அ.ம.மு.க.வினர் தளர வேண்டா! – இலக்குவனார் திருவள்ளுவன்
அ.ம.மு.க.வினர் தளர வேண்டா!
பதவி பறிக்கப்பட்டவர்களில் சிலராவது வெற்றி காண்பர். கணிசமான வாக்குகளைப் பெற்று கருதத்தக்க இடத்தைப் பெறலாம் என எண்ணிய தினகரனின் அ.ம.மு.க. பாதாளத்தில் விழுந்துள்ளது. ஒரு தொகுதியில்கூடப் பிணைத்தொகையைத் திரும்பப் பெறும் வகையில் வாக்குகளைப் பெறவில்லை. சில இடங்களில் நான்காவது இடமும் ஐந்தாவது இடமும் பெற்றுள்ளது.
இந்தத் தோல்வி அடுத்தடுத்த சூழ்ச்சி வலைகளால் உருவானது. என்றாலும் சூழ்ச்சியையும் வெல்வதுதானே திறமை. இனி, சூழ்ச்சிகளை வெல்லும் வகையில் திறமாகச் செயல்பட்டால் கட்சி வளரும். “வீழ்வது இயற்கை. எழுவதே வாழ்க்கை” என்று தன்னம்பிக்கை கொண்டால் வெற்றி மாலை தானாகத் தேடி வரும்.
அதிமுகவை அசைக்கும் அளவில் அ.ம.மு.க.வின் பிம்பம் காட்டப்பட்டாலும், தேர்தல் கணிப்புகளில் ஒரு தொகுதியில் வெற்றிக்கும் 4 அல்லது 5 தொகுதிகளில் வெற்றியை நெருங்கும் வகையிலும்தான் அதன் நிலை கணிக்கப்பட்டது. இடைத்தேர்தல் நடத்தினால் தினகரன் கட்சி வெற்றி பெறும் என்று சொல்லப்பட்ட சூழலில் பொதுத்தேர்தலும் இணைந்த பொழுது மாறியதன் காரணங்கள் என்னென்ன?
அடிமேல் அடி விழுந்தால் இமயமலையும் நொறுங்கும். அவ்வாறுதான் தேர்தல் ஆணையத்தின் மூலம் தொடர்ந்து சம்மட்டி அடி விழுந்ததில் அ.ம.மு.க. நொறுங்கிப் போயுள்ளது.
கட்சி பிரியும் பொழுது பிரிகின்றவர் பக்கம் பரிவு இருந்தாலும் அமைப்பு சிதறக் கூடாது என அதன்மீது பற்று வைப்போரே மிகுதி. அ.ம.மு.க.வின் பக்கம் பரிவாக இருந்தவர்கள் தேர்தல் என வந்ததும் வாக்குகள் சிதறி அதன் மூலம் பா.ச.க.வின் பிடி இறுகக்கூடாது என்று வாக்களித்துள்ளனர்.
அஃதாவது, பா.ச.க.விற்கு இடம் தரக்கூடாது என மக்கள் கண்ணும் கருத்துமாக இருந்தனர். எனவே, அ.ம.மு.க மூலம் வாக்குகள் பிரியக்கூடாது என்ற எண்ணமும் மக்களிடம் இருந்தது.
வேறுவகையில் சொல்வதானால், பா.ச.க.வின் எதிர்ப்புணர்வால் அ.ம.மு.க.வை ஆதரித்தவர்கள் வாக்குகள் சிதறிப் பா.ச.க வந்துவிடக் கூடாது எனத் தெளிவாக இருந்தனர். எனவே, அவர்கள் தி.மு.க.கூட்டணிக்கு வாக்களித்து விட்டனர்.
தி.மு.க. அல்லது அ.ம.மு.க. வெற்றிகளால் அ.தி.மு.க. கவிழும் சூழல் வந்தால் அடுத்து தினகரன் மூலமாகவோ தி.மு.க.வோ ஆட்சி அமைத்தால் வரவேற்கலாம். ஆனால், பா.ச.க. அதற்குஇடம் தராமல் குழப்பத்தை ஏற்படுத்தும் என்ற அச்சமும் மக்களிடம் இருந்தது. மாநிலச் சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு அல்லது அதன் செயல்பாட்டை நிறுத்தி விட்டுப் பா.ச.க.தன் மறைமுக ஆட்சியை அரங்கேற்றினால் தமிழ்நாடு என்னாவது என்ற பேரச்சம் பலருக்கு இருந்தது. அதற்கு இடம் தரக்கூடாது என்பதனால்தான் அ.தி.மு.க.வின் பெரும்பான்மைக்குக் குந்தகம் வராத அளவில் அதற்கு வெற்றி அளித்தனர்.
சார்பு வாக்குகளைவிட எதிர்ப்பு வாக்குகளாலேயே வெற்றியை வரையறுப்பது தமிழக வாக்காளர்களின் வழக்கம். அதை உணர்த்துவதுதான் மேற்குறித்த மக்களின் கண்ணோட்டம். இது தவறு என்றால் தோல்விக்குக் காரணங்கள் வேறு யாவை?
இவை மட்டும் காரணமல்ல என்றால், தேர்தல் ஆணையத்தின் குளறுபடி குறிதது அ.ம.மு.க. கூறுவதும் ஆராய்விற்குரியது.
