்தும் அறிவியல் உண்மையை உணர்ந்தால் அருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே என உணரலாம். சில சொற்களின் அறிவியல் தன்மையை இங்கே நாம் காணலாம்.

  உயிரினம் வாழ்வதற்கு மிக இன்றியமையாதது காற்று. இந்த அறிவியல் உண்மையை உணர்ந்தமையால் காற்று என்பதற்கு ‘உயிர்ப்பு’ என மற்றொரு பெயரையும் நம் முன்னோர் சூட்டியுள்ளனர். காற்று அங்கும் இங்கும் அசைந்து உலவுவதைப் பார்த்தவர்கள் அதன் தன்மைக்கேற்ப, ‘சலனன்’ என்றும் ‘உலவை’ என்றும் பெயரிட்டனர்.

  காற்று வரும் திசையின் அடிப்படையிலும் அதன் தன்மையின் அடிப்படையிலும், பெயர்கள் சூட்டினர். வடக்கில் இருந்து வரும் காற்று வடந்தை, அதுவே அதன் வாட்டும் தன்மையால் வாடை எனப்பட்டது. மேற்கே இருந்து வருவது கோடை, கிழக்கே இருந்து வருவது கொண்டல், தெற்கே இருந்து வருவது தென்றல் என்பனபோல் காற்றின் அறிவியல் தன்மைக்கேற்பப் பெயரிட்டு அழைத்தனர். காற்று அசையாமல் ஒரே இடத்தில்  நிலைத்து நிற்கும் தன்மையையும் உணர்ந்து  பெயரிட்டுள்ளனர். உடலில் 10 வகைக் காற்று இருப்பதாக உணர்ந்து தனித்தனியே பெயரிட்டனர். இதயத்தில் இருந்து இயங்குவது, உச்சித்தலையில் இயங்குவது, வயிற்றில் இருந்து இயங்குவது, உடல் முழுவதும் பரவி யிருப்பது முகத்தில் இருந்து தும்மலும் சினமும் வெம்மையும் செய்வது, ஓட்டம், இளைப்பு, வியர்த்தல் ஆகியன செய்வது என அறிவியல் உண்மைகளை உணர்ந்து பெயர்கள் இட்டனர். பின்னர் வந்த ஆரியர் இவற்றைச் சமசுகிருத்தில் எழுதி வைத்துத் தமிழ்ப் பெயர்களை இல்லாமல் ஆக்கியதால் இவற்றின் தமிழ்ப் பெயர்களை ஆய்ந்து கண்டறிய வேண்டியுள்ளது.

     எல்லா இடத்திலும் காற்று இருக்கும் என்ற அறிவியல் உண்மையையும் உணர்ந்து இருந்தனர். ஒரு பாத்திரத்தில் அல்லது ஓரிடத்தில் நீர்ப்பொருள் அல்லது திடப் பொருள் என எதுவும் இல்லாமல் இருந்தால் அதனை வெற்றிடமாக எண்ணவில்லை. அங்கே காற்று இருப்பதை உணர்ந்திருந்தனர். எனவேதான் அந்த இடத்தைக் ‘காலி’ யாக உள்ளதாகக் குறிப்பிட்டனர். கால் + இ = காலி ; காற்றை உடையது. எனவே பொருள் எதுவும் இல்லா இடத்தில் காற்று நிறைந்து உள்ள அறிவியல் உண்மையை உணர்த்தியுள்ளனர். இவ்வாறு வெற்றிடம், காற்றிடம் என்ற அறிவியல் உண்மைகளை உணர்ந்து சொற்களைப் படைத்துள்ளனர்.

      நாம் வாழும் மண்ணுலகிற்கு ஏறத்தாழ 50 வகையான பெயர்கள் உள்ளன. இவை அனைத்தும் புவியறிவியல் சார்ந்தனவே. உலகம் நிற்காமல் உலவிக் கொண்டுள்ளதால் உலகம் எனவும் சக்கரம் உருளுவது போல் உருண்டு கொண்டே இருப்பதால் சக்கரம் என்றும் கோள வடிவு உடையதால் பூகோளம் என்றும் பூவலயம் என்றும் புவியறிவியலை வெளிப்படுத்தும் சொற்களைப் படைத் துள்ளனர். “சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்”  என்னும் குறளடியும் உலகம் சுழலும் அறிவியல் உண்மையை உணர்த்துவதை நாம் அறிவோம் அல்லவா?

