அறநிலையத் துறையில் ஆற்ற வேண்டியவை-அ(தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 15)- இலக்குவனார் திருவள்ளுவன்
அறநிலையத் துறையில் ஆற்ற வேண்டியவை-அ (தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 15)
(அறநிலையத் துறை தமிழுக்கு அறக்கேடு விளைவிக்கிறதே!(தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 14) தொடர்ச்சி)
கடந்த முறை “அறநிலையத் துறை தமிழுக்கு அறக்கேடு விளைவிக்கிறதே!” எனக் குறிப்பிட்டிருந்தோம். அறநிலையத்துறை ஆற்ற வேண்டிய அரும்பணிகள் பல உள்ளன. அவற்றுள் சிலவற்றை இப்பொழுது பார்ப்போம். முதலில் தமிழ் வழிபாட்டு நிலையைக் காண்போம்.
அறநிலையத்துறை யமைச்சர் சேகர்பாபு, மக்கள் மகிழும் வண்ணமும் முதல்வர் மு.க.தாலின் செயல் பாபு எனப் பாராட்டும் வண்ணமும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். ஆதலின் நாம் கூறுவன குறித்துச் செவிமடுத்துச் செயலாற்றுவார் என நம்புகிறோம்.
சங்கக்கால மக்கள், “கடவுளை அருவப் பொருளாகவே அறிந்து என்றும் கடவுள் உணர்வுடையவர்களாகவே வாழ்ந்தார்கள். கடவுட் கொள்கைக்கு மாறான கொள்கையை அவர் அறியார். சங்கக்காலத் தமிழ்மக்கள் உணவினும் முதன்மையாகக் கடவுளைக் கருதி வாழ்ந்தனர்.” என்கிறார் பேராசிரியர் சி.இலக்குவனார். ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியத்தில் கருப்பொருளில், உணவுக்கு முன்பு தெய்வத்தை வைத்துள்ள சீர்மையையும் குறிப்பிடுகிறார்.
எனவே, தமிழர் நெறி கடவுள்நெறியைப் போற்றுவதே! ஆனால், தங்கள் கடவுளை வணங்கத் தங்கள் தாய்த்தமிழை ஒதுக்கி ஆரியத்தைப் புகுத்தியதால், கோவில் வழிபாடுகளைப் புறக்கணிக்கத் தொடங்கினர். இதனால் ஒரு பகுதியினர் இறை மறுப்பாளர்களாக மாறினாலும் மறு பகுதியினர், மூட நம்பிக்கையற்ற வழிபாட்டில் நாட்டம் கொண்டனர். இத்தகையோரையும் கடவுள் மறுப்பாளராகவே எண்ணிக் கொள்கின்றனர்.
சித்தர் பாடல்கள் பலவும் இவ்வாறே உள்ளன. சான்று ஒன்று பார்ப்போம்.
“நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து மொணமொணன்று சொல்லுமந்திரம்ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?”
என்னும் சித்தர் சிவவாக்கியர் பாடலில் முதல் இரண்டரை அடிகள் கடவுள் எதிர்ப்புபோல் தோன்றும். ஆனால் அடுத்து வருவன மக்கள் உள்ளத்தில் இறைவன் உள்ள உண்மையைக் கூறி மக்களை மதிக்கச் சொல்லும் இறைநெறியாக விளங்குகிறது.