பொதுச்சின்னத்தை முதலிலேயே தேர்தல் ஆணையம் அளித்திருந்தால் வாக்குப்பொறிகளில் தொடக்கத்திலேயே வேட்பாளர்கள் பெயர் வந்திருக்கும். பல வாக்கு மையங்களில் வேட்பாளர் பெயர்கள் உள்ள சுவரொட்டி ஒட்டப்படவில்லை. அதனால் முன்னதாக அறியவும் வாய்ப்பில்லை. தற்சார்பர்(சுயேச்சை) என்ற முறையில் போட்டியிட்டதால் தற்சார்பர்கள் பலருள் பெயரைத் தேடுவதும் அரிதாக இருந்தது. கட்சி முறையில் போட்டியிடும் வாய்ப்பைப் பறித்தவர்கள் தாங்கள் எண்ணியதை அடைந்துவிட்டனர்.
ஒரு நாடாளுமன்றத் தொகுதியின் கிளைக்கழகம் முதல் மாவட்டக் கழகம் முடிய உள்ள மொத்த அமமுகப் பொறுப்பாளர்கள் 1,24,476. இவர்கள் “பணத்தை அங்கே வாங்குவோம். வேலை இங்கே பார்ப்போம். வாக்கை அங்கே அளிப்போம்” என வாக்களிதது விட்டார்களா? ஒரு சில இடங்களில் அவ்வாறு நடக்கலாம். ஆனால், ஒட்டு மொத்தமாக இவ்வாறு நடக்காது. எனவே, வாக்குப்பதிவுப் பொறி மூலம் அ.ம.மு.க.சின்னத்தில் வாக்குகள் பதிவாவது தடுக்கப்பட்டுள்ளது என அக்கட்சியினர் கருதுகின்றனர்.
ஒரு வாக்குப்பதிவு மையத்தில் வாக்குப்பதிவுப் பொறியில் அ.ம.மு.க. வின் வேட்பாளர் பெயரும் கட்சிச்சின்னமும் இடம் பெறாமல் இருந்ததைச் சுட்டிக்காட்டி இதைப்போன்ற பல முறைகேடுகளால் தோல்வி உருவாக்கப்பட்டுள்ளது என்கின்றனர். 300 மையங்களில் ஒரு வாக்குகூடப் பதிவாகாததுபோல் காட்டப்பட்டுள்ளது. கட்சியின் பக்கம் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் இருந்தவர்களால் வாக்களிக்காமல் இருக்க முடியாது. அவர்களின் குடும்பத்தினர் மாறி வாக்களித்திருந்தாலும் இவர்கள் மாறி வாக்களித்திருக்க முடியாது என்கின்றனர்.
கூட்டணிக்கட்சிகள் பலவற்றின் வாக்குகளைப் பெற்றுப் பா.ம.க. 5.42% வாக்குகளைப் பெற்றுள்ளது. ஒரு கட்சிக் கூட்டணியுடன் அ.ம.மு.க. 5.38% வாக்குகளைப் பெற்றுள்ளது. எனவே, மொத்தத் தேர்தல் களத்தில் கட்சி வரிசையில் பார்த்தால் அ.ம.மு.க. 4ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. கூட்டணிக் கட்சிகளால் பேராயக்(காங்.)கட்சியின் வாக்குகள் 12.76% பெற்றதைப் புறக்கணித்தால் 3ஆவது இடமாக உள்ளது. ஒரு வேளை நா.த.க., ம.நீ.மை,ஆகியவற்றுடன் இணைந்து போட்டியிட்டிருந்தால் 13.31% வாக்குகள் பெற்று இருக்கும். என்றாலும் தனித்து நின்று உண்மையான வலிமையை உணர்ந்ததுதான் நன்று.
இவை குறித்து ஆராய்வது ஒரு புறம் இருந்தாலும். மறுபுறம் “தோல்வி நிலையானது அல்ல” என்ற உணர்வுடன் அ.ம.மு.க.வினர் செயல்படத் தொடங்கி விட்டனர். தோல்வித் தடைக்கற்களை வெற்றியின்படிக்கட்டுகளாக மாற்றும் வகையில் செயல்பட்டால் இனி வெற்றி காணலாம்.
தோல்விக்கான காரணங்களை ஆராயும் அதே நேரம், மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும். தங்களுக்குச் சார்பாக மக்கள் நிற்கும் வகையில் இனிச் செயல்பட வேண்டும். இவர்களின் செயல்பாடு அ.தி.மு.க.வைப் பா.ச.க. வலையில் இருந்து மீட்பதாக வும் அமைய வேண்டும்.
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியிலும் வேலூர் நாடாளுமன்றத் தொகுதியிலும் தங்கள வலிமையைக் காட்டும் அளவில் அ.ம.மு.க. இப்பொழுதிருந்தே பாடுபட வேண்டும். சூழ்ச்சியால் வெற்றிமாலை பறிக்கப்பட்டதால் விழிப்புடன் உடன் செயல்பட வேண்டும்!
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்(திருவள்ளுவர், திருக்குறள் 620)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை, அகரமுதல
Leave a Reply