   கோள்களுக்குப் பெயரிடுகையில் பிற இனத்தவர் போல் கற்பனைக் கதைப் பாத்திரங்களின் பெயர்களைச் சூட்டாமல், நிறத்தின் தன்மையில் செந்நிறத்தில் உள்ள கோள் செவ்வாய், கரு நிறத்தில் உள்ள (சனிக்) கோளின் பெயர் காரி என்றும் அகன்ற பரப்பின் தன்மையில் வியாழன் என்றும் ஒளியின் தன்மையில் வெள்ளி என்றும் சூரிய மண்டிலத்தின் அண்மையில் வாயிலாக உள்ள தன்மையை உணர்ந்து புதன் என்றும் வானறிவியல் அடிப்படையில் பெயர்களைச் சூட்டியுள்ளனர். இன்றைக்கு நாம் வால்மீன் என்று குறிப்பிடுகிறோமே அதற்கு வால் எதுவும் கிடையா. அதன் அறிவியல் தன்மையை உணர்த்தும் பழந்தமிழ்ச் சொல் புகைக் கொடி என்பதே ஆகும்.

   ‘கோளாறு’ என்றால் நாம் பழுது என எண்ணுகிறோம்.(ஆங்கிலத்தில் கூட, ‘repair’ என்றால் சீராக்குதல் அல்லது பழுதுநீக்கல் என்னும் உண்மைப் பொருளை உணராமல் பழுதானதாகத்தான் கருதுகிறோம்.) உண்மையில் கோளாறு என்றால் செவ்வையான இயக்கம் என்றுதான் பொருள். தென் மாவட்ட ஊர்ப் பகுதிகளில் வண்டியில் செல்லும் பொழுது “கோளாறாகப் போ” என்றும் அடுத்தவரை இடிக்காமல் நேராக உட்காருவதற்குக் “கோளாறாக உட்கார்” என்றும் சொல்லுவர். இக்கோளாறு என்னும் சொல் மிகச் சிறந்த வானறிவியல் சொல்லாகும்.

  ஆறு என்றால் வழி எனப் பொருள். நல்லாறு என்றால் நல்ல வழி என்றும் போகாறு என்றால் பொருள் போகும் வழி என்றும் ஆகாறு என்றால் பொருள் ஆகி வரும் வழி என்றும் திருவள்ளுவர் திருக்குறளில் கையாண்டுள்ளார். கோள் என்பது விண்ணிலுள்ள கோள்களைக் குறிக்கும். விண் கோள்கள் அனைத்தும் உலவிக் கொண்டு இருப்பினும் ஒன்றுடன் ஒன்று மோதாமல் அதனதன் வழியல் இயங்கிக் கொண்டிருக்கின்றன. கோள்களைப் போன்ற செவ்வையான இயக்கம் வேண்டும் என்பதற்காகவே கோளாறு எனக் குறிப்பிட்டுள்ளனர்.

   பகவன் என்பது  காலத்தை இரவு, பகல் எனப் பகுக்கும் தன்மைiயின் அடிப்படையில்  சூரியனைக் குறித்த அறிவியல் பெயராகும். இதனை ஆதிபகவன் என்றும் “ஆதி பகவன் முதற்றே உலகு”  என்றும் குறிப்பது உலகில் பிற எவரும் உணரா பொழுதே தமிழ் மக்கள் பூமியின் தோற்றத்தை உணர்ந்த அறிவியல் அறிவை உணர்த்துவதாகும். சூரியனில் – பகவனில் – இருந்து பூமி தோன்றிய உண்மையை உணர்ந்து பகவனை முதலாகக் கொண்டே உலகம் தோன்றியுள்ளது! சூரியனில் இருந்து உருவானதே இந்நில உலகம் என்னும் மிகப் பெரும் புவியறிவியல், வானறிவியல் உண்மையை மிக எளிமையாகப் பாமரரும் அறியும் வண்ணம் பயன்படுத்தி வந்துள்ளோம்.