எல்லாரும் எழுதிக் கொண்டிருப்பது அல்லது பேசிக்கொண்டிருப்பதுபோல் சமற்கிருத வழிபாடு ஈராயிரம் ஆண்டுகளாக இல்லை. இடைக்காலத்தில்தான் வந்தது. சமற்கிருதவழி வழிபாடு பெருகிக் கொண்டிருந்தாலும் ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் தமிழ் வழி வழிபாடே மிகுதியாக உள்ளது என்பதே உண்மை. ஏனெனில் தமிழ்நாட்டில் சிறுதெய்வ வழிபாடாகச் சொல்லப்படுகின்ற அம்மன்கோவில்கள், குல தெய்வக்கோயில்கள், சிற்றூர்க்கோயில்கள் முதலியவற்றில் தமிழ்வழி வழிபாடே உள்ளது. எனவே, மக்கள் விருப்பம் என்பது தமிழ் வழி வழிபாடே எனலாம். ஆனால், இங்கும் பூசாரிகளுக்குப் பயிற்சிதருவதாகக் கூறிச் சமற்கிருதம் திணிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், பெரிய கோயில்களிலும் அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டிலுள்ள பிற கோயில்களிலும் சமற்கிருத வழிபாடே உள்ளது. இவற்றிலெல்லாம் விரும்பியவர்களுக்குத் தமிழ் அருச்சனை என்று ஓரளவிற்குத் தமிழ் அருச்சனை தலைகாட்டும். ஆனால் கொடுமை என்னவென்றால் சைவமும் தமிழும் வளர்த்ததாகப் பெருமை பேசும்-வளர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் மடங்களின்/ஆதீனங்களின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் சமற்கிருத வழி வழிபாடுமட்டுமே உள்ளது.
சங்க இலக்கியங்களுள் தொல்காப்பியத்திலும் மணிமேகலையிலும் கடவுள் வாழ்த்து இல்லை. சிலப்பதிகாரத்தில் திங்கள், ஞாயிறு, மழை என்னும் மூன்றையும் போற்றும் இயற்கை வணக்கப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. திருக்குறளில் கடவுள் வாழ்த்து இடம் பெற்றிருந்தாலும், உருவ வழிபாட்டைப் போற்றவில்லை. மேலும் ஆரியத்திற்கு எதிராக எழுதப்பட்டதாகத்தான் உள்ளது.
சங்கப்பாடல்கள் இயற்றப்பட்ட காலத்தில் அல்லாமல் பின்னர்த் தொகுக்கப்பட்டன. தொகுத்த காலத்தல் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன் பின்னர்க் கடவுள் வாழ்த்தைத் தொடக்கப் பாடலாக எழுதும் பழக்கம் வரலாயிற்று. பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்தைச் சேர்க்கும் பழக்கமும் வந்து விட்டது.
கல்லே பரவின் அல்லது
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.
(புறநானூறு 355) என்கிறார் சங்கப் புலவர் மாங்குடி கிழார். அப்படியாயின் தொடக்கத்தில் நடுகல் வணக்கமே மேலோங்கி யிருந்திருக்கிறது. இதுவே பின்னர் கடவுள் வணக்கமாக மாறியுள்ளது எனலாம்.
இவையெல்லாம் கட்டுரையாளர்கள் பலரும் கூறியவைதாம்.
தமிழ் மன்னர்கள், புரவலர்களின் கொடை மடத்தைப் பயன்படுத்தி, வேள்விகளையும் சடங்குகளையும் செய்வித்தனர். நாளடைவில் மன்னர்களால் செய்யப்படுவனவற்றை அடுத்த நிலையில் உள்ளவர்கள், அதன்பின்னர் அதற்கடுத்த நிலையில் உள்ளவர்கள் எனப் பரவலாகப் பெருகிற்று. இருப்பினும் வருண வேறுபாட்டைப் புகுத்திய ஆரியர்கள், அவர்களால் தாழ்நிலையினராகக் கற்பிக்கப்பட்டவர்கள் இல்லங்களுக்குச் செல்வதில்லை; அவர்களுக்கு ஆரியச் சடங்குகள் செய்வதில்லை. கடந்த நூற்றாண்டு வரை ‘நாடார்கள்’ தங்கள் உறவில் மூத்தவரைக் கொண்டே திருமணச் சடங்கு முதலியவற்றைச் செய்தனர். கட்டுப்பாட்டிற்கும் ஒற்றுமைக்கும் பரிசு கொடுக்க வேண்டும் என்றால், பிராமணக் குலத்திற்குத்தான் கொடுக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களே இந்நூற்றாண்டில் பணம் தரும் எக்குலத்தாராயினும் சடங்குகள் செய்ய வந்து விட்டனர். இதனால், ஆரியச்சடங்குகள் நுழையாத குலங்களிலும் ஆரியம் நுழையத் தொடங்கி விட்டது.