 உயிரினங்களுக்கு அவற்றின் அறிவியல் தன்மைகளை உணர்ந்தே பெயரிட்டுள்ளனர். சான்றாக ஓரிரண்டு பார்ப்போம். ‘கயம்’  என்றால் மென்மை எனப் பொருள். யானையின் தலை மிகப் பெரியதாக இருந்தாலும் அதன் உட்பகுதி கடற்பஞ்சு போன்ற எலும்புகளும் ஒன்றுமில்லா அறைப்பகுதிகளும் உடையதாக உள்ளதால் மென்மையாகவே இருக்கும். இவ்வறிவியல் தன்மையை உணர்த்தும் வகையில் ‘கயம்தலை’ –  ‘கயந்தலை’ என்றனர். இதிலிருந்தே சமசுகிருதச் சொல்லான ‘கசமுகன்’  உருவாயிற்று.

 வயிற்றை ஒட்டப் போடும் – பட்டினியாய் இருக்கும் – தன்மையுடைய விலங்கு ஒட்டகம் என அழைக்கப்படலாயிற்று. அணிஅணியாக – வரிவரியாக – உடலில் தோற்றமுடைய உயிரினத்தை அணில் என்றனர். கோரைப்பல் உடைய உயிரினத்தைப் பல் + தி =  பன்றி என்றனர். தன் துணை இன்றி வாழாப் பறவையை ‘அன்றில்’ என்றனர்.

 விலங்கினங்களை அவற்றின் அறிவியல் தன்மைகளுக்கேற்ப வகைப்படுத்தியும் பெயரிட்டுள்ளனர். எனவே, யானையானது உம்பல், உவா, கறையடி, கைம்மா, நால்வாய், புகர்முகம், கைம்மலை, புழைகை, பெருநா, பொங்கடி, கரி, வழுவை எனவும் ஆடு அருணம், கொச்சை, துருவை, மேழகம், உதள், துள்ளல், மறி, மை, வெறி, வருடை, ஏடகம் எனவும் மான் இரலை, நவ்வி, மரையான், உழை. கடமா எனவும் முதலை இடங்கர், கராம் எனவும் பாம்பு அகடூரி, கட்செவி, அரவு, பன்னகம், நாகம், மாசுணம், பாந்தள்,  எனவும் குறிக்கப்பட்டன.

 உயிரினங்களின் பெயர்கள், மரபுப் பெயர்கள், இளமைப் பெயர்கள் முதலியன இன்றைய வகைப்பாட்டறிவியலில் பழந்தமிழ் மக்கள் சிறப்புற்றிருந்ததை உணர்த்தும். வகைப்பாட்டறிவியலில் சிறந்திருந்தமையால்தான்  புலி, முயல், பன்றி, நரி, நாய் முதலியவற்றின் இளமைப் பெயர்கள் பறழ், குட்டி எனவும் ஆடு, குதிரை, மான், முதலியவற்றின் இளமைப் பெயர்கள் மறி எனவும் கலை, மான், கழுதை, பசு, எருமை, யானை, ஒட்டகம், கவரி, கராம் ஆகியவற்றின் இளமைப் பெயர்கள் கன்று எனவும் தவழ்வனவற்றின் இளமைப்பெயர்கள் பிள்ளை, பார்ப்பு எனவும் பல்வேறு வகையிலும் குறித்துள்ளனர். இவ்வாறு தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே இவை குறிக்கப்பட்டமை தமிழ் அறிவியலின் தொன்மையை உணர்த்தும்.

   விலங்கினங்களுக்கு மட்டுமல்லாமல் அவற்றின் உறுப்புகளுக்கும்  பெயரிட்டுள்ள வகைப்பாடு, புறவியலில் சிறந்துள்ள நம் அறிவியலுக்குச் சான்றாகும். இறகு நுண்மையாக இருந்தால் ‘ஈர்’ என்றும் குட்டையாக இருந்தால் ‘கூழை’ என்றும் நீண்டு இருந்தால் ‘கூரல்’ என்றும் மென்மையாய்த் தொடக்க நிலையில் இருந்தால் ‘பிஞ்சம்’  என்றும் தொகுப்பாய் இருந்தால் ‘தோகை’ என்றும்  பெயரிட்டுள்ளனர்.

 விலங்கினங்களின் பல்வேறு வகைகளை அறிந்து வகைப்படுத்திப் பெயரிட்டமைபோல் புவியியலிலும் வகைகளுக்கேற்ப பெயரிட்டுள்ள அறிவியல் திறம் வியந்து போற்றுதற்குரியது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்திணை வகைப்பாட்டில் சிறந்த திணை யறிவியல் உலகில் பிற யாரும் கண்டறியாததன்றோ. இவற்றுள்ளும் உட்பிரிவுகள் அறிவியலுக்கேற்ற வகையில் அழைக்கப்படுவது அருந்தமிழ்ச் சிறப்பன்றோ.