“இருக்கு ஓதி மறையவர்கள் வழிபட்டு ஏத்தும் இளங்கோயில்” (திருநாவுக்கரசர், தேவாரம் ஆறாம் திருமுறை) என்பதைப் பார்க்கும் பொழுது திருநாவுக்கரசர் காலம் வரை ஆரிய வழிபாடு கோயில்களில் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம். அதுவும் ஆரிய வழி வழிபாட்டுக்கோயில்கள் திருவாரூர் திருமீயச்சூரிலும் அடுத்து கீழைக் கடம்பூரிலும் எழுப்பப்பட்டன.
கருவறையைப் புதுப்பிக்குங் காலத்தில் கடவுளை வேறிடத்தில் எழுந்தருளச் செய்வர். இதற்குப் பாலாலயம் எனப் பெயர். இச்சொல் தமிழ்ச்சொல்லே. செ.சொ.பி.அகராதியில் சமற்கிருதத்தில் இருந்து வந்ததாக் குறிப்பு இருக்கும். பாலர் என்பதைத் தமிழ்ச்சொல் என இவ்வகராதி குறித்திருக்கும். பாலரின் வேர்சொல்லான பால் + ஆலயம்தான் பாலாலயம். இப்பாலாலயங்களில் சமற்கிருத் வழிபாடுகளைப் புகுத்தி இளங்கோயிலாகக் கூறிக் கொண்டனர். இன்றைக்கு மலையாளிகள் ஓரிடத்தில் பணிக்கு அல்லது தொழிலுக்கு வந்து விட்டால், மெல்ல மெல்லத் தன்னைச் சுற்றிலும் வேலைவாய்ப்புகளை ஊரிலிருந்து அழைத்து வரப்படும் மலையாளிகளுக்குத் வாங்கித் தருவதைப் பார்க்கின்றோம். அதேபோல், பிராமணர்கள் தாங்கள் இருக்குமிடங்களில் தங்கள் குலத்தாருக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதைக் காலம் காலமாகச் செய்து வருகின்ற்னர். கோலில் மூலவர் இருக்குமிடத்திற்குப் பூசை செய்ய வரும் பிராமணர், சுற்றிலும் உற்ற கடவுள் படிமங்களுக்குக் கற்பூரம் காட்ட அல்லது பூசை செய்ய எனப் பிற பிராமணர்களை9ச செய்ய வைத்து ஆரிய வழிபாட்டைப் பரப்பினர். அப்படித்தான் பழுதுபார்க்கும் காலத்திற்கு எழுந்தருளச் செய்த பாலாலயத்தை இளங்கோயிலாக்கிப் பிராமணச் சடங்குகள் குடி கொள்ளும் இடமாக மாற்றி விட்டனர். ஆனால், தமிழ் ஆன்றோர்கள் இதனை விரும்பவில்லை.
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே (திருமந்திரம்)
எனத் திருமூலர் சொல்வதிலிருந்தே இறைவன் தமிழ் வழிபாட்டையே விரும்புவதாக மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர் எனலாம்.
தமிழ்வழி வழிபாடு குறித்து அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
சுவையான தொடர் ஐயா! அரிய செய்திகள்! அறநிலையத்துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் கோயில் வழிபாட்டில் தமிழர் உரிமையை மட்டும்தான் நிலைநாட்டுகின்றனவே தவிர தமிழின் உரிமையை நிலைநாட்டவில்லை. தமிழ்ப் பூசாரிகளுக்கான பயிற்சி பெறுபவர்கள் தீட்சை பெறுவது, பூணூல் அணிவது ஆகியவை இதற்கு முக்கிய எடுத்துக்காட்டுகள். தமிழ் வழிபாட்டில் எங்கிருந்து வந்தன தீட்சையும் பூணூலும்? மேலும், தீட்சை பெறுவது என்பதைப் பூசாரிக்கான தகுதியாகத் தமிழ்நாடு அரசு வரையறுத்துள்ளதாகவும் கேள்விப்படுகிறேன். இது முழுக்க முழுக்க தமிழர் பண்பாட்டுக்கு எதிரானது என்பதை நான் சொல்லித் தாங்கள் அறிய வேண்டியதில்லை. இந்தத் தொடரின் அடுத்த பகுதியில் இதைப் பற்றியும் கண்டித்து எழுத வேண்டுகிறேன்!