   ‘மல்’ என்றால் வலிமை எனப்பொருள். வலிமையான கருங்கற்களால் ஆன நிலப்பகுதி மலை எனப்பட்டது. மிக உயர்ந்த மலை ஓங்கல், குறுக்கே நீண்டு இருக்கும் மலை விலங்கல், ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கடுக்காகப் பாறைகள் அமைந்திருக்கும் மலை அடுக்கம், எதிரொலி செய்யும் மலை சிலம்பு, மூங்கிற்காடுகள்  உள்ள மலை வரை, காடுகள் அடர்ந்த மலை இறும்பு, சிறிய மலை குன்று, மண்மிகுந்த மலை பொற்றை  என மலைகளை வகைப்படுத்திய அறிவியல் சிறப்பு, உலகில் இன்று கூட வேறு எங்கும் இல்லை என நாம் பெருமையாகக் கூறலாம்.

  மதுரையிலுள்ள அழகர்மலை சிலம்பு வகையைச் சார்ந்தது. எனவே, இங்கு ஓடும் ஆறு ‘சிலம்பாறு’ எனப்பட்டது. இவ்வறிவியல் உண்மையை உணரா ஆரியர் சிலம்பு என்பததைக் காலில் அணியும் சிலம்பாகக் கருதி ‘நூபுர கங்கை’ என மாற்றிவிட்டனர். பெயரில் என்ன இருக்கிறது என்பவர்கள், இத்தகைய பெயர் மாற்றங்களால், தமிழறிவியல் வளம் புதைந்து போயுள்ளதை உணர வேண்டும்.

  மலை வகைப்பாட்டைப் போன்றே பருத்த உயரமான மரங்கள் அடர்ந்த காடு வல்லை, சிறு மரங்கள் நெருக்கமாக உள்ள காடு இறும்பு, சிறிய அளவிலான இறும்பு குறுங்காடு, சிறு தூறல்கள் அல்லது புதர்கள் பரவியுள்ள  காடு அரில் அல்லது பதுக்கை, மிக முதிர்ந்த முற்றிப் போன மரங்கள் உடைய காடு முதை, மரங்கள் கரிந்து போன காடு பொச்சை அல்லது சுரம், காவலுள்ள காடு அரண், என்ற வகைப்பாட்டு வன அறிவியலிலும் தமிழுலகு சிறந்துள்ளமைக்குச் சான்றன்றோ.

  தமிழிலுள்ள நெய்தல் நிலப் பெயர்கள் நம் கடல்சார் அறிவியலுக்குத் தக்க சான்றாகும். பல்வகைக் கலன்களால் கடல்நீரில் ஆட்சி செய்வதற்கு முன்பு உலகின் தோற்றக் காலத்தில் கடப்பதற்கு அல்லாத நீர் நிலையைக்கடல் என்றனர். கண் பார்வையைக் கடந்து நிற்பதாலும் கடலின் எல்லை பார்ப்பவர் கண்ணுக்குப் புலப்படாததாலும் இப் பெயர் நிலைத்து நின்று விட்டது. ஏர்த் தொழிலுக்குப் பயன்படும் நீர்நிலையை ஏரி என்றும் குளிப்பதற்குப் பயன்படும் நீர்நிலையைக் குளம் என்றும் பெயரிட்ட நம் முன்னோர், கடலுக்கும் அதன் தன்மைகளுக்கேற்பப் பல்வகைப் பெயர்களை இட்டுள்ளனர். கடல் பரந்து உள்ளமையால், பரவை;  ஆழமாக உள்ளமையால் ஆழி; உப்பு நீர் – உவர் நீர் – உடைமையால் உவரி; மழையை உண்டாக்குவதற்குரிய முகிலைக் கொள்வதற்கு உரிய இடம் என்பதால் கார்கோள்; மழைநீர், ஆற்று நீர், ஊற்று நீர் ஆகிய மூன்றும் இணைந்த நீர்ப்பரப்பு என்பதால் முந்நீர்;  அலைகள் வீசுவதன் மூலம் பேரிரைச்சல் தோன்றுவதால் ஆர்கலி; என்பன போல் அம்பரம், அளக்கர், சலதி, வாரி, பெருநீர், அழுவம், தெண்டிரை முதலான 50 வகைப் பெயரிட்டுள்ளனர். (பிங்கல நிகண்டு பா எண் 584)

 வயலும் வயல் சார்ந்த பகுதியுமான மருதநிலப் பெயர்கள் நில வகைப்பாட்டியலில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பைந்தமிழ் சிறந்திருந்தது என்பதற்குச் சான்றாகும். நிலத் தொகுப்பு வகையாக நெல், கரும்பு முதலிய பயிர்த் தொகுதியைச் ‘செய்’ என்றும் மிளகாய், கத்தரி முதலிய செடித்தொகுதியைத் ‘தோட்டம்’ என்றும் மா, தென்னை முதலிய மரத்தொகுதியைத் ‘தோப்பு’ என்றும் முல்லை, குறிஞ்சியில் உள்ள நிலத் தொகுதியைக் ‘காடு’ என்றும் மரமடர்ந்த இயற்கைத் தோப்பினைச் ‘சோலை’ என்றும் பாதுகாக்கப்படும் சோலையைக் ‘கா’ என்றும் கடற்கரைச் சோலையைக் ‘கானல்’ என்றும் மக்கள் வசிக்காத காட்டை ‘வனம்’ என்றும் புதுக்கொல்லையை ‘இதை’ என்றும் பழங்கொல்லையைச் ‘சுதை’ என்றும் நன்கு பண்படுத்தப்பட்ட நிலத்தை ‘நன்செய்’ என்றும் ஓரளவு பண்படுத்தப்பட்ட நிலத்தைப் ‘புன்செய்’ என்றும் பாழ்நிலத்தைக் ‘கரம்பு’ அல்லது ‘களரி’  என்றும் விளையா நிலத்தைக் களர் அல்லது சவர்  என்றும் அனைத்தும் உண்டாகும் நன்னிலம் உறாவரை  என்றும் முல்லை நிலம்-புறவு;  வான்மழையை எதிர்நோக்கியுள்ள விளைநிலம்-வானாவாரி (மானாவாரி என்பது சிதைந்த வழக்கு); மேட்டு நிலம் – மிசை;   பள்ளமான நிலம்-அவல்; அரசிற்குரிய பண்படுத்தப்பட்ட நிலம்-புறம்போக்கு;  உணவிற்கு விடப்படும் வரிவிதிக்கப் பெறா நிலம்-அடிசிற்புறம்;  பயிர்  செய்யாது புல், பூண்டு முளைத்துக் கிடக்கும் நிலம்-தரிசு;   சிவந்த நிலம்- சிவல்;   களிமண் நிலம்-கரிசல்;  சரள் நிலம்-முரம்பு;     நன்செய் தொடர்ந்து விளையும் நிலம்-வயல்;  போரடிக்கும் களமுள்ள வயல்-கழனி;  பழைமையான வயல்-பழனம்; நீர் நிறைந்த பள்ளமான வயல்- பண்ணை;   சேறு மிகுந்த வயல் – செறு;   என்பன போன்றும் உள்ள சொல்லாட்சி நிலத்திணையியலில் நாம் கொண்டுள்ள சிறப்பை உணர்த்தும்.

    இவ்வாறு துறைதோறும் துறைதோறும் நாம் ஆராய்ந்தால் அருந்தமிழ்ச் சொற்களின் அறிவியல் சிறப்பை நன்கு உணரலாம். இவற்றை யெல்லாம் வெளிக் கொணரவும் பரப்பவும், நாம் நம் மொழியின் சிறப்பை உணர்ந்து இனியேனும் அதனைப் பேணவும் வேண்டும்.

  அருந்தமிழ்ச் சொற்களின் அறிவியல் தன்மைகளை உணரும் நாம், அறிவியலையும் தமிழில் பயின்றால்தானே  தலைநிமிர்ந்து வாழ இயலும்! தலைசிறந்து திகழ இயலும்!

இலக்குவனார் திருவள்ளுவன்

[குறிப்பு;:  பத்தாண்டுகளுக்கு முன்னர் எழுதி தமிழோசை நாளிதழில் வெளிவந்த கட்டுரை. இதன் விரிவைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்திலும்  உரையாற்றியுள்ளேன்